Published:Updated:

36 வயதினிலே... தோனி ஃபிட்னெஸ் சீக்ரெட்ஸ்! #DhoniFitness

`ஃபிட்டா இருந்தா போதும், வயசெல்லாம் ஒரு விஷயமா?' என்று சொல்லும், தோனியின் ஃபிட்னெஸ் ரகசியம் என்ன தெரியுமா?

36 வயதினிலே... தோனி ஃபிட்னெஸ் சீக்ரெட்ஸ்! #DhoniFitness
36 வயதினிலே... தோனி ஃபிட்னெஸ் சீக்ரெட்ஸ்! #DhoniFitness

ரண்டாண்டு தடைக்காலம் முடிந்து, களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்க்ஸ், மீண்டும் ஒருமுறை வெற்றியை ருசி பார்த்திருக்கிறது. விளையாடப் போகிறவர்களுக்கான பட்டியலை வெளியிட்ட நாள் தொடங்கி, கடைசி நாள்வரை, சென்னை அணியின் மேல் வைக்கப்பட்ட முக்கியமான ஒரு விமர்சனம், `டீம்ல 9 பேர் 30 வயதைத் தாண்டினவங்க... இவங்க எப்படி எனர்ஜெட்டிக்கா விளையாடி கப்பை தட்டிட்டுப் போவாங்க?' என்பதுதான். நேற்று ஐ.பி.எல் கோப்பையை வென்ற பிறகு, கேப்டன் தோனி பேட்டி ஒன்றில் 'வயது என்பது வெறும் எண்ணிக்கைதான்' (Age is Just a Number) என்று கூறி அந்த விமர்சனத்துக்குப் பதிலடி கொடுத்திருந்தார்.

எந்த ஓர் அணிக்கும் கேப்டன்தான் துடுப்பு. அந்த வகையில், தோனிதான் சென்னை அணியின், `சீக்ரெட் ஆஃப் சக்ஸஸ்.’ இந்த ஆண்டோடு 36 வயது முடிகிறது. இப்போதும் 20 வயதுக்கான அதே எனர்ஜி, அதே துள்ளல்! `ஃபிட்டா இருந்தா போதும், வயசெல்லாம் ஒரு விஷயமா?' என்பதுதான் இதற்கான அடிப்படை! தோனியின் இந்த வெற்றிக்கு முக்கியக் காரணம், அவருடைய ஃபிட்னெஸ். சரி... தோனியின் ஃபிட்னெஸ் ரகசியம் என்ன..?

* தோனி, கிரிக்கெட் விளையாடத் தொடங்குவதற்கு முன்பாக, கால்பந்து விளையாட்டுக்கானப் பயிற்சிகளைச் செய்துகொண்டிருந்தார். அதோடு, பாட்மின்டனிலும் தனித்திறமை பெற்றிருந்தார்.  பாட்மின்டன் கண்களுக்கும், கால்பந்து பாதத்துக்கும் சிறந்த பயிற்சி என்பதால், தோனியின் எக்சர்சைஸ் லிஸ்ட்டில் ஜிம் வொர்க்-அவுட்டுக்கு அடுத்ததாக, இப்போதும் இந்த இரு விளையாட்டுகளும் இருக்கின்றன. இந்த அடிப்படை  திறமைகள்தான், இன்றைக்கும் தன்னை ஃபிட்டாகவும் சுறுசுறுப்பாகவும் வைத்திருக்கக் காரணம் என்பது தோனியின் நம்பிக்கை.

* உத்ராஞ்சலின் ஆல்மோரா (Almora) பகுதியைச் சேர்ந்தவர் தோனி. அது மலைப்பிரதேசம் என்பதால், அங்கிருக்கும் மக்கள் இயல்பாகவே மலையேறும் பண்புள்ளவர்கள். அதனால் அவர்களுக்கு உடலில் ஸ்டெமினா அதிகமிருக்கும். அந்த ஊரில் பிறந்து வளர்ந்ததால்தான் தானும் `ஸ்ட்ராங்க் ஸ்டெமினா'வோடு இருப்பதாகத் ஒரு பேட்டி ஒன்றில் குறிப்பிட்டிருக்கிறார். 

* கிரிக்கெட்டில் ஆல்-ரவுண்டரான தோனி, கண்ணிமைக்கும் நொடியில் தனது விக்கெட் கீப்பிங் மூலம் பார்வையாளர்களை அசரடிப்பார். இது குறித்து தோனியின் பயிற்சியாளர் ஜான் குளோஸ்டர் (John Gloster) `தோனியின் ஒவ்வொரு விக்கெட்டுக்கும் பின்னால், குறைந்தபட்சம் அவரது நூறு ஸ்குவாட்ஸ் பயிற்சியாவது இருக்கும். அத்தனை முறை ஸ்குவாட்ஸ் செய்வது, சாதாரண விஷயம் இல்லை. தோனி அவ்வளவு ஃபிட்!’ எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

* தோனிக்கு மிகவும் பிடித்தது பட்டர் சிக்கன். என்றாலும் அவரது தினசரி மெனுவில் இருப்பது வெவ்வேறு ரகங்கள்... 

காலை உணவு: கஞ்சி, பழங்கள், நட்ஸ் மற்றும் ஒரு டம்ளர் பால். 

மதிய உணவு: சப்பாத்தி, புரதத்துக்காக சிக்கன் அல்லது தால் (Dal). கூடவே, ஊட்டச்சத்துக்காக, காய்கறிகளால் செய்யப்பட்ட சாலட் (Salad). 

மாலை பசித்தால், சிக்கன் சாண்ட்விட்ச் (chicken sandwich). 

மேட்சின்போது உடலை நீர்ச்சத்துக் குறையாமல் பார்த்துக்கொள்ள, புரோட்டீன் டிரிங்க்ஸ் மற்றும் பழச்சாறுகளை அருந்துவது வழக்கம். 

* உணவில் புரதச்சத்து அதிகமுள்ளவைதான் இவரின் சாய்ஸ். எனவே உணவுப் பட்டியலில், பருப்பு வகைகள், சிக்கன், அரிசி வகைகள் போன்றவை கண்டிப்பாக இருக்கும். எனர்ஜிக்காக புரோட்டீன் டிரிங்க்ஸ் குடித்தாலும், உடனடி ஆற்றலுக்கு பால் மற்றும் தயிர் வகைகள்தான். 

* ஜிம் பயிற்சிகளை தோனி பெரியளவில் விரும்புவதில்லை. அவசியப்பட்டால் மட்டுமே ஜிம் செல்வார்.

* கொழுப்புச்சத்து உடலில் இருக்கவே கூடாது என நினைப்பவர் தோனி. உணவில் கொழுப்புச்சத்து அதிகமாக இருந்தால், அதற்கேற்ப எக்ஸ்ட்ராவாக உடற்பயிற்சி செய்து, அவற்றை வெளியேற்றிவிடுவார். 

இயல்பாகவே அதிக எனர்ஜி இருப்பதாலோ என்னவோ, கிரிக்கெட்டில் கூல் ஃபினிஷர் தோனி. கடைசி நிமிடம் வரை, அதே எனர்ஜியோடு இருக்கும் தோனிக்கு, `நடந்து முடிந்த 2018 ஐ.பி.எல் சீஸன்தான் பெஸ்ட்’ என்கிறது ஒரு புள்ளிவிவரம். தோனி சொன்னது நூற்றுக்கு நூறு சரி... வயது தடையில்லை! Age is Just a Number.