Published:Updated:

மெல்லிடைக்கு `பெல்லிடி’

மெல்லிடைக்கு `பெல்லிடி’
பிரீமியம் ஸ்டோரி
News
மெல்லிடைக்கு `பெல்லிடி’

டயட்திருமகள்

பெண்ணின் மெல்லிடை... எத்தனை கவிஞர்களின் தூக்கத்தைக் கெடுத்திருக்கும்! இடையின் மெல்லிய அழகைப் பாதுகாப்பதற்காகவே பிடித்த உணவுகளையும் தியாகம் செய்வது பலரது வழக்கம். இன்று மெல்லிடைக்கு என ஸ்பெஷல் டயட், ஜிம்மில் வொர்க் அவுட் என நேரம் ஒதுக்கவேண்டியுள்ளது. திருமணத்துக்குத் தயாராகும் பெண்கள், மாப்பிள்ளை பார்க்கும் படலத்தைத் தொடங்கும்போதே ஜிம், டயட் என சில மாதங்களை இதற்காக ஒதுக்கி இஷ்டப்பட்டே கஷ்டப்படுகின்றனர்.

சைஸ் ஜீரோவுக்காகப் போதிய உணவே எடுத்துக்கொள்ளாமல், சத்துக்குறைபாட்டுடன் மெலிந்து காணப்படுவது, அந்தப் பெண் மீதான பரிதாபத்தையே அதிகரிக்கச் செய்யும். இது, பல்வேறு உடல்நலப் பிரச்னைகளையும் ஏற்படுத்தும். ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பது, பெண்களுக்கு வாழ்நாள் முழுவதும் இருக்கவேண்டிய எண்ணம். ஆனால், அதற்கான சூழல் பெண்களுக்கு இல்லை.

மெல்லிடைக்கு `பெல்லிடி’

இனி இதற்காக வருந்த வேண்டியதில்லை. பிடித்த உணவுகள் அத்தனையையும் இழக்கவேண்டியதில்லை. உடற்பயிற்சியை இயந்திரத்தனமாகச் செய்யாமல், பிடித்த டான்ஸ் மூவ்மென்டாகவே  செய்யமுடிந்தால்..?அதை நட்பு வட்டத்துக்குள் இணைந்தும் மகிழ்ந்தும் நிகழ்த்தமுடிந்தால்..? இதுபோன்ற எதிர்பார்ப்புகளைப் பூர்த்திசெய்யும் வகையில் `பெல்லிடி’ (BELEDI) என்கிற புதிய வொர்க்கவுட் முறையை கோவையில் அறிமுகம் செய்துள்ளார் ஹேமலதா.

``டான்ஸ், எனக்கு ரொம்பப் பிடிச்ச விஷயம். படிப்பு, வேலை தாண்டி எப்பவும் டான்ஸ்ல புதுசா கத்துக்கணும்கிற ஆர்வம் எனக்கு இருந்தது. ஆறு வருஷங்களுக்கு முன்பு, ரோட்டரி கிளப் மூலமா அதுக்கான வாய்ப்புக் கிடைச்சது. குரூப் எக்சேஞ்ச் புரோகிராம்ல நான் அமெரிக்கால இருக்கிற `ஒகாயோ’ங்கிற இடத்துக்குப் போனேன். அங்கே ஜூம்பா கத்துக்கிட்டேன். கோவை வந்த பிறகு, ஜூம்பா இன்ஸ்ட்ரக்டரா புது அவதாரம் எடுத்தேன். டான்ஸ், ஃபிட்னெஸ் வொர்க்கவுட் ரெண்டும் ஜூம்பாவுல இருந்தன. முதல் ஐந்து வருஷங்கள் ஜூம்பாவுலதான் என் கவனம் இருந்தது. அது பொதுவான ஃபிட்னெஸ் டான்ஸ்.

நம்ம பெண்களின் உடலமைப்புக்கேற்ப இடையை மெலிதாக்கும் ஃபிட்னெஸ் டான்ஸ் முறையை உருவாக்க நினைச்சேன். பெல்லி டான்ஸ் எனக்கு ரொம்பவே பிடிக்கும். அதுல நம்ம ஊர் கார்டியோ வொர்க்கவுட் டான்ஸ் மூவ்மென்ட்ஸ் மிக்ஸ் பண்ணினோம். அடிப்படையில் நம்ம பெண்களோட எக்சஸ் சதைகளைக் குறைச்சு, மணல் கடிகாரம் போன்ற இடையழகைத் தரணும்கிற ஃபார்முலாவை வெச்சு உருவாக்கினதுதான் `பெல்லிடி’. இதுக்கு டிரேட்மார்க் வாங்கியதோடு, `அத்தலடிக் மற்றும் ஃபிட்னெஸ் அசோசியேஷன் ஆஃப் அமெரிக்கா’ அமைப்பின் அங்கீகாரமும் வாங்கியிருக்கேன்.

கடந்த ஒரு வருஷமா பெல்லிடி வகுப்புகள் நடந்துட்டிருக்கு. வயது வித்தியாசம் இல்லாம பெல்லிடியை விரும்புறாங்க. பெண்கள் நிறைய பேர் சேர்ந்து குழுவா பண்ணும்போது ஜாலியா இருக்கும்... மன அழுத்தமும் குறையும். அடுத்தவங்க உடலில் ஏற்படும் மாற்றம், நாமும் வொர்க்கவுட் பண்ணணும்கிற ஆர்வத்தை அதிகரிக்கச் செய்யும்.

பெல்லிடி வொர்க்கவுட் என்பதே ஒரு ஃலைப்ஸ்டைல். வாரத்துக்கு மூணு க்ளாஸ். ஒரு மணி நேரம் வொர்க்கவுட் பண்ணணும். ஒவ்வொருவரின் உடல்வாகுக்கு ஏற்ற மாதிரி மாற்றம் தெரியும். அரபி மற்றும் இந்தியப் பாடல்களை இதற்காகப்  பயன்படுத்துறோம். 

பெண்ணிடை எப்பவுமே மெல்லிடையா இருக்க பெல்லிடி உதவுது. பெல்லிடியை பயிற்சியாளர் முன்னிலையிலதான் பண்ணணும். குரூப்பா பண்ணும்போது தான் ஜாலியான ஒரு நிகழ்வா பெல்லிடி மாறும்.

பெல்லிடி பண்றதால, உடம்புல தேவையற்ற சதைபோடும் பிரச்னை குறையுது. அதிக எடை காரணமா பெண்கள் பலவிதமான பிரச்னைகளை அனுபவிக்கிறாங்க. நீரிழிவு, இதயநோய், குழந்தையின்மை, மூட்டுவலி, கர்ப்பப்பைப் பிரச்னைகள்னு அடுக்கிட்டே போகலாம். பெல்லிடியை வழக்கப்படுத்தினால், இதுபோன்ற பிரச்னைகள் வராமல் தடுக்கலாம். எப்பபவும் ஃபிட்டா உணரலாம். உடல் வலிமையாகும். மன அழுத்தம் குறையும். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

மெல்லிடைக்கு `பெல்லிடி’

பெல்லிடி பயிற்சியாளரா மாற நினைக்கிறவங்களுக்கும் பயிற்சி கொடுக்கிறோம். கோவையில தொடங்கிய பெல்லிடிப் பயணம், இப்போ துபாய் வரை போயிருக்கு. துபாய்ல பெல்லிடிப் பயிற்சியாளர்களுக்கான க்ளாஸ் நடத்திட்டிருக்கேன். அடுத்ததா, சென்னையில பெல்லிடிப் பயிற்சி முகாம் நடத்தவிருக்கேன்.

பொதுவாக திருமணத்துக்குத் தயாராகும்  பெண்கள் இடையழகுக்காக பெல்லிடி கத்துக்க ஆர்வம்காட்டுறாங்க. திருமணம், குழந்தைகள்னு பெண்ணுடல் அடுத்தடுத்த மாற்றங்களைச் சந்திக்க வேண்டியிருக்கே? இப்படி எந்த மாற்றத்துக்கு அப்புறமும் அதே மெல்லிடையைப் பராமரிக்க பெண்களுக்கு கைகொடுக்கிற ஃபிட்னெஸ் டான்ஸ்தான் `பெல்லிடி’. இதை எந்த வயதிலும் கத்துக்கலாம். தன் உடலை ஆராதிக்கும் விழிப்புஉணர்வு இன்றைய பெண்கள்கிட்ட வரணும்’’ என்றார் ஹேமா.

கோவையைச் சேர்ந்த பெல்லிடி இன்ஸ்ட்ரக்டர் சரண்யா தன் ஸ்லிம் ரகசியம் பகிர்கிறார்,

``நான் சில வருஷங்களா எடையைப் பற்றிப் பெருசா கண்டுக்காமல் இருந்தேன். வீட்டுல என் கல்யாணப் பேச்சை எடுத்தப்பதான் எடையைப் பார்த்தேன். 70 கிலோ. எடையைக் குறைச்சே ஆகணும்னு தேடினப்போ, பெல்லிடி பற்றித் தெரிஞ்சுக்கிட்டேன். கத்துக்க ஆரம்பிச்ச முதல் மாசத்துலேயே ஒரு கிலோ எடை குறைஞ்சது. பெல்லிடி பண்ணப் பண்ண என் உடலமைப்பு நல்லா மாறுச்சு. இப்போ பெல்லிடி இன்ஸ்ட்ரக்டரா மாறிட்டேன். எடையையும் 15 கிலோ குறைச்சுட்டேன். ரொம்பவும் ஃபிட்டாவும் எனர்ஜிடிக்காவும் ஃபீல் பண்றேன்’’ என்கிறார் சரண்யா.

நீங்களும் உங்களின் மெல்லிடையைப் பாதுகாக்க, `பெல்லிடி’ பண்ணலாமே!