Published:Updated:

ரீ-என்ட்ரி அரவிந்தசாமி

ரீ-என்ட்ரி அரவிந்தசாமி

ரீ-என்ட்ரி அரவிந்தசாமி
##~##

'ரோஜா’வின் ராஜா...  ஆல்டைம் அழகன்... அரவிந்த் சாமி. 'கடல்’ மூலம் மீண்டும் ரீ-என்ட்ரியாகித் தமிழ் சினிமாவில் தனது கணக்கைப் புதுப்பித்து இருக்கிறார். இடைப்பட்ட காலத்தில் பல இன்னல்களைக் கடந்த இந்த சாக்லேட் ஹீரோவுடன் ஒரு தேநீர் சந்திப்பு. 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

'' 'அலைபாயுதே’ படத்துக்குப் பிறகு திரும்பவும் மணி சார் படத்தில் ரீ-என்ட்ரி. இடையில் என்ன ஆச்சு?''

''2000-ல் 'அலைபாயுதே’ படம் ரிலீஸ். அந்த நேரத்தில், எனக்கு பிசினஸ் மேல் ஆர்வம் அதிகமானது. தொடர்ந்து அஞ்சு வருஷம் பிசினஸில் முழுக் கவனத்தையும் செலுத்தினேன். 2005-ல் ஒரு விபத்து. என் முதுகுத் தண்டுவடப் பகுதியில் அடிபட்டு, ரெண்டு டிஸ்க் முறிஞ்சுபோனது. அதற்கான ட்ரீட்மென்ட் எடுத்துட்டு இருக்கும்போதே, என் கால் பகுதியும் செயல் இழந்தது. படுக்கையைவிட்டு என்னால் நகரக்கூட முடியாது; நடக்கவும் முடியாது; நிற்க முடியாது. பயங்கரமான முதுகு வலி. கிட்டத்தட்ட ஒரு வருஷம் அப்படியேதான் இருந்தேன். படுத்தே இருந்ததால், உடம்பு வெயிட் அதிகமானது. அப்புறம் கொஞ்சம் கொஞ்சமாப் பழைய நிலைக்குத் திரும்பி வந்தேன். அதனால்தான் இந்த கேப்.''

ரீ-என்ட்ரி அரவிந்தசாமி

''எப்படி மீண்டு வந்தீங்க?''

''ஆபரேஷன் பண்ணினால்தான் குணமாகும்னு சொல்லிட்டாங்க. ஆனா, எனக்கு ஆபரேஷன் செய்துக்கக் கொஞ்சம் தயக்கம். ஏன்னா, என் ஃப்ரெண்ட் ஒருத்தருக்கு என்னை மாதிரியே முதுகில் அடிபட்டு, அவருக்கு ஆபரேஷன் செய்து அது ஃபெயிலியர் ஆச்சு. அதனால் நான் ஆபரேஷனை ரொம்ப நாள் தள்ளிப்போட்டேன். ஒரு கட்டத்தில் ஆபரேஷன் செய்தே ஆகணும்கிற நிலைமை வந்து, ஆஸ்திரேலியாவுக்குப் போக ரெடி ஆனேன். அந்த நேரத்தில்தான், ஒரு நண்பர், 'ஆயுர்வேதா டிரை பண்ணிப்பாருங்க’னு சொன்னார். விருப்பமே இல்லாமல், ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக்க ஆரம்பிச்சேன். கோவையில் இருந்து சிகிச்சையாளர்கள் வந்தாங்க. தினமும் இரண்டு மணி நேரம்,  என் உடலில் பாதிப்பு இருந்த இடங்களில் வர்ம சிகிச்சைகள் செஞ்சாங்க. அவங்க சொன்ன பத்தியச் சாப்பாட்டை முறைப்படி சாப்பிட்டேன். ஒரு வருஷமா நான் பட்ட அவஸ்தையில் இருந்து, மூணே நாட்களில் விடுதலை கிடைத்தது; நல்ல முன்னேற்றம் தெரிந்தது. வலி இல்லாமல்  என்னால் நடக்க முடிந்தது. ஒரே மாசத்தில் நிக்கிறது, நடக்கிறது மாதிரியான வழக்கமான செயல்பாடுகளைச் செய்ய முடிந்தது. ஒரு வருஷத்தில் சின்னச் சின்ன எக்சர்சைஸ் செய்யும் அளவுக்கு முன்னேற்றம். படிப்படியாகக் குணமாகி இப்ப நார்மல் ஆகிட்டேன்.''

''உடல் எடையை எப்படிக் குறைச்சீங்க''

''முதுகு வலி குணமானாலும், எடை அதிகமானது எனக்கு ஒரு பெரிய பிரச்னையா இருந்தது. காரணம் முதுகு வலி இருந்தால், எக்சர்சைஸ் செய்ய முடியாது. அதனால், வெயிட் அதிகமாகும். வெயிட் அதிகமானால், முதுகுப் பகுதிக்கு அழுத்தம் அதிகமாகும். இது ஒரு சுழல் மாதிரி. நான் அதில் மாட்டிக்கிட்டேன். அப்படியிருக்கும்போது, ரெண்டு வருஷத்துக்கு முன்பு, மணிரத்னம் என்னைப் பார்த்துட்டு, 'எல்லாம் சரியாப் போச்சுல்ல... பழைய ஃபிட்னெஸ்க்கு வா’னு சொன்னார். நான், அவர் படத்துல நடிக்கணும்கிறதுக்காக சொல்லலை. என் மேல் உள்ள அக்கறையில் அப்படிச் சொன்னார். அரை மனசாதான் தயாரானேன். டிரெய்னர் 'டிமெதி’ அறிமுகமானார். ஒவ்வொரு மூவ்மென்ட்டையும் பார்த்துப் பார்த்துப் பக்கத்தில் இருந்து பெர்ஃபெக்ட்டா சொல்லிக்கொடுத்தார். காலையில் வெறும் ரன்னிங். கொஞ்சம் கொஞ்சமா ஓடிப் பழகி, ஓடும் தூரத்தை அதிகரிச்சேன். நல்லா வியர்க்கிற வரைக்கும் ஓடுவேன். சாயந்திரம் புஷ்-அப்ஸ், புல்-அப்ஸ், மாடிப்படியில் ஏறி இறங்குவது இப்படி வீட்டில் இருந்தபடியே பயிற்சிகளை செய்தேன். இப்படி 14 கிலோ குறைத்தேன்.''

ரீ-என்ட்ரி அரவிந்தசாமி

''சிகிச்சை எடுத்துக்கொள்ளும்போது, என்ன மாதிரியான உணவுகளை எடுத்துக்கிட்டீங்க?''

''உணவை ஒரு நாளைக்கு ஆறு, ஏழு தடவையாப் பிரித்து சாப்பிட்டேன். முதல் ரெண்டு மாசம் சப்பாத்தி, சாதம் இந்த ரெண்டையும் சுத்தமாத் தவிர்த்தேன். ரெண்டு அல்லது மூணு மணி நேரத்துக்கு ஒரு முறை முட்டை வெள்ளைக் கரு ஆறு, பப்பாளி, முளைகட்டிய பயறு, ஓட்ஸ் இதை எல்லாத்தையும் மாத்தி மாத்தி ஒரு கப் சாப்பிட்டேன். மதியம் காய்கறி சாலட், சுண்டல், கடலை.  ராத்திரியில் வெஜிடபிள் சூப் மட்டும் குடிப்பேன்.''

''உடல் பலத்தைவிட மன பலத்தைப் பாதுகாப்பது ரொம்பவே சவாலான விஷயமாச்சே?''

''ஆமாம். பத்து அடி நடந்தாலே பயங்கரமா வியர்க்க ஆரம்பிச்சுடும். இதெல்லாம் சேர்ந்து என் மனசைப் பலவீனமாக்கப் பார்த்தது. ஆனால் நானும் விடலை. மனசைப் பக்குவமா வெச்சுக்க முடிவு செய்தேன். படுத்தபடியே, கம்ப்யூட்டர் மூலமா என் ஆபீஸ் வேலைகளைப் பார்ப்பேன். ஆன்லைனில் செஸ் விளையாடிட்டே இருப்பேன். மேத்ஸ் ரொம்பப் பிடிக்கும். கஷ்டமான பிராப்ளங்களுக்கு ஆன்ஸர் கண்டுபிடிப்பேன். இதெல்லாமே என் மூளைக்கு சுறுசுறுப்பைத் தந்துட்டே இருந்தது.''  

''பழைய அரவிந்த் சாமியா பளிச்னு இருக்கீங்க... இப்ப எப்படி ஃபீல் பண்றீங்க?''

இதுக்கெல்லாம் நண்பர்களுக்குத்தான் நன்றி சொல்லணும். இப்போ ரொம்ப சந்தோஷமா இருக்கேன். மூணு படங்களில் ஹீரோவா நடிக்க ஏற்பாடுகள் நடக்குது.  ஐ’ம் ஆல்ரைட்!''

- உ.அருண்குமார்