Published:Updated:

பருமனைக் குறைக்க அதிகாலையில் எழுங்கள்...

பருமனைக் குறைக்க அதிகாலையில் எழுங்கள்...
பருமனைக் குறைக்க அதிகாலையில் எழுங்கள்...

பருமனைக் குறைக்க அதிகாலையில் எழுங்கள்...

பருமனைக் குறைக்க அதிகாலையில் எழுங்கள்...
##~##

மீபத்திய செய்தித்தாள்களில் இரண்டு விஷயங்கள்  பாதித்தன. அதில் ஒன்று அதிர்ச்சியாகவும், மற்றொன்று ஆச்சர்யமாகவும் இருந்தது. கோயம்புத்தூரில் பொறியியல் முதுநிலை பட்டப்படிப்பு படித்த, விரிவுரையாளராகப் பணியாற்றிவந்த இளம்பெண் ஒருவர், 'தனது அதீத உடல் எடை குறையவில்லையே’ என்ற வருத்தத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார் என்பது அதிர்ச்சியான செய்தி.

 தேர்வு பயத்தில் தற்கொலை, காதல் தோல்வியால் விஷம் குடித்தார், பெற்றோர் அல்லது கணவன் திட்டியதால் தற்கொலை என்பது மாதிரியான செய்திகளை நிறையப் பார்த்திருப்போம். ஆனால், 'உடல் பருமனாக உள்ளது’ என்பதால் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார் என்ற செய்தி புதிது. அந்தப் பெண்ணின் பெயர் டி.கார்த்திகா. உடல் எடையைக் குறைக்க எவ்வளவோ முயற்சி செய்தும் அவரது உடல் எடை குறையவில்லை என்ற மன அழுத்தத்தில் தற்கொலை செய்துகொண்டார்.

அடுத்ததாக ஆச்சர்யம் அளித்த செய்தி இது... அதிகாலையில் எழுந்திருப்பவர்களுக்கு உடல் எடை குறைவாக உள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.  அதிகாலையில் எழுந்திருக்கும் பழக்கம் உடைய 1,068 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு அது. இரவில் நேரம் கழித்துத் தூங்குவதால் மன அழுத்தம் போன்ற பிரச்னைகள் ஏற்பட்டு உடல் பருமன் அதிகரிக்கிறது என்கிறது அந்த ஆய்வு.

பருமனைக் குறைக்க அதிகாலையில் எழுங்கள்...

இந்த இரு செய்திகள்குறித்தும் உடல் பருமன் குறைப்பு நிபுணர் டாக்டர் ராஜ்குமார் பழனியப்பனிடம் பேசினோம்.

'உடல் எடையைக் குறைக்க முடியாமல் விரிவுரையாளர் ஒருவரே தற்கொலை செய்துகொண்டு இருக்கிறார் என்பது அதிர்ச்சியான செய்திதான். உடல் எடை குறைப்புபற்றி மக்கள் மத்தியில் தவறான சில நம்பிக்கைகள் உள்ளன. படித்தவர்கள் மத்தியிலும்கூடப் பட்டினி கிடந்தால் எடையைக் குறைத்துவிடலாம் என்கிற தவறான கருத்து உள்ளது. உணவுக் கட்டுப்பாடு ஓரளவுக்கு எடையைக் குறைக்குமே தவிர, அது ஆரோக்கியமான முறை அல்ல என்பதை முதலில் புரிந்துகொள்ளுங்கள். உடல் எடை அதிகரிக்கும்போது நிதானமாக இருந்தவர்கள் எடை குறைப்பதில் மட்டும் அவசரம் காட்டுவது தவறு. தவறான உணவுப் பழக்கம், சோம்பல் ஆகியன உடல் பருமனையும் வரவழைக்கும்.

நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை பார்ப்பவர்கள், தொலைக்காட்சியே கதி என்று இருப்பவர்கள், பர்கர், பீட்ஸா போன்ற கொழுப்பு நிறைந்த உணவு வகைகளை விரும்பிச் சாப்பிடுபவர்கள் ஆகியோருக்கு உடல் பருமன் என்பது தவிர்க்க முடியாதது. இந்திய நகர்ப்புறங்களில் வேலை பார்த்துவரும் பலரும் தினமும் 10 முதல் 12 மணி நேரத்தை நாற்காலியிலும் கார் இருக்கையிலும் கழிக்கின்றனர். சமீபத்தில் வெளியான 'அமெரிக்கன் ஜர்னல் ஆப் எபிடமாலஜி’யில் தினசரி 6 மணி நேரத்துக்கு மேலாக அமர்ந்த நிலையில் இருப்பவர்களுக்கு உடல் பருமன் மற்றும் அது தொடர்பான பிரச்னைகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு 37 சதவிகிதமாக உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. உட்கார்ந்த நிலையில் வேலை பார்ப்பவர்களுக்கு கலோரி எரிக்கப்படும் அளவு குறைவதால், கொழுப்பு மற்றும் சர்க்கரை அளவும் அதிகரிக்கும். அவ்வப்போது எழுந்து நடமாடுவது மற்றும் உடலை அசைத்து வேலைகளைச் செய்வது ஆகியவற்றின் மூலமே நாள் ஒன்றுக்கு 750 கலோரி வரையில் எரிக்க முடியும்.

அடுத்த மிகப் பெரிய பிரச்னை சரியான நேரத்தில் சாப்பிடாமல் இருப்பது. நம்முடைய உடல் இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரையிலான நேரத்தில் மிகக் குறைவான அளவே கலோரியைச் செலவிடுகிறது. இரவு நேரத்தில் உடலுக்கு அதிக வேலை இருக்காது என்பதே இதற்கான காரணம். இந்த நேரத்தில் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். கலோரி செலவிடப்படாத நேரத்தில் உணவு உட்கொள்ளும்போது, நம்முடைய உடல் அதைச் செலவிடாமல் சேகரித்துவைக்க ஆரம்பிக்கும். காலை 7 மணி, மதியம் 12 மணி, இரவு 7 மணி போன்ற நேரங்களில், வளர்சிதை மாற்ற அளவு உச்சத்தில் இருக்கும். குறிப்பிட்ட இந்த நேரங்களில் சாப்பிட்டால், பருமன் கட்டுப்படும். உடல் உழைப்பு ஏதும் இன்றியே கூடுதலாக 500 கலோரி வரை செலவாகிவிடும்.

இரவில் சீக்கிரம் தூங்கி, அதிகாலையில் எழுந்திருப்பது நிச்சயம் உங்கள் எடை குறைய உதவும்.

இங்கிலாந்தில் உள்ள (Roehampton university)  பல்கலைக் கழகம் மேற்கொண்ட ஆய்வில் அதிகாலையில் எழுந்திருப்பவர்கள், உடல் பருமன் அற்றவர்களாகவும் மகிழ்ச்சியும் ஆரோக்கியம் கொண்டவர்களாகவும் இருப்பதாகக் கண்டறிந்துள்ளனர். அதிகாலையில் எழுந்திருப்பவர்கள் கால தாமதம் இன்றிச் சரியான நேரத்துக்குச் சாப்பிடுகிறார்கள். இதனால் அதிக அளவில் கலோரிகள் எரிக்கப்பட்டுக் கச்சிதமான உடல் அமைப்போடு இருக்கின்றனர்.

எல்லோராலும் உடலைச் சிக்கென்று வைத்துக்கொள்ள முடியும். எடையைக் குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் நமது வாழ்க்கை முறையில் நாம் எங்கு தவறு செய்கிறோம் என்பதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். இதைச் செய்வதன் மூலமே உடல் எடையை ஆரோக்கியமான முறையில் குறைக்க முடியும். உடல் பருமனை அறிவியல்பூர்வமாகத்தான் குறைக்க முடியும். எனவே உங்கள் உடல் எடையைக் குறைக்க புத்திசாலித்தனத்துடன் நீங்கள்தான் முடிவெடுக்க வேண்டும்!''

பருமனைக் குறைக்க அதிகாலையில் எழுங்கள்...
அடுத்த கட்டுரைக்கு