
உடல் எடை குறைக்க மற்றும் உடல் ஃபிட்டாக இருக்க தினசரி 45 நிமிடங்களுக்கு உடற்பயிற்சி செய்ய வேண்டும் என பரிந்துரைக்கின்றனர். ஆனால், அன்றாட வேலை பளு காரணமாக சோர்வுடன் படுக்கைக்குச் செல்பவர்கள், அடுத்த நாள் காலை அலாரம் அடித்தும் எழுந்திருப்பது இல்லை. பரபரப்பான அன்றாட வாழ்க்கையில், உடலுக்கு பயிற்சி அளிக்க சில எளிய வழிகள் உள்ளன. அவற்றைத் தெரிந்துகொள்வோம்.
*நீண்ட நேரம் அமர்ந்து வேலை செய்பவர்கள், ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறையாவது எழுந்து நடந்து, கை, கால்களை நீட்டிச் சிறுசிறு உடற்பயிற்சிகள் செய்வது நல்லது. இதனால் உடலில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும்.
*அலுவலகத்தில் மாடி ஏற லிஃப்ட் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். முடிந்தவரை படிக்கட்டைப் பயன்படுத்துவதே சிறு பயிற்சிதான்.
*ஐந்து முதல் பத்து நிமிடங்களுக்கு ஜம்பிங் ஜாக் பயிற்சி செய்யலாம். அதாவது கைகளை பக்கவாட்டில் உயர்த்தியபடி, எகிறி குதிக்க வேண்டும். 10 நிமிடங்கள் செய்வதன் மூலம் 90 கலோரி வரை எரிக்கலாம்.
*காலை அல்லது மாலையில் சைக்கிள் ஓட்டுவது நல்ல உடற்பயிற்சி. வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கக் கடைக்குச் செல்ல, மோட்டார் வாகனத்தைத் தவிர்த்து சைக்கிளைப் பயன்படுத்தலாம்.
*வாரம் ஒருமுறை வெறும் கால்களில் கூழாங்கல் மீது நடக்கலாம்.
*அலுவலகத்தில் வெளியில் சாப்பிடச் செல்வதாக இருந்தால், பக்கத்தில் உள்ள கடைக்கு நடந்து சென்று வரலாம்.
*டி.வி பார்க்கும்போது ரிமோட்டை தூரவைத்துவிட்டு எழுந்து சென்று மாற்றலாம்.
- வி.மோ.பிரசன்ன வெங்கடேஷ்
