Published:Updated:

நளினத்துடன் மிளிரும் நதியா!

நளினத்துடன் மிளிரும் நதியா!

##~##

'நாற்பது வயதைக் கடந்தும் 20 வயதைப் போல் இளமையோடு இருக்கிறார் நதியா. 55 கிலோ எடை, மிடுக்கான நடை என நதிபோல ஓடிக்கொண்டிருக்கும் நதியாவின் ஃபிட்னெஸ் சுவார(க)சியம் இங்கே... 

'ரொம்ப சிம்பிள். நாம இளமையா இருக்கிறதுக்கு 50 சதவிகிதம் ஜெனிடிக்ஸ் காரணம் என்றாலும், மீதம் உள்ள 50 சதவிகிதம் அதை எப்படிப் பராமரிக்கிறோம் என்பதில்தான் இருக்கு. எனக்கு ஹெல்த் கான்ஷியஸ் ரொம்ப ஜாஸ்தி.  சின்ன வயசிலேருந்து விளையாட்டுக்களில் நிறைய பங்கெடுத்துப்பேன். என்.சி.சி-யில் இருந்தேன். இப்பவும் நான் ஆக்டிவ்வா, அலர்ட்டா இருக்கறதுக்கு ஸ்போர்ட்ஸ்ல இருந்ததுதான் காரணம். முப்பது வயசுக்கு அப்புறம் தினமும் நடைப்பயிற்சி போக ஆரம்பிச்சேன். எதைச் செஞ்சாலும் ஆத்மார்த்தமா, ரசிச்சு செய்வேன். அது வொர்க் அவுட்டா இருந்தாலும் சரி, வேலையா இருந்தாலும் சரி...  நம்ம உடம்பு மீது நாம் காட்டும் அக்கறைதான் எப்பவும் நம்மை 'சூப்பர் ஃபிட்... சூப்பர் ஸ்மார்ட்டா’ மாத்தும்.'

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
நளினத்துடன் மிளிரும் நதியா!

'தினமும் என்ன மாதிரியான பயிற்சிகள் செய்வீங்க?'

'எனக்கு நீண்ட தூரம் நடைப் பயிற்சி செய்யப் பிடிக்கும். ஜிம் போக செலவாகும்னு நினைக்கிறவங்க இந்த எளிமையான பயிற்சியைத் தினமும் செய்யலாம். ஒரு ஷூ இருந்தால்போதும். ரோட்ல சின்ன கல்லு இடறினாக்கூட நிலைதடுமாறி காலில் உள்ள தசை நார்களைப் பாதிச்சிடும். அதனால கட்டாயம் ஷூ போட்டுட்டுப் போறதுதான் நல்லது. காலையில் வாக்கிங் போவேன். நேரம் கிடைக்கிறப்ப, பார்க் அல்லது கடற்கரையில் காலார நடப்பேன். உற்சாகமா இருக்கும். அதுக்கப்புறம் ஜிம் வொர்க் அவுட்ஸ் பண்ணுவேன். உடம்பு லேசா எடையே இல்லாம இருக்கற மாதிரி இருக்கும். தொடர்ந்து உடற்பயிற்சிச் செய்யணும்னா அதுக்கு விடாமுயற்சி தேவை. முதல்ல, தொடர்ந்து இரண்டு நாள் உடற்பயிற்சி செய்யும்போது உடம்பு ரொம்ப வலிக்கும். ஆனா, மூணாவது நாள் செய்யும்போது உடம்பு அதைத் தாங்கிக்க ஆரம்பிக்கும். உடல்ல இருக்குற தசைகள் எல்லாம் 'டோன்’ ஆகும்.

என் பொண்ணுங்க ஜானாவும் சனமும் ஸ்விம்மிங் வகுப்பு போறாங்க.  நானும் அவங்களோட நீச்சல் போயிட்டிருக்கேன். நீச்சல் பயிற்சியைவிட உடலுக்கு ஒரு பெரிய எக்சர்சைஸ் எதுவுமே இருக்க முடியாது. கூடிய சீக்கிரம் பாதியில் நிறுத்தின யோகா கிளாஸைத் தொடரலாம்னு இருக்கேன்.'

'உணவு விஷயத்துல நீங்க எப்படி?'

''கேரள உணவு வகைகள் எல்லாமே பிடிக்கும். என் கணவர் மஹாராஷ்டிராவைச் சேர்ந்தவர். அதனால், அந்த ஊர் சமையலையும் கத்துக்கிட்டேன். பசங்களுக்காக நான்வெஜ் சமைப்பேன். அவங்களுக்காகவே இத்தாலியன், மெக்சிகன், சைனீஸ் சமையல் கத்துக்கிட்டு விதவிதமா சமைச்சுத் தருவேன். அவங்க அதை ருசிச்சு சாப்பிடுறதை ரசிப்பேன். பொதுவா, நான் டயட் எல்லாம் இருக்கறதில்லை. நல்லா சாப்பிடணும். ஆனா, யோசிச்சு சாப்பிடணும். 'நம்ம உடம்புக்கு இந்த உணவு ஒத்துக்குமா? சத்தானதா... இதில் எண்ணெய் அதிகமா இருக்கு, அளவுக்கு அதிகமா காரம் வேண்டாம்’னு சாப்பிடறதுக்கு முன்னால, ஒருமுறைக்கு இருமுறை யோசிச்சுச் சாப்பிடுவேன். அதே சமயம் அளவா, நிறைவா சாப்பிடுவேன். என் வயிறே என் விருப்பத்துக்கு ஏத்த மாதிரி கேக்க ஆரம்பிச்சிடுச்சு. அரை வயிறு அல்லது இன்னும் கொஞ்சம் சாப்பிடலாமேங்கற ஃபீல் வரும் போது கை கழுவ எழுந்திடுவேன்.'

'ஃபிட்னெஸ் பற்றி என்ன சொல்ல விரும்புறீங்க?'

'எல்லாப் பெண்களும் நிச்சயம் வெயிட் டிரெயினிங் பயிற்சி எடுத்துக்கணும். வயசு ஏறும்போது நம்மோட எலும்பின் அடர்த்தி குறையும். வயசானவங்களைப் பார்த்தீங்கன்னா பேலன்ஸ் இல்லாம நிக்கவோ, நடக்கவோ ரொம்பக் கஷ்டப்படுவாங்க. வாக்கிங் போறப்ப, பாத்ரூம்ல அடிக்கடி விழுந்திடுவாங்க. ஆஸ்டியோபோரோசிஸ் பிரச்னை நிறைய பெண்களுக்கு இருக்கு. இதெல்லாம் தவிர்க்க 40 வயதை நெருங்கும்போதே பேலன்ஸ் பயிற்சி,  உடலை உறுதிப்படுத்தும் பயிற்சிகளைக் கட்டாயம் செய்ய ஆரம்பிச்சிடணும். எல்லாத்துக்கும் மேலே சந்தோஷமும் மன நிறைவும் வாழ்க்கையில் ரொம்ப முக்கியம். எதிர்மறையான எண்ணங்கள் நம் அழகை மட்டும் இல்லை; ஆரோக்கியத்தையும் சேர்த்துக் கெடுத்திடும். சந்தோஷம், துக்கம், வருத்தம், கஷ்டம்னு நான் எதையுமே பெரிசா, மனசுல போட்டு அலட்டிக்க மாட்டேன். எல்லாரும் நல்லா இருக்கணும்னு நினைப்பேன்.  உலகமே அழகா தெரியும். அதில் ஒரு சின்ன துகளா இருக்கற நாமும் அழகாத்தான் இருப்போம்!''

- உமா ஷக்தி