
திபா கர்மாகர்

ஒலிம்பிக் என்றாலே “ச்சீ ச்சீ...கசக்கும்” என்பதுதான் இந்தியாவின் நிலை. அதிலும் பெண் சாம்பியன்களை கைவிரலில் எண்ணிவிடலாம். இந்தியாவில் இருந்து சென்று ஜிம்னாஸ்டிக்கில் கலக்கியவர்கள் யாருமே இல்லை என்ற நிலையை உடைத்தவர் திபா கர்மாகர். வெண்கல பதக்கத்தை ஜஸ்ட் மிஸ் செய்தாலும், இந்தியர்கள் அத்தனை பேரின் அன்பையும் அள்ளிச் சென்ற நம்பிக்கைப் பெண். ஃபிட்னெஸ் அதிகம் தேவைப்படும் ஜிம்னாஸ்டிக்கில் கலக்கும் திபாவின் வொர்க்அவுட் திட்டங்கள் என்ன?
*திபா 151 செ.மீ உயரம், 51 கிலோ எடை. காலை 7 மணிக்கு எழுந்து, 8 மணிக்கெல்லாம் பிரேக்ஃபாஸ்ட் முடித்து பயிற்சிக்கு தயாராகிவிடுவார். மதியம் 12 மணி வரை தொடர்ந்து பயிற்சி. 1 மணிக்கு லன்ச் முடித்துவிட்டு, 3.30 வரை தூக்கம். மீண்டும் 4.30க்கு ஆரம்பித்தால் 8.30 வரை ஜம்பிங், ரன்னிங்தான்.
*“வாழ்க்கையில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்றால், முதலில் ரிஸ்க் எடுக்க வேண்டும்” - திபாவின் ஃபேவரைட் வாசகம் இது. முயற்சியே எடுக்காமல் வெற்றி மட்டுமில்லை, ஆரோக்கியமும் வந்து சேராது. அதனால், சிறியதோ பெரியதோ, உங்கள் வொர்க்அவுட்டை இன்றே ஆரம்பியுங்கள். மற்றவை தானாக நடக்கும்.

*மனதில் டன் கணக்கில் ஸ்ட்ரெஸ் வைத்துக் கொண்டு உடலை வருத்தி வொர்க்அவுட் செய்வதில் பயனில்லை என்னும் கட்சிதான் திபாவும். இவருக்கும் யோகா பிடித்த ஒன்று. ஆரோக்கியம் என்பது மனநலம் பிளஸ் உடல்நலம் சேர்ந்ததுதான் என்கிறார் திபா.
*புரதச்சத்துதான் எல்லா விளையாட்டு வீரர்களுக்கும் அத்தியாவசிய தேவை. புரதம் அதிகம் தேவை என்பதால் நிறைய சிக்கன் சாப்பிடுவார். தான் உண்ணும் ஒவ்வொரு கலோரியையும் கவனமாக கையாள்வார். திபா ஒரு மீன் பிரியர். வீட்டில் இருந்தால் மீன் இல்லாமல் சாப்பாடே இறங்காதாம்.
*ஜிம்னாஸ்டிக்ஸ் செய்ய உடல் வில்லாக வளைய வேண்டும். உடலில் இருக்கும் எல்லா தசைகளும் நாம் சொல்லும் பேச்சைக் கேட்க வேண்டும். அதற்கு நம் உடலை பற்றிய அறிவு வேண்டும். வொர்க்அவுட் செய்யும் அனைவருக்குமே இது தேவை. என்ன செய்தால் என்ன ஆகும் என தெரிவது பாதி வொர்க்அவுட்க்கு சமம்.
- கார்க்கிபவா