Published:Updated:

லட்சுமி மேனனின் அழகு ரகசியம்

லட்சுமி மேனனின் அழகு ரகசியம்

லட்சுமி மேனனின் அழகு ரகசியம்
##~##

''சோளியைக் சுழற்றிவிட்ட மாதிரி சுத்திச் சுத்திப் பார்த்துக்கிட்டு இருக்கே. அந்தப் பொண்ணுதானே...'' - அதே பொண்ணுதான் சார்! 'சுந்தரபாண்டியன்’ படத்தில் லட்சுமி மேனனைப் பார்த்துக் கேட்கப்படும் வார்த்தைகள் மிகச் சரியானவை. தமிழ்நாட்டின் தூக்கத்தைக் கெடுத்துவிட்டு, கேரளாவில் பத்தாம் வகுப்புத் தேர்வுக்குத் தயாராகி வருகிறார் லட்சுமி மேனன்.  கனவு நாயகியுடன் பேசிய அழகிய நிகழ்வு அப்படியே இங்கே... 

''உங்க கண்கள் ரொம்ப அழகா இருக்கே... கண்களின் அழகுக்கு அப்படி என்ன செய்றீங்க?''

''ஹே... அப்படியா! ரொம்ப தேங்க்ஸ். எனக்கு கதகளி நல்லாத் தெரியும். கதகளியில் கண்களின் எக்ஸ்பிரஷன்ஸ் ரொம்ப முக்கியம். அதைச் செய்து செய்து என் கண்கள் ரொம்ப அழகாகி இருக்கும்னு நினைக்கிறேன். என் கண்கள் அழகா இருக்கோ இல்லையோ... ஆரோக்கியமா இருக்கணும்னு நினைப்பேன். அதுக்காக ரெகுலரா நான் ஒரு பயிற்சி செய்வேன். அது ரொம்ப சிம்பிள்... கண்களாலயே எட்டு போடணும். முதலில் ஒரு கண்ணை எட்டாம் நம்பர் வடிவத்தில் சுழற்றணும். அப்புறம் மறு கண்ணையும் இதேபோலச் சுழற்றணும். இப்படி இரண்டு கண்களினாலும் மூன்று முறை தினமும் செய்தால் பார்வை தெளிவா இருக்கும். கண்கள் எப்போதும் அழகாகவும் இருக்கும். எப்படி நம்ம கண் பயிற்சி!''

லட்சுமி மேனனின் அழகு ரகசியம்

''நீங்க கொஞ்சம் சதைப்பிடிப்பா இருக்கிற மாதிரி தெரியுதே? நடிப்புக்கு அது மைனஸ் இல்லையா?''

''ஆமாம். 'சுந்தரபாண்டியன்’ படம் பார்த்துட்டு வந்ததும் முதல் வேலையா, என் உயரத்தை வெச்சு எனக்கான பி.எம்.ஐ அளவைக் கண்டுபிடிச்சேன். டயட் இருக்க ஆரம்பிச்சேன். காலையில் மூன்று சப்பாத்தி அல்லது நான்கு பிரட். கூடவே ஒரு கப் வெஜிடபிள் சாலட். 11 மணிக்கு ஒரு கப் ஃப்ரெஷ் ஜூஸ். மதியம் அரை கப் சாதம் அல்லது மூன்று சப்பாத்தி. காய்கறிகள், கீரை இதெல்லாம் தவறாமல் சாப்பிடுவேன். சாயந்திரம் வீட்டில் செய்யும் சத்தான நீராகாரம் ஒரு கப் குடிப்பேன். ராத்திரி மூன்று சப்பாத்தியும் காய்கறிகளும் சாப்பிடுவேன். தினமும் சாயந்திரம் ஜிம்மில் ஒரு மணி நேரம் ட்ரெட்மில் ஒர்க் அவுட்ஸ் செய்வேன். இன்னும் ஆறு கிலோ குறைச்சுட்டேன்னா, என்னோட உயரத்துக்கு ஏற்ற எடைக்கு வந்துடுவேன். எக்ஸாம்ஸ் முடியட்டும்... அப்புறம் பாருங்க!''

லட்சுமி மேனனின் அழகு ரகசியம்
லட்சுமி மேனனின் அழகு ரகசியம்

''பரீட்சைக்கு எந்த மாதிரி தயார் ஆகுறீங்க? மத்த மாணவர்களுக்கும் டிப்ஸ் சொல்லுங்களேன்...''

''தண்ணீர் அதிகமாக் குடிக்கணும். உடலில் போதுமான அளவு நீர்ச்சத்து இருக்கும்போது மனசும் உடம்பும் எப்போதும் ஃப்ரெஷ்ஷா இருக்கும். தினமும் காலையில் 5.30 மணிக்கு எழுந்துடுவேன். எழுந்ததும் அரை மணி நேரம், ஸ்ருதிபாக்ஸில் மந்திரங்களை ஓடவிட்டுட்டுக் கண்களை மூடி தியானம் செய்வேன். பிறகு படிக்க ஆரம்பிப்பேன். ஒரு நாளைக்கு ஐந்து, ஆறு மணி நேரம்தான் படிப்பு. மனசை அலைபாய விட மாட்டேன். குறைவான நேரம் படித்தாலும் நிறைவான மனசோட படிச்சா, நிச்சயம் தேர்வு நல்லபடி எழுதலாம். மனப்பாடம் பண்றதைவிட புரிஞ்சு படிக்கிறது ரொம்ப நல்லது!''

'' 'கும்கி’ ஷூட்டிங் முழுக்க காட்டுப் பகுதியிலேயே நடந்ததே. அங்கே இருந்த பிரச்னைகளை எப்படி சமாளிச்சீங்க?''

''கும்கி’ ஷூட்டிங் டைம்ல பெருசா எனக்கு எந்தக் கஷ்டமும் இல்லை. ஒரு நாளைக்கு நாலு, ஐந்து கி.மீ வரைக்கும் நடந்தேதான் போவோம். அந்தக் காடுகள்ல கிடைச்ச சுத்தமான ஆக்சிஜன் அவ்வளவு சுகமா இருக்கும். அங்கே இருந்த மொத்த நாட்களுமே ஓரு ஜாலி டிரிப் போன மாதிரிதான். சொல்லப்போனால், அங்கே இருந்த நாட்கள்லதான் நான் இப்ப இருப்பதைவிட அதிக ஆரோக்கியமா இருந்தேன். ஏன்னா, நம்ம உடம்புக்கும் மனசுக்கும் தேவையானதைத் தரும் சக்தி இயற்கைக்கு இருக்கு. இயற்கையை நேசிங்க, இயற்கையோட இணைந்து இருங்க, நீங்களும் என்னை மாதிரியே எப்போதும் சந்தோஷமாவே இருப்பீங்க!''

- உ.அருண்குமார்

அடுத்த கட்டுரைக்கு