Published:Updated:

எடுப்போம் இளவரச அவதாரம்!

எடுப்போம் இளவரச அவதாரம்!

##~##

'மலைகளின் இளவரசி’ கொடைக்கானல். கோடை விடுமுறையைக் கழிக்கவும், சுற்றிப்பார்க்கவும், ஓய்வெடுக்கவும் மட்டும்தான் கொடைக்கானல் என சிலர் நினைக்கக்கூடும். உடல் ஆரோக்கியத்துக்கான அற்புத விஷயங்களை அடக்கிவைத்திருக்கும் ஓர் அபூர்வத்தலம் அது. 

சின்னக் குழந்தையின் கிறுக்கல்கள்போல் வளைந்து நெளிந்து செல்லும் மலைப்பாதையில் பயணிக்கும்போதே 'சில்’லென வீசும் காற்றும், காற்றில் கலந்து வரும் மூலிகைகளின் நறுமணமும் நம்மைக் குதூகலிக்கவைக்கும்.

தேனி மாவட்டம், போடி பகுதியில் இருந்து திருப்பூர் மாவட்டம் அமராவதி அணை வரை நீண்டிருக்கும் பழநி மலைப் பகுதியின் ஒரு குன்றுதான் கொடைக்கானல். கடல் மட்டத்தில் இருந்து 2,133 மீட்டர் உயரத்தில் இருக்கிறது.  

எடுப்போம் இளவரச அவதாரம்!
எடுப்போம் இளவரச அவதாரம்!

சில்வர் ஃபால்ஸ், நட்சத்திர அமைப்புக்கொண்ட லேக், கோக்கர்ஸ் வாக், கூகால் லேக், பில்லர் ராக், பிரையண்ட் பார்க், குறிஞ்சி ஆண்டவர் கோயில், பைன் ஃபாரஸ்ட், பியர் சோழா, தற்கொலைப் பாறை, தொப்பி தூக்கும் பாறை, பேரிஜம் ஏரி என ஏராளமான இடங்கள் உள்ளன. சில இடங்களுக்குச் செல்வதற்கு வனத் துறையின் அனுமதி தேவை.

மலைப் பாதை வழியாக வரும் வழியிலேயே தைல மரங்களின் வாசனையை நுகரலாம். இந்த மரங்களில் இருந்து எடுக்கப்படும் யூகலிப்டஸ் எண்ணெய், சளி, தலைவலி போன்றவற்றுக்கு அற்புதமான மருந்து. கொடைக்கானலின் மருத்துவப் பயன்பற்றி, ஓய்வுபெற்ற உதவி வனப் பாதுகாவலர் ராஜசேகரனுடன் பேசினோம். ''சைலன்ட் வேலி, கோக்கர்ஸ் வாக், தொப்பிதூக்கும் பாறை போன்ற இடங்கள் மலைச்சரிவை ஒட்டி இருக்கும். அந்தச் சரிவுகளில் பல விதமான மூலிகைகள் வளர்கின்றன. காற்று இந்த மூலிகைகளில் பட்டு வரும். அவற்றைச் சுவாசிக்கும்போது நல்ல புத்துணர்வு கிடைக்கும். பூக்களையும் மேகத்தையும் மட்டும் பார்த்து ரசிப்பதோடு நின்றுவிடாமல் ஆழமாக சுவாசித்தால் மிகவும் நல்லது. பேரிஜம் ஏரி செல்லும் வழியில் 'மதிகெட்டான் சோலை’ என்ற மூலிகை வனம் ஒன்று இருக்கிறது. சித்த வைத்தியத்தில் சொல்லப்படும் 4,448 வியாதிகளுக்கான மருந்துகள் தொடர்புடைய மூலிகைகள் அனைத்தும் கொடைக்கானல் மலையில் கிடைத்துவிடுமாம். போகர் சித்தர், இந்தக் காட்டுக்குள் இருந்துதான் நவ பாஷாணங்களை சேகரித்துத் தண்டாயுதபாணி சிலையைச் செய்து பழநி மலையில் பிரதிஷ்டை செய்ததாகச் சொல்கிறார்கள்.

எடுப்போம் இளவரச அவதாரம்!

கொடைக்கானல் மலையில் சிவப்பு நிறத்தில் பூக்கும் 'ரோடாடென்ட்ரான்’ என்னும் குறுமரம் இருக்கிறது. இங்கு தவிர, ஊட்டி மற்றும் இமயமலையில மட்டும்தான் இது வளரும். இது புற்றுநோய்க்கு அருமையான மருந்து. 64 வகையான குறிஞ்சிச் செடிகளும் கொடைக்கானல் மலையில் இருக்கின்றன. இங்கே கிடைக்கும் மலைத் தேன் அற்புதமான மருத்துவ குணம் கொண்டது.

மலை நெல்லி, கடுக்காய், தான்றிக்காய், முடக்கத்தான், குன்றிமணி, வல்லாரை, மலைவேம்பு, திப்பிலி, குறுமிளகு, சீந்தில், கரிசாலை, ஆகாசக் கருடன் என்று சென்ற இடம் எல்லாம் மூலிகைகள் கண்ணில் தென்படுகின்றன. அரிய வகை ருத்திராட்ச மரம்கூட இங்கு இருக்கிறது'' என வனம் காட்டிச் சொல்கிறார் ராஜசேகரன்.

எடுப்போம் இளவரச அவதாரம்!

கொடைக்கானல் மலையின் டிரெக்கிங் பற்றிச் சொல்கிறார், 'வட்டக்கானல் சமூகச் சுற்றுச்சூழல் இளைஞர் அமைப்பு’ நிர்வாகி மைக்கேல். 'வணிக நோக்கம் இல்லாமல், கொடைக்கானல் மலையில் உள்ள இயற்கையான சூழலைப் பாதுக்காப்பதற்கான விழிப்பு உணர்வை ஏற்படுத்தத்தான், இந்த டிரெக்கிங். ஆகஸ்ட் முதல் நவம்பர் வரையிலான காலக்கட்டம் டிரெக்கிங் செல்ல ஏற்றது. கோடைக் காலத்தில் காடு முழுக்க வறட்சியாக இருக்கும் என்பதால் டிரெக்கிங் செல்ல மாட்டோம்.

கொடைக்கானல் டிரெக்கிங்கில் மூன்று வகைகள் உள்ளன. அடர்ந்த மரங்கள் இல்லாமல் புல்வெளிகளில் மட்டும் செல்வது, புல்வெளி டிரெக்கிங். இந்த முறையில் ஒரு நாளுக்கு கிட்டத்தட்ட 20 கிலோ மீட்டர் தூரம் நடக்க முடியும். அடர்ந்த மரங்கள் நிறைந்த காட்டுக்குள் செல்வது மவுன்டெய்ன் வாக் டிரெக்கிங். இந்த முறையில் ஒரு நாளுக்கு 15 கிலோ மீட்டர் நடக்கலாம். கொடைக்கானல் மலையில் 10 ஆறுகள் உற்பத்தியாகின்றன. இந்த ஆறுகளை ஒட்டி நடப்பது, ரிவர் வாக் டிரெக்கிங்.

எடுப்போம் இளவரச அவதாரம்!

இப்படி டிரெக்கிங் செல்லும்போதே கிட்டத்தட்ட 500 வகையான அரிய தாவரங்களைப் பார்க்க முடியும். காட்டில் சுத்தமான ஆக்சிஜனைச் சுவாசிக்க முடியும். அதிகம் நடப்பதால், நுரையீரல் அதிகமாக வேலை செய்யும். மூலிகை வாசம் நுரையீரலுக்குள் பாயும்போது, உடலில் புத்துணர்வு பெறுவதை உணரலாம். நரம்பு மண்டலம் தூண்டப்படும். ஒரு முறை டிரெக்கிங் சென்றுவந்தால், அது உடலுக்கு ஆறு மாதத்திற்கு சார்ஜ் ஏற்றியதற்குச் சமம்.

டிரெக்கிங் செல்லும்போது பார்சல் சாப்பாடு, தண்ணீர் பாட்டில் கொண்டுசெல்ல மாட்டோம். பழங்கள், ரொட்டிதான் உணவு. அரிதான மருத்துவத் தாவரங்களை அலசிக்கொண்டு வரும் அந்தத் தண்ணீர்தான் உண்மையான மினரல் வாட்டர். அந்தத் தண்ணீரில் ஒரு சின்ன நெல்லி மரக்கட்டையையும், கடுக்காய் மரக்கட்டையையும் போட்டுவிட்டால், பத்து நிமிடத்தில் அது தெளிந்துவிடும். அதைத்தான் குடிப்போம். அதே மாதிரி, மலை நெல்லிக்காயும், கடுக்காயும் கையில் இருந்தால், தாகம் தீர்க்கும்' எனச் சொல்லி சிலிர்ப்பூட்டுகிறார் மைக்கேல்.

மலைகளின் இளவரசியைத் தரிசித்து இளவரச அவதாரம் எடுப்போம் நாமும்!

-ஜி. பிரபு

படங்கள்: வீ.சிவக்குமார்