Published:Updated:

``மூச்சுவிடற மாதிரி, சாப்பிடற மாதிரி உடற்பயிற்சி செய்றதும் ஒரு பழக்கம்தான்!’’ - நடிகர் கிருஷ்ணா

தமிழ் சினிமாவில் கிருஷ்ணாவுக்கு இது பத்தாவது வருடம். ஆனாலும், `அலிபாபா’-வில் தோன்றிய அதே கச்சிதமான உடல்வாகு. இது எப்படிச் சாத்தியம்? நடிகர் கிருஷ்ணாவின் ஃபிட்னெஸ் ரகசியம்....

``மூச்சுவிடற மாதிரி, சாப்பிடற மாதிரி உடற்பயிற்சி செய்றதும் ஒரு பழக்கம்தான்!’’ - நடிகர் கிருஷ்ணா
``மூச்சுவிடற மாதிரி, சாப்பிடற மாதிரி உடற்பயிற்சி செய்றதும் ஒரு பழக்கம்தான்!’’ - நடிகர் கிருஷ்ணா

ணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த 'அஞ்சலி' படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் கிருஷ்ணா. தொடர்ந்து 'தளபதி', 'இருவர்' படங்களில் நடித்தார். 'அலிபாபா' திரைப்படத்தில் ஹீரோ அந்தஸ்து பெற்றார். அதற்குப் பிறகு அவர் நடித்த 'கழுகு', 'யாமிருக்க பயமே', 'வானவராயன் வல்லவராயன்' படங்கள் தமிழ் சினிமாவில் அவருக்கென ஒரு தனி இடத்தைப்  பெற்றுத் தந்தன. 2017-ம் ஆண்டில் மட்டும், அவரது நடிப்பில் 'யாக்கை', 'பண்டிகை', 'வீரா', 'விழித்திரு'... ஆகிய நான்கு படங்கள் வெளியாகின. இப்போது, 'கிரகணம்', 'களரி', 'மாரி-2' படங்களில் நடித்துவருகிறார். தமிழ் சினிமாவில் கிருஷ்ணாவுக்கு இது பத்தாவது வருடம். ஆனாலும், `அலிபாபா’-வில் தோன்றிய அதே கச்சிதமான உடல்வாகு. இது எப்படிச் சாத்தியம்? அவரிடமே அந்த ஃபிட்னெஸ் ரகசியம் குறித்துக் கேட்டோம்.

``பிரபலங்கள்தான் ஃபிட்னெஸில் ரொம்ப கவனமா இருக்கணும்னு நிறையப் பேர் நினைக்கிறாங்க. அது ரொம்ப தப்பு. தினசரி வாழ்க்கையை ஆரோக்கியமாகக் கடக்க நினைக்கிற ஒவ்வொருத்தருக்கும் ஃபிட்னெஸ் முக்கியம். இப்போ காற்றுலருந்து சாப்பாடு வரைக்கும் எல்லாத்துலயும் மாசு கலந்துடுச்சு. 'ஜங்க் ஃபுட்' மாதிரியான மோசமான உணவைத்தான் சாப்பிடுறோம். மாசு கலந்த காற்றைத்தான் சுவாசிக்கிறோம். இது, உடலோட இயக்கத்தையும் உறுப்புகளையும் சேதப்படுத்திடும். இந்தநிலை தொடர்ந்துக்கிட்டே இருந்தா, ஆரோக்கியமான வாழ்க்கைங்கிறது கேள்விக்குறியாகிடும். இது மாதிரி பிரச்னைகள்லருந்து உடலைப் பாதுகாக்கறதுக்கு சீரான உடற்பயிற்சியும் முறையான உணவுப்பழக்கமும் கைகொடுக்கும். 

டயட்: சாதாரணமாகவே எனக்கு அடிக்கடி உடல் எடை அதிகரிச்சுடும். அதனால, டயட் விஷயத்துல ரொம்ப கவனமாக இருப்பேன். கார்போஹைட்ரேட் அதிகமா இருக்கிற உணவுகளைத் தவிர்த்திடுவேன். அரிசி உணவுகள், சப்பாத்தியை அதிகமாச் சாப்பிட மாட்டேன். உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்காக, நிறைய காய்கறிகள் சாப்பிடுவேன். கூடவே, கறி, முட்டையும் சேர்த்துக்குவேன். ஞாயித்துக்கிழமை என்னோட 'சீட் மீல் டே' (Cheat Meal Day). எனக்கு ரொம்பப் பிடிச்ச உணவுகளை மட்டும்தான் அன்னிக்கு சாப்பாட்டு மெனுவுல இருக்குற மாதிரி பார்த்துப்பேன். பிரேக்ஃபாஸ்ட்-க்கு ஒரு ஆப்பிள். நேரம் இருந்தா, ஷீர் விதைகள் (sheer seeds), ஆளி விதைகள் (Flax seeds), ஆப்பிள் மூணையும் அரைச்சு, ஜூஸாக்கி குடிப்பேன். லஞ்ச்சுக்கு சிக்கன் இல்லைன்னா மீன், காய்கறிகள், அரிசி சாதம் சாப்பிடுவேன். டின்னருக்கு அஞ்சு முட்டை மட்டும் சாப்பிடுவேன். 

வொர்க்-அவுட்: வாரத்துக்கு ரெண்டு இல்லைன்னா மூணு நாளைக்கு அஞ்சு கிலோ மீட்டர் தூரம் ஓடுவேன். ஷூட்டிங் முடிஞ்சு நேரம் கிடைக்குறப்போ, ஜிம்முக்குப் போய் பயிற்சி எடுப்பேன். மூணு நாளைக்கு ஃபங்க்ஷனல் ட்ரெய்னிங் (Functional Training) மாதிரியான உடலோட தசைப்பகுதிக்கான பயிற்சிகளைச் செய்வேன். உடல்சார்ந்த ஃபிட்னெஸுக்கு எப்படி தினமும் பயிற்சி எடுப்பேனோ, அதேபோல மன அமைதிக்கும் பயிற்சி எடுப்பேன். 27 நிமிஷம் தியானம் பண்ணுவேன். சில நேரங்கள்ல நேரமின்மையால தியானம் செய்ய முடியாத சூழல் உருவாகிடும். வாரத்துக்கு மூணு நாளைக்காவது கண்டிப்பா தியானம் பண்ணுவேன். தியானம் செய்யுறப்போ, மூச்சுப்பயிற்சியையும் சேர்த்துப் பண்ணுவேன். நேரம் கிடைக்கும்போது, பாட்மிண்டன் விளையாடுவேன். விளையாடுறப்போ உடம்புலருக்குற கலோரியெல்லாம் குறைஞ்சுடும். அதனால, அந்த ஒருநாள் மட்டும் வேற எந்த வொர்க்-அவுட்டும் செய்ய மாட்டேன்.  

நான் ஹீரோவாக நடிக்கறதுக்கு முன்னாடி, 89 கிலோ எடை இருந்தேன். சினிமாதான் எனக்கான இடம்னு முடிவு செஞ்சதும், ஃபிட்னெஸ்ல கவனம் செலுத்த ஆரம்பிச்சுட்டேன். ஆரம்பத்துல, முழுக்க முழுக்க எடையைக் குறைக்கிறதுக்கான பயிற்சிகளை மட்டும்தான் செஞ்சேன். முதல்கட்டமா, 'அலிபாபா' படத்துக்காக 15 கிலோ எடையைக் குறைச்சேன். அடுத்து, 'கற்றது களவு' படத்துல இன்னும்  12 கிலோ எடையை குறைச்சு, 62 கிலோவுக்குக் கொண்டு வந்தேன். 'கற்றது களவு'க்குப் பிறகு என்னோட ஃப்ரெண்ட்ஸ், ஃபேமிலி எல்லாம் என்னைப் பார்த்து ரொம்ப பயந்துட்டாங்க. 'ரொம்பவும் ஒல்லியா ஆகிட்டே'னு சொல்லி, பயங்கரமாத் திட்டினாங்க. அன்னிலருந்து இன்னைக்குவரைக்கும் 68 கிலோவுலருந்து 69 கிலோவுக்குள்ள இருக்கிற மாதிரி, எடையை மெயின்டெய்ன் பண்ணிட்டு வர்றேன்.  சமீபத்துல, 'பண்டிகை' படத்துக்காக, அஞ்சு கிலோ எடையை ஏத்தினேன். இந்தப் படத்தோட இயக்குநர், `ஒரு சாதாரணமான ஆளு இக்கட்டான சூழல்ல மாட்டிக்குறது மாதிரியான கதை. அவன் பாடி-பில்டரும் இல்லை; குத்துச்சண்டை வீரரும் கிடையாது. ஆனாலும், சண்டை போடணும்'னு சொல்லியிருந்தாரு. அதனால, தசைக்கான பயிற்சிகளை மட்டும் செஞ்சு, எடையை அதிகரிச்சேன்.

'குறிப்பிட்ட வேலையை 48 நாளுக்கு தொடர்ந்து செஞ்சா, அது பழக்கமா மாறிடும்'கிறதை நானும் நம்புறேன். ஆரம்பத்துல, உடற்பயிற்சி செய்யுறப்போ ரொம்ப சிரமப்பட்டேன். இப்போ, தினமும் உடற்பயிற்சி செய்றேன். என்னோட தினசரிப் நடவடிக்கைகள்ல அதுவும் ஒண்ணாகிடுச்சு. சொல்லப்போனா, மூச்சுவிடற மாதிரி, சாப்பிடற மாதிரி, உடற்பயிற்சி செய்யறதும் ஒரு பழக்கம்தான்’’  - மலர்ந்த புன்னகையோடு சொல்கிறார் கிருஷ்ணா.