
ஒலிம்பிக் சென்சேஷன் சாக்ஷி மாலிக். ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த மல்யுத்த மங்கை. பெண்கள் விளையாடச் செல்லவே தடைபோடும் ஊரில் இருந்து வந்தவர். ஒலிம்பிக் வெற்றிக்கு பிறகு அவரது சொந்த மாவட்டத்தில் உள்ள மகரிஷி தயானந்த் பல்கலைகழகத்துக்கு மல்யுத்த பிரிவு இயக்குநராகிவிட்டார். மனதில் இருந்த வலு அதிகம் என்றாலும், சாக்ஷியின் உடல் ஆரோக்கியமும் நேர்த்தியானது.
*மல்யுத்தத்துக்கு ஃபிட்னெஸ் முக்கியம். தசைகள் வலுவாக இருந்தால்தான் எதிராளியை வீழ்த்த முடியும். எனவே மல்யுத்த பயிற்சியைவிடவும் உடற்பயிற்சிக்குத்தான் ஆரம்பத்தில் அதிக நேரம் ஒதுக்கி வந்தார். மல்யுத்தத்துக்கு தேவையான நல்ல உடற்கட்டு வந்தபிறகு பயிற்சியை மூன்றாக பிரித்துக்கொண்டார். உடற்பயிற்சி இரண்டு மணி நேரம், மல்யுத்த பயிற்சி ஆறு மணி நேரம், ஜிம்னாஸ்டிக் பயிற்சிகள் இரண்டு மணி நேரம். இதுதான் சாக்ஷி மாலிக்கின் ஃபிட்னெஸ் அட்டவணை.
*மல்யுத்த போட்டியில் இடைவிடாது ஆறு - ஏழு நிமிடங்கள் மனதும், உடலும் போராட வேண்டும் என்பதால் இதயம், நுரையீரல் இரண்டும் சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியம். மல்யுத்த பயிற்சிக்கு லீவு கொடுத்தால் கூட கார்டியோ பயிற்சிக்கு லீவு தரவேமாட்டார். காலையில் ஜிம்மில் ஓடுவதை விட கிரவுண்டில் ஓடுவதைத்தான் அதிகம் விரும்புவார்.
*மல்யுத்த போட்டிக்கு தயாராகும்போது, மூன்று மாதங்களுக்கு முன்பு இருந்து கார்ப் ஃப்ரீ (Carb free) டயட்டை ஆரம்பித்துவிடுவார். அதிகம் நீர் அருந்துவார், திரவ வடிவிலான உணவையே அதிகம் எடுத்துக்கொள்வார். ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பிறகு, அடுத்த நாள் அவர் செய்த முதல் வேலையே வயிறுமுட்ட காலை உணவை சாப்பிட்டதுதான். “பிடித்த உணவை சாப்பிடுவதை தவறில்லை, இலக்கை பொறுத்து நாக்கை கட்டுப்படுத்த தெரிந்தால் போதும்” என்கிறார் சாக்ஷி.
*பால்தான் சாக்ஷியின் ஆரோக்கிய பானம். தினமும் பசும்பால் இரண்டு டம்ளராவது குடித்துவிடுவார். ஒலிம்பிக்குக்கு தயாரான சமயத்தில் நட்ஸ், கீரைகள், முளைகட்டிய பயறு, உலர் பழங்கள், சோயா பீன்ஸ், மாதுளை, எழுமிச்சை ஜூஸ் இவைதான் அவரது பிளேட்டில் தினமும் இருக்கும்.
*தினமும் 500 சிட் அப்ஸ் செய்யாமல் உறங்கச்செல்ல மாட்டார் சாக்ஷி. இடுப்பு மற்றும் தொடைகளை வலுவாக்கும் பயிற்சிகள் பிடித்தமானவை என்பதால் எளிதில் சோர்வடையமாட்டார். “வெறும் டயட், வெறும் உடற்பயிற்சி, வெறும் ரெஸ்ட் கடைபிடித்தால் எந்தக்காலத்திலும் உடல் ஃபிட், வலுவாகாது. மூன்றையும் சரியாகச் செய்யுங்கள்” என ஜூனியர் வீரர்களுக்கு அட்வைஸ் செய்திருக்கிறார்.
- பு.விவேக் ஆனந்த்
