Published:Updated:

விராட் கோலியின் சவாலை ஏற்ற மோடி...`ஸ்பைடர்மேன் ப்ளாங்க்’ - அப்படி என்ன ஸ்பெஷல்?

விராட் கோலியின் சவாலை ஏற்ற மோடி...`ஸ்பைடர்மேன் ப்ளாங்க்’ - அப்படி என்ன ஸ்பெஷல்?
விராட் கோலியின் சவாலை ஏற்ற மோடி...`ஸ்பைடர்மேன் ப்ளாங்க்’ - அப்படி என்ன ஸ்பெஷல்?

ணையத்தில் ஒருவர், இன்னொருவருக்கு வீடியோ மூலமாகச் சவால்விடுவதுதான் இப்போது ட்ரெண்ட். ஒருவர், `இது உங்களால் முடியுமா?’ என்று சவால்விட, மற்றவர் அதைச் செய்து காட்டிவிட்டு, `நான் முடித்துவிட்டேன், இதையே 'இன்னொருவருக்கு'ச் சவாலாகவிடுகிறேன்' என்று கூறி, சம்பந்தப்பட்ட நபரை `டேக்' செய்வார்கள். இந்தப் பழக்கம் கடந்த சில மாதங்களாக ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பிரபலமாகிவிட்டது. இது, சில பிரபலங்களையும் விட்டுவைக்கவில்லை. இந்தச் சவால் ஆரோக்கியம் தொடர்பாகவும் இருப்பது நல்ல போக்கு.

ட்விட்டரில் இரு தினங்களுக்கு முன்னர், இந்திய விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் ஒரு பயிற்சியை வீடியோவில் செய்து காட்டி, பாலிவுட் நடிகர் ஹிரித்திக் ரோஷன், விராட் கோலி, சாய்னா நேவால் ஆகியோரை டேக் செய்து, அவர்களும் செய்ய வேண்டுமென்று சேலஞ்ச் செய்திருந்தார். ஏற்கெனவே ஃபிட்னெஸில் அதிக ஆர்வம் கொண்ட விராட் கோலி, நேற்று முன் தினம் அதைச் செய்து முடித்துவிட்டு, தன் பங்குக்கு அனுஷ்கா சர்மா, தோனி, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு சேலஞ்ச் செய்திருந்தார். மோடி இந்த சேலஞ்சை ஏற்றுக்கொள்வதாக நேற்று பதில் கூறியிருக்கிறார். விராட் செய்த பயிற்சியின் பெயர், `ஸ்பைடர்மேன் ப்ளாங்க்' (Spiderman Plank). 

" `ப்ரோன் ப்ளாங்க்' (Prone Plank) எனப்படும் ப்ளாங்க் வகைப் பயிற்சியின் நீட்சிதான் இது. உடல் எடையைக் கட்டுப்படுத்த நினைப்பவர்களுக்கும், கலோரிகளைக் குறைக்க விரும்புபவர்களுக்கும் இது உதவும். இந்தப் பயிற்சியை வார்ம்-அப் பயிற்சியாகவோ, அன்றாடப் பயிற்சிகளில் ஒன்றாகவோ தினமும் செய்யலாம். இடுப்புக்கு மேலிருக்கும் பகுதிகளுக்கும், வயிற்றுப் பகுதிக்கும் இந்தப் பயிற்சி வலு சேர்க்கும்; முக்கியமாக இதயச் செயல்பாடும் ரத்த ஓட்டமும் சீராக இருக்க உதவும்.

எப்படிச் செய்வது?
* தரையில் குப்புறப் படுத்துக்கொண்டு, முழங்கை மடித்து ஊன்றி, கால் விரல்களையும் ஊன்றி, உடலை மேல்நோக்கி உயர்த்தவும். தரையிலிருந்து உடல் பகுதி முழுவதும் நேர்க்கோட்டில் இருக்க வேண்டும். 

* அடுத்ததாக, வலது பக்க கை மூட்டுக்கு அருகில், வலது பக்க காலைக் கொண்டு வர வேண்டும். பிறகு, காலை பின்னுக்கு இழுக்கவும். இதேபோல, இரண்டு கால்களிலும் செய்யலாம். கால் மூட்டு, கையின் மூட்டைத் தொடுவதுதான் இந்தப் பயிற்சியின் அடிப்படை. இந்தப் பயிற்சியை நன்கு பழகிவிட்டவர்கள், கால் மூட்டு கையின் மேல்பகுதியைத் தொடும்வரை உயர்த்தலாம்.

* ஒரு பயிற்சிக்கு 15 முதல் 30 விநாடிகள் வரை நேரம் எடுத்துக்கொண்டு, 10 முதல் 15 முறை செய்யலாம். 


நன்மைகள்:

வொர்க்-அவுட் செய்பவர்கள், ஒவ்வொரு பயிற்சியும் எந்தெந்தப் பகுதிகளுக்கானது என்பதைத் தெரிந்துவைத்திருக்க வேண்டும்.  

* ஸ்பைடர்மேன் ப்ளாங்க் பயிற்சியைத் தொடர்ந்து செய்தால், உடல் எடை சீராகும்; வயிற்றைச் சுற்றியிருக்கும் தசைகள் வலுப்பெறும்; அந்தப் பகுதியிலுள்ள தேவையில்லாத கொழுப்புகள் கரையும். உடலின் முன்புறம் மட்டுமல்லாமல், பின்புறத்துக்கும் இந்தப் பயிற்சி மிகவும் நல்லது. சீரான உடலமைப்பு கிடைக்கும். 

*  விளையாட்டு வீரர்களுக்கு, ப்ளாங்க் சிறந்த பயிற்சி. குறிப்பாக, ஓடுபவர்களுக்கும், கால்பந்து வீரர்களுக்கும்.

* எளிதில் சோர்வடைபவர்கள் இந்தப் பயிற்சியை தினமும் காலையில் செய்துவந்தால், புதுத் தெம்பைப் பெறலாம். தினசரி வேலைகளைப் புத்துணர்வோடு செய்ய இந்தப் பயிற்சி உதவும்.

* பின் முதுகுவலிக்கு, இந்தப் பயிற்சி மிகச் சிறந்த தீர்வு. 

ப்ளாங்க் செய்வதற்கு, மூச்சுப் பயிற்சி அடிப்படை. ப்ளாங்க் செய்யத் தெரியாதவர்கள், `ஸ்பைடர்மேன் ப்ளாங்க்' செய்ய பரிந்துரைக்கப்படுவதில்லை. `ப்ரோன் ப்ளாங்க்' என்ற ப்ளாங்க் வகைப் பயிற்சியைச் செய்து, நன்கு பழக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே, ஸ்பைடர்மேன் ப்ளாங்க் எளிய பயிற்சியாக இருக்கும். யோகா, பைலேட்ஸ் (Pilates), க்ராஸ் ஃபிட் (Cross Fit) அனைத்திலும், அதன் பயிற்சிமுறைகளுக்கு ஏற்ப, சில மாற்றங்கள் செய்து பரிந்துரைக்கப்படும். 

பொதுவாகவே எந்தப் பயிற்சியையும், வெகுநாள்களுக்குத் தொடரக் கூடாது. குறிப்பிட்ட காலத்துக்கு ஒருமுறை பயிற்சியையும், முடிந்தால் பயிற்சி முறைகளையும் மாற்றிக்கொண்டே இருக்க வேண்டும். ஏனென்றால், குறிப்பிட்ட தசைக்கு மட்டும் பயிற்சிக் கொடுப்பதும், குறிப்பிட்ட தசைக்குப் பயிற்சியே கொடுக்காமல் இருப்பதும் தசைப் பிரச்னைகளை ஏற்படுத்தும். வயிற்றின் அடிப்பகுதிக்காகப் பயிற்சிகளை மட்டும் செய்பவர்கள் (சிட்-அப்ஸ்), கூடவே முதுகு மற்றும் பின் தொடைக்கான பயிற்சியையும் செய்ய வேண்டும். ப்ளாங்க் செய்யும்போது இவை எதுவும் வருவதில்லை. காரணம், இதைச் செய்யும்போது உடலின் முன், பின் பக்கங்கள் இரண்டுமே செயல்படும்; அனைத்துத் தசைகளும் ஆக்டிவ்வாக இருக்கும். இதனால்தான் இந்தப் பயிற்சியை அன்றாடப் பயிற்சிகளோடு சேர்த்துக்கொள்ள பரிந்துரைக்கிறார்கள்’’ என்கிறார் பிசியோதெரபிஸ்ட் பிருந்தா.