
கடல் நீச்சலில் சாதனை படைத்த கூடுதல் டி.ஜி.பி சைலேந்திரபாபு அட்வைஸ்ஃபிட்னெஸ்
இலங்கைத் தலைமன்னாருக்கும் தமிழகத்தின் ராமேஸ்வரத்துக்கும் இடையே உள்ள 28.7 கிலோமீட்டர் பாக் ஜலசந்திப் பகுதியை, இதுவரை பல கடல் நீச்சல் வீரர்கள் நீந்திச் சாதனை படைத்திருக்கிறார்கள். ஆனால் தமிழக ரயில்வே போலீஸ் கூடுதல் டி.ஜி.பி சைலேந்திர பாபு, பாக் ஜலசந்தியை நீந்திக் கடந்துள்ள சாதனையை, கடல் நீச்சல் வீரர்களே பிரமிப்பாகப் பார்க்கிறார்கள். அதுவும் 56 வயதில் அவர் புரிந்துள்ள இந்தச் சாதனை, சாகச விளையாட்டு வீரர்களுக்குப் புது உத்வேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
தன்னுடைய காவல்துறைப் பணிக்கு இடையே ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வகுப்பு எடுத்தல், தன்னம்பிக்கைச் சொற்பொழிவாற்றுதல், கட்டுரை எழுதுதல் என எப்போதுமே பிஸியாகவே இருக்கும் அவரைச் சந்தித்தோம். கடல் நீச்சல், உடல் ஃபிட்னெஸ் குறித்து அவரிடம் பேசினோம்.
கடல் நீச்சல் அனுபவம் எப்படியிருந்தது?
``ஆறு, ஏரி, நீச்சல்குளங்களில் நீந்துவதற்கும் கடலில் நீந்துவதற்கும் வித்தியாசம் உள்ளது. கடலில் நீந்தும்போது, கடல் அலையின் ஏற்ற இறக்கத்தைப் பொறுத்து நீந்த வேண்டும். நீந்தும்போது மேலே பார்த்தால் சூரிய வெளிச்சம் கண்களைப் பறிக்கும் வகையில் ஒளிவீசும். கடல் நீரோட்டம், கடல் காற்று ஆகியவற்றுக்கு ஏற்ப நீந்த வேண்டும்.

கோவளம் கடலில் மீனவர்கள், அலைச்சறுக்குப் பயிற்சி நிபுணர்கள் வழிகாட்டுதலுடன் பயிற்சி எடுத்தோம். இலங்கைத் தலைமன்னார் டு ராமேஸ்வரம் தனுஷ்கோடிப் பகுதியைக் கடக்க சுமார் 12 மணி நேரத்துக்குமேல் ஆகும் என்பதை அறிந்துகொண்டோம். எனவே, அதற்கேற்ப பகல் - இரவு என்று கடலில் ரியல் பயிற்சியெடுத்தோம். அது ஒரு த்ரில்லிங் அனுபவம்! வெளியிலிருந்து பார்க்க `தண்ணீர்தானே!’ என நினைப்பீர்கள். ஆனால், கடல்நீர் பகலில் சூடாக இருக்கும். பாக் ஜலசந்தி என்பது, இந்தியப் பெருங்கடல், வங்காள விரிகுடாக் கடல் ஆகியவை இணையும் பகுதி. இங்கு கடல் நீரோட்டம், கடல் கொந்தளிப்பு, காற்றின் திசைவேகம் போன்ற கடல் பருவநிலையைக் கணித்து நீச்சலுக்குத் தயாரானோம். பாக் ஜலசந்திப் பகுதியில் விஷமுள்ள கடல் பாம்புகள் அதிகம். கடித்தால் மரணம்தான். பால் சுறா மீன்கள் கூட்டம் கூட்டமாக வரும். அதேபோல இந்தப் பகுதியில் உள்ள ஜெல்லி மீன்கள் நம்மைக் கடித்தால் நமது சருமம் தடித்துவிடும். வலி தாங்க முடியாது. அலர்ஜியாகிவிடும். இதெல்லாம் கடலில் எதிர்கொள்ளவேண்டிய ஆபத்துகள். எனவே, நாங்கள் சுறா மீன்களின் தாக்குதல் களிலிருந்து எங்களைப் பாதுகாத்துக்கொள்ள ஒரு மெஷின் வாங்கி வைத்திருந்தோம். ஜெல்லி மீன்களிடமிருந்து தப்பித்துக்கொள்ள, `சீ சேஃப்’ என்ற க்ரீமை உடலில் பூசிக்கொண்டோம். ஆனால் எதிர்பார்த்தபடி எங்களுக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை.’’

குழந்தைகளுக்கும் மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் உங்கள் ஆலோசனை?
“பொதுவாக கிராமத்தில் உள்ளவர்களுக்கு 50 வயது தாண்டினால்தான் தொப்பை வரும். ஆனால் இன்றோ, நகரத்தில் ஐந்தாவது படிக்கும் போதே சிறுவர்களுக்குத் தொப்பை இருக்கிறது. உடல்நலத்தில் ஆர்வம் காட்டுங்கள். உடற்பயிற்சி செய்தால் போதும். உங்களுக்கு எந்த நோயும் வராது. படிப்பில் ஆர்வமிருப்பது நல்லது. கூடவே விளையாட்டிலும் ஆர்வம் காட்டுங்கள். விளையாட்டில் இந்தியா பின்தங்கியுள்ளது. நீச்சல் கற்றுக்கொள்ளுங்கள். அது ஒரு வாழ்க்கைக்கல்வி.

56 வயதிலும் உடலைக் கட்டுப்கோப்பாக வைத்திருப்பதன் பின்னணி என்ன?
``ஃபிட்னெஸ் என்பது, ஒவ்வொருவருக்கும் மிகவும் முக்கியம். வாக்கிங் போனாலே உடல் எடை குறைந்துவிடாது. உணவைக் குறைக்க வேண்டும். கடல் நீச்சல் சாகசம் செய்ய ஆறு மாதமாக தினமும் 10 மணி நேரம் பயிற்சி எடுத்தேன். கிட்டத்தட்ட 40 வருடங்களாக என் எடையை 73 கிலோ என்ற கட்டுக்குள் வைத்திருக்கிறேன். உணவுக் கட்டுப்பாடு மிக அவசியம். சமைத்த உணவுகளை மூன்று நேரமும் சாப்பிடக் கூடாது.
காலை 9 மணிக்குள் நான் மஞ்சள் கரு நீக்கிய இரண்டு முட்டைகள், ஒரு கப் பால், வாழை அல்லது மாம்பழம் ஒன்று எடுத்துக்கொள்வேன். மதியம் 1:30 மணிக்கு சைவச்சாப்பாடு. சில நாள்களில் மீன் சாப்பாடு. இரவு 8 மணிக்கு இரவு உணவாகக் காய்கறிகள், வேகவைத்த கடலை. 10 மணிக்குத் தூங்கச் சென்றுவிடுவேன். பொரித்த உணவுகளைத் தவிர்த்துவிடுவேன். உலர் பழங்கள் தேவைக்கு ஏற்ப எடுத்துக்கொள்வேன். வயது, உடல் ஆரோக்கியம் ஆகியவற்றுக்கேற்ப மருத்துவர் ஆலோசனை பெற்று உணவு வகைகளைத் தேர்வுசெய்வது பாதுகாப்பானது.
உடற்பயிற்சி செய்ய நேரம் இல்லை என்று குறைப்பட்டுக் கொள்ளாதீர்கள். உங்கள் உடலை நீங்கள் நேசிக்க வேண்டும். நேரம் இல்லை என்று சொல்வதை விட்டுவிட்டு, வசதிக்கு ஏற்பக் காலை, மாலை, இரவு என எப்போது வேண்டுமானாலும் உடற்பயிற்சி செய்யலாம். உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாட்டுடன் இருந்தால் 69 வயதிலும் 19 வயதுபோல் இருக்க முடியும். ஆண்களைவிட, பெண்களுக்கு உடற்பயிற்சி அதிகம் தேவை. பெண்களைவிடக் குழந்தைகளுக்குக் கூடுதல் உடற்பயிற்சி தேவை. உடற்பயிற்சி செய்யும்போது தான் மகிழ்ச்சி தரக்கூடிய ஹார்மோன்கள் சுரக்கும். வாழ்கையில் வெற்றிபெற, உடலையும் உள்ளத்தையும் வலுவாக்குங்கள்.”
- எஸ்.முத்துகிருஷ்ணன்.
படங்கள்: தே.அசோக்குமார்.