Published:Updated:

ஹன்சிகாவின் ஸ்லிம் சீக்ரெட்

ஹன்சிகாவின் ஸ்லிம் சீக்ரெட்

ஹன்சிகாவின் ஸ்லிம் சீக்ரெட்
##~##

மாம்... அதே பப்ளி ஹன்சிகா மோத்வானியேதான். சின்னக் குஷ்பு என்று அழைக்கப்பட்டவர் இனி சின்ன சிம்ரன்... அந்த அளவுக்கு பார்ட்டி ஸ்லிம். எப்படிக் குறைத்தார் உடம்பை? ''ஆர்யா ஏதும் டிப்ஸ் கொடுத்தாரா?'' என்று கேட்டோம். இடம் 'சேட்டை’ ஷூட்டிங் ஸ்பாட்.

''இந்தப் படத்தோட ஷ§ட்டிங் ஆரம்பிச்சப்ப நான் எவ்ளோ குண்டா இருந்தேன். இப்ப பாருங்க அஞ்சலியைவிட ஸ்லிம்மா இருக்கேன். (அவங்களை எதுக்குங்க வம்பு இழுக்குறீங்க?) ஜஸ்ட் நாலு விஷயங்களில் கவனமா இருந்தாப் போதும்... உடம்பு நாம சொன்னதைக் கேட்கும்'' என்று தன் ஸ்லிம் சீக்ரெட்டைச் சொல்ல ஆரம்பித்தார் ஹன்சிகா. துணைத் தலைப்புகளோடு பாப்பா சொன்ன அடடே ரகசியங்கள்...

உணவு

டயட்னு சொல்லிட்டுக் கம்மியா சாப்பிடுறதோ, பட்டினி கிடப்பதோ எனக்குப் பிடிக்காது. நல்லாச் சாப்பிடணும். அதே சமயம் உடல் எடை குறையணும்னு ஆசைப்பட்டேன். அதுக்கு சரிவிகித காலை உணவு ரொம்ப முக்கியம். காலையில் சாப்பிடாமல் இருந்தால், உடம்புக்கு நல்லது இல்லை. அதனால், என்னோட ஒரு நாள் உணவை நான் எட்டு வேளைகளாப் பிரித்து சாப்பிடுவேன். காலையில், கொழுப்பு நீக்கப்பட்ட பால் ஒரு டம்ளர் குடிப்பேன். ஒரு ஆப்பிள் சாப்பிடுவேன். ஆப்பிளில் அதிக அளவில் நார்ச் சத்து உள்ளது. அதனால், அடிக்கடி பசிக்காது. ஆப்பிளில் குறைந்த அளவுதான் கொழுப்பு இருக்காம்... என் குரு மிக்கி மேத்தா சொல்லி இருக்கார். அவர் எனக்கு 'இதைச் சாப்பிடு, அதைச் சாப்பிடு’ன்னு லிஸ்ட் போட்டுக் கொடுக்காமல், எந்தெந்த உணவுகளில் கொழுப்பு அதிகம் உள்ளது, என்ன சத்துக்கள் உள்ளன, எப்படிச் சாப்பிட்டால் பலன் கிடைக்கும் என்று சொல்லிக்கொடுத்தார். அதை அப்படியே கடைபிடிக்க ஆரம்பிச்சேன். இப்போ, கை மேல் பலன். ஆப்பிள் நம் உடலில் உள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்றிடுமாம். நீங்களும் டிரை பண்ணுங்களேன்... முன்னாடி எல்லாம் மைதா, கோதுமை உணவைத்தான் சாப்பிடுவேன். இப்போ, மைதா, அதில் செய்த ரொட்டி, நூடுல்ஸ் போன்றவற்றைத் தவிர்த்துவிட்டேன். சீஸ், எண்ணெய்க்கும் குட் பை.

ஹன்சிகாவின் ஸ்லிம் சீக்ரெட்

மதியம் பெரும்பாலும் ரொட்டி, பருப்பு, டாலியா, சாலட், யோகர்ட். ஃப்ரெஷ் ஜூஸ் குடிப்பேன். முக்கியமா பெர்ரிப் பழங்கள் கட்டாயம் சாப்பிடணும். ஜூஸ் அல்லது சாலட் செய்து சாப்பிடுவேன். அதில் உள்ள ஆன்தோசையனின், உடல் எடை கூடாமல் பார்த்துக்கும். புரதம் அதிகம் உள்ள உணவை ரெகுலரா சாப்பிட ஆரம்பிச்சேன். 12 கிலோ எடை குறைச்சாச்சு. இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட உணவுகளைத்தான் நிறைய சாப்பிடுவேன். ராஜ்மா, பனீர், கீரை, வேகவைத்த காய்கறிகள், எல்லா வகைப் பழங்கள்னு அடிக்கடி சாப்பிடுவேன். இரவு உணவை சீக்கிரம் முடிச்சிடுவேன். லேட்டா சாப்பிடறது ரொம்பக் கெடுதல்.

இனிப்புகள் சாப்பிடுறதைக் கம்மி பண்ணிட்டேன். ரொம்ப ஆசையா இருந்துச்சுன்னா, டார்க் சாக்லேட் சாப்பிடுவேன். முக்கியமா நொறுக்குத் தீனிக்கு 'நோ’ சொல்லிட்டேன். ஆரம்பத்துல கஷ்டமா இருந்தாலும் இப்ப என்னோட லுக் பார்த்து எல்லாரும் ஆச்சரியப்படுறாங்க. அதனால் மனசை தேத்திக்கிட்டு இஷ்டத்துக்கு சாப்பிடாம உடம்புக்கு எது நல்லதுன்னு பார்த்துப் பார்த்துச் சாப்பிடறேன். சரியான உணவைத் தேர்தெடுத்துச் சாப்பிட்டா, தேவையில்லாத கொழுப்பு உடம்புக்குள் வராது.

ஹன்சிகாவின் ஸ்லிம் சீக்ரெட்

உடற்பயிற்சி

டயட்டால் மட்டுமே உடல் எடை கூடுவதைக் கட்டுப்படுத்த முடியாது. உடற்பயிற்சிகளும் தேவை. பெண்களுக்குப் பெரிய பிரச்னை இடுப்புச் சதைதான். சரியான ஷேப் கிடைக்கணும்னா, சில வொர்க்அவுட்ஸ் பண்ணணும்.  ரெகுலரா வாக்கிங் போறேன். எனக்கு விருப்பமானது கார்டியோ மற்றும் வெயிட் பயிற்சிகள். கோர் வொர்க்அவுட்ஸ் செய்றது ரொம்பக் கஷ்டம். ஆனா பழகிடுச்சுன்னா, சிம்பிள். வொர்க்அவுட் செஞ்சு முடிஞ்சதும் ரொம்ப டயர்டா இருக்கும். உடம்பே நடுங்குற மாதிரி இருக்கும். அப்போ புரோட்டின் மில்க்ஷேக் குடிச்சதும்தான் உயிரே வரும். உடலை லைட்டா வைச்சுக்க ஸ்விம்மிங் பண்றது எவ்வளவு நல்லதுன்னு நான் அனுபவப்பூர்வமா உணர்ந்திருக்கேன். இது ரொம்ப ஈஸி.

யோகா

எந்தக் கஷ்டமான வேலையா இருந்தாலும் அதை டென்ஷனா, ஸ்ட்ரெஸா ஆக்கிக்காம இருக்க எனக்குப் பிடிக்கும். முறையா யோகா டீச்சர்கிட்ட சேர்ந்து, 'பவர் யோகா’ கத்துக்கிட்டேன். தினமும் யோகா செஞ்சு முடிச்சதும் தியானம் பண்ணுவேன். இது மனசை ரிலாக்ஸ் ஆக்கும். இப்பல்லாம் ஷூட்டிங் டைம்ல செய்ய முடியலைன்னாலும், எப்பவெல்லாம் டைம் கிடைக்குதோ, அப்போ பண்ணிடுவேன். மனசையும் உடம்பையும் ரிலாக்ஸ் பண்ண யோகாதான் பெஸ்ட்.

இது எல்லாத்தையும்விட முக்கியமான விஷயம் ஒண்ணு இருக்கு. நான் இப்ப ஒரே நேரத்துல அஞ்சு படங்கள் நடிக்கிறேன். ஓடியாடி வேலை பார்த்துட்டே இருக்கறது ஒரு எக்ஸ்ட்ரா ஃபிட்னெஸ் சீக்ரெட்!''''

- உமா ஷக்தி