Published:Updated:

``ரெண்டு மாசத்துக்கு ஒரு டயட் ஷெட்யூல் ஃபாலோ பண்ணுவேன்!’’ - நீச்சல் வீரங்கனை ஜெயவீணா #FitnessTips

நீச்சல் வீராங்கனை ஜெயவீணாவின் ஃபிட்னெஸ் ரகசியம்

``ரெண்டு மாசத்துக்கு ஒரு டயட் ஷெட்யூல் ஃபாலோ பண்ணுவேன்!’’ - நீச்சல் வீரங்கனை ஜெயவீணா #FitnessTips
``ரெண்டு மாசத்துக்கு ஒரு டயட் ஷெட்யூல் ஃபாலோ பண்ணுவேன்!’’ - நீச்சல் வீரங்கனை ஜெயவீணா #FitnessTips

2015-ம் ஆண்டு நடந்த தேசிய விளையாட்டுப் போட்டியில் 50 மீட்டர் பிரெஸ்ட் ஸ்ட்ரோக் (Breaststroke) நீச்சல் பிரிவில் தங்கம் வென்றவர் ஜெயவீணா. `இந்தியாவின் அதிவேக நீச்சல் வீராங்கனை' என்ற பட்டத்தையும் பெற்றவர். நடிகர் தலைவாசல் விஜயின் மகள் . பெரும்பாலும் நடிகர்களின் வாரிசுகள், நடிப்புத்துறையிலேயே கால்பதிக்க ஆசைப்படுவார்கள். ஆனால், ஜெயவீணாவோ,  மூன்றாவது வயதிலேயே நீச்சல் போட்டியில் கலந்துகொண்டவர். ஜெயவீணாவின் நீச்சல் மற்றும் வொர்க்அவுட் பக்கங்கள் இங்கே... 

``நான் சீனியர் லெவலுக்கு வந்து மூணு வருஷம் ஆகுது. வருஷத்துக்கு மூணு போட்டிகள். போட்டிகளோட ஷெட்யூல்படி, வொர்க்-அவுட் ப்ளான் மாறும். மூணு போட்டியிலும் நல்லா பெர்ஃபார்ம் பண்ணினாத்தான், சர்வதேசப் போட்டியில கலந்துக்கும் வாய்ப்பு கிடைக்கும். அதனால தீவிரப் பயிற்சியில் ஈடுபடுவேன். அப்பா, நேஷனல் லெவல் ஜிம்னாஸ்டிக் ப்ளேயர். சினிமாவுல நடிக்க வந்த பிறகு, ஜிம்னாஸ்டிக்கை விட்டுட்டாங்க.  அண்ணன் ஜெய்வந்த் விஜயை ஏதாவது ஒரு விளையாட்டுல ஈடுபடுத்தணும்கிறது அப்பாவோட ஆசை. அப்படி இருந்தால் உடலும் மனசும் உறுதியா இருக்கும். வாழ்க்கையில எந்தப் பிரச்னை வந்தாலும் எதிர்கொள்ள முடியும். எந்த வேலையையும் ஒரு ஒழுங்கோட செய்யலாம். இந்தக் காரணங்களுக்காகத்தான் அப்பா எங்களை விளையாட்டில் ஈடுபடுத்தினாரு. சின்ன வயசுலேயே எனக்கு நீச்சலடிக்க ரொம்பப் பிடிக்கும். அண்ணனை ஸ்விம்மிங் கிளாஸில் சேர்க்கும்போது, அப்படியே என்னையும் சேர்த்துவிட்டாரு. இன்னிக்குவரைக்கும் அண்ணாவும் நானும் ஸ்விம்மிங்கில் ஆர்வமா இருக்கோம். 

இப்போ, போரூர் ஶ்ரீ ராமச்சந்திரா யுனிவர்சிட்டியில் `ஸ்போர்ட்ஸ் அண்ட் எக்சர்சைஸ் சயின்ஸ்' (Sports and Exercise Science) மூணாவது வருஷம் படிக்கிறேன். முழுக்க முழுக்க விளையாட்டைப் பத்தின படிப்புங்கிறதால என்னோட ஃபிசிக்கல் ஃபிட்னெஸுக்கு இந்த காலேஜ் ரொம்ப உதவியாக இருக்கு” என்று உற்சாகமாகப் பேசிக்கொண்டிருந்தவரிடம், ``நீச்சல் போட்டியில் கலந்துக்குறதுக்கு என்ன மாதிரியான உணவுகளை சாப்பிடுறீங்க?’’ என்று கேட்டேன். 

``நீச்சல் வீரர்கள் பல நாடுகளுக்குச் சென்று, பல போட்டிகளில் கலந்துப்பாங்க. சில போட்டிகளில் வெற்றியும், பல போட்டிகளில் தோல்வியும் கிடைக்கலாம். இப்படித் தொடர்ந்து போட்டியில கலந்துக்குறதால, அவங்களுக்கு உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் சில பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பிருக்கு. அதுலருந்து மீண்டு வரவேண்டியது (Recovery) ரொம்ப முக்கியம். அதனால, ஒவ்வொரு போட்டியின்போதும் அந்தந்த போட்டிக்கேத்த மாதிரி என்னைத் தயார்படுத்திப்பேன். அப்படிச் செய்யலைனா தசைப்பிடிப்பு, காயங்கள், உடல்வலி ஏற்பட்டுடும். அதனாலதான் ரெகவரியில உணவுப் பழக்கம் ரொம்ப முக்கியமானதாக இருக்கு. வயிறுமுட்டச் சாப்பிட்டா, அன்றைய தினம் அவ்வளவுதான். நீச்சல்ல ஈடுபடவே முடியாது. ரெண்டு மாசத்துக்கு ஒரு ஷெட்யூல் போட்டு டயட் ஃபாலோ பண்ணுவேன். ஒவ்வொரு வாரமும் என்னோட வொர்க்-அவுட் விஷயங்களை, டயட்டீஷியன்கூட ஷேர் பண்ணிக்குவேன். சாப்பாட்டு மெனுவுல ஏதாச்சும் மாற்ற வேண்டியிருந்தா, அதையும் அவங்ககிட்டயே கேட்டு, அவங்க சொல்றபடி சாப்பிடுவேன்! 

என்னோட டயட் லிஸ்ட்ல `பேலியோ’ மாதிரியான உணவுப் பழக்கம் இருக்கவே இருக்காது. உடற்பயிற்சி செய்யுறப்போ சாப்புடுற `சப்ளிமென்ட்ஸ்’ (supplements) எனக்குப் பிடிக்காது. அது எப்பவுமே தற்காலிகத் தீர்வைத்தான் தரும். பிறகு, நிறைய பிரச்னைகளை ஏற்படுத்திடும். அதனால, நீச்சலடிக்கத் தேவையான கார்போஹைட்ரேட்ஸ், புரதம் நிறைந்த இயற்கை உணவுகளைத்தான் சாப்பிடுவேன்.

வொர்க்-அவுட்

* முதல் மூணு மாசம், `ஆஃப் சீசன்' (Off Season). அந்த நேரத்துல, ஸ்ட்ரெந்த் மற்றும் தசைக்கான பயிற்சிகளை அதிகப்படுத்திப்பேன்.

* அடுத்த ரெண்டு மாசம், `ப்ரீ சீசன்' (Pre Season). இந்தச் சமயத்துல என்னோட டோர்னமென்ட்டுக்கான பயிற்சிகளைச் செய்வேன். பொதுவாக 50 மற்றும் 100 மீட்டர் `பிரெஸ்ட் ஸ்ட்ரோக்’ , 50 `பட்டர்ஃபளை ஸ்விம்மிங்’, 50 `ஃப்ரீ ஸ்டைல்’ பண்ணுவேன். இது எல்லாத்துக்கும் அடிப்படையானது வேகம். வேகத்தை அதிகப்படுத்துற மாதிரியான வொர்க்-அவுட்ஸ் நிறைய செய்வேன். தண்ணீருக்கு வெளியே எவ்வளவு தீவிரமாகப் பயிற்சி செய்யிறேனோ, தண்ணீருக்கு உள்ளேயும் அதே அளவுக்குப் பயிற்சி எடுத்துப்பேன். 

* அடுத்தது, `டேப்பரிங்’ (Tapering). போட்டிகள் நடக்கிற தருணம் இது. இந்த நேரத்துல உடலும் மனமும் ஆரோக்கியமாக இருக்கணும்.  

* கடைசியாக, சிறிது ஓய்வு எடுத்துக்கிட்டு, மீண்டும் நீச்சல் பயிற்சிக்கு என்னைத் தயார்படுத்திப்பேன். இதற்காக, வொர்க்-அவுட்லையே வார்ம்-டவுண் (Warm down), மசாஜ், `ஸ்ட்ரெட்ச்சிங்’ (Stretching) பண்ணுவேன்.

ஜூனியர் லெவல் போட்டிகளில் கலந்துகிறபோதெல்லாம் என்ன பண்றோம், எதுக்காகப் பண்றோம்னே எனக்குத் தெரியாது. `கோச் சொல்றாங்க’ என்கிற ஒரே காரணத்துக்காகப் பண்ணுவேன். இப்போ அப்படியில்லை. நிறைய இடங்களுக்குப் போய், நிறைய விஷயங்களைக் கத்துக்க ஆரம்பிச்சுட்டேன். என்ன மாதிரியான பயிற்சிகள் பண்ணலாம்னு என் நண்பர்களுக்கு ஆலோசனை கொடுக்கிற அளவுக்கு வளர்ந்திருக்கேன். படிப்பும் அதைச் சார்ந்தே இருக்கறதால, இன்னும் கூடுதலாக விஷயங்களைத் தெரிஞ்சுக்குறேன்.

ஸ்ட்ரெஸ்

மூணு வயசுலேயே ஸ்விம்மிங் பண்ண ஆரம்பிச்சுட்டேன். 14 வருஷம் ஜூனியரா இருந்தேன். அப்போல்லாம் எனக்கு பயம், பதற்றம்னா என்னன்னே தெரியாது. கோச் சொல்றபடி நீந்துவேன். ஸ்கூலுக்குப் போகாமக்கூட பயிற்சி எடுப்பேன். ஆனா, சீனியர் லெவலுக்குப் போகும்போது, முதல் போட்டியிலேயே எனக்குப் பதற்றம் வந்துடுச்சு. அப்போ, என்னோட குடும்பத்துல இருக்குறவங்கதான் என்னை உற்சாகப்படுத்தி, ஆதரவாக இருந்தாங்க. நீச்சல் போட்டியில கலந்துக்கிறதுக்கு முன்னாடி பதற்றம் வந்துச்சுன்னா, எனக்கு மூச்சு வாங்க ஆரம்பிச்சுடும். அப்படிப் பதற்றம் வரும்போதெல்லாம் மனசுக்குள்ளே ஜெயிச்சாலும், தோத்தாலும், `கடமையைச் செஞ்சா போதும்'னு நினைச்சுக்குவேன். 

பொதுவாக எனக்குப் பதற்றம் வந்தா, பிடிச்ச பாட்டுகளைக் கேட்பேன். அப்படிக் கேட்கும்போது மனசு அப்படியே ரிலாக்ஸ் ஆகிடும். போட்டிக்கு அரை மணி நேரத்துக்கு முன்னாடியே நீச்சல் குளத்துக்குப்போய் அதைச் சுத்தி வருவேன். அப்படிப் பார்க்கும்போது, அந்த நீச்சல் குளத்தைப் பத்தி என் மனசுக்குள்ளே ஒரு ஐடியா வந்துடும். போட்டியின்போது எப்படி நீந்தணும், எவ்வளவு வேகமாகப் போகலாம் அப்பிடிங்கிறதுக்கெல்லாம் ஒரு ஐடியா கிடைச்சுடும். அதனால என்னோட டென்ஷன்ல பாதி குறைஞ்சுடும். என்னோட பதினேழு வருஷ அனுபவத்துல நீச்சல் விளையாட்டுப் போட்டிகள்ல நான் கத்துக்கிட்டது என்ன தெரியுமா? போட்டியின்போது எப்படிப் பதற்றத்தைக் குறைக்கலாம்கிறதான்!” என்கிறார் ஜெயவீணா.

விளையாட்டு வீரர்களில் பெரும்பாலானவர்களின் லட்சியம் எப்படியாவது ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என்பதாகத்தான் இருக்கும். பலரும் அதைத்தான் சொல்வார்கள். ஆனால்,  ஜெயவீணாவின் லட்சியம் வேறாக இருக்கிறது. அதை அவரே இப்படிச் சொல்கிறார்... ``நானும் சின்ன வயசுல அப்படித்தான் சொன்னேன். ஆனால், என்னோட லட்சியம் ஒலிம்பிக்ஸ் போட்டியில கலந்துக்கிறது மட்டுமல்ல. சீக்கிரமே ஸ்போர்ட்ஸ் சயின்டிஸ்ட், ஸ்போர்ட்ஸ் கோச் அல்லது ஸ்போர்ட்ஸ் பிசியோதெரபிஸ்ட் ஆகணும்.’’

எண்ணம் நிறைவேறட்டும்... வாழ்த்துகள்!