Published:Updated:

ஸ்டார் ஃபிட்னெஸ்: நாட்டு வைத்தியமும் நாள் தவறாத பயிற்சிகளும்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஸ்டார் ஃபிட்னெஸ்: நாட்டு வைத்தியமும் நாள் தவறாத பயிற்சிகளும்
ஸ்டார் ஃபிட்னெஸ்: நாட்டு வைத்தியமும் நாள் தவறாத பயிற்சிகளும்

பரதக் கலைஞர் அனிதா ரத்னம் பகிரும் ஆரோக்கிய ரகசியங்கள்ஃபிட்னெஸ்

பிரீமியம் ஸ்டோரி

ரதக் கலையை உயிர் மூச்சாகக் கொண்டு இயங்கிவருபவர் அனிதா ரத்னம். பல நாடுகளுக்குப் பயணித்திருக்கிறார். பல வகையான கலாசாரம், உணவு, தட்பவெப்ப சூழ்நிலைகளைச் சந்தித்திருக்கிறார்.

 சாதிக்கத் துடிக்கும் பெண்களுக்கு அனிதாவின் வாழ்க்கை  இன்ஸ்பிரேஷன். வயது ஓடிவிட்டாலும் உடல் ஆரோக்கியத்திலும் அழகிலும் தனிச் சிரத்தை கொள்கிறார். ஃபிட்னெஸ் பற்றிப் பேச இவரிடம் நிறைய விஷயங்கள் இருக்கின்றன. அவற்றை அன்போடு பகிர்கிறார் அனிதா.

ஸ்டார் ஃபிட்னெஸ்: நாட்டு வைத்தியமும் நாள் தவறாத பயிற்சிகளும்

“ஃபிட்னெஸ்’ என்ற வார்த்தைக்கான அர்த்தமோ, விழிப்பு உணர்வோ தெரியாத காலத்தில்கூட நம்ம முன்னோர்கள் ஆரோக்கியமா இருந்திருக்காங்க. அதற்குக் காரணம் அவங்க கடைப்பிடித்த பழக்கவழக்கங்கள்தான். நான் சின்னப்பிள்ளையா இருந்தபோது வீட்டில் ஆறு மாடுகள் இருந்தன. சுத்தமான பால், நெய்யெல்லாம் கிடைக்கும். வாரத்திற்கு ஒருமுறை பத்தியம். சனிக்கிழமை எண்ணெய்க் குளியல். சாப்பாட்டிலும் கட்டுப்பாடு. நடனத்தோடு சேர்ந்து நிறைய உடற்பயிற்சிகள். எல்லாத்தையுமே  முழுசா கடைப்பிடிச்சேன். என்னுடைய சின்ன வயசுப் பழக்கம்தான் இன்றைய ஆரோக்கியத்துக்குக் காரணம். எங்க வீட்டில் இப்பவுமே நாட்டு வைத்தியம்தான். உடலில் ஏதும் பிரச்னைனா கஷாயம்தான் மருந்து.

இள வயதில் நினைக்கிறதையெல்லாம் சாப்பிடலாம். என்ன சாப்பிட்டாலும் உடல் அதைத் தாங்கிக்கும், எளிதில் ஜீரணமாகும்.  ஆனா வயசாகிடுச்சுன்னா அந்தமாதிரி இஷ்டத்துக்குச் சாப்பிட முடியாது. உடலுக்கு என்ன தேவையோ அதைச் சாப்பிடப் பழகிக்கிறது நல்லது. குறிப்பா நகரத்தில் வாழும் நிறைய பேர் உப்பு, சர்க்கரை, பால் அதிகமா பயன்படுத்துறதைக் குறைக்கணும். ஏன்னா, சுத்தமான பசும்பால் இன்றைக்கு நாம பயன்படுத்துறதில்லை. அளவுக்கு அதிகமா உப்பும் இனிப்பும் எடுத்துக்கிறது உடலுக்குப் பிரச்னைதான். அதுமட்டுமல்லாம, உடல் உழைப்புங்கிறதே குறைஞ்சுபோச்சு. எப்போதுமே ஏசி ரூமுக்குள் அடைஞ்சு கிடக்கிறோம். உடற்பயிற்சிங்கிறது அவசியம் தேவை.  தினமும் உடலிலிருந்து கொஞ்சமாவது வியர்வை வெளியேறுவது நல்லது. உடம்பைச் சரியா கவனிச்சுக்கிறது கிடையாது. உடம்பு சரியில்லைனா நேரா டாக்டர்கிட்ட போறோம். பாட்டி சொன்ன வைத்தியத்தைத்தான் மருத்துவர்களும் சொல்றாங்க.

பொதுவா இந்தியப் பெண்களுக்கு வைட்டமின் டி-யும் வைட்டமின் பி-யும், ரத்த அணுக்களின் அளவும் குறைவாக இருக்கிறதா ஓர் ஆய்வு சொல்லுது. வேலைக்குச் செல்லும் பெண்கள் வயசுக்கு ஏற்றமாதிரியான உணவுகள், உடற்பயிற்சிகள் செய்ய வேண்டியது அவசியம். ஏன்னா பெண்களுக்கு உடல்வாகும் ஆரோக்கியமும் வயதுக்கேற்ப மாறுபடும். அதனால் மூன்று  வேளை சாப்பிடக்கூடிய உணவைப் பிரிச்சு, ஆறு வேளையா கொஞ்சம் கொஞ்சமா சாப்பிடலாம்.

சின்ன வயசுல இருந்து இப்போ வரைக்கும் காலை ஐந்து மணிக்கு எழுந்திடறது என் பழக்கம். ஆறு மணிக்கு வாக்கிங், ஏழு மணிக்கு யோகா, இன்டர்வெல் பயிற்சினு உடலுக்கும் வயதுக்கும் ஏற்ற பயிற்சிகளைச்  செய்கிறேன். நேரம் கிடைக்கும்போதெல்லாம் பழங்கள் நிறையச் சாப்பிடுவேன். உணவுகள் நமக்கு நண்பர்கள் மாதிரி. நண்பர்களை என்னிக்குமே வெறுக்க மாட்டோம்ல, அதே மாதிரி உணவையும் வெறுக்கக் கூடாது. பிரியாணியில் தொடங்கிப் பலகாரம் வரையும் எதையும் சாப்பிடலாம். ஆனா அதில் ஒரு கட்டுப்பாடு இருந்தாலே போதும்.

உடல் மட்டும் ஆரோக்கியமா இருந்தா ஹெல்த்தியா இருக்கோம்னு அர்த்தம் இல்லை. மனசும் ஆரோக்கியமா இருக்கணும். குறிப்பாப் பெண்கள் ஒவ்வொரு கட்டத்திலும் பிரச்னைகளையும் சவால்களையும் சகிச்சுக்கிட்டுத்தான் வாழறாங்க. கவலைகளை உடைத்தெறியுங்க. எப்போதும் சந்தோஷத்தை மட்டும் பரவவிடுங்க. மனசும் உடலும் ஒரே நேர்கோட்டில் பயணிக்கும்போதுதான் உடல் ஆரோக்கியம் வலுவடையும். மன உறுதியும் உடல் வலிமையும் எப்போதும் நம்ம கூடவே இருக்கும். இப்படியான வாழ்க்கை முறைகளைக் கடைப்பிடிச்சா நூறு வயசு வரைக்கும் சந்தோஷமா வாழலாம்.”

-முத்து பகவத்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு