''ஓடியாடி உழைத்த காலமெல்லாம் போயேபோச்சு. இப்போது அலுவலகத்தில் நாற்காலியில் அமர்ந்து பார்க்கிற வேலைதான் பெரும்பாலானோருக்கு. 'எப்படா ஓய்வு கிடைக்கும், கொஞ்ச நேரம் உட்காரலாம்’ என்று ஏங்கிக்கிடந்த காலம் மாறி இன்றோ, எழுந்து நடக்கக்கூட இடம் அளிக்காத வகையில் வேலை. நீண்ட நேரம் அமர்ந்தபடி வேலை பார்ப்பவர்களுக்கு, மூட்டுகள் பாதிக்கப்படும் வாய்ப்புகள் அதிகம். இதை ஆர்.எஸ்.ஐ (Repetitive strain injury) என்கிறோம். உடற்பயிற்சி செய்தால் மட்டுமே அதைத் தவிர்க்கலாம்' என்று எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.

'எங்க கம்பெனியில் வேலை செய்பவர்களின் வசதிக்காக, ஜிம், மெடிட்டேஷன் சென்டர் எல்லாம் தொடங்கினோம். 'காலையில் 8.40 மணிக்கு ஆபீஸ் வரணும். அப்புறம் 20 நிமிஷம் யோகா பண்ணனும். 9 மணிக்கு வேலையைத் தொடங்கணும்’ என்றோம். ஆனால், 9 மணிக்கு ஆபீஸுக்கு வந்து நேராக சீட்டில் போய் உட்கார்ந்திடறாங்க. 20 சதவிகிதம் பேர்கூட ஜிம்மைப்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பயன்படுத்துவது இல்லை' என்று ஆதங்கப்படுகிறார் கோவையில் உள்ள ஐ.டி நிறுவனம் ஒன்றின் மனிதவள மேம்பாட்டு அதிகாரி.'தொடர்ச்சியாக ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்க்கக் கூடாது. 20 நிமிடங்களுக்கு ஒரு முறை சீட்டை விட்டு எழுந்து நடக்க வேண்டும்’ என மருத்துவர்கள் விதிக்கும் கட்டுப்பாடுகள் எல்லாம் பல தனியார் நிறுவனங்களில் சாத்தியமே இல்லை. என்றாலும், பெரும்பாலான ஐ.டி நிறுவனங்கள், ஊழியர்களின் நலன் கருதி, வெளிநாடுகளில் பிரபலமடைந்துள்ள 'சேர்கோசைஸ்’ (Chaircocise) எனும் இருக்கையில் அமர்ந்தபடி செய்யும் உடற்பயிற்சி முறையை அமல்படுத்தியுள்ளன. யோகா, நடனம் போன்றவற்றின் கலவையாக இருக்கும் இந்தப் பயிற்சி சோர்வை நீக்கி சுறுசுறுப்பை அளிக்கும்.
இந்த உடற்பயிற்சியை அமல்படுத்திவரும், கோவை, சரவணம்பட்டியில் உள்ள ஐ.டி நிறுவனத்துக்குச் சென்றோம். பரபரப்பாக வேலைபார்த்துக் கொண்டிருந்தவர்கள், காலை 10.30 மணியானதும் அலாரம் அடித்தது போல் வேலையை நிறுத்தினார்கள். அலுவலகம் முழுக்க பாடல் ஒலிக்க, பாடல் இசைக்கு ஏற்ப, அமர்ந்திருந்த இடத்திலேயே நடனம் ஆடத் தொடங்கினர். இரண்டு பாடல்கள் தொடர்ச்சியாக ஒலித்தன. குதூகலமாக ஆடி முடிக்கும்போது 10 நிமிடங்கள் கடந்ததே தெரியவில்லை. சின்ன உற்சாகத்தோடு மீண்டும் தங்கள் பணியைத் தொடங்கினர். மாலையில் மீண்டும் இதே போன்ற பாடல் ஒலிக்க, மீண்டும் பயிற்சி!
இந்தப் பயிற்சியை வடிவமைத்து வழங்கியுள்ள ஃபிட்னெஸ் பயிற்சியாளரும் ஃபுட்லூஸ் நடன நிறுவனத்தின் இயக்குனருமான எட்வினிடம் பேசினோம்.
'உட்கார்ந்த இடத்தில் இருந்தே பயிற்சி மேற்கொள்ளும் சேர்கோசைஸ் முறை, வெளிநாடுகளில் இருந்ததைத் தெரிஞ்சு, தேவை கருதி இங்கும் அதைக் கொண்டுவந்தோம். ஒரே நிலையில் அமர்ந்து இருப்பதால் ஏற்படும் பாதிப்பு சம்பந்தமாகவும், அதைத் தவிர்க்க டாக்டர்கள் பரிந்துரைக்கும் முறையையும் கேட்டு, அதற்கேற்ப ஸ்டெப்ஸ் அமைத்தோம்.
தினமும் இரண்டு முறை 10 நிமிடங்கள் இந்த உடற்பயிற்சியைச் செய்தால் போதும், நிச்சயம் உடல் பாதிப்புகளைத் தவிர்க்கலாம். அதேமாதிரி உற்சாகமான இசையுடன் 10 நிமிடங்கள் உட்கார்ந்த இடத்திலேயே டான்ஸ் ஆடுற மாதிரி உடற்பயிற்சி செய்வதும் உடலுக்கு மட்டுமில்லை, மனசுக்கும் புத்துணர்ச்சியைக் கொடுக்கும். ஆபீஸில் வேலை செய்பவர்கள் மட்டுமின்றி, பள்ளி மாணவர்கள், வயதானவர்கள், கர்ப்பிணிகள் என எல்லோருக்கும் இந்த முறையைப் பயன்படுத்தி பயிற்சி கொடுத்துட்டு வர்றோம். இதனால் பணியாளர்களின் வேலைத்திறனும் அதிகரித்திருப்பதாக நிறுவனங்கள் சொல்கின்றன' என்றார்.

'பல மணி நேரம் கம்ப்யூட்டரில்தான் வேலை. இதனால் என் எனர்ஜி லெவல் ரொம்பவே குறையுது. முதுகு வலி, கழுத்து வலி, கண் பார்வை பாதிப்புனு நிறையப் பிரச்னைகள். என்னை நானே கவனிச்சுக்க நேரம் இல்லை. ஆனா, உட்காந்த இடத்திலேயே டான்ஸ் ஆடுற மாதிரி தினமும் இப்படி எக்சர்சைஸ் பண்றதால் ரொம்ப ரிலாக்ஸ்டா இருக்கு. உடல்ரீதியாவும், மனரீதியாவும் புத்துணர்ச்சியா இருக்கு' என்கிறார் கோவையைச் சேர்ந்த ஹேமா.

திருச்சியைச் சேர்ந்த சுகன்யா, 'ஒன்றரை வருஷமா வேலை பார்க்கிறேன். காலை 7.30 மணிக்கெல்லாம் ஆபீஸ் வரணும். 6 மணிக்கே ரெடியானால்தான், வர முடியும். சாயந்தரம் வீட்டுக்குப் போனதும், இருக்கிற அசதியில், எக்சர் சைஸ் பண்றதை நினைச்சுக்கூடப் பார்க்க முடியாது. ஆபீஸ் நேரத்துல வேலையோட, மியூசிக் கேட்டுக்கிட்டே ரிலாக்ஸா மூவ்மென்ட்ஸ் பண்றது ரொம்பவே ஜாலியா, யூஸ்ஃபுல்லா இருக்கு. மன அழுத்தம் ரொம்பவே குறைஞ்சிருக்கு' என்கிறார் சின்னப் புன்னகையுடன். அப்புறம் என்ன, ஆட்டத்தைத் தொடங்க வேண்டியதுதானே! யாருப்பா அங்கே? ஸ்டார்ட் மியூசிக்!