Published:Updated:

மனமே கோயில்... மகிழ்வே வாயில்!

யேசுதாஸ் ஆரோக்கிய ரகசியம்

##~##

சென்னை திருவான்மியூர் நான்காவது கடற்கரைச் சாலையில் அமைந்திருக்கும் அந்த வெள்ளை மாளிகை ஆரவாரம் இல்லாத அமைதியின் சின்னம். செடி கொடிகளின் அசைவும், பறவைகளின் ஓசையும் பரவசம் விதைக்க, இயற்கையின் வாசத்தை நுகர்ந்தபடியே அந்த வீட்டுக்குள் சென்றோம். வரவேற்பறையில் 'பளீர்’ வேட்டியும், ஜிப்பாவுமாகக்  கை கூப்பி வரவேற்கிறார்    கே.ஜே.யேசுதாஸ். தனித்த குரல் அடையாளத்தால் ரசிக உள்ளங்களைக் கட்டிப் போட்டிருக்கும் இன்னிசைக்காரர். 

70 வயது என்று சொன்னால்தான் தெரியும். திடகாத்திரமான உடலும், வளமான குரலுமாய்த் திகழும் யேசுதாஸ் தனது குரல் நலம் மற்றும் உடல் நலத்தின் ரகசியங்கள் பற்றிப் பேசுகிறார்.  

''வெளிநாடுகளில், 'நாம் என்பது, நாம் சாப்பிடும் உணவு’ என்பார்கள். 'உணவே மருந்து’ என்பதுதான் நம் முன்னோர்கள் கற்பித்த பாடம். ஆகையால் சாப்பாட்டில் நான் எப்போதுமே கவனமாக இருப்பேன். இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு, உறைப்பு, துவர்ப்பு, கசப்பு என அறுசுவை உணவும் இருந்தால்தான் உடலுக்கு நல்லது. அதே சமயம் நாக்கைக் கட்டுப்படுத்தினால்... வாழும் காலம் வரை நம் வேலையை நாமே செய்யக்கூடிய அளவுக்கு ஆரோக்கியத்தைக் கட்டுக்குள் வைக்கலாம்.

மனமே கோயில்... மகிழ்வே வாயில்!

உப்பு, புளி, மிளகாய், பருப்பு, எண்ணெய், காபி பொடி என எந்தப் பொருளை எடுத்தாலும், 'எதில் கலப்படம் இருக்கிறது. இல்லை’ என்பதைக் கண்டுபிடிக்க முடிவதில்லை. அதே போல ஒரு ஹோட் டலுக்குப் போனால், அங்கு அவர்கள் எப்படி    சமைக்கிறார்கள், உணவில் என்னவெல்லாம் சேர்க்கிறார்கள், சுத்தமாகச் சமைக்கிறார்களா? அவை உடலுக்கு நல்லதுதானா? நம் உடல் அதை ஏற்றுக்கொள்ளுமா? என்று எனக்குள் ஆயிரம் கேள்விகள் எழும்.

நான் ஹோட்டல் நடத்துபவர்களுக்கு எதிரி அல்ல... ஆனால், அங்கு சாப்பிட்டால் வளமான குரல் பாதிக்கப்படுமோ, கட்டுக்கோப்பான உடல் தளர்ந்துவிடுமோ, நிம்மதியான தூக்கம் தொலைந்துவிடுமோ என்பது போன்ற ஒருவித பயம் மட்டுமே என்னை ஆட்கொண்டுவிடுகிறது. அதற்காக என்னை நானே கட்டுப்படுத்திக்கொண்டு, வீட்டுச் சாப்பாட்டைத் தவிர, வெளியில் எங்கும் சாப்பிடுவது இல்லை என்று தீர்மானம் செய்திருக்கிறேன். 'ஒருவருக்கு ஒரு மருந்து ஏற்றுக்கொள்ளுமா இல்லையா?’ என்பதை டெஸ்ட் செய்த பிறகுதான் மருத்துவர் அவருக்கு ஒரு மருந்தைப் பரிந்துரைக்கிறார். அதுபோல எனக்கு ஒரு உணவு சேருமா, சேராதா என்பதைத் தெரிந்துகொண்டுதான் நான் சாப்பிடுவேன்.

மனமே கோயில்... மகிழ்வே வாயில்!

நம் ஒவ்வொருவரின் உடலுக்குள்ளும் உணவு சென்றவுடன் அங்கே ஒரு குருஷேத்திரப் போர் நடக்க ஆரம்பிக்கிறது. உணவின் தன்மை, தரத்திற்கு ஏற்ப, உடலுக்குள் சக்தியானது ஊடுருவுகிறது. உண்ணும் உணவே விஷமாய்ப் போகும் நிலை உருவாவதற்கு நாமே காரணமாகிவிடக் கூடாது. உடற்பயிற்சி இல்லாத உடம்புக்கு உணவு அதிகம் தேவை இல்லை என்பது என் கருத்து. போதுமான உடல் உழைப்பு இல்லாமல் போனால், வயிற்றில் உண்ட உணவு எளிதில் ஜீரணமாகாது. இதன் தொடர்ச்சியாக முதுகு வலி, தொப்பை, ஹார்ட் பிராப்ளம் எனப் பல்வேறு பிரச்னைகள் தலைதூக்கும். இன்றைய வாழ்க்கையில் அளவோடு சாப்பிடுவதுதான் வளமான வாழ்வுக்கு வழி. இதைத்தான் 'பசித்துப் புசி’ என்று நம் முன்னோர்கள் சொன்னார்கள் என்பது என் எண்ணம்.

மனமே கோயில்... மகிழ்வே வாயில்!

ஆனால், நான் பார்க்கிற பல இளம் வயதினர்  நாக்குக்குச் சுவையாக உணவு இருக்கிறதா என்பதை மட்டுமே பார்க்கிறார்கள். அது எந்த அளவுக்கு உடலுக்கு ஏற்றது என்பதைப் பார்ப்பது இல்லை. அதனால் பலரும் துரித உணவகங்களிலும் ஓட்டல்களிலுமே சாப்பிடுகிறார்கள். ஆனால், எனக்கு நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் யாராவது கூப்பிட்டால், தவிர்க்க முடியாத சூழலில் அவர்களின் அன்பிற்காக எப்போதேனும் சாப்பிடப் போவேன். ஒலிப்பதிவுக்காகக் குளிர்ப் பிரதேசங்களுக்குச் செல்லும்போது டீ, காபி பழக்கமும் தொற்றிக் கொண்டுவிட்டது. ஆனால், இதை அளவோடு வைத்திருக்கிறேன்.

பசிக்கும்போது மட்டும்தான் சாப்பிடுவேன். அதேபோல எதையும் அளவோடு உண்பது என் வழக்கம். 'உணவு வேண்டும்’ என்ற உணர்வு குறைந்து, 'போதும்’ என்ற உணர்வு அதிகமாகும்போது நான் கையைக் கழுவிவிடுவேன். எப்போதும் நான் சரியான நேரத்தில் சாப்பிட்டுவிடுவேன். காலம் தவறி எப்போதும் சாப்பிட மாட்டேன்.'' - என்று சாப்பாட்டு விஷயத்தில், அவர் காட்டும் அக்கறையை நம்மோடு பகிர்ந்துகொள்கிறார்.

''எனக்கு சங்கீத சாதகம் ஒரு முக்கியமான பயிற்சி. தினமும் காலையில் எழுந்து நடைப் பயிற்சி செய்யவேண்டும் என்பது என் ஆசை. ஆனால், வெளியில் போனால் சுத்தமான காற்று இல்லை. லாரி, பஸ் என வாகனங்களின் ஓசை மனதையும் உடலையும் வருத்திவிடுகிறது. அதனால், வீட்டிற்குள்ளேயே எளிமையான சில பயிற்சிகளைச் செய்கிறேன். உடலுக்கு எந்த விதமான சிரமமும் கொடுக்காமல், சிறிது நேரம் மூச்சுக் காற்றை உள்ளே இழுத்து வெளியே விடுவது என் வழக்கம்.  

மனதையே கடவுளாய் நினைப்பவன் நான். 'கடவுள் அரூபமானவன். கடவுளை வெளியில் தேடாதே. அவன் நமக்குள்ளே இருக்கிறான்!’ என்பது என்னுடைய நம்பிக்கை. மனதை நான் சுத்தமாக வைத்திருப்பதால், எனக்கு அவ்வளவு எளிதில் சோர்வு வராது. யாரை ஏமாற்றலாம்... யாரை வம்புக்கு இழுத்து மல்லுக்கட்டலாம்... என்று சிந்தனைகளைச் சிதறவிட்டால், மனம் மழுங்கத் தொடங்கிவிடும் என்று நினைக்கிறேன்.

நான் எதையும் மனதில் பூட்டி வைத்துக்கொள்ள மாட்டேன். சில பிரச்னைகள் வந்தாலும், அதைக் கடவுள் விட்ட வழி என்று கடந்துவிடுவேன். நம்மை மீறிய சக்திதான் நம்மை இயக்குகிறது என்ற எண்ணம் எனக்கு ஆழமாக உண்டு. அந்த சக்தியானது நம் உடலில் இருக்கிறது.  

நான் உதிர்க்கும் எந்த வார்த்தைகளும் அடுத்தவர்களைக் காயப்படுத்திவிடக் கூடாது என்பதில் கவனமாக இருப்பேன். மனம் கோயிலுக்குச் சமம்.  

'நல்லதை நினை மனமே.. வீணாப் பொல்லாததை நினையாதே...’ - இதுதான் என் அப்பா எனக்குச் சொல்லித்தந்த மந்திரப் பாடம். இதை இன்று வரை நான் மறக்காமல் கடைப்பிடிக்கிறேன். அதனால்தான் மகிழ்ச்சி குறையாதவனாக இருக்கிறேன். என் இசையின் முதல் ரசிகையே எனக்கு மனைவியாய் வந்ததும், மூன்று பிள்ளைகளின் வாஞ்சையும், தெய்வம் தந்த இந்த குரலுமே எனக்கான பலங்கள்!''

- என்றபடியே மனைவி பிரபாவை அன்பு ததும்பப் பார்க்கிறார் யேசுதாஸ்.

மனமே கோயில்... மகிழ்வே வாயில்!