
பர்வதாசனா

பர்வதம் என்றால் ‘மலை’ என்று அர்த்தம். உடலை மலைபோல வளைத்துச் செய்யும் ஆசனம் இது.
விரிப்பில் முட்டிபோட்டு, கைகளை முன்புறம் ஊன்ற வேண்டும். கால் மூட்டுகளை உயர்த்தி, கை மற்றும் கால் விரல்களால் உடலைத் தாங்கும்படி வைத்து, இடுப்பை உயர்த்த வேண்டும். இப்போது பார்க்க மலை போன்ற தோற்றம் இருக்கும். முடிந்த அளவுக்குத் தலையைக் காலுக்கு அருகில் கொண்டுவரலாம். அதற்காக, அதிகமாக வளைக்க முற்பட வேண்டாம். இந்த நிலையில், 10 விநாடிகள் இருந்துவிட்டு, பழையநிலைக்குத் திரும்பலாம். இது ஒரு செட். இப்படி மூன்று முறை செய்ய வேண்டும்.

கவனிக்க: மூட்டுவலி, உடல் தடுமாற்றம் இருப்பவர்கள் தவிர்க்க வேண்டும்.
பலன்கள்: பைசெப், ட்ரைசெப் தசைகள், கால் தசைகள் வலுவாகும். கைகள், கால்களுக்கான நல்ல பயிற்சி.
*முதுகுத் தண்டுவடத்துக்குச் சீரான ரத்த ஓட்டம் செல்லும். முதுகுத் தண்டுவடத்துக்கு ஸ்ட்ரெச் கொடுத்த பலன் கிடைக்கும்.
*வயிற்றில் உள்ள உறுப்புகள் மற்றும் தசைகள் நன்கு வேலைசெய்ய உதவும்.
*தோள்பட்டையில் உள்ள முதுகுத் தண்டுவட நரம்புகள் வலுப்பெறும்.
*கவனிக்கும் திறன் மேம்படும். நினைவாற்றல் அதிகரிக்கும். மூளை நன்கு செயல்படும். இடுப்பு, பின் பகுதியில் உள்ள தேவையற்ற கொழுப்பு குறையும்.
- ப்ரீத்தி
படங்கள்: மா.பி.சித்தார்த், மாடல்: ஸ்ருதி

யோகாவுக்குத் தயாராகும் முன்னர் கண்களை மூடி, கைகளில் சின் முத்திரை வைத்து, 10 முறை மூச்சைக் கவனிக்க வேண்டும். யோகா முடிந்ததும், சப்பளங்கால் போட்டு அமர்ந்து, கைகளை கூப்பியபடி, மூன்று முறை ‘ஆம்’ (Aum) சப்தம் சொல்லி, ‘சாந்தி... சாந்தி... சாந்தி’ என்று உச்சரித்து முடிக்க வேண்டும்.