Published:Updated:

26 வருடங்களாக ஒரே எடை!

26 வருடங்களாக ஒரே எடை!

26 வருடங்களாக ஒரே எடை!
##~##

முறுக்கு மீசை, மிரட்டும் கண்கள், பேசும்போதே சுற்றும் முற்றும் சுழலும் விழிகள் என காவல் துறைக்கே உரிய கம்பீரத்துடன் இருக்கிறார், கடலோர காவல்படை கூடுதல் டி.ஜி.பி. சைலேந்திரபாபு. விடிகாலை சரியாக                   6  மணிக்கே நொளம்பூர் லைஃப் ஃபிட்னெஸ் ஸ்டுடியோவுக்குள் ஆஜராகிவிடுகிறார். அனைத்து உடற்பயிற்சிகளையும் முடித்துவிட்டு வியர்வை வழிய, சற்றே ரிலாக்ஸ் செய்துகொண்டவர்,  ''ஐம்பது வயசுலயும் நான் ஆரோக்கியமா இருக்கேன்னா அதற்கு நடை, உடற்பயிற்சி, உணவு, உடல்நலத்தின் மீதான அக்கறைதான் காரணம்'' என்கிறார் உற்சாகத்துடன். தன் ஃபிட்னெஸ்குறித்து விளக்கமாகப் பேசினார் சைலேந்திரபாபு. 

உடற்பயிற்சி

எந்தச் செலவும் இல்லாமல் முதுமையை வெல்லும் இயற்கை மருந்துதான் உடற்பயிற்சி!

ஐ.பி.எஸ். பரீட்சையில் தேர்ச்சி பெற்று, தேசிய போலீஸ் அகாடமியில் 87-ல் சேர்ந்து 89-ம் ஆண்டு பணிக்கு வந்தேன். அப்போது நான் அணிந்த அதே பெல்ட்தான் இன்னைக்கும் எனக்கு சரியாக இருக்கு. அப்போது 175 செ.மீ. உயரமும், 73 கிலோ எடையும் இருந்தேன். இன்னைக்கும் அதேதான். நடுவில் திடீர்னு ரெண்டு கிலோ எடை கூடிடும். உடனே, சாப்பாட்டைக் கொஞ்சம் குறைத்து உடற்பயிற்சியை அதிகரிக்க, மீண்டும் அதே 73 கிலோ எடைக்கு வந்துவிடுவேன். உயரத்துக்கு ஏற்ப உடலின் எடையை ஒரே சீராக வைத்துக் கொண்டாலே வியாதிகள் அண்டாது.

26 வருடங்களாக ஒரே எடை!

உடற்பயிற்சிச் செய்ய தயாராவதற்கு முன்னால் கட்டாயம் வார்ம் அப் செய்யணும். உடம்பை வளைக்கிற மாதிரியான பயிற்சிகளைச்             செய்யவதன் மூலம் எலும்புகளை இணைக்கும் குருத்தெலும்பு, முதுகெலும்பு ஆரோக்கியமாக இருக்கும். ரத்த ஓட்டம் சீராகப் பாயும்.

10 நிமிஷம் மூச்சுப் பயிற்சி பண்ணுவேன். இதனால், உடலில் புத்துணர்ச்சி பாய்வதுபோல் உணரமுடிகிறது. ஒரே மாதிரியான உடற்பயிற்சியைத் தொடர்ந்து செய்வதும் கூடாது. வாரத்தில் மூன்று நாள் ஓட்டம், இரண்டு நாள் எடைப் பயிற்சி, இரண்டு நாள் கராத்தே பயிற்சி. இதுதான் என் உடற்பயிற்சிக்கான லிஸ்ட்.

உணவு

26 வருடங்களாக ஒரே எடை!

அரை வயிறு உணவு, கால் வயிறு தண்ணீர், கால் வயிறு வெற்றிடம்... இது என் பத்தாம் வகுப்பு வாத்தியார் சொன்ன உணவு மொழி. இதனால் உடல் எடை ஏறாது.  வயிற்றில் இருக்கும் வெற்றிடத்தால் மூச்சுவிடுவது ஈஸியாக இருக்கும். ஜீரணக் கோளாறு, வயிறு மந்தம் என மருத்துவரை நாடவேண்டி இருக்காது.

காலையில் டிபன் சாப்பிடுவேன். 11 மணிக்கு ஜூஸ். மதியம் சாதம், பருப்பு, கீரை, பீன்ஸ், கேரட் போன்ற காய்கறிகள், சாலட் வகைகள் சாப்பிடுவேன். எங்க வீட்டில் நாலு பேர். விருந்தினர்கள் வந்தாலும் மாசம் ரெண்டு லிட்டர் எண்ணெய்க்கு மேல் செலவாகாது. ஆயில் அதிகம் சேர்க்காத, ஆரோக்கியமான உணவாகத்தான் என் மனைவி சமைப்பாங்க. முடிஞ்சவரை இயற்கையான காய்கறி, பழங்களையே சாப்பிடுவோம்.  பப்பாளி, கொய்யா, தர்பூசணி, ஆரஞ்சு, ஆப்பிள், மாதுளை பழங்களை ஜூஸாக செய்யாமல், நறுக்கி அப்படியே சாப்பிடுவோம்.

அவ்வப்போது டீ சாப்பிடுவது வழக்கம். அதுவும் பால் சேர்க்காத பிளாக் டீ. க்ரீன் டீ உடலுக்கு நல்லது என்பதால் குடிப்பேன். ரெண்டு மணி நேரத்துக்கு ஒரு முறை ஒரு டம்ளர் தண்ணீர் குடிப்பேன்.

சிலர் அசைவ உணவுதான் உடலுக்கு வலிமையைத் தரும் என்று நினைக்கிறார்கள். தினமும் ஏதாவது ஒரு முளைக்கட்டிய பயருவகையை வெந்நீரில் போட்டுச் சாப்பிடுவேன். பயரு வகைகளில் 40 சதவிகிதம் புரதம் இருப்பதால், இது மாமிசத்துக்கு இணையான உணவு. சைவ உணவோட மேன்மையையும், பழங்களை மற்ற உணவோடு கலந்து உண்ணும் முறைகளையும் பற்றி தெரிஞ்சுக்கணும்னா, ஹார்வி டயமண்ட் என்ற ஓர் ஆராய்ச்சியாளர் எழுதிய 'ஃபிட் பார் லைஃப்’ புத்தகத்தைப் படிச்சு அதுபடி நடந்தாலே போதும்.

ஆறு வருடங்களுக்கு முன்பு வரைக்கும், தினமும் டபுள் ஆம்லெட் சாப்பிட்டுவந்தேன்.   காவல் துறைக்கு குதிரைகள் வாங்க உத்திரபிரதேசம் சகரான்பூர் என்ற ஊருக்குப் போயிருந்தேன்.  அங்கு இருந்த கால்நடை மருத்துவர் டாக்டர் அமீர் பாஷா, ஒவ்வொரு முட்டையின் மஞ்சள் கருவிலும் அரைக் கிலோ மாட்டு இறைச்சியில் இருக்கக்கூடிய அளவு கொலஸ்ட்ரால் இருக்குன்னு சொன்னார். கொலஸ்ட்ரால் அதிகமானால் ரத்தக் குழாயை அடைச்சிடும். ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அதிகம் இருப்பவர்கள் முட்டையின் மஞ்சள் கருவை சாப்பிடக்கூடாது. வெள்ளைக் கருவை மட்டுமே சாப்பிடலாம்னு சொன்னார். அன்னைக்கே ஆம்லெட் சாப்பிடுறதை நிறுத்திட்டேன்.

நிம்மதியான தூக்கம்

சிலருக்கு மாத்திரை சாப்பிட்டால்தான் தூக்கம் வரும். தூக்கமின்றித் தவிப்பவர்கள், உடற்பயிற்சி செய்தால்போதும். எனக்குத் தூக்கமாத்திரையே உடற்பயிற்சிதான். ராத்திரி 10 மணியான உடனேயே படுக்கைக்குப் போயிடுவேன். விடிகாலை அஞ்சு மணிக்கு விழிப்பேன்.

26 வருடங்களாக ஒரே எடை!

வாய்விட்டுச் சிரியுங்கள்

சந்தோஷத்தின் வெளிபாடு சிரிப்புதான். இன்னிக்கு எத்தனை பேர் வாய்விட்டு சிரிக்கிறாங்க?  குழந்தை ஒரு நாளில் 400 முறையும், டீன் ஏஜ் பருவத்தினர் 17 முறையும், சிரிக்கின்றனர்.  ஆனால், பெரியவர்கள் ஒருமுறை கூட சிரிக்கிறதில்லை. மன அழுத்தம் ஏற்படுவதற்கான ஒரு காரணம் சிரிக்காமல் இருப்பதே. நேரம் கிடைக்கிறப்ப எல்லாம் என் குடும்பத்துடன்தான் செலவழிப்பேன். நிறைய ஜோக்ஸ் சொல்லி, வாய்விட்டுச் சிரித்து, மனம்விட்டுப் பேசுவோம். இதுவே, என் மனசுக்கான எனர்ஜி!

- ரேவதி, படங்கள்: ஆ.முத்துகுமார்

   வீட்டில் எடை பார்க்கும் கருவியை வாங்கிவையுங்கள்.  தினமும் அதில் எடை பாருங்கள்.  விரும்பத்தக்க எடையைவிட அதிகம் என்றால், அன்றே உணவின் அளவைக் குறைத்து, உடற்பயிற்சி செய்யுங்கள்.  படிப்படியாக உடல் எடை குறையும்.

பசிக்கும்போது உண்ணாமல் இருக்கக்கூடாது.  ஆனால், பசிக்காமல் உண்ணவே கூடாது.

சாப்பாட்டை தட்டில் போட்டுவிட்டார்களே என்று எல்லற்றையும் சாப்பிட்டுவிடக்கூடாது. நம் வயிறு குப்பைத் தொட்டி அல்ல!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு