என்றென்றும் இளமை!
##~## |
''30 வயசுதான் ஆவுது. அதற்குள் முகத்துல சுருக்கங்கள் விழ ஆரம்பித்துவிட்டதே...’ என்று கவலையுடன் முக'வரி’களைச் சுமப்பவர்கள் இன்று அதிகம்.
''அகத்தின் அழகு முகத்தில்தானே தெரியும். கவலை வேண்டா. இத்தகைய சுருக்கங்களை ஆக்சிஜன் பேலன்ஸ் என்கிற சரும சிகிச்சை மூலம் அகற்றி, இளமையாக வலம் வரலாம். இந்த சிகிச்சை இங்கு உள்ள பெண்களிடம் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது'' என்கிறார் அழகுக் கலை நிபுணர் லட்சுமி பாண்டியன்.
''சுற்றுச்சூழல் மாசுக்களாலும், முகத்தில் பூசும் கிரீம்களாலும் சருமத்தில் அடைப்பு ஏற்பட்டு, முகம் பொலிவிழக்கிறது. இதனால் பருக்களும் தழும்புகளும் முகத்தில் படையெடுக்கலாம். இந்தக் குறைபாடுகளை ஃபேஷியல் செய்வதன் மூலம் முக சருமத்தினுள் இறங்கியிருக்கும் அழுக்கை நீக்கி, சருமத்தின் மேல் பகுதியில் படிந்து உள்ள இறந்த செல்களையும் நீக்கலாம்.

சிலருக்கு முக சருமத்தில், பருக்கள், தழும்புகள். சுருக்கங்கள் காணப்படும். அவர்களுக்கு ஃபேஷியலுடன் ஆக்சிஜன் பேலன்ஸ் சிகிச்சையும் செய்து, முகத்தில் உள்ள சுருக்கங்களைப் போக்கி, பருக்கள், கரும்புள்ளிகள், தழும்புகளை மறைய செய்யவும், சருமத்தை

ஆரோக்கியமாக வைத்திருக்கவும் முடியும். இந்த வகை ஃபேஷியல் முறையில் கெமிக்கல் எதுவும் இல்லாததால், பக்கவிளைவு எதுவும் இருக்காது. எல்லா சருமத்தினருக்கும் இந்த ஆக்சிஜன் பேஷியல் உகந்தது என்றாலும், அலர்ஜி சருமமாக இருந்தால் ஏதேனும் பாதிப்பில் கொண்டுவிடலாம். இந்த சிகிச்சை மேற்கொள்வதற்கு முன்பு ஸ்கின் டெஸ்ட் செய்யவேண்டும்.
ஃபேஷியலில் ஸ்கின் பீலிங் செய்யும்போது, சருமத்தினுள் ஆக்ஸிஜன் ஊடுருவிச் செல்வதை உணர முடியும். மூன்று முதல் ஐந்து நிமிடங்கள் தொடர்ந்து செய்யும்போது முகத்தில் எபிடெர்மிஸில் உள்ள இறந்த செல்கள் அனைத்தும் நீங்கிவிடும்.
ஸ்கின் பீலிங்கில் சருமத்தின் மேற்புறத் தோல் மாசு மரு இல்லாமல் சுத்தமாகும். இதனால் முகம் புத்துணர்ச்சியாக மாறும். அதன் பிறகு நியூட்ரலைசர் என்ற ஒரு லிக்விடைப் பூசுவோம். அடுத்து ஆக்ஸிஜன் மாஸ்க் என்கிற ஒரு வகை ஜெல் முகத்தில் பரவலாகப் பூசப்படும். இதை சருமத்தில் பூசியவுடன் சோப்பு நுரைபோல் நுரைத்துக்கொண்டுவரும். ஐந்து முதல் பத்து நிமிடங்களுக்குப் பிறகு, முகத்தில் ஆக்சிஜன் உட்செல்ல ஆரம்பிக்கும். சருமத்தின் டெர்மிஸ் அடுக்கில் உள்ள செல்களைச் சரிசெய்து புது செல்கள் உற்பத்தி ஆகும். இதனால் முகப் பகுதியில் குறிப்பாக கன்னங்களில் ஒரு செழுமையான ஆரோக்கியம் கிடைக்கும்.
இந்த ஃபேஷியல் செய்துகொண்டவுடன் வெளிப்புறத் தோற்றத்தில் எந்த மாறுதலும் தெரியாது. மூன்று நாட்களுக்குள் முகத் தோலுக்கு அடியில் செல்கள் புதிதாக (Cell- Re Arrangement)உற்பத்தியாகிக்கொண்டிருக்கும்'' என்கிற பியூட்டிஷியன் லட்சுமி பாண்டியன், இந்தச் சிகிச்சை செய்துகொண்டதும் கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்களை சொன்னார்.
• செல் உற்பத்தியாகும் இந்த மூன்று நாட்கள், வியர்வை வரும்படியாக வேலை மற்றும் உடற்பயிற்சி செய்வதைத் தவிர்த்துவிடவேண்டும்.
• மூன்று நாட்களும் முகத்துக்கு வேறு அழகு சாதனங்கள், மேக்கப் சாதனங்களை உபயோகிக்கக் கூடாது.
• நிறையத் தண்ணீர் மற்றும் நீர்ச்சத்துள்ள வெள்ளரி, இளநீர், நுங்கு சாப்பிட்டு உடலைக் குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளவேண்டும்.
• மூன்று நாட்களுக்குப் பிறகு, வெளியே செல்லும்போது சன்ஸ்கிரீன், தேவைப்படும்போது மாய்ஸ்ச்சரைசர் கிரீம்களை போட்டுக்கொண்டு போவதன் மூலம் சுருக்கங்கள் வராமல் இளமையோடு இருக்கலாம்.
• மாதம் ஒரு முறை வீதம், மூன்று முறை இந்தச் சிகிச்சை செய்துகொண்டால், ஆறு மாதங்களுக்கு ஒரு முறை ஆக்சிஜன் பேலன்ஸ் சிகிச்சை செய்து சருமம் முதுமை அடையாமல் இளமையின் செழுமையைத் தக்கவைக்கலாம்.
1,000 ரூபாய் செலவில் இந்த சிகிச்சை செய்துகொள்ளலாம். ஆக்சிஜன் பேலன்ஸ் சிகிச்சை, முதுமையை குறைத்து, இளமைக் கூட்டும் அற்புதம்.'' என்கிறார் லட்சுமி பாண்டியன்.
இனியெல்லாம் இதமே!
- கா.பெனாசிர்
படங்கள்: வீ.சிவக்குமார்
மாடல்: சந்திரலேகா