
ஜாலி ஜிம் பாய் கௌதம் கார்த்திக் ஃபிட்னெஸ்
``எப்போதும் நான் துறுதுறுனு இருக்கிறதா எல்லாரும் சொல்வாங்க. அதற்குக் காரணம், என் மனசு. ஜாலியாக இருக்கணும்னு என் மைண்டை ஃப்ரெஷ்ஷா வெச்சுக்குவேன். இதுகூட என் ஃபிட்னெஸ் சீக்ரெட்ஸ்ல ஒண்ணுதான்..." ஜாலியாகப் பேசத் தொடங்குகிறார், நடிகர் கெளதம் கார்த்திக்.

''ஷூட்டிங் ஸ்பாட் வந்துட்டா, நடிக்கிறதுல மட்டும்தான் என் கவனம் இருக்கும். ஷூட்டிங்லேயும் நான் ஜாலி டைப். ஃபிட்னெஸுக்கு நம்ம மனசு ஆரோக்கியமா இருக்கிறது ரொம்ப முக்கியம். மனசு நல்லா இருந்தாதான், உடம்பு நல்லா இருக்கும். இதை, அப்பாகிட்ட இருந்து நான் கத்துக்கிட்டேன்.
பெங்களூரில் காலேஜ் படிச்சிட்டிருந்த காலத்திலேருந்து ஜிம்முக்குப் போறதை வழக்கமா வெச்சிருக்கேன். காலேஜ்ல இருந்தே, உடம்பை ஃபிட்டா வெச்சிக்கிற பழக்கத்தைக் கடைபிடிக்க ஆரம்பிச்சுட்டேன். தினமும் ரெகுலர் வொர்க் அவுட்ஸ் பண்ணிடுவேன். மியூசிக் எனக்கு ரொம்பப் பிடிக்கும். மனசை ஒருநிலைப்படுத்த எனக்கு இசைதான் கருவி.

என் முதல் படம் 'கடல்' பண்ணினபோது அந்த ஷூட்டிங் ஸ்பாட்டே, ஒரு ஃபிட்னெஸ் சென்டருக்குப் போன மாதிரிதான் இருந்தது. ஏன்னா, முதல் படத்திலேயே எனக்கு டான்ஸ் மூவ்மென்ட்ஸ், ஃபைட் சீன்ஸ் எல்லாம் ஹெவியா வெச்சிருந்தார் மணிரத்னம் சார். அந்தப் படத்துல நான் வர்ற காட்சிகள் எல்லாத்துலேயும் என் ஃபிட்னெஸ் ஆடியன்ஸுக்குத் தெரிஞ்சிருக்கும்.
அதனாலேயே, அந்தப் படத்தோட ஷூட்டிங் சமயத்துல நான் ஜிம்முக்குப் போகலை. டயட் மட்டும் ஃபாலோ பண்ணினேன்.
சைக்கிளிங் எனக்கு ரொம்பப் பிடிக்கும். தினமும் நாற்பது கிலோ மீட்டர் வரைக்கும் சைக்கிளிங் போவேன். அதுவும் என்னை ஃபிட்டா வெச்சிருக்க உதவுது. ‘முத்துராமலிங்கம்' படத்தோட ஷூட்டிங் நேரத்துல அப்பா எனக்கு சிலம்பம் கத்துக்கொடுத்தார். அது ஒரு நல்ல அனுபவம். இப்போதும், எனக்கு டைம் கிடைக்கும்போதெல்லாம் சிலம்பம் சுற்றுவேன். மணிக்கணக்காக ஜிம்மில் கிடந்து வொர்க் அவுட் பண்றதைவிட, நம்ம பாரம்பர்யமான இந்தக் கலைகளைச் செய்தாலே உடம்பு ஃபிட்டாக இருக்கும்னு அப்பா சொல்வார். அதை ஃபாலோ பண்ண ஆரம்பிச்சிருக்கேன்.

சில நேரத்துல டயட்டுல ரொம்ப கட்டுப்பாடா இருந்திருக்கேன். அப்பல்லாம் உப்பு போடாத உணவுகளைச் சாப்பிடுவேன். வெந்நீர், காய்கறிகள்தான் சாப்பிட்டேன். அந்த டயட் ரொம்பக் கஷ்டமா இருந்தது. மூன்று மாதங்கள் அப்படிச் செய்தேன்.
என் அப்பா எனக்குக் கொடுக்கும் பெஸ்ட் அட்வைஸ், நிறைய ஜூஸ் குடி என்பதுதான். க்ரீன் டீ குடிப்பதை விட, ஜூஸ் குடிக்கிறது ரொம்ப நல்லது. குறிப்பிட்ட இடைவெளி விட்டுத் தண்ணீரும் குடிச்சிட்டே இருப்பேன். என் ஃபேவரைட் உணவு, தோசை. அதுலயும் எங்கம்மா செய்துகொடுக்கிற தோசையைச் சாப்பிடும்போது எண்ணிக்கையே இல்லாம உள்ளே இறங்கும். அதுதான் என் வீக்னெஸ். கட்டுப்படுத்தவே முடியலை" என்று சிரிக்கிறார்.
- சனா