Published:Updated:

``வேகமும் கவனமும்தான் என் பலம்!’’ - இந்தியாவின் நம்பர் ஒன் டேபிள் டென்னிஸ் பிளேயர் சத்யன் ஞானசேகரன் #FitnessTips

``வேகமும் கவனமும்தான் என் பலம்!’’ - இந்தியாவின் நம்பர் ஒன் டேபிள் டென்னிஸ் பிளேயர் சத்யன் ஞானசேகரன் #FitnessTips

``வேகமும் கவனமும்தான் என் பலம்!’’ - இந்தியாவின் நம்பர் ஒன் டேபிள் டென்னிஸ் பிளேயர் சத்யன் ஞானசேகரன் #FitnessTips
``வேகமும் கவனமும்தான் என் பலம்!’’ - இந்தியாவின் நம்பர் ஒன் டேபிள் டென்னிஸ் பிளேயர் சத்யன் ஞானசேகரன் #FitnessTips

ந்தியாவின் நம்பர் ஒன் டேபிள் டென்னிஸ் வீரர் சத்யன் ஞானசேகரன். உலகளவில் 44-வது இடத்தில் இருப்பவர். இந்தியாவுக்காக காமன்வெல்த் போட்டியில் கலந்துகொண்டு, ஒரு தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என மூன்று பதக்கங்களை அள்ளிக்கொண்டு வந்திருப்பவர். இந்தச் சாதனைகளுக்கு அடித்தளமாக இருப்பது அவரின் ஃபிட்னஸ். அது குறித்து அவரிடம் பேசினோம்...

``ஒவ்வோர் ஆண்டும் பத்து நாள்களுக்கு மொத்தமாக விடுமுறை எடுத்துக்கொண்டு எங்கேயாவது சென்றுவிடுவேன். அந்த நேரத்தில், வொர்க்-அவுட்ஸ் செய்ய மாட்டேன். அப்படி, இந்த வருடமும் விடுமுறையைக் கொண்டாடத் தயாராகிவிட்டேன். விடுமுறை முடிந்து திரும்பி வந்ததும், ஜூன் 14-ம் தேதி முதல் ஜூலை 1-ம் தேதி வரை நடக்கும் 'அல்டிமேட் டேபிள் டென்னிஸ் லீக்' விளையாடப் போகிறேன்’’ என உற்சாகமாகப் பேசியவரிடம், நம் கேள்விகளை முன்வைத்தோம்.

``உங்களுடைய பயிற்சி முறைகள் என்னென்ன?’’

``வாரத்துக்கு ஆறு நாள்கள் உடற்பயிற்சி செய்வேன். வலிமைக்கான பயிற்சிகள் (Strength), ரெஃப்லெக்ஸஸுக்கான பயிற்சிகள் (Reflexes) பொறுமை மற்றும் உந்துதலுக்கான பயிற்சிகள் மற்றும் எண்ட்யூரன்ஸுக்கான பயிற்சிகளை (Endurance) மேற்கொள்வேன். 

இந்த மூன்று வகைப் பயிற்சியையும் இரண்டு நாள்களுக்கு ஒன்று என்ற விகிதத்தில் செய்வேன். ஆறு நாள்களும் காலை நேரத்தில் மட்டுமே பயிற்சி எடுப்பேன். தினமும் ஒன்றரை மணி நேரத்துக்கு குறைவில்லாமல் உடற்பயிற்சியில் ஈடுபடுவேன். விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ள வெளிநாடுகளுக்குப் போகும்போது, என்னென்ன பயிற்சிகளை, எப்போதெல்லாம் செய்ய வேண்டும் என்பதை உடற்பயிற்சியாளர் எழுதித் தந்துவிடுவார். அதைப் பின்பற்றி, பயிற்சி செய்வேன். பெரும்பாலும் அவை வேகம், சுறுசுறுப்புக்கான பயிற்சிகளாக (Speed and agility) இருக்கும்.

அண்மையில், வெர்டிமேக்ஸ் (VertiMax) என்ற புதிய இயந்திரத்தில் பயிற்சியைத் தொடங்கியிருக்கிறேன். இதை, உடலில் எங்கு வேண்டுமானாலும் மாட்டிக்கொள்ளலாம். 

இந்த இயந்திரத்தின் மூலமாகப் பயிற்சி செய்யும்போது, ரெசிஸ்டன்ஸும் (Resistance), எக்ஸ்ப்ளோஸிவ் ஸ்ட்ரெங்த்தும் (Explosive Strength) அதிகமாகும். 

டேபிள் டென்னிஸ் விளையாடும்போது, எந்தத் திசைக்கு பந்து போகும், வரும் என்பதை அந்த நொடியில் யூகிக்க வேண்டும். கவனச் சிதறல் ஏற்பட்டுவிடக் கூடாது. பார்வை தெளிவாக இருக்கவேண்டியது அவசியம். இதற்காக, ரெஃப்லெக்‌சஸுக்கான பயிற்சிகள், டேபிள் டென்னிஸ் கோர்ட்டை 180 டிகிரி கோணத்தில் சுற்றிவரும் பயிற்சிகளைப் பின்பற்றுகிறேன்.

மேலும், விளையாட்டு வீரர்களுக்கு முக்கியமான, கோர் எக்சர்சைஸும் செய்வேன்.’’

``உங்களுடைய ப்ளஸ்?’’

``கண்களை மூடிக்கொண்டே பேலன்ஸ் பண்ணச் சொன்னால்கூடச் செய்வேன். அந்தளவுக்குக் கவனமாக இருப்பேன். `நம் பலம் என்னவென்று தெரிந்துகொண்டு, அதற்கேற்றபடி கூடுதலாக உழைக்க வேண்டும்' என்பது என் கருத்து. அந்த வகையில், என்னுடைய இன்னொரு பலம் வேகம். இதற்காக நான் செய்யும் பயிற்சிகள்... 

* நெல்சன் பால் ட்ரெய்னிங், 
* வெயிட் ட்ரெய்னிங். இதில், குறைவான எடையில்லாத ட்ரெய்னிங்தான் என் விருப்பம். அதை அதிகமுறை செய்வேன்
* ரெஃப்லெக்ஸ் பயிற்சிகள்.
* ஸ்பீட் ட்ரெய்னிங் (கால்கள் வேகமாகச் செயல்படுவதற்கான பயிற்சி)
* ஷேடோ-பிராக்டிஸ் (Shadow Practice) - முன், பின் இரண்டு பக்கமும்
* ஃபிட் லைட்டிங் (Fit lighting).’’

``டயட்?’’ 

``டேபிள் டென்னிஸ் போட்டிகளில் கலந்துகொள்ள அதிகமாக பயணங்களை மேற்கொள்ளவேண்டியிருக்கும். ஒவ்வொரு ஊருக்கும் ஏற்றபடி, என்னுடைய உணவுமுறைகள் மாறுபடும். இயற்கையாக, அந்தந்த இடங்களில் கிடைக்கும் உணவுகள், காய்கறிகளைச் சாப்பிடுவேன். சில இடங்களில் சரியான உணவுகள் கிடைக்காது. அந்த மாதிரியான சமயங்களில் சப்ளிமென்ட்ஸ், புரோபயாடிக்ஸ் எடுத்துக்குவேன். 

கார்போஹைட்ரேட்ஸ் உணவுகள், அரிசி வகை உணவுகள், மீன் வகைகள் எனக்கு ரொம்பப் பிடிக்கும். என் உடலுக்கு குளூட்டன் ஒத்து வராது. எனவே, அதைத் தவிர்த்துவிடுவேன்.

பயிற்சி மற்றும் போட்டிகளில் கலந்துகொள்வதற்கு முன்னதா, நான் சாப்பிடும் உணவின் அளவும் மாறுபடும். பயிற்சிக்கு முன்னால் அதிகமாகவும், போட்டிக்கு முன்னர் குறைவாகவும் சாப்பிடுவேன். இந்த மாதிரியான நேரங்களில் எந்தெந்த உணவுகளைச் சாப்பிட வேண்டும் என அறிவுரை வழங்க, என்னுடன் ஊட்டச்சத்து நிபுணர் இருப்பார். 

கேரட், பீட்ரூட், ஆப்பிள் போன்றவை உடலையும் மனதையும் லகுவாக வைத்திருக்க உதவும். ஒரேநேரத்தில் அதிக உணவுகளை உட்கொள்ளாமல், கொஞ்சம் கொஞ்சமாகச் சாப்பிடுவேன். இப்படிச் சாப்பிடுவதால் வயிறுமுட்டச் சாப்பிட்ட உணர்வைத் தவிர்த்துவிடலாம். அதேபோல், செரிமானத்துக்கு அதிக நேரம் எடுத்துக்கொள்கிற உணவுகளைச் சாப்பிட்டால், உடற்பயிற்சி பாதிக்கப்படும். எனவே என்னுடைய உணவுப் பட்டியலில் எளிதில் செரிமானம் ஆகக்கூடிய உணவுகள்தான் இருக்கும்."

``இந்தியாவின் 'நம்பர் ஒன் பிளேயர்’ என்ற அடைமொழி தரும் அழுத்தத்தை எப்படி எதிர்கொள்கிறீர்கள்?’’

``விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ளும் ஒவ்வொருமுறையும் சில விஷயங்களை கற்றுக்கொள்கிறேன். சில தனித்திறமைகளையும் வளர்த்துக்கொண்டே இருக்கிறேன். அதுதான் என் 'வே ஆஃப் ஹேண்ட்லிங் கேம்'. ஒவ்வொரு போட்டியிலும் இதைச் சரியாக அப்ளை பண்ணியிருக்கிறேனா, இல்லையா என்பதில்தான் என் வெற்றி-தோல்வி இருக்கும். அதேபோல், போட்டிகளில் கலந்துகொள்ளும்போது அதுதான் என் முதல் போட்டி என்று நினைத்து விளையாடுவேன். அப்படி விளையாடும்போது, 'கோப்பையை வெல்ல வேண்டும்’ என்கிற மனஅழுத்தம் இருக்காது. இதனால் பாதி மனஅழுத்தம் குறைந்துவிடும். போதுமான உணவும் தேவையான ஓய்வும் என்னிடம் மீதியிருக்கும் மனஅழுத்தத்தைக் குறைத்துவிடும். அதேபோல, போட்டி முடிந்த மறுநாள்  பிசியோதெரபி சிகிச்சைகள், மசாஜ் செய்துகொள்வேன். இப்படி உடலையும் உள்ளத்தையும் ஆரோக்கியமாக வைத்துக்கொண்டு விளையாடுவதால், போட்டிகளில் வெற்றிக்கோப்பையை வெல்வது எளிதாக இருக்கிறது’’ என்று தன் ஃபிட்னெஸ் சீக்ரெட்ஸ் சொல்கிறார் சத்யன் ஞானசேகரன்.