Published:Updated:

மனசுக்கும் உடலுக்கும் இதமான 'தாய்ச்சீ'

அண்ணன் தேசத்தின் 'அடடே' பயிற்சி!

மனசுக்கும் உடலுக்கும் இதமான 'தாய்ச்சீ'

அண்ணன் தேசத்தின் 'அடடே' பயிற்சி!

Published:Updated:
##~##

தாய்ச்சீ ச்சுவான்... சுருக்கமாகத் தாய்ச்சீ. சீனாவின் பாரம்பரியமிக்க தற்காப்புக் கலை. பண்டையக் கால சீனர்களின் போர்முறையில் மிக முக்கிய அம்சம் இந்த தாய்ச்சீ. காலங்கள் உருண்டோட, துப்பாக்கிகளும் ஏவுகணைகளும் போரில் முக்கியத்துவம் பெற்றதும், தாய்ச்சீயின் சேவை போர்க்களத்தில் தேவைப்படாமல் போனது. ஆனால், சரித்திரம் திரும்பும் என்பதற்குச் சாட்சியாக, சீன அறிஞர்கள் சிலரால் தாய்ச்சீ மறு வடிவம் பெற்றது. சாஃப்ட் ஃபார்ம் எனப்படும் இப்போதைய தாய்ச்சீ உருவானது இப்படித்தான். தற்காப்புக் கலை என்று பெயரளவில் சொல்லப்பட்டாலும், இன்றைய தாய்ச்சீ, உலகம்  முழுவதும் உள்ள ஃபிட்னெஸ் பிரியர்களுக்கான தாரக மந்திரம். 

தாய்ச்சீயை மேலோட்டமாகப் பார்க்கும்போது தூரிகையின்றி காற்றில் ஓவியம் வரைவதுபோல்தான் இருக்கும். ஆனால், அது மனிதனை உயிரோவியமாக வாழவைக்கும் உன்னதக் கலை!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

1990-களின் மத்தியில் ஆஸ்திரேலியா சென்று முறைப்படி இந்தக் கலையைக் கற்றவர் ஜார்ஜ் தாமஸ். 'ஃபூஷெங் யுவான் தாய்ச்சீ அகாடமி’ என்ற பெயரில் பயிற்சி மையம் ஒன்றை ஆரம்பித்து, இந்தியாவின் முக்கிய நகரங்களில் தாய்ச்சீயைப் பயிற்றுவிக்கிறார் இவர். தாய்ச்சீயைப் பற்றி மேலும் விரிவாகத் தெரிந்துகொள்ள, சிஃபு (மாஸ்டர்) ஜார்ஜ் தாமஸிடம் பேசினோம்.

மனசுக்கும் உடலுக்கும் இதமான 'தாய்ச்சீ'

'சுருக்கமாச் சொல்லணும்னா, கண்கள் திறந்தபடி உடலை அசைத்துச் செய்யப்படும் தியானம்தான் தாய்ச்சீ. உடல் ஆரோக்கியம் என்பது உடல் மட்டுமே சம்பந்தப்பட்ட விஷயம் அல்ல. அதில் மனதுக்கும் முக்கியப் பங்கு இருக்கிறது. அதன் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட கலை தாய்ச்சீ.

யார் யாருக்கு எல்லாம் தாய்ச்சீ பயன்படும்?

தாய்ச்சீயின் அழகே அதை யார் வேண்டுமானாலும் செய்யலாம் என்பதுதான். வயது ஒரு தடையே அல்ல. அதேபோல் நான் குண்டாக இருக்கிறேன், எனக்கு இதயக் கோளாறு இருக்கிறது என்பது போன்ற காரணங்களாலும் தாய்ச்சீயை நிராகரிக்கத் தேவை இல்லை. ஆனால், கவனிக்கும் திறன் அவசியம். அதனால்தான், வலுக்கட்டாயமாகப் பயிற்சிக்கு அனுப்பப்படும் குழந்தைகளும், ஆர்வம் இல்லாத பெரியவர்களும் இதைத் தொடர்ந்து பயில முடிவது இல்லை. எந்த வயதில் கற்றுக்கொண்டாலும், ஒரு மாஸ்டரிடம் கற்றுக்கொள்வது அவசியம்.

மனசுக்கும் உடலுக்கும் இதமான 'தாய்ச்சீ'

எப்போது செய்யலாம்?

சூரிய உதயத்தின்போதோ, சூரிய அஸ்தமனத்தின்போதோ தாய்ச்சீ செய்யலாம். ஆனால், எக்காரணம் கொண்டும் அதிகமாக உணவருந்திவிட்டோ, பசித்த வயிறுடனோ தாய்ச்சீ செய்யக் கூடாது.

சீனா, கொரியா போன்ற நாடுகளில், திறந்தவெளியில் மரங்களும் செடி - கொடிகளும் சூழ்ந்த அமைதியான இடத்தில் பலர் கூடித்  தாய்ச்சீ பயிற்சியை மேற்கொள்வர். மேடு பள்ளங்கள் அற்ற சமதளம் தேவைப்படும். இல்லை என்றால், நல்ல இயற்கையான காற்றோட்ட வசதிகொண்ட, குளிரூட்டப்படாத அறையில் பயிற்சி செய்யலாம்.

மருத்துவப் பயன்கள்

தாய்ச்சீயின் முக்கியமான கூறுகள் மூன்று. சாந்தப்படுத்துதல், திடப்படுத்துதல், ஒருநிலைப்படுத்துதல். எந்த ஒரு நோய்க்கும் தாய்ச்சீயால் மருத்துவத் தீர்வு தர முடியாது. ஆனால், எந்தஒரு மருத்துவ முறைக்கும் தேவையான சப்போர்ட் தெரபியைத் தாய்ச்சீயால் தர முடியும்.

அதிகப்படியான உடல் கொழுப்பு, சர்க்கரை நோய், சுவாசக் கோளாறு, மூட்டு வலி உள்ளிட்ட உடலியல் பிரச்னைகளுக்கும் மன அழுத்தம், டென்ஷன், கோபம் என மனம் சார்ந்த பிரச்னைகளுக்கும் தாய்ச்சீயின் மூலம் நல்ல தீர்வுகளைக் காண முடியும்.

குறிப்பிட்ட உடல் உறுப்பில் சக்தி இல்லை என்றால், அது தன்னிடம் இல்லாத சக்தியை வேறு ஓர் உறுப்பில் இருந்து எடுத்துக்கொள்ளும். இதனால், உடலில் ஒரு சமநிலையற்ற தன்மை உருவாகும். தாய்ச்சீயின் முக்கிய நோக்கமே உடல் உறுப்புகளுக்குள் சமநிலையைக் கொண்டுவருவதுதான்.  

விளையாட்டு வீரர்களும் கமாண்டோ படை வீரர்களும்கூட தாய்ச்சீ கற்றுக்கொள்கின்றனர்.

மனதைச் சாந்தப்படுத்தவும், இக்கட்டான சூழ்நிலைகளில் நேர்த்தியாக முடிவெடுக்கவும் உதவுகிறது தாய்ச்சீ!''

மனசுக்கும் உடலுக்கும் இதமான 'தாய்ச்சீ'
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism