Published:Updated:

குற்றாலக் குளியல்... குறையாத பழங்கள்..

அனிதா ரத்னம் அழகு ரகசியம்!

குற்றாலக் குளியல்... குறையாத பழங்கள்..

அனிதா ரத்னம் அழகு ரகசியம்!

Published:Updated:

ரேவதி >>படங்கள்: கே.ராஜசேகரன்

##~##

நம்புங்கள்... அனிதா ரத்னத்தின் வயது 55. ஆயிரம் மேடைகள் கண்டு அசத்தும் இந்த நாட்டியப் பேரொளியின் வசீகர முகத்தையும் வாளிப்பான உடலையும் பார்த்தால், உண்மை வயதில் ஒரு பாதியைத்தான் நம்மால் யோசிக்க முடிகிறது. ''எப்படி?'' என்றால், ''அப்படித்தான்'' என அழகான கண்களால் சிரிக்கிறார் அனிதா.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''பாட்டியின் கை வைத்தியம், அம்மாவின் கைப் பக்குவம், அப்பாவின் அக்கறை... இவைதான் என் உடல் கட்டுக்கோப்பாக இருப்பதற்குக் காரணம். என் கை, கால் விரல்கள் எல்லாமே அப்பா மாதிரி நல்ல நீளம். உழைப்பைத் தாங்கக்கூடிய உடல் அம்மாவுக்கு. அவரைப்போல எனக்கும் நல்ல உடற்சக்தி உண்டு. உங்களுக்கு இன்னொரு விஷயம் தெரியுமா? என் பாட்டிக்கு வயது 96. இந்த வயதிலும் சுறுசுறுப்பாக நடமாடும் அவரைப் பார்க்கும்போது ஒவ்வொரு நாளும் எனக்கு வியப்பாக இருக்கும். அவரது ஆரோக்கியத்துக்கு காரணம் அவர் சாப்பிடும் பாரம்பரிய உணவுதானே அன்றி, வேறு எதுவும் இல்லை!'' - எடுத்த எடுப்பிலேயே மூன்று தலைமுறைகளை கவர் செய்து உற்சாகமாகப் பேசுகிறார் அனிதா.    

குற்றாலக் குளியல்... குறையாத பழங்கள்..

''சின்ன வயசுல எனக்கு ஆஸ்துமா இருந்தது. 'மருந்து மாத்திரை வேண்டாம்; யோகாதான் வியாதிகளுக்கு  தீர்வு’னு பாட்டி சொல்ல, அம்மா என்னை யோகா வகுப்பில் சேர்த்தாங்க. யோகா செய்ததால் 12 வயசுக்கு அப்புறம் ஆஸ்துமா நோய் இருந்த இடம் தெரியாமல் மறைஞ்சிடுச்சு. பொதுவாவே உடம்பை வளைத்து ஆடக் கூடிய நடனங்களும் நல்ல உடற்பயிற்சி என்பதால் அதிலும் சேர்த்துவிட்டார்கள். உணவு, உடற்பயிற்சி, மன வளப் பயிற்சி இந்த மூன்றையும் தொடர்ந்து கடைப்பிடித்ததால், அதன் பிறகு எந்த வியாதியும் என்னிடம் நெருங்கவில்லை...'' என்று புன்னகைக்கும் அனிதாவின் ஒரு நாள் எப்படி இருக்கும்?

குற்றாலக் குளியல்... குறையாத பழங்கள்..

''அதிகாலை 5 மணிக்கு எழுந்ததும் கை, கால்களைச் சுத்தம் செய்துவிட்டு, சூரிய நமஸ்காரம் பண்ணுவேன். தியானம், பிராணயாமம் செய்வேன். உடம்பில் புதுத் தெம்பும் உற்சாகமும் கூடி, அன்றுதான் புதிதாய் பிறந்தது போன்ற உணர்வு மேலிடும். மதியம் மூன்று மணிக்கு வேர்க்க விறுவிறுக்க உடற்பயிற்சிகள் செய்யும்போது உடம்பில் இருக்கும் கெட்ட நீர் வெளியேறி, புத்துணர்ச்சி பொங்கும்.  

நம்முடைய அன்றாட வேலைகளிலேயே யோகா பயிற்சிகள் உண்டு என்பார் என் யோகா குரு பி.கே.எஸ். ஐயங்கார். மர பென்ச், பெல்ட், கயிறு, மரக்கட்டை மாதிரியானப் பொருட்களைத் துணையாக வைத்து கடினமான ஆசனங்களைக்கூட எளிமையாக செய்வேன்.

உடல் ரீதியாக எந்தப் பிரச்னை என்றாலும் எனக்கு அதன் வெளிப்பாடு முதலில் பாதத்தில்தான் தெரியவரும். அதனால் பாதத்தில் இருந்து தலைக்கு ரத்தம் போகிற மாதிரியான ஆசனங்களைத்

குற்றாலக் குளியல்... குறையாத பழங்கள்..

தவறாமல் செய்வேன். மெனோபாஸ் பிரச்னை என்றால் என்னவெறேத் தெரியாத அளவுக்கு யோகாதான் என்னை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது'' என்று நொடிக்கொரு தரம் கண் சிமிட்டியபடியே பேசும் அனிதா ரத்னம், பழங்களின் பிரியை.

''எல்லாப் பழங்களையுமே விரும்பிச் சாப்பிடுவேன். ஃப்ரூட் சாலட் இல்லாத நாளே இல்லை. இட்லி, இடியாப்பம், பொங்கல் என காலை உணவோடு ஏதேனும் ஒரு கீரைச் சட்னி நிச்சயம் இருக்கும். மதியச் சாப்பாட்டில் தினமும் ஏதேனும் ஒரு கூட்டு, பொரியல், துவையல் சேர்த்துக்கொள்வேன். டீ, காபி அதிகம் குடித்தால் சீக்கிரத்திலேயே முதுமைத் தோற்றம் வந்துவிடும். அதனால், ஒரு கப் அளவு காபியை நான்கு வேளைக்கு வருவது மாதிரி கொஞ்சம் கொஞ்சமாகக் குடிப்பேன்.

அதேபோல மூன்று வேளை உணவை ஆறு வேளையாகப் பிரித்துத்தான் சாப்பிடுவேன். எப்போதும். பரபரப்பாக இருந்தாலும் பட்டினி என்பதே கிடையாது. பெரும்பாலும் வெளியில் எதையும் சாப்பிடக் கூடாது என்பதை ஒரு கொள்கையாக வைத்திருக்கிறேன்'' என்று தனது உணவுப் பழக்கங்களைப் பட்டியல் போட்டவர், எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பதற்கான ரகசியத்தையும் பகிர்ந்துகொண்டார்.

''காலை 5 மணிக்கு எழுந்தால் இரவு 10 மணிக்கு படுக்கைக்குப் போய்விடுவேன். சினிமா, ஃபேஷன், இசை, நடனம், தியேட்டர், புத்தகம் படிப்பது என்று வாழ்க்கை பற்றியத் தேடல்கள் எனக்கு நிறைய உண்டு. எந்த விஷயத்துக்காகவும் மனதைக் குழப்பிக்கொள்ள மாட்டேன். நேற்றைய கவலைகளோ, நாளைய எதிர்பார்ப்புகளோ இல்லாமல், இந்த நொடிதான் நிஜம் என்று செயல்படுவதால், என் மனசு எப்போதும் லேசாக இருக்கிறது.  

'வயிற்றை எப்பவும் க்ளீனா வெச்சிருந்தாலே, பாதி நோய் பறந்திடும்’ என்று பாட்டி சொல்லுவார்... வாரம் ஒரு முறை நன்றாக காய்ச்சிய நல்லெண்ணெயை உச்சந்தலையில் வைத்துத் தேய்த்து ஆயில் மசாஜ் செய்த பிறகு, அரைத்த சீயக்காய் தேய்த்துக் குளிப்பேன். மாதம் இரண்டு முறை தலைக்கு மருதாணி பயன்படுத்திக் குளிப்பதால், குற்றாலத்தில் குளித்த மாதிரி உடம்பு சூடு தணிந்து ஜில்லுன்னு இருக்கும்.

அடுத்தவர்களுக்காக வாழ்வது ஆனந்தம் என்றால், நமக்காக வாழ்வது பேரானந்தம். நாம் நன்றாக இருந்தால்தானே, எல்லோரையும் நன்றாகப் பார்த்துக்கொள்ள முடியும்!'' - வார்த்தைகளிலும் ரத்தினங்களை உதிர்த்து முடிக்கிறார் அனிதா ரத்னம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism