Published:Updated:

அருணா சாய்ராமின் ஆரோக்கிய ரகசியம்

அருணா சாய்ராமின் ஆரோக்கிய ரகசியம்

அருணா சாய்ராமின் ஆரோக்கிய ரகசியம்

அருணா சாய்ராமின் ஆரோக்கிய ரகசியம்

Published:Updated:
அருணா சாய்ராமின் ஆரோக்கிய ரகசியம்
##~##

த்மஸ்ரீ அருணா சாய்ராமின் 'என்ன கவி பாடினாலும் உந்தன் மனம் இறங்கவில்லை’ பாடலைக் கேட்டு இருக்கிறீர்களா? கேட்டால், வாழ்வின் அற்புதமான தருணங்களில் ஒன்றாக அது இருக்கக்கூடும். எல்லோருமே பாடலாம். குரலும் பாவனையும் கூடுவது ஒரு சாகசம். அருணாவுக்கே உரிய சாகசம்! 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மூன்று மணி நேரமானாலும் அப்படி ஓர் உற்சாகத்தோடு ஆலாபனை செய்யும் அருணாவிடம் ஆரோக்கிய ரகசியம் கேட்டால், ஒரு கச்சேரியே நடத்துகிறார்.

''வாழ்க்கையில் கோபம், துக்கம், வெறுப்பு, ஏமாற்றம், அழுகைன்னு பல உணர்வுகள் நம்மை ஆட்டிப்படைக்குது. உறவா இருந்தாலும் சரி, உற்ற நண்பரா இருந்தாலும் சரி... ஒரு சில விஷயங்களைத்தானே பகிர்ந்துக்க முடியுது? உள்ளுக்குள் உருகித் தவிக்கும் உணர்வுகள் அத்தனையையும் வார்த்தைகளால் வெளிப்படுத்திட முடியுதா என்ன?

அருணா சாய்ராமின் ஆரோக்கிய ரகசியம்

சரி, அதுக்காக மனசு முழுக்கப் பாயுற உணர்வுகளை அப்படியே அணை போட்டு வெச்சுக்க முடியுமா? முடியாது. மனசு தாங்காது. அப்ப இதுக்கு என்னதான் வடிகால்?

கடவுள் இங்கேதான் இசையைக் கொடுக்கிறான். உங்களோட ஒட்டுமொத்த உணர்வுகளையும் வெளிப்படுத்துறதுக்கான ஒரு வடிகால்... இசை. அதனாலதான், நம்ம எண்ண ஓட்டத்தைப் பிரதிபலிக்கிற மாதிரி இசையைக் கேட்கிறப்ப நம்மையும் அறியாமலேயே கண்ணீர் வந்துடுது.

உடலும் மனசும் சோர்ந்து இருக்கிறப்ப, தில்லானா, கஜல் கேட்டுப்பாருங்க. மனசு துள்ள ஆரம்பிச்சிடும். நாடி நரம்புக்குள் புத்துணர்ச்சி பாயும். பிரச்னைகள், சஞ்சலங்கள் நம்ம மனசை ஆட்டிப்படைக்கும்போது இதமான மெல்லிசைப் பாடல்களைக் கேட்டா, மனசு அமைதியாகும்; நிம்மதியான உறக்கத்தைத் தரும். இசையோட ஒலி அதிர்வுகள் நம் உடலுக்குள் போய் மனசு தெளிவாகிடும்.

முதல்முதல்ல 12 வயசுல மேடை ஏறினேன். ஒரு மணி நேரக் கச்சேரி. அந்தச் சின்ன வயசுல, தாளம் தப்பலாம்; பாடல் வரிகள் மறந்துபோகலாம். அதனால், உள்ளுக்குள் ஒருவித பயம் இருந்துட்டே இருக்கும். அதற்காகவே நான் கடுமையா சாதகம் பண்ணுவேன். தப்பாப் பாடினா, என் அம்மா அதைச் சுட்டிக்காட்டுவாரே தவிர, 'இப்படியாப் பாடறது’ன்னு கடிஞ்சுப் பேசினது இல்லை. 'நீ பாடி ஜமாய்ச்சுடுவ’ங்கிற மாதிரிதான் எப்பவும் பேசுவாங்க. அதுதான் என்னை மேடையில தைரியமாப் பாடவெச்சது. வருங்காலத்துல பாட்டுல பெரிய ஆளா வருவோம்கிற தன்னம்பிக்கையையும் எனக்குள்ளே அது ஏற்படுத்திச்சு. குழந்தைங்க மிளிர்றது பெற்றோர் கையில்தான் இருக்கு.

பொதுவா உடல் செயல்பாடுகளுக்கு மூச்சுப் பயிற்சிதான் ரொம்ப முக்கியம். அதுவும் இசைக் கலைஞர்கள் தம் கட்டி பாடறப்ப, மூச்சு சீரா இருந்தால்தான் நல்லது.

தினமும் காலையில 35 நிமிஷம் நாலு விதமான பிராணாயாமப் பயிற்சி செய்றேன்.

மூச்சை வாங்கி வாங்கி இழுக்கிற பஸ்த்ரிகா பயிற்சி.

வயிற்றை எக்கி, இழுத்து மூச்சுவிடுற கபாலபதி பயிற்சி.

உடலை நேராக நிமிர்த்தி கைகளை முழங்கால்கள் மேல்வெச்சு ஒரு நாசி துவாரத்துலேர்ந்து மூச்சை இழுத்து இன்னொரு நாசி துவாரத்தின் வழியா வெளியேவிடுற அனுலோமா விலோமா பயிற்சி.

அடுத்து பத்து நிமிஷம், சிந்தனையே இல்லாத ஒரு மோன நிலை. இதுவும் ஒரு வகை தியானம்தான்.

இந்தப் பயிற்சிகளை நான் தொடர்ந்து செய்யும்போது சுவாசம் சீராக இயங்குவதை என்னால் உணர முடியும். உடலுக்கும் மனசுக்கும் ஓய்வு கிடைக்கும். ஜீரண சக்தி அதிகரிச்சு, அடிவயிற்றுத் தசைகள், ரத்த ஓட்டம், நரம்புகள், மூளை, முதுகுத்தண்டுனு ஒட்டுமொத்த உள் உறுப்புகளுமே சீராகவும் சரியாகவும் இயங்கும். பிராணாயாமப் பலன்களை அனுபவப்பூர்வமாக அனுபவிக்கிறேன்.  

அப்புறம், என்னோட உதவியாளர் பெஞ்சமின் உதவியோட தினமும் 45 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வேன்.

இதயத் துடிப்பைச் சீராக்குகிற எலிப்டிகல் பயிற்சி ரொம்பவே எஃபெக்டிவ்வா இருக்கு.

கால் தசைகள் இணைகிற பகுதியைத்  திடகாத்திரமா வெச்சுருக்கு. 15 நிமிடத்தில் இருந்து 30 நிமிடம் வரை இந்தப் பயிற்சிகளைப் பண்றேன்.

மணிக்கணக்கா உட்கார்ந்து பாடறப்ப ரத்த ஓட்டம் குறையும். கால் வலி அதிகமாகி, மரத்துப்போகும். இந்தப் பயிற்சியை செய்ய ஆரம்பிச்சதுக்கு அப்புறம்தான் நல்ல பலன் கிடைச்சுது.

பொதுவா, காலையில 6 மணிக்குத்தான் எழுந்திருப்பேன். டீ, காபி குடிக்கிற பழக்கம் இல்லை. வெறும் வயித்துல நாலு டம்ளர் தண்ணீர் குடிப்பேன். பயிற்சிகள் செஞ்சு முடிச்சதும், கேரட், மாதுளை கலந்த ஜூஸ் குடிப்பேன். அதுல பீட்டா கரோட்டின், இரும்புச் சத்து இதெல்லாம் இருக்கிறதால, புத்துணர்ச்சியா இருக்கும். பருப்பு, காய்கறி, துவையல், கூட்டு, கீரை, பச்சடி இதெல்லாம் மதிய சாப்பாட்டுல கண்டிப்பா சேர்த்துப்பேன். சாயங்காலம் நாலு மணி வாக்குல ஒரு டிபன் அல்லது பயறு வகை சாலட் சாப்பிடுவேன்.

கச்சேரி இருந்தா மட்டும் முந்தின நாளே ஊறவெச்ச ஐந்து பாதாம் பருப்புகளைச் சாப்பிடுவேன். புரதமும் நல்ல எனர்ஜியும் கிடைக்கும். கச்சேரி பண்ற, இரண்டு மணி நேரத்துக்கு முன்னால மிதமான உணவைச் சாப்பிடுவேன். வயிறு லேசா இருந்தால்தான், தம் பிடிச்சுப் பாட முடியும். நிறைய சாப்பிட்டா, ஏப்பம், சோர்வு மட்டுமில்ல... தூக்கம்கூட வந்திடும். கச்சேரிக்கு இடையிடையே, தண்ணீரைத் தவிர வேற எதையும் குடிக்கமாட்டேன்.

ஒரே வேளையில வயிறு நிரம்பச் சாப்பிடாம, ஒன்றரை மணி நேரத்துக்கு ஒரு முறை ஜூஸ், பழங்கள், சாலட்னு சாப்பிடுவேன்'' என்கிற அருணா, எந்தெந்த உணவில் என்னென்ன சத்துக்கள் இருக்கின்றன என்பதையும் நன்றாகவே அறிந்துவைத்திருக்கிறார்.

''தொண்டை கரகரப்பா இருந்தா, உடனே ஆவி பிடிப்பேன். சரியாயிடும். ஹோமியோபதி மருத்துவரோட ஆலோசனைப்படி, 'ஹைட்ராஸ்டிஸ்’ மருந்தைத் தண்ணீர்ல கரைச்சு வாய் கொப்பளிப்பேன். சளி, தொண்டை பிரச்னை எல்லாம் போயிடும். கொஞ்சம் நெய்யில் மிளகை வறுத்து, சூடான சாதத்தோடு பிசைந்து சாப்பிடுவேன். பாலில் மஞ்சளை இடிச்சுப் போட்டு தண்ணீர் சேர்த்து வடிகட்டிக் குடிப்பேன். தொண்டை வலி பறந்துபோயிடும். இதெல்லாம் என் தொண்டையைப் பாதுகாத்துக் குரலை மெருகேத்த நான் கடைப்பிடிக்கிற வழிகள்.

வாரம் ரெண்டு நாள் உச்சி முதல் உள்ளங்கால் வரை நல்லெண்ணெயைத் தேய்ச்சு, அரைச்ச சீயக்காயைப் போட்டுத் தலைக்குக் குளிப்பேன். எண்ணெய் ஊற ஊற உடல் குளிர்ச்சியாவதோடு, தலைமுடியும் தோலுமே நல்ல பளபளப்பா மாறும். கண்ணு கட்டற அளவுக்குக் குளம் மாதிரி கண்ணுல எண்ணெயை விட்டுடுவேன். கொஞ்சம் நாழி கண்ணு மங்கலா இருக்கும். அப்புறம் கண்ணுக்குள்ள ஐஸ் கட்டியைவெச்ச மாதிரி குளிர்ச்சியா இருக்கும். கண்ணு பளிச்னு தெரியும்'' என்று விழிகள் விரிய விடை தருகிறார் அருணா சாய்ராம்!

அருணா சாய்ராமின் ஆரோக்கிய ரகசியம்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism