பிரீமியம் ஸ்டோரி
ஸ்டார் ஃபிட்னெஸ்

.பி.எல் லில் கலக்கிய ஹர்திக் பாண்டியா, இந்திய அணியிலும் இடம்பிடித்துவிட்டார். முதல் போட்டியிலேயே ‘மேன் ஆஃப் த மேட்ச்’, இரண்டாம் போட்டியில் தனி ஆளாக வெற்றியின் விளிம்பு வரை கொண்டு போனார். நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்திய அணிக்கு ஒரு வேகப்பந்து வீச்சாளர் ஆல்ரவுண்டராக வந்திருக்கிறார். பவுலிங், பேட்டிங், ஃபீல்டிங் என ஒரு நாள் முழுவதும் களத்தில் கலக்க அதிகப்படியான ஸ்டாமினா வேண்டும். எப்படி சமாளிக்கிறார் பாண்டியா?

“Once a king is always king”- இதுதான் பாண்டியாவின் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ். எதையும் அவ்வளவு எளிதில் விட்டுக்கொடுக்க மாட்டார் பாண்டியா. இந்த விடாமுயற்சிதான் அவரை இந்திய அணியில் சேர்த்திருக்கிறது. இது தனக்குக் கிடைக்க காரணம் தனது உடற்பயிற்சிகள்தான் என்கிறார் பாண்டியா. ‘உடலை கன்ட்ரோலில் வைத்திருப்பவர்களால் எதையும் சாதிக்க முடியும்’ என்பது இந்த 23 வயது வீரரின் நம்பிக்கை.

தினமும் கிரிக்கெட் பயிற்சி எடுப்பது எவ்வளவு முக்கியமோ, அந்த அளவுக்கு உடற்பயிற்சிகளும் முக்கியம் என்பதைப் புரிந்து வைத்திருக்கிறார் பாண்டியா. ‘அவரவர் ஸ்போர்ட்ஸுக்கு ஏற்றது போல உடலை வளைக்க முடிவதே பாதி வெற்றிக்குச் சமம். விளையாட்டுத் திறமைகள் அடுத்தது’ என்பதுதான் பாண்டியாவின் சீக்ரெட்.

பாண்டியா நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர். கிரிக்கெட்தான் வாழ்க்கை என முடிவான பின், ஒருநாள் அவரது அப்பாவின் பிசினஸ் சரிந்தது. சாப்பாட்டுக்கே கஷ்டம். தினமும் நூடுல்ஸ் சாப்பிட்டுவிட்டு, நாள் முழுவதும் பிராக்டீஸில் இருப்பார் பாண்டியா. அதனால் எப்போதுமே டயட்டில் பெரிதாக கவனம் செலுத்த மாட்டார். ஆனால், எல்லா கலோரிகளையும் வொர்க்அவுட் செய்தே சரி கட்டிவிடுவார்.

பாண்டியாவுக்கு கோபம் அதிகம்வரும். அவரை “பரோடாவில் இருக்கும் வெஸ்ட் இண்டீஸ் வீரர்” என்றே சொல்கிறார்கள். கோபம் அதிகமானால் நேராக ஜிம்முக்குச் சென்றுவிடுவாராம். கோபம் தணியும்வரை வொர்க்அவுட்ஸ்தான். ‘உடற்பயிற்சிகள் நம் மனதை அமைதியாக்கி, கண்ட்ரோலில் வைக்க உதவும்’ என்கிறார் பாண்டியா.

பாண்டியாவின் உயரம் 178 செமீ. எடை 68 கிலோ. ‘இந்த விகிதத்தை மெயின்டெயின் செய்வதே முக்கியமான வொர்க்அவுட் டார்கெட்’ என்பார் பாண்டியா. புகைக்கும் பழக்கம் இல்லாததால் தன்னால் நீண்ட நேரம் ஆக்டிவ்வாக இருக்க முடிகிறதாகச் சொல்கிறார். உடல்நலம் என்பது வொர்க்அவுட்டில் மட்டும் இல்லை. நமது வாழ்க்கை முறையிலும் உள்ளது என்பதே உண்மை.

- கார்க்கிபவா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு