Published:Updated:

பயிற்சிக்கு முன் பயில வேண்டியவை?

பயிற்சிக்கு முன் பயில வேண்டியவை?

பயிற்சிக்கு முன் பயில வேண்டியவை?

பயிற்சிக்கு முன் பயில வேண்டியவை?

Published:Updated:
##~##

ள்ளி மாணவர்கள் பேருந்து, நீச்சல் குளம் மற்றும் விளையாட்டு மைதானம் போன்றவற்றில் தவறி விழுந்து உயிர் இழப்பது பெருகிக்கொண்டு இருக்கிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் கடலூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்துவந்த பரதன் என்ற மாணவன், பள்ளி மைதானத்தில் கால்பந்து விளையாட்டுப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென்று மயக்கமடைந்து கீழே விழுந்து உயிரிழந்தான். பள்ளிக்குச் சென்ற மாணவன், இறந்துவிட்டான் என்ற தகவல் கேட்டு அலறித் துடித்து வந்த பெற்றோர், ''என் மகன் உடம்புக்கு எந்தக் குறையும் இல்லை. இதுவரைக்கும் அவனை எந்த ஆஸ்பத்திரிக்கும்  கூட்டிக்கிட்டு போனதில்லை. திடகாத்திரமாத்தான் இருந்தான். பள்ளி நிர்வாகம் உரிய பயிற்சி கொடுக்காததால்தான் என் பிள்ளை இறந்துட்டான்'' என்று குற்றம்சாட்டினர். 

பள்ளி நிர்வாகமோ, ''அந்த மாணவனுக்கு ஏற்கெனவே ஏதாவது ஆபத்தான நோய் இருந்திருக்கலாம். பெற்றோர் அதைக் கவனிக்காமல் விட்டுவிட்டு இருப்பார்கள். கடுமையான பயிற்சியை அவனது உடல் ஏற்றுக்கொள்ளாததால் அவன் இறந்திருக்கக்கூடும். அதற்கு நாங்கள் என்ன செய்ய முடியும்?'' என்றனர். உண்மையில், இந்த மாதிரி பிரச்னைகளுக்கு என்னதான் தீர்வு? கடலூர் அரசு மருத்துவமனையில் பொது நல மருத்துவராக இருக்கும் ஜெயவீரகுமாரைச் சந்தித்தோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பயிற்சிக்கு முன் பயில வேண்டியவை?

'பொதுவாகவே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு முழு உடல் பரிசோதனை செய்துவைத்துக்கொள்வது நல்லது. பரிசோதனையின் முடிவில், அந்தக் குழந்தைக்கு ஏதேனும் குறைபாடு இருந்தால் இளம் வயதிலேயே அதைக் குணப்படுத்திச் சரிசெய்வது எளிது. இப்படி விளையாட்டுப் பயிற்சிக்கு அனுப்பும்போது, விளையாட்டுப் பயிற்சி ஆசிரியரும் ஒவ்வொரு மாணவரிடமும், 'நடந்தால் மூச்சு வாங்குமா?, மயக்கம் ஏதேனும் வருமா?’ என உடல்நலம் பற்றிய கேள்விகளைக் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும். அதன் பிறகுதான் அவனுக்கு என்ன மாதிரியான உடற்பயிற்சி சரியாக இருக்கும் என முடிவெடுக்க வேண்டும்.

இப்போது இருக்கும் குழந்தைகளில் 60 சதவிகிதம் பேருக்கு நுரையீரல் மற்றும் இதய நோய் சம்பந்தமான பிரச்னைகள் இருக்கின்றன. இவை வெளியில் தெரியாது. உடற்பயிற்சி செய்யும்போது இதயத் துடிப்பானது அதிகரிக்கும். ஒருகட்டத்தில் ஸ்தம்பித்து மரணமும் ஏற்படலாம்.  

பயிற்சிக்கு முன் பயில வேண்டியவை?
பயிற்சிக்கு முன் பயில வேண்டியவை?

பள்ளி நிர்வாகமானது குறைந்தது நான்கு மாதத்துக்கு ஒரு முறையாவது மாணவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யவேண்டும். ஒவ்வொரு விளையாட்டுப் பயிற்சி ஆசிரியரும் சி.பி.ஆர். (இதயம் - நுரையீரல் தன்னிலை சீரமைப்பு) என்று சொல்லக்கூடிய முதல் உதவியைப் பற்றிக் கண்டிப்பாகத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். வெளிநாட்டில் உள்ள பள்ளிகளில் எல்லாம் மாணவர்களுக்கு கண்டிப்பாக சி.பி.ஆர். முதல் உதவி பயிற்சியைச் சொல்லிக் கொடுக்கிறார்கள். நாமும் அதை நடைமுறைப்படுத்தினால் இதுபோன்ற காலகட்டத்தில் பயனுள்ளதாக இருக்கும்'' என்றார் ஜெயவீரகுமார்.

''ஒவ்வொரு மனிதனுக்கும் உடற்பயிற்சி அவசியம். ஆனால் அதை எப்போது, எப்படிச் செய்ய வேண்டும், எதையெல்லாம் தவிர்க்க வேண்டும் என்கிற புரிதல் இல்லாமல் செய்யும்போதுதான் பிரச்னை வருகிறது' என்கிறார் சேலத்தைச் சேர்ந்த ஃபிசியோதெரபிஸ்டான செந்தில்குமார்.

'உடற்பயிற்சி செய்யும்போது உடலில் இருக்கும் தசைகள், மூட்டுகள், சுருங்கி விரிந்து அவற்றின் செயல்திறன் மேம்படும். உடலின் அத்தனை பகுதிகளுக்கும் சீரான ரத்தம் ஓட்டம் கிடைக்கும். வியர்வை வெளியேறும். உடற்பயிற்சி, நம் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளில் பாதியை எரித்து, கரைத்து மீதியை நல்ல கொழுப்பாக மாற்றித் தசைகளுக்குத் தருகிறது.

ஓய்வு நேரங்களில் உடற்பயிற்சி செய்யலாம். ஆனால், டென்ஷனோடு செய்யக் கூடாது. உடலும் மனதும் சேர்ந்து இயங்கினால்தான் உடற்பயிற்சியில் உண்மையான பலன் கிடைக்கும். எல்லோருமே உடற்பயிற்சி செய்யலாம். தங்களுடைய வயதுக்கும் உடற்தகுதிக்கும் ஏற்ப செய்ய வேண்டும். பொதுவாக 21 வயதில்தான் மனித உடலில் எலும்பு உறுதித்தன்மையை அடையும். இந்தக் காலக்கட்டத்தில் அதிக எடை தூக்கும் பயிற்சிகளை மேற்கொள்ளக் கூடாது. மற்ற பயிற்சிகளை நிதானமாக, முறையாக செய்ய வேண்டும். கூடவே பயிற்சியாளர்களின் கண்காணிப்பும் அவசியம். இதில் கவனமாக இல்லாமல் அதிக எடை தூக்கினால் எலும்பு வளர்ச்சி பாதிக்கப்படலாம். 21 வயதுக்கு மேலிருந்து 40 வயது வரை எடை தூக்குதல் போன்ற கடினமான பயிற்சிகள் மேற்கொள்ளலாம். ஆனாலும், கவனம் அவசியம். 40 வயதுக்கு மேல் உடலில் எலும்புத் தேய்மானம் ஏற்படுவதால், கடுமையான பயிற்சிகளை மேற்கொள்ளக் கூடாது. கண்களில் ஆரம்பித்து கணுக்கால் வரை உடலின் எல்லாப் பாகங்களுக்கும் பயிற்சி கொடுக்கலாம். முறையாக மூச்சுப்பயிற்சி செய்துவந்தால், நுரையீரல் பலப்படும்.

அதேபோல, உடற்பயிற்சிக்கு முன் கண்டிப்பாக வார்ம் அப் செய்ய வேண்டும். உடற்பயிற்சி செய்யும்போது உடலில் ரத்த ஓட்டம் அதிகமாகும். இதன் மூலமாக இதயத்தின் வேலை அதிகரிக்கும். ஆக விரைவாக சுருங்கி விரிய இதயத்தைத் தயாராக்குகிற செயல்தான் வார்ம் அப். எனவே, இதைத் தவிர்க்கவே கூடாது.  

பயிற்சிக்கு முன் பயில வேண்டியவை?

வார்ம் அப் முடித்துவிட்டு, சைக்கிளிங், ட்ரட் மில் பயிற்சிகளை செய்யலாம். உடற்பயிற்சி செய்யும்போது கை, கால்களை முறையாக, நேராக வைத்து செய்ய வேண்டும். நிமிர்ந்து இருந்து செய்யும் உடற்பயிற்சிகளின்போது முதுகுத் தண்டுவடம் நேராக இருப்பதுபோல் பார்த்துக்கொள்ள வேண்டும். படுத்துக்கொண்டு செய்யும்போதும் மிகக் கவனமாக இருக்க வேண்டும். இல்லை எனில் தண்டுவடம் தடம் புரள வாய்ப்பு உள்ளது. மணிக்கணக்கில் உடற்பயிற்சியில் ஈடுபடக் கூடாது. சோர்வு ஏற்பட்டால் நிறுத்திவிட வேண்டும்.  நேரத்தை அதிகப்படுத்துவதாக இருந்தால் அதற்கான முடிவை உடற்பயிற்சி ஆலோசகரிடம் கேட்டுத்தான் செய்ய வேண்டும். தலைசுற்றல், வாந்தி மற்றும் வியர்வை அதிகமாக இருக்கும் நேரத்தில் உடற்பயிற்சிக்கு ஓய்வு கொடுக்க வேண்டும். காய்ச்சல் இருக்கும்போது உடற்பயிற்சி செய்யக் கூடாது. காய்ச்சலின் போதோ, உடல்நிலை சரியில்லாத நாட்களிலோ உடற்பயிற்சி செய்யக் கூடாது'' என்றார் செந்தில்குமார்.

'தன் குழந்தைகள் கராத்தே, குங்ஃபூ, குதிரையேற்றம், நீச்சல் என்று எல்லா விஷயங்களையும் கற்றுக்கொள்ள வேண்டும் எனப் பெற்றோர்கள் ஆசைப்படுகின்றனர். படிப்புடன் இன்னபிற தகுதிகளும் தேவைதான். ஆனால், அதற்காகக் குழந்தைகளின் உயிரோடு விளையாடுவது நல்லதல்ல என்பதையும் புரிந்துகொள்ளுங்கள்'' என்று அறிவுறுத்திய பொது சுகாதாரத் துறையைச் சேர்ந்த மருத்துவர் மாரியப்பன், ஒவ்வொரு உடற்பயிற்சியின்போதும் கவனிக்க வேண்டிய விஷயங்களைப் பட்டியலிட்டார்.

எல்லாவிதத் தற்காப்புக் கலைகளையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று எந்தவிதக் கட்டாயமும் இல்லை. ஏதாவது ஒரு தற்காப்புக்கலையில் சில நிலைகள் மட்டுமே அறிந்திருந்தால் போதுமானது. இதுதவிர, கூடைப்பந்து, கால்பந்து, ஹாக்கி என்று மற்ற விளையாட்டுகளில் குழந்தைகளை ஊக்கப்படுத்தி அவர்களது உடலை வலுவாக்கலாம். ஆனால், நீச்சல் பயிற்சி அவசியம் கற்றுக்கொள்ள வேண்டும். நல்ல சுத்தமான நீச்சல் குளங்களில், பயிற்சியாளர் கண்காணிப்பில் நீச்சல் கற்றுக்கொள்ள ஏற்பாடு செய்ய வேண்டும். சைனஸ் பிரச்னை இருக்கிறவர்கள் கவனமாகப் பயிற்சி செய்ய வேண்டும். காதுகளில் தொற்றுப் பிரச்னை உள்ளவர்கள் பிரத்யேக முக மூடிகளை அணிந்துகொண்டு பயிற்சி செய்யலாம்.

நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய குழந்தைகள்தான் நீச்சல் பயிற்சி செய்யவேண்டும் எனப் பரிந்துரை செய்கிறது மருத்துவ உலகம். காரணம் நீச்சலடிக்கும்போது குறைந்தது 20 விநாடிகள் மூச்சை அடக்கி நீரினுள் இருக்க வேண்டி வரும். இத்தனை நொடிகள் மூச்சை அடக்கி வைத்திருக்கும் திறனே நான்கு வயதுக் குழந்தைகளுக்குத்தான் இருக்கும். இதை அறியாமல் இரண்டு வயதுக் குழந்தையைத் தூக்கிக்கொண்டுபோய் நீச்சல் குளத்தில் விடுவது அபாயத்தை விரும்பி அழைக்கும் செயல். ஐந்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கே கராத்தே, குங்ஃபூ போன்ற கடுமையானப் பயிற்சிகளை பரிந்துரைப்போம். இந்த மாதிரியான கடுமையான பயிற்சிகளின்போது இதயத்துடிப்பு மளமளவென அதிகரிக்கும். சராசரியாக நிமிடத்துக்கு 60 முதல் 100 ஆக இருக்கும் இதயத்துடிப்பு இருநூறைத் தாண்டும்போது உயிருக்கே ஆபத்தாகிவிடும். நீச்சல், கராத்தே, குதிரை ஏற்றம் என எந்தப் பயிற்சியானாலும் தக்க வயதில், சரியான நிபுணரின் கண்காணிப்புடன் மட்டுமே செய்ய வேண்டும்'' என்கிறார் டாக்டர் மாரியப்பன் அக்கறையாக!

பயிற்சிக்கு முன் பயில வேண்டியவை?
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism