நரைக்கு போடாதீங்க திரை!
##~##

தி.மு.க-வின் முக்கியத் தலைவர்களுள் ஒருவரான வீரபாண்டி ஆறுமுகத்தின் மறைவுக்கு, அவர் தலைக்குப் பயன்படுத்திய சாயமும் ஒரு முக்கியக் காரணம் என்கின்றன மீடியாக்கள். 'தலைக்கு அடித்த சாயமே தலைவரை சாச்சிடுச்சே!’ என்று தொண்டர்களும் சோகத்தில் உறைந்து போயிருக்கின்றனர். தலைக்கு அடிக்கும் 'டை’ அந்த அளவுக்கு ஆபத்தானதா? தோல் சிகிச்சை நிபுணரும், காஸ்மெட்டாலஜிஸ்ட்டுமான டாக்டர் மாயா வேதமூர்த்தியும், ஹோமியோபதி மருத்துவர் பி.வி.வெங்கட்ராமனும் இதுகுறித்து விரிவாக விளக்கினார்கள்.   

''அழகு நிலையங்களுக்கு சரும அழகுக்காக செல்பவர்களைவிட, தலைக்குச் சாயம் பூசச் செல்பவர்களின் எண்ணிக்கைதான் அதிகம்.  தலைக்குப் பூசும் சாயத்தில் தற்காலிகம், ஓரளவு நிரந்தரம், நிரந்தரம் என மூன்று வகைகள் உண்டு.  தற்காலிகம் மற்றும் ஓரளவு நிரந்தரச் சாயம் 15 நாட்கள் முதல் ஒரு மாதம் வரை நிலைக்கும். ஆனால், நிரந்தரச் சாயம் ஆறு மாதம் முதல் ஒரு வருடம் வரை நீடிக்கும்.  இதில் பெரும்பாலானோர் பயன்படுத்துவது நிரந்தர சாயத்தைதான்'' என்கிற மாயா, சாயத்தில் சேர்க்கப்படும் ரசாயனப் பொருட்களைப் பற்றியும், அதனால் ஏற்படும் பாதிப்புகளையும் சொன்னார்.  

நரைக்கு போடாதீங்க திரை!

''இயற்கையான மருதாணி இலைகளை அறைத்துப் பூசுவதால் எந்த பாதிப்பும் நேராது. அதேபோல அம்மோனியா கலவை இல்லாத - பிபிடி 2.5 சதவிகிதத்துக்கும் குறைவாக உள்ள - தலைச்சாயத்தையும் பயன்படுத்தலாம். பேட்ச் டெஸ்ட் என்ற பெயரில் கை, கால், காதுக்கு பின்புறம் ஒரு துளி டையைப் போட்டு, அரிப்பு, தடிப்பு போன்ற எந்தப் பிரச்னைகளும் இல்லை என்றால், டை போட்டுக் கொள்ளலாம். இப்படிப் பரிசோதித்து டை அடிப்பதன் மூலம் ஓரளவு பக்கவிளைவுகளைத் தவிர்க்கலாம்.

தலைக்கு அடிக்கும் டை பற்றி நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது மிக மிக அவசியம். காரணம், சாயங்களில் ஆக்சிடைசிங் ஏஜென்ட் (Oxidizing agent), பிபிடி என்ற பாராபினைலின் டை அமின் (Para-Phenylenediamine), ரெசார்சினால் (Resorcinol), அம்மோனியா (Ammonia), ஹைட்ரஜன் பராக்சைடு (Hydrogen peroxide)போன்ற மிகத் தீவிர ரசாயனப் பொருட்கள் இதில் சேர்க்கப்படுகின்றன. இந்த ரசாயனப் பொருட்கள் அனைத்துமே உடலுக்குத் தீங்கு செய்பவை.

நரைக்கு போடாதீங்க திரை!

இது போன்ற சாயத்தைத் தலையில் போட்டவுடன் சிலருக்குப் பிரச்னை வரலாம். சிலருக்குச் சில நாட்கள் கழித்து பாதிப்பு தென்படலாம். இந்தப் பாதிப்பு தோலில் அரிப்பு, தடிப்பு ஏற்படுத்தி, தலையில் எரிச்சல், தலைமுடி உதிர்தல், முடியில் பிளவு ஏற்படுதல், தலையில் செதில் செதிலாகத் தோல் உதிர்தல் நேரிடலாம்.   கொப்புளங்கள் போன்றவையும் உருவாகக்கூடும். இதுவே, அனஃபைலசிஸ்(Anaphylaxis) என்ற கடுமையான அலர்ஜியை உண்டு பண்ணும்.  

இதனால் மூச்சுத் திணறல் அதிகமாகி, நுரையீரல் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படவேண்டிய அளவுக்குப் போனாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. பாராபினைலின்டைஅமின் வாசமே சிலருக்கு ஆஸ்துமா, தீவிர சளி போன்றவைகளை உருவாக்கும்.

மேலும் தொடர்ந்து தலைச் சாயம் பயன்படுத்தும்போது, தலைமுடியின் வளர்ச்சி முழுவதுமாக பாதிக்கப்படுவதுடன், சாயத்தில் உள்ள ரசாயனம் உடலில் சென்று ரத்தத்துடன் கலந்து, சிறுநீரகம் வழியாக வெளியேறும்.      

ஒவ்வொருவரின் உடல்நிலைக்கேற்ப, ஒவ்வொருவிதமான பாதிப்புகளை ஏற்படுத்திவிடும். உடலின் எதிர்ப்பு சக்தி குறைந்து, ரத்தப் புற்றுநோய், நீர்ப்பைப் புற்றுநோய், மார்பகப் புற்றுநோய் என்று பல பிரச்னைகளுக்கு வழி வகுத்துவிடும். கண்ணில் பட்டால், இளம் வயதிலேயே கண்புரை வருவதுடன், கண்பார்வை இழப்புகூட நேரலாம். ஆகையால் நிச்சயம் தேவை எச்சரிக்கை'' என்று உஷார்படுத்தினார் டாக்டர் மாயா வேதமூர்த்தி.  

''இயற்கையோடு இணைந்தாலே... இல்லை வியாதி'' என்று சொல்லும் ஹோமியோபதி மருத்துவர் பி.வி.வெங்கட்ராமன் தலைக்குச் சாயம் பூசுவதைப் பற்றி தெளிவான கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.

நரைக்கு போடாதீங்க திரை!

''இன்று சமூகத்தில் எல்லா விஷயங்களுமே கலப்படம் தலைவிரித்தாடுகிறது. தலைச்சாயமும் இதற்கு விலக்கல்ல. தலைமுடிக்குச் சாயம் போடுவதினால் வெளித்தோற்றத்திற்கு அழகாகத் தெரிந்தாலும் உடலுக்குப் பல்வேறு ஆபத்தான விளைவுகளை உண்டாக்கும் என்று ஆராய்ச்சியாளர்களும் தொடர்ந்து எச்சரித்துக் கொண்டுதான் இருக்கின்றனர்.  

நரை முடி வயதின், அனுபவத்தின் வெளிப்பாடு.  இது வெட்கப்படவேண்டிய விஷயம் இல்லை.  வயதுக்குரிய மரியாதையை, மதிப்பைப் பெற்றுத் தரக்கூடிய விஷயம்.    

பெண்களுக்கு, 45 வயதில் மெனோபாஸ் வருகிறது எதனால் என்றால், இதற்கு மேல் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டாம்... கஷ்டம் என்று இயற்கையே நிறுத்துவதாகத்தான் அர்த்தம்.  இயற்கையை மீறிக் குழந்தை பெற்றுக் கொண்டால், அது தாய்க்கு மட்டும் அல்ல, பிறக்கும் குழந்தைக்கும் சிக்கலை ஏற்படுத்திவிடும்!'' - எச்சரிக்கும் வெங்கட்ராமன் ''கறை படியாத நரையே அழகு'' என்கிறார் நெற்றியடியாக.

''தலை எழுதும் சுயசரிதை... அதில் அன்பே ஆனந்தம்!'' என நரையைப் பார்த்துச் சிலிர்த்தார் வைரமுத்து.

நாமும் நரையைப் பார்த்து அப்படியே சிலிர்க்கச் செய்யலாம்... இல்லையேல் பாதுகாப்பான டை எது என்பதைச் சரியாகக் கண்டறிந்து நரை போக்குவதே நலம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு