Published:Updated:

உடற்பயிற்சிக்கு உதவுமா இசை?

உடற்பயிற்சிக்கு உதவுமா இசை?
பிரீமியம் ஸ்டோரி
News
உடற்பயிற்சிக்கு உதவுமா இசை?

ஃபிட்னெஸ்

சதியாக, வீட்டிலிருந்தபடி உடற்பயிற்சி செய்வதில் பல நன்மைகள் இருக்கின்றன. ஜிம்முக்குச் (Gym) சென்று உடற்பயிற்சி செய்வதற்காகும் செலவு மிச்சம்; உங்களுக்குப் பிடித்த நேரத்தில் உடற்பயிற்சி செய்யலாம்; அதற்காக வெளியே எங்கும் செல்ல வேண்டியதில்லை; ஜிம்மில் பிறர் தங்கள் வொர்க் அவுட்டைச் செய்து முடிக்கட்டும் என்று எந்த உபகரணங்களுக்காகவும் காத்திருக்க வேண்டியதில்லை. ஆனால், உண்மையிலேயே நேரத்துக்கு, சரியான முறையில் நம் வீட்டில் உடற்பயிற்சி செய்கிறோமா என்பதுதான் மிகப் பெரிய கேள்வி. சோம்பல் படாமல், வீட்டில் நம் வொர்க் அவுட்ஸை மேம்படுத்தும் ஆலோசனைகள் இங்கே...    

உடற்பயிற்சிக்கு உதவுமா இசை?

ஏதாவதொரு ஜிம் சாதனத்தில் முதலீடு செய்யுங்கள்!

இப்படிச் சொன்னவுடன் கவலை கொள்ளாதீர்கள். ட்ரெட்மில் போன்று இடத்தை அடைக்கக்கூடிய, அதிக விலையுள்ள ஜிம் சாதனத்தை வாங்கச் சொல்லவில்லை. இடத்தை அடைக்காத, சிறிய, விலை மலிவான, அதே நேரத்தில் நன்கு பயன்தரக்கூடிய சாதனங்களை வாங்குங்கள். உதாரணமாக ஸ்கிப்பிங் கயிறு, டம்பிள்ஸ், யோகா செய்யப் பயன்படும் பாய் போன்றவை. இவை வீட்டில் இருப்பது உங்களை உடற்பயிற்சி செய்ய ஊக்கப்படுத்தும். அந்தப் பயிற்சிகளை மகிழ்வான செயலாக மாற்றும்.

உடற்பயிற்சிக்கு உதவும் இசை!


உங்களுக்குப் பிடித்த பாடலை, பிடித்த சத்தத்தில் கேட்டுக்கொண்டே உடற்பயிற்சி செய்யலாம். ஆனால், உடற்பயிற்சிக் கூடத்தில் இது முடியாது. உங்களுக்குப் பிடித்த பாடலைக் கேட்க வேண்டுமென்றால், பிறரையும் சம்மதிக்க வைக்க வேண்டும் அல்லது ஹெட்போனில் கேட்க வேண்டும். உங்களுக்குப் பிடித்த பாடல், உங்கள் ஆற்றலை அதிகரித்து உடற்பயிற்சி செய்யும் நேரத்தையும் அதிகப்படுத்தும். இன்னும் ஊக்கத்தோடு, மகிழ்ச்சியோடு உடற்பயிற்சி செய்வீர்கள். 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
உடற்பயிற்சிக்கு உதவுமா இசை?இடத்தை ஒதுக்குங்கள்!

வீட்டில் உடற்பயிற்சி செய்வதிலிருக்கும் மிகப் பெரிய பிரச்னை அதற்கான இடத்தைத் தேர்வு செய்வது. கையை நீட்டினால் ஏதோ ஒரு பொருள் இடிக்கும் இடத்தில் இருந்துகொண்டு உடற்பயிற்சி செய்வது கடினம். எனவே, இதற்காகவே ஓர் இடத்தை அமைத்துக்கொள்ள வேண்டியது மிக அவசியம். முடிந்தால் நிரந்தரமாக ஓர் அறை அல்லது ஒரு பகுதியை உடற்பயிற்சிக்கென ஒதுக்கிக்கொள்ளலாம். சோபா, மேஜை என அறையின் நடுவில் உள்ளவற்றை ஓரமாக நகர்த்திவைத்துவிட்டு, தற்காலிகமாக ஓர் இடத்தை ஒதுக்கிக்கொள்ளலாம்.  

உடற்பயிற்சிக்கு உதவுமா இசை?

உடற்பயிற்சிக்கு உடைகளும் அவசியமே!

`உடற்பயிற்சி செய்யும்போது இப்படிப்பட்ட உடையைத்தான் அணிந்திருக்க வேண்டும்’ என்று எந்த வரைமுறையும் கிடையாது. அதே நேரம் பொருத்தமான உடையை அணியாமல் சரியாக உடற்பயிற்சிகளைச் செய்ய முடியாது. உடற்பயிற்சியின்போது பொருத்தமான உடையை அணியாததுகூட சோம்பேறித்தனத்தின் வெளிப்பாடுதான். அப்படி இருக்கும்போது, உடற்பயிற்சிகளை மட்டும்  சரியாகச் செய்வீர்களா என்ன? உடையை மாற்றுவது என்பது வாகனத்தில் கியரை மாற்றுவதுபோல, அது தனி உத்வேகத்தைக் கொடுக்கும். உடற்பயிற்சிக்கெனப் பிரத்யேகமாக உடைகளை வாங்குவதைச் செலவாகக் கருதாதீர்கள். அது ஜிம்முக்குச் செலவழிக்கும் பணத்தைவிட மிகக் குறைவே.

தனியே... தன்னந்தனியே!


வீட்டில் உடற்பயிற்சி செய்யும்போது நீங்கள் தனியாக இருக்கிறீர்கள்; உங்களை யாரும் வேடிக்கை பார்ப்பார்கள் என்கிற கவலை இல்லை. வீட்டில் இருக்கும் சில பொருள்களைக்கொண்டு ஜிம்மில் செய்ய முடியாத சில உடற்பயிற்சிகளைக்கூட செய்யலாம். மாடிப்படிகளில் வேகமாக ஏறுவது, மலையேறும் உணர்வைக் கொடுக்கும். சமையலறையின் மூலையிலோ, சோபாவின் ஓரத்திலோ சுதந்திரமாக நீங்கள் புஷ்-அப் எடுக்கலாம். வீட்டுச் சூழலில் இதுபோன்ற உடற்பயிற்சிகளைச் செய்வது மனதுக்கு மகிழ்ச்சியையும் நிறைவையும் தரும். தொடர்ந்து இவற்றைப் பின்பற்றி வந்தால், உங்கள் உடற்பயிற்சியின் தரமும் உயரும்.

கவனச்சிதறல்களைக் குறைக்கலாம்!

வீட்டில் உடற்பயிற்சி செய்வதில் பெரும் பிரச்னை, உங்கள் கவனத்தைச் சிதறடிக்கும் விஷயங்கள் அதிகமாக இருப்பதுதான். குக்கரிலிருந்து விசில் சத்தம் கேட்கும், வாஷிங்மெஷின் சத்தம் போடும், செல்போன் ஒலிக்கும், யாரோ ஒருவர் வீட்டுக் கதவைத் தட்டுவார்... இத்தகைய நிகழ்வுகளால் கவனம் சிதறும். முழுமையாக உடற்பயிற்சியில் ஒன்ற முடியாது. காயம் ஏற்படக்கூட வாய்ப்பு உண்டு. எனவே, உடற்பயிற்சி செய்யும்போது, கவனம் சிதறும் அளவுக்கு  மற்ற வேலைகளுக்கு இடம் கொடுக்காதீர்கள். செல்போனையும் மற்ற சாதனங்களையும் அணைத்து வையுங்கள். உடற்பயிற்சிகளைச் செய்து முடித்ததும் மற்ற அனைத்து வேலைகளையும் மீண்டும் தொடரலாம்.

- ச.கலைச்செல்வன்