
நிவேதா பெத்துராஜின் நிஜ ஃபிட்னெஸ்!ஃபிட்னெஸ்
‘ஒருநாள் கூத்து’ படம் மூலம் அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ். ‘டிக் டிக் டிக்’ படத்தைத் தொடர்ந்து ‘திமிரு பிடிச்சவன்’, ‘பார்ட்டி’, ‘ஜகஜால கில்லாடி’ ஆகிய படங்களில் நடித்துவருகிறார். ‘திமிரு பிடிச்சவன்’ படத்துக்காக புல்லட் ஓட்டக் கற்றுக்கொண்டிருக்கும் நிவேதா பெத்துராஜிடம் அவரது ஃபிட்னெஸ் சீக்ரெட்ஸ் பற்றிக் கேட்டோம்.

“காலையில எழுந்ததும் வெந்நீரில் எலுமிச்சைச்சாறு கலந்து குடிப்பேன். அரை மணிநேரம் கழிச்சுதான் டீ, காபி குடிப்பேன். மூணு வேளையும் அரிசி உணவுகளைச் சாப்பிடற பழக்கம் எனக்கில்லை. சப்பாத்தி, தானியங்கள், பழங்கள், கீரைகள், காய்கறிகள் எல்லாம் எடுத்துக்குவேன். ஷூட்டிங் நேரத்துல வேற வழி இல்லைனாதான் அரிசி சாதம் சாப்பிடுவேன். வீட்டுல இருக்கும்போது என் சாய்ஸ் வடித்த சோறுதான். ஏன்னா, குக்கர்ல வெச்ச சாதத்தை சாப்பிடுறது ஆபத்து. இதனால சர்க்கரை நோய் வர்றதுக்கான வாய்ப்பு அதிகம்னு சொல்றாங்க. சோறு வடிச்சு சாப்பிடறதுதான் ஆரோக்கியமானது. சுவையானதும்கூட.

மாலை நேரத்தில் மில்க் ஷேக் குடிப்பேன். அதுக்கும் கொழுப்பு நீக்கப்பட்ட பால் மட்டும்தான் பயன்படுத்துவேன். ஜங்க் ஃபுட்ஸ் எதையும் நான் சாப்பிடுறதில்லை. எப்பவாவது நொறுக்குத்தீனி சாப்பிடணும்போல இருந்தா, வீட்டுலேயே செய்யச்சொல்வேன். அப்போதும் தேங்காய் எண்ணெய்தான் என் சாய்ஸ். தினமும் காலையில அரை மணிநேரம் நடைப்பயிற்சி, அரை மணிநேரம் யோகப் பயிற்சிகள் செய்வேன். அடிக்கடி ஜிம்முக்குப் போகும் பழக்கம் கிடையாது. தினமும் மூணு லிட்டர் தண்ணீர் குடிக்கிறது அவசியம். அதை மொத்தமா குடிக்காம, நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஒரு கிளாஸ்னு குடிக்கிறதுதான் பெஸ்ட்.

மாட்சா லாட்டே (Matcha Latte) கிரீன் டீயை ஒரு நாளைக்கு ரெண்டு அல்லது மூணு முறை குடிப்பேன். கிரீன் டீயில இந்த வகை உடம்புக்கு நல்லது. இரண்டு கப் தண்ணீரில் ஒரு மூடி ஆப்பிள் சிடர் வினிகரைக் கலந்து குடிப்பேன். இது ஸ்கின் டோனை மேம்படுத்தவும் உடலைக் குளிர்ச்சியாக வைக்கவும் உதவும். தவிர, கொழுப்பைக் குறைக்கிறதுக்கும் உதவும். வாரத்துக்கு ஒருமுறை சீ சால்ட் பாடி ஸ்க்ரப்பிங் (Sea Salt Body Scrubbing) பண்ணுவேன். இது இறந்த செல்களை நீக்கும். தலைவலி, உடம்பு வலி எல்லாத்துக்கும் எசென்ஷியல் ஆயிலில் மசாஜ் பண்ணினா நல்லா இருக்கும். கிட்டத்தட்ட 20 வகையான எண்ணெய்கள் வெச்சிருக்கேன். நல்ல மசாஜ், உடலை மட்டுமில்லை, மனசையும் ரிலாக்ஸ் பண்ணிடும்.”
- சுஜிதா சென்