Published:Updated:

கரிசக்காட்டு வாழ்வே வரம்! - வேல ராம மூர்த்தி

கரிசக்காட்டு வாழ்வே வரம்! - வேல ராம மூர்த்தி
பிரீமியம் ஸ்டோரி
News
கரிசக்காட்டு வாழ்வே வரம்! - வேல ராம மூர்த்தி

கரிசக்காட்டு வாழ்வே வரம்! - வேல ராம மூர்த்தி

கரிசக்காட்டு வாழ்வே வரம்! - வேல ராம மூர்த்தி

ழுத்தாளர் வேல ராமமூர்த்தி இப்போது சினிமாவிலும் செம பிஸி. பேனா பிடித்தக் கையில் வேல் கம்பைக் கொடுத்தாலும், அநாயசமாக அதைக் கையாள்கிறார். சமீபத்தில் வெளியான ‘கிடாரி’ படத்தில் கொம்பையா பாண்டியனாக அவர் ஆடிய ருத்ரதாண்டவம் பக்கா மாஸ். தென் தமிழகத்தின் மண் மணக்கும் வாழ்வை ரத்தமும் சதையுமாக எழுத்தாக்கும் வித்தகம் நிறைந்த விரல்களின் சொந்தக்காரர். பேரன்பும் பெருங்கோபமும் கொண்ட கரிசக்காட்டு மனிதர். அவரின் ஃபிட்னெஸ் ரகசியங்கள் என்னவென கேட்டோம்.

``எனக்கு இப்போ 66 வயசு. 60 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழக கிராமங்களில் அரிசிச்சோறைப் பார்க்க முடியாது. அப்போது எல்லாம், பெரிய பணக்காரன் வீட்டுலதான் அரிசிச்சோறு இருக்கும். மற்றபடி, பெரும்பாலான வீடுகளில் கம்பஞ்சோறு, கேழ்வரகுசோறு, குதிரைவாலிச்சோறு, சோளச்சோறுதான். இயற்கைமுறைப்படி விவசாயம் நடந்த காலகட்டம் அது. மக்கள் எல்லோரும் மாட்டுச் சாணம், ஆட்டுச் சாணம் போன்ற இயற்கை உரங்களைப்போட்டு, விளைந்த நெல் மற்றும் தானியங்களை அறுவடை செய்து உண்டார்கள். அப்போது பள்ளிக்கூடத்துக்குப் போகிற நேரம் தவிர, மீதி இருக்கிற விடுமுறைகளில் காடுகளில்தான், எங்கள் ஆட்டம்பாட்டம் எல்லாம். எங்க ஊரில் இருக்கும் நிலங்களில் தட்டாங்காய், மிதுக்கங்காய், மிதுக்கம்பழம், பாசிப் பயறு, பருத்திக்காய், மஞ்சனத்தி, உளுத்தங்காய், கம்பங்கருது, குதிரைவாலி எல்லாம் சரம் சரமாக, சடை சடையாகத் தொங்கும். ஒன்றையும் விடமாட்டோம். எல்லாவற்றையும் பிடுங்கி விளையாட்டுப் போக்கில் உண்டோம். எது சாப்பிட்டாலும் செரித்துவிடும்.

எங்கள் குடும்பத்தில், சாப்பாடு என்றால் கம்புச்சோறுதான். எங்க அம்மா, வீட்டில் அறுத்துவைத்துள்ள ‘கம்பை’ எடுத்து, உரலில் இடித்து, கஞ்சி காய்ச்சி வைப்பார்கள். அது ஆறியதும், அகப்பையில் அள்ளிவைத்து நடுவில் குழிதோண்டி, கொஞ்சம் கருவாட்டுக் குழம்பை ஊற்றிச் சாப்பிட்டால், அதன் ருசியே தனிதான். கிடாயை வெட்டி, கறி எடுத்தால் ஈரலை மட்டும் எடுத்து, தனியாகச் சுட்டு தின்போம். மீதி இருக்கிற கறியை உப்புக்கண்டம் போட்டு, குடும்பமாக சேர்ந்து சாப்பிடுவோம்.

இவ்வளவு ஊட்டமான உணவுகளைத் உண்டுவிட்டு சும்மா இருந்தால், உடம்பு பெருத்துப் போயிடுமே.. எங்க  ஊர்க் காடுகளில் கிணறுகள் இருக்கும். அந்தக் கிணற்றில் எங்க வயதுப் பசங்க, யாரு முதலில் குதிப்பது எனப் பந்தயம் கட்டிக்கொண்டு திடுதிடுவென ஓடிப்போய் குதிப்போம். எல்லா ராத்திரியும் விடுமுறைகளின் பகலிலும் கிட்டி, சடுகுடு, கள்ளன் போலீஸ் விளையாடுவது; சிலம்பத்தைக் கண்மாயிலேயும், ஊர்த்திரு விழாவிலேயும் ஆடுவதுதான் எங்கள் பொழுது போக்கு. இப்படி, பால்யத்தில் கிராமத்து விளையாட்டுக்களை விளையாடியதும் இயற்கை உணவுகளைச் சாப்பிட்டதும்தான் என் உடல் வலுவுக்கு அடிப்படை.

பி.யூ.சி முடித்தவுடன் ராணுவத்துல சேர்ந்தேன். பலரும் ராணுவப் பயிற்சியின் கடுமை தாங்க முடியாமல், ஊருக்கு ஓடிப்போயிடுவாங்க. ஆனால், நான் குட்டிநாகத்தின் வாளிப்புடன் இருந்த துடியான பருவம். கடுமையான பயிற்சிகளயும் ஆர்வமாகச் செய்வேன். ஒரு நாளைக்கு 10 கி.மீ ஓடுவோம்.  காடு, மலை என நடப்போம். 

இப்போது, அதிகாலையில் 4.30-க்கு எழுந்து, நடைப் பயிற்சிக்கு கிளம்பிடுவேன். ஒரு கி.மீ தொலைவை 10 நிமிடங்களில் உற்சாகமாக நடப்பேன்.  உடலில் கொழுப்புவைக்காமல் இருக்க, அடிக்கடி ‘கொள்ளு’ சேர்த்துக்குவேன். காய்ச்சல், சளி, தலைவலி என்றால் நாட்டுக்கோழி அடிச்சு, சாறு குடிப்பேன்.  எல்லாம் சரியாகிவிடும்.

ஒவ்வாத விஷயத்தை, மனதில் வைத்துக்கொண்டு இருந்தாலும் நோய்தான்.சாகும் வரை, வாழப்போகிறோம். அதனால் நல்ல எண்ணங்களோடு, நல்ல உணவுகளை உண்டு நிறைவாக வாழ்வோம். அதுதான் ஆரோக்கியத்துக்கான வழி’’ என்கிறார் சிலம்பத்தைச் சுழற்றியபடி!

- ம.மாரிமுத்து, ஈ.ஜெ.நந்தகுமார்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz