Published:Updated:

``விலகிடலாம்னு முடிவெடுக்கும் முன்னாடி, ஏன் ஆரம்பிச்சோம்னு யோசிங்க!" - விஷ்ணு விஷால்

டிப்ரெஷனிலிருந்து மீண்டு வந்தபின், விஷ்ணு விஷாலின் ஓப்பன் டாக்!

தமிழ்த் திரையுலகில் தனக்கென தனி இடத்தைக் கொண்டவர் நடிகர் விஷ்ணு விஷால். குறிப்பிட்ட எந்தப் பிரிவுக்குள்ளும் அடைபட்டுவிடாமல், `நான் நடிகன் பாஸ். எல்லா ரோலும் பண்ணுவேன்' எனச்சொல்லி, ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் ஏற்ப தன் மனதையும் உடலையும் மாற்றி அமைத்துக்கொள்ளும் இந்த காடனின் ஃபிட்னெஸ்தான் ரீசன்ட் டிரெண்டு!

விஷ்ணு விஷால்
விஷ்ணு விஷால்

`நான், வாரணம் ஆயிரம் வழியைத் தேர்ந்தெடுத்துள்ளேன்' என்ற கேப்ஷனோடு, `வாரணம் ஆயிரம்' படத்தில் மீண்டு வந்தபின் இருக்கும் `சூர்யா' போன்ற உடல்வாகுடைய தனது புகைப்படங்கள் சிலவற்றை சமூக வலைதளத்தில் கடந்த மாதம் பதிவிட்டிருந்தார் விஷ்ணு. ` வாரணம் ஆயிரம்னு சொல்லியாச்சு, அப்போ கதையில இன்னொரு பக்கமும் இருக்கத்தானே செய்யும்! அதுகுறித்த விஷயங்களைக் கடிதமாக எழுதி, புகைப்படங்களோடு இணைத்திருந்தார் அவர்.

அந்தப் பதிவுக்கு, ரசிகர்கள் மட்டுமன்றி நிறைய பிரபலங்களும் தங்களுடைய பாராட்டுகளைத் தெரிவித்தனர். தனது ட்வீட்டில் விஷ்ணு விஷால் குறிப்பிட்டிருந்த முக்கியமான - சுவாரஸ்யமான விஷயம் என்னவெனில், ஆறு மாதங்களில் 16 கிலோ வரை எடை இழந்துவிட்டதாகக் குறிப்பிட்டிருந்ததுதான்.

`'காடன்' படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்துக்குப் பின், மருத்துவர்கள் வொர்க்-அவுட் செய்யக்கூடாதென அறிவுறுத்தியிருந்தபோதும், நான் செய்தேன். இன்றைக்கு நன்றாகவே இருக்கிறேன்' எனக் குறிப்பிட்டிருந்தார் அவர். உடல்நலன் மீதும், வொர்க்-அவுட் மீதும் அப்படி என்ன தீரா காதல்... விஷ்ணுவின் ஃபிட்னெஸ் சீக்ரெட், இப்போது என்ன டயட் ஃபாலோ செய்கிறார்... டிப்ரெஷனைக் கடந்து வர, என்ன செய்தார் அவர்... தெரிந்துகொள்ளும் ஆவலோடு அவரிடம் பேசினோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

``உங்க லைஃப்ல ஏற்பட்ட டிப்ரெஷனை எதிர்கொண்டது பற்றி சொல்லுங்களேன்!"

``லைஃப்ல எல்லாருக்கும் நிறைய ஏற்ற இறக்கங்கள் ஏற்படும். ஏற்றங்கள் அதிகமா இருக்கிற சூழல்ல, நம்மளைச் சுத்தி எதுவுமே தப்பா நடக்காது. ஆனா இறக்கம் அதிகமா இருக்கிறப்போ, நம்மளைச் சுத்தியிருக்கும் எல்லாமே மாறும். நம்மளோட சூழல்கள், நண்பர்கள் வட்டம்னு எல்லாமே மாறும். இந்த மாற்றம் எல்லாமே, தப்பா இருக்கும்கிறதுதான் சிக்கல். நம்மையே அறியாம நாமளும் அந்தத் தவறுகளுக்கு ஏற்றமாதிரி மாறத்தொடங்கிடுவோம். விளைவு, நெகட்டிவ் வைப்ஸ் எல்லாம் நம்மளைத் தவறான வழியில போகவைக்கும். கூடவே, மது புகை மாதிரி தவறான விஷயங்கள் மீதான அடிக்‌ஷன்னு நம்ம வாழ்க்கையே தடம் புரண்டுடும்.

அப்பா-அம்மா-அக்கா - நண்பன் எல்லாருக்கும் ரொம்பவே கடமைப்பட்டிருக்கேன்.
விஷ்ணு விஷால்
விஷ்ணு விஷால் ஃபிட்னெஸ்
விஷ்ணு விஷால் ஃபிட்னெஸ்

இதையெல்லாம் சரிசெய்ய, நமக்கு கொஞ்சம் பாசிடிவ் வைப்ஸ் தேவைனு நான் நினைக்கிறேன். உடம்பு மனசு ரெண்டுக்கும் பாசிடிவ் வைப்ஸ் மாறுபடும். உடம்புக்கான பாசிடிவ் வைப்ஸா நான் பார்க்கிறது வொர்க்-அவுட் - டயட். அதேபோல மனசுக்கு, மனுஷங்க! எனக்கு அப்படி இருந்தது என்னோட அப்பா - அம்மா - அக்கா - நண்பன் இவங்க எல்லாரும்தான். மனசுக்கு பாசிட்டிவ் வைப்ஸ் கிடைக்காம போயிருந்தா, உடம்புக்கான விஷயங்களை நான் செஞ்சிருக்கவே முடியாது. அந்த வகையில, இவங்க எல்லாருக்கும் நான் ரொம்பவே கடமைப்பட்டிருக்கேன்.

இவை எல்லாத்தையும் தாண்டி, மருத்துவ உதவி அவசியம் தேவை. உடல் துவண்டுபோகும்போது எப்படி புரொஃபஷனல் மருத்துவ உதவி தேவையோ, அதேபோல மனசுக்கும் தேவை. பலரும் செய்யும் தவறு, அது இல்லாமல் இருக்கிறதுதான். நான் அந்த தப்பை செய்யலைங்கிறவரைக்கும் மகிழ்ச்சி."

"இந்த சந்தோஷத்தை இழந்துடக்கூடாது!”

``உங்க வொர்க்-அவுட் பற்றி?"

``எவ்வளவு கலோரி சாப்பிடுறோம் - நம்ம உடல் எடை என்ன - எவ்வளவு ஆக்டிவா இருக்கோம் என்பதையெல்லாம் பொறுத்து, அதுக்கேத்த வொர்க்-அவுட்தான் செய்யணும் என்பது அடிப்படை. ஸோ, வொர்க்-அவுட் ஸ்டைல் மாறிட்டே இருக்கும். குறிப்பிட்டு எதுவும் சொல்ல முடியாது. ரெண்டு மாசம்தான் நான் ஆப்ஸ் வொர்க்-அவுட் செஞ்சேன். அதுவரைக்கும், வெறும் புஷ்-அப்ஸ்தான். எனக்கு எடை அடிக்கடி குறைஞ்சுட்டே இருந்ததால, வொர்க்-அவுட் ஸ்டைல் ரெண்டு வாரத்துக்கு ஒருமுறை மாறிகிட்டே இருந்துச்சு. இப்போ, எடையை மெயின்டெய்ன் பண்றேன்.

விஷ்ணு விஷால் ஃபிட்னெஸ்
விஷ்ணு விஷால் ஃபிட்னெஸ்

``டயட் கட்டுப்பாடுகள் ஏதாவது வெச்சிருக்கீங்களா?"

``சில மாதங்கள்லயே, உடல் எடையைக் குறைச்சதை வச்சு, நான் கிராஷ் டயட் (உடல் எடை உடனடியாகக் குறைய எடுத்துக்கொள்ளப்படும் டயட் வகையின் பெயர்) எடுத்துக்கிறேன்னு பலரும் நினைச்சிட்டிருக்காங்க. ஆனா, Food Combining Diet (ஃபுட் கம்பைனிங் டயட்) தான் என்னோட டயட், பிளான். நமக்கேத்த உணவை, நமக்கான உணவை, அளவோட சாப்பிடறதுதான் இந்த `ஃபுட் கம்பைனிங் டயட்'. பலரும் எங்கிட்ட கிராஷ் டயட் ஏன் ஃபாலோ பண்ணலைனு கேட்டாங்க. என்னைப் பொறுத்தவரைக்கும் கிராஷ் டயட் என்பது, குறுகிய காலத்துக்கானது. எனக்கு வேண்டியதோ, நீண்டகால பெனிஃபிட். ஸோ, எனக்கேத்த புரொஃபஷனல் டயட் ஃபுட் கம்பைனிங் தான்!

பச்சைக் காய்கறிகள் - பழங்கள்
இவைதான் என்னோட சூப்பர் டூப்பர் ஃபுட்ஸ்!
விஷ்ணு விஷால்
விஷ்ணு விஷால்

இதுல நான் செஞ்ச முதல் விஷயம், எனக்குப் பிடிச்ச உணவுகளைப் பட்டியல் போட்டுக்கிட்டது. தொடர்ந்து, அதுல எவையெல்லாம் எனக்கேத்த உணவுகள் - எவையெல்லாம் எனக்கு ஏற்காத உணவுகள்னு மருத்துவ உதவியோட கண்டுபிடிச்சேன். அதுக்கேத்த மாதிரி, டயட் ஃபாலோ பண்ணினேன். உதாரணத்துக்கு, எனக்கு கீரை அலர்ஜி. அது, அசிடிட்டியைத் தரும். ஸோ, கீரையே சாப்பிட மாட்டேன். இப்படி, நிறைய உணவுகள் ஏற்காத பட்டியல்ல இருக்கு. அந்த உணவுகள் எல்லாத்தையும் ஒதுக்கிடுவேன். தவிர, என் உடம்புல சில சத்துக்குறைபாடுகள் இருக்கு. அதுக்கேத்த மாதிரியான உணவுகளையெல்லாம் தேவையான அளவு எடுத்துக்குவேன். பிடிச்ச , உடம்பு ஏத்துக்கிற மற்ற உணவுகளையெல்லாம் விருப்பப்படும்போதெல்லாம் அளவோட சாப்பிடுவேன்!

எனக்கு சிக்ஸ் - பேக் ஆப்ஸ் வேண்டாம்!
விஷ்ணு விஷால்

டிரெய்னரோட அறிவுரை இல்லாம எந்த உணவையும் எடுத்துக்க மாட்டேன். அதேபோல, வெளியிடங்கள்ல சாப்டுறது இல்லை. மீறி சாப்பிட்டாலும் எண்ணெய் சேர்க்காம - அளவான உப்போட வீட்டு சாப்பாடு மாதிரி செய்யச் சொல்லி சாப்டுவேன். ஒவ்வொரு நாளும் எத்தனை கலோரி சாப்புடுறேன் என்பதில் ரொம்ப கவனமா இருப்பேன். அந்த அளவைப் பொறுத்து, வொர்க்-அவுட் மாறுபடும். நிறைய பேர், சூப்பர் ஃபுட்ஸ் எடுத்துக்கறதுல அதிகமா கவனம் செலுத்துவாங்க. என்னைப் பொறுத்த வரைக்கும், சரிவிகித ஊட்டச்சத்தை நம்ம உடலுக்குக் கொடுக்குற எல்லா உணவுகளும், சூப்பர் ஃபுட்ஸ்தான். எனக்கான சூப்பர் டூப்பர் ஃபுட்ஸ், பச்சைக் காய்கறிகளும் பழங்களும்தான்!"

``சிக்ஸ் பேக் முயற்சிகள் தொடருமா?"

``இதே சிக்ஸ்-பேக் உடலமைப்பைத் தக்கவெச்சுக்கிறது என்னோட விருப்பமில்லை. ஏன்னா, அடிப்படையில நான் நடிகன். படத்துக்குப் படம், கதாபாத்திரத்துக்கு ஏற்ப மாறிட்டே இருக்கணும். இப்போ இருக்கிற மாதிரி எப்பவும் ஃபிட்டா இருக்கணும். அதுக்கான முயற்சிகள்ல இருக்கேன். எப்போதும் எங்கேயும் ஆக்டிவா இருக்கேன், இருப்பேன். மத்தபடி, டிரெய்னர் ஆலோசனைப்படி டயட் - கலோரி அளவுகள் - உணவுக்கான கட்டுப்பாடுகள் - தினமும் 4 லிட்டர் தண்ணீர் குடிப்பது போன்றவற்றையெல்லாம் ஃபாலோ பண்றேன்.

விஷ்ணு விஷால்
விஷ்ணு விஷால்

எனக்கு நானே ஹெல்த் மார்க் கொடுக்கனும்னா, 100-க்கு 95 மார்க் கொடுப்பேன். அவ்ளோ ஹெல்த்தி - அவ்ளோ ஹேப்பியா இருக்கேன்! அடுத்தடுத்த வருஷங்கள்லயும் இதே மாதிரி ஃபிட்னெஸ் - டயட்டை ஸ்ட்ரிக்ட்டா ஃபாலோ பண்ணினா, அப்போ எனக்கு நானே கொடுத்துக்கிறதுக்காக அந்த 5 மார்க்கை மிச்சம் வச்சிருக்கேன்!"

``உங்க வாழ்க்கையை மாற்றிய ஒரு வாசகம்..?"

``Whenever you think of Quiting, Remember why you have started. அதாவது, ஒரு விஷயம் வேணாம்... விலகிடலாம்னு யோசிக்கும்போது, அதை நீங்க ஏன் ஆரம்பிச்சீங்கன்றதையும் ஞாபகப்படுத்திப் பாருங்க.''

வாழ்த்துகள் விஷ்ணு.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு