Published:Updated:

விளையாட்டு வீரர்களின் கனவு மெய்ப்பட...

கலோரி நிறைந்த உணவு!

விளையாட்டு வீரர்களின் கனவு மெய்ப்பட...
##~##

டிப்பு, விளையாட்டு, பாட்டு, நடனம் என எந்தத் துறையில் சாதிப்பதற்கும் அஸ்திவாரமாக இருப்பது உறுதியான, ஆரோக்கியமான உடல்தான். அதிலும் விளையாட்டில் வெற்றி பெறுவதற்கான முக்கியமான காரணங்களில் சரியான உணவுமுறை ஒன்று. சிறுவயதிலிருந்தே விளையாட்டில் புலிகளாகத் திகழும் குழந்தைகளுக்கும் பதின்ம வயதுப் பிள்ளைகளுக்கும் என்ன மாதிரியான உணவு ஏற்றது என்பது பற்றி விரிவாகக் கூறினார், பிரபல 'ஸ்போர்ட்ஸ் நியூட்ரிஷனிஸ்ட்’ ஷைனி சந்திரன்.  

''நம் உழைப்புக்கு ஏற்ற வகையில் உணவைத் தேர்ந்தெடுத்து உண்பதுதான், ஆரோக்கியமான  வாழ்வுக்கு வழி. முழுநேர விளையாட்டு வீரர்கள், பள்ளியில் ஆர்வத்துடன் விளையாட்டில் ஈடுபடும் மாணவர்கள், மாலை நேரத்தில் கட்டாயம் விளையாடும் பழக்கம் கொண்ட அலுவலகவாசிகள் அனைவருக்கும் விளையாட்டுதான், உடலைக் கட்டுக்கோப்பாகவைத்து இருக்க உதவும் நல்லதோர் உடற்பயிற்சி. விளையாட்டில் வெற்றி தோல்வியை உணவும் தீர்மானிக்கும்'' என்கிறார் ஷைனி.    

''விளையாட்டு வீரர்களுக்கு உடல்தான் பிரதானம். நேரத்துக்குச் சரியாகச் சாப்பிட வேண்டும். அடிக்கடி போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். வீரர்களின் வயது மற்றும் எடையைப் பொருத்து, அவர்களின் கலோரி அளவு சரிவிகிதத்தில் இருப்பதுபோல், பார்த்துக்கொள்ள வேண்டும். புதிதாக ஏதேனும் உடற்பயிற்சியில் ஈடுபட்டால், அதற்கான ஆரோக்கிய உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். தினசரி சிக்கன், போர்க், பீஃப் போன்ற அசைவ உணவு சாப்பிடலாம். புரதச் சத்து அதிகம் உள்ள உணவுகளைக் கண்டிப்பாக உணவில் சேர்க்க வேண்டும். மட்டன் சூப் நல்லது. வைட்டமின் 'சி’ அதிகம் உள்ள கேரட் ஜூஸ், எலுமிச்சை ஜூஸ் மற்றும் வைட்டமின் 'டி’ அதிகம் உள்ள அசைவ உணவுகளைச் சாப்பிட வேண்டும்.

விளையாட்டு வீரர்களின் கனவு மெய்ப்பட...

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு...

12 வயது முதல் 18 வயது வரை உள்ள விளையாட்டில் அதிகம் ஆர்வமுள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கலோரி நிறைந்த உணவு அதிகம் தேவை. அதன் அளவு குறைந்தால், உயரமாக வளரக்கூடிய வாய்ப்பை இழக்க நேரிடும். எனவே, அதிக கலோரி மற்றும் அதிகப் புரதச் சத்து உணவில் கண்டிப்பாகச் சேர்த்துக்கொள்ளுங்கள். பயறு, தானிய உணவுகள், கிழங்கு வகைகள் சிறந்த சாய்ஸ். பீட்ரூட் அதிகம் சாப்பிடலாம். ஏனெனில் விளையாடும்போது அடிபட்டால், அந்த வலியைத் தாங்கிக்கொள்ளக்கூடிய சத்துக்கள் பீட்ரூட்டில் உண்டு. ரத்த விருத்திக்கும் இது நல்லது.

விளையாட்டு வீரர்கள் நார்ச் சத்து அதிகம் உள்ள உணவுகளைத் தவிர்க்க வேண்டும். அப்படித் தவிர்க்கும்பட்சத்தில், விளையாடும்போது வயிற்றில் உள்ள குடல் அசைவு இலகுவாக இருக்கும். அதிகமான இனிப்பு உணவுகளை அறவே தவிர்ப்பது நல்லது. அதுவும் விளையாட்டின்போது கட்டாயம் சாப்பிடக் கூடாது. ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமானால், விளையாடும்போது சீக்கிரமே சோர்வை ஏற்படுத்திவிடும்.

பெண்களுக்கு...

விளையாட்டில் ஈடுபடும் ஆண்கள் தங்களுக்குத் தேவையான சத்தான உணவுகளை எடுத்துக் கொள்கின்றனர். ஆனால், பெண்கள் அப்படிச் சத்தான உணவுகளில் அதிகம் அக்கறை காட்டுவது இல்லை. சரியான உணவுமுறைகளைப் பின்பற்றுவதும் இல்லை. இதனால், இரும்புச் சத்து, கால்சியம் போன்ற சத்துக் குறைபாடு ஏற்படுகின்றன. கால்சியம் குறைபாட்டினால் எலும்புகள் வலுவிழக்கும். நேரம் கிடைக்கும்போதெல்லாம், அதிக அளவில் தண்ணீர் குடிக்க வேண்டும். காலையில் எழுந்த இரண்டு மணி நேரத்துக்குள் காலை உணவை முடித்துக்கொள்ள வேண்டும். தினசரி ஒரு கைப்பிடி அளவுக்கு, தானிய வகைகளைச் சாப்பிட வேண்டும். அது மூளைக்கும் நரம்புக்கும் நல்லது. இரவு உணவை 10 மணிக்குள்ளாகச் சாப்பிட்டுவிடுவது நல்லது.

உணவுடன் பால் அதிகம் சேர்த்துக்கொள்வது அவசியம். அசைவ உணவுகளும் அதிகம் சாப்பிட வேண்டும். விளையாடும்போது இடையிடையே, அங்கீகரிக்கப்பட்ட எனர்ஜி டிரிங்க்ஸ் அருந்தலாம். ஒவ்வொரு மூன்று மணி நேரத்துக்கும் உடலில் புரதம் மற்றும், கலோரியின் அளவு குறையாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

விளையாட்டு வீரர்களின் கனவு மெய்ப்பட...

மூளை சார்ந்து விளையாடுபவர்களுக்கு...  

கேரம், செஸ் போன்ற விளையாட்டு வீரர்கள் அமைதியான சூழலை உருவாக்கிக்கொள்வதன் மூலம், கற்பனா சக்தியை அதிகரிக்கச் செய்யலாம்.  தியானம், யோகா போன்ற விஷயங்களில் அதிகம் ஈடுபடலாம். எப்போதும் சுறுசுறுப்பான மனநிலையை உருவாக்கிக்கொள்ளுங்கள். குறைந்த அளவு அசைவ உணவுகள், சிறுதானியங்கள், பழங்கள், கீரைகள் போன்ற மிதமான உணவுகளை அதிகம் சாப்பிடலாம்.    

தவிர்க்க வேண்டிய உணவுகள்

• தினமும் ஒரே வகையான உணவை 3 வேளையும் சாப்பிடக் கூடாது.

• விளையாடும் முன், தேநீர் மற்றும் அதிக நார்ச் சத்து நிறைந்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

• ஒவ்வொரு வீரர்களும் அவர்களின் வயது, விளையாட்டு முறை, விளையாட்டு நேரம் போன்றவற்றை மனதில்கொண்டு சரியான நேரத்துக்கு உணவுகளைச் சாப்பிட வேண்டும்.

- புகழ் திலீபன் படங்கள்: ஸ்டீவ்ஸ் சு.இராட்ரிக்ஸ், ர.சதானந்த்

மாடல்: வினிதா ஜெயக்குமார்

சத்தான உணவுகளைச் சாப்பிடாமல் போனால், பெண்களுக்கு Female Athlete Tired என்ற குறைபாடு ஏற்படும். இதைத் தவிர்க்க, உணவில் கீரை, கறிவேப்பிலை, பால், சிறு தானிய வகைகள், மீன், சிக்கன், முட்டை சேர்த்துக்கொள்ள வேண்டும். இரும்புச் சத்துக்கு ஆட்டு ஈரல், பன்றி இறைச்சி, உலர்ந்த திராட்சை  போன்றவற்றை எடுத்துக் கொள்வதன் மூலம், இந்தப் பிரச்னையில் இருந்து விடுபடலாம்.

அடுத்த கட்டுரைக்கு