Published:Updated:

``ராணாபோல உடல் எடை அதிகரிக்க வேண்டுமென்றால்..!" ஃபிட்னஸ் கைடன்ஸ்

ராணா
Listicle
ராணா

இந்த உடல் எடை அவ்வளவு எளிதில் கூடியதல்ல. ராணா போன்று உடல் எடை அதிகரிக்க வேண்டுமென்றால், பொறுமை அவசியம். இரண்டு மாதங்களில் உடலமைப்பு பெற்றுவிட முடியும் என்ற எண்ணத்தை முதலில் அனைவரும் மாற்ற வேண்டும்.


``ஊசிபோல ஒடம்பிருந்தா தேவையில்ல பார்மசி" என்றார் வைரமுத்து. ஆனால், தற்போதைய காலகட்டத்தில் பெண்களின் விருப்பமோ `ஆறடி உயரம், அழகிய உருவம்!'

`அப்படிப்பட்ட உருவத்துக்கு எங்கடா போவேன்!' என்று புலம்பிக்கொண்டே பல இளைஞர்கள் பொட்டியைக்கட்டிக்கொண்டு சாரை சாரையாகப் போக ஆரம்பித்த இடம்தான் `ஜிம்'.

முன்பைவிட சமீப காலமாக ஜிம்முக்கு செல்லும் மக்களின் கூட்டம் அதிகரித்துள்ளது. உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற மனப்பான்மை அனைவரிடத்திலும் பரவியதற்கு முக்கியக் காரணங்களுள் ஒன்று, திரைத்துறை பிரபலங்கள். அந்த வரிசையில் பெரும்பாலான மக்களை ஜிம் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்த பிரபலங்களின் பட்டியலைப் பார்ப்போம்.


1
அருண் விஜய்

அருண் விஜய்

வாரிசு நடிகர் என்றாலும் நீண்ட நாள்களாக சரியான திரைப்படங்கள் அமையவில்லை. சிறிதும் மனம் தளராத அருண், 2010-ம் ஆண்டு வெளியான `மாஞ்சா வேலு' திரைப்படம் மூலம் தரமான ரீ-என்ட்ரி கொடுத்தார். அதுவரை சாந்தமான வடிவிலிருந்த அருண், `என்னை அறிந்தால்' விக்டர் கதாபாத்திரத்தின்மூலம் அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்தார். வில்லனிசத்தின் புதிய பரிமாணமாகத் திகழ்ந்தார். அதன் பெரிய ஹைலைட் அவரின் உடலமைப்புதான். ``நான் நினைத்தால் எடையைக் கூட்டவும் முடியும்; குறைக்கவும் முடியும்" என்று சமீபத்தில் ஊடகத்தில் வெளியான பேட்டி ஒன்றில் குறிப்பிட்டிருப்பார். எந்த அளவுக்கு ஜிம் வொர்க்-அவுட் செய்கிறாரோ அதே அளவுக்கு ஆரோக்கியமான டயட்டையும் பின்பற்றுவாராம். அதிலும் அவருடைய ஃபேவரைட் உணவு அவர் அம்மா செய்துகொடுக்கும் நவதானிய தோசை. அருணின் மனைவி ஆர்த்திதான் அவருடைய முதன்மை மோட்டிவேட்டர். படத்துக்கேற்ப வெவ்வேறு டயட்டை பின்பற்றுபவர் அருண்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

2
Nakkhul ( Instagram )

நகுல்

'பாய்ஸ்' படத்துல பார்த்த அந்தக் குண்டு பையனா?' என்று தன்னுடைய அடுத்தடுத்த படங்களில் அனைவரையும் வியக்க வைத்தவர் நகுல். எதிர்பாரா விதமாக நடிப்புத்துறையில் காலடி வைத்த நகுலுக்கு, சினிமா மீதான ஆசை `பாய்ஸ்' திரைப்படத்துக்குப் பிறகு அதிகரித்தது. ஆனால், அவர் ஆசைக்குத் தடையாக இருந்தது அவருடைய அதிகப்படியான உடல் எடை. தன்னைச் சுற்றியுள்ளவர்களின் நெகட்டிவ் எண்ணங்கள்தான் நகுலுக்குள் நடிக்க வேண்டும் என்கிற ஆசையைத் தூண்டியது. அதற்காக அவர் டயட், உடற்பயிற்சி என எல்லாவித முயற்சிகளையும் மேற்கொண்டார். அதன் விளைவாக அவருக்குள் கிடைத்ததுதான் `காதலில் விழுந்தேன்' பட வாய்ப்பு. ஆனால், இது எல்லாவற்றையும்விட சமீபத்தில் வெளியான நகுலின் சிக்ஸ் பேக் இன்னும் பல இளைஞர்களுக்கு ஜிம் செல்வதற்கான மோட்டிவேஷனைக் கொடுத்திருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


3
Bharath ( Instagram )

பரத்

நகுல்- `Fat டு ஃபிட்' கேட்டகரி என்றால், பரத் `Thin டு ஃபிட்' கேட்டகரி. அதே பாய்ஸ் திரைப்படத்தில் `பாப் கேலியாக' வலம்வந்தவர் பரத். அதைத் தொடர்ந்து `காதல்', `எம்டன் மகன்', `சேவல்' என ஏராளமான திரைப்படங்களில் நடித்திருந்தாலும், 2013-ம் ஆண்டு வெளியான 555 திரைப்படத்துக்காக மாற்றிய அவரின் தோற்றம்தான் அனைவரையும் ஆச்சர்யத்துக்குள்ளாக்கியது. `பேக்ஸ்' வைப்பதற்காகத் தினமும் ஜிம் மற்றும் கடுமையான டயட்டை பின்பற்றியுள்ளார். 80 சதவிகித உடல் சமையலறையிலும் மீதமுள்ள 20 சதவிகிதம் உடல் மட்டுமே ஜிம் வொர்க்-அவுட்டினால் உருவாகிறது என்ற நம்பிக்கை உடையவர் பரத். அதனால், உணவில் அதிக கவனம் செலுத்துவார். தினமும் இரண்டு மணிநேரம் ஜிம்மிலும், வார இறுதியில் பேட்மின்டன், கிரிக்கெட், நீச்சல் போன்றவற்றிலும் செலவிடுவார். என்னதான் ஜிம்முக்குச் சென்றாலும், பரத்தின் ஃபேவரைட் உடற்பயிற்சி என்னவோ நடனம்தான். பலருக்கும் இன்ஸ்பிரேஷனாக இருக்கும் பரத்தின் இன்ஸ்பிரேஷன் பிரபு தேவா.


4
Arya ( Instagram )

ஆர்யா

`ஃபிட்னஸ்னா ஜிம்தான்' என்ற கோட்பாட்டை உடைத்து சிலரை சைக்கிள் பக்கம் திரும்ப வைத்தவர் ஆர்யா. நடிக்கும் கதைக்கு ஏற்ற உடலமைப்பு இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் சில நடிகர்களில் ஆர்யாவும் ஒருவர். ஃபிட்னஸ் மீது அதிக ஆர்வம் கொண்ட ஆர்யா, 2017-ம் ஆண்டு வெளிவந்த தன்னுடைய `கடம்பன்' திரைப்படத்துக்காக வழக்கத்துக்கும் அதிகமான நேரத்தை வொர்க்-அவுட்டுக்காகச் செலவழித்தார். ஆதிவாசி கதாபாத்திரத்துக்கு 88 கிலோ எடை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக நான்கிலிருந்து ஐந்து மணி நேரம் ஜிம்மில் இருந்திருக்கிறார். புரதச் சத்து அதிகமுள்ள உணவுகள் மட்டுமே அவரின் டயட்டில் இருந்திருக்கிறது. எவ்வளவுதான் ஜிம்முக்குச் சென்றாலும் ஆர்யா என்றாலே சைக்கிளிங்தான் ஞாபகம் வரும். சைக்கிளிங்கிலும் அவர் கடுமையான பயிற்சியை மேற்கொள்வார். அவ்வளவு ஏன் சமீபத்தில் அவர் நடித்த `காப்பான்' பட இசை வெளியீட்டு விழாவுக்கு, பெங்களூரிலிருந்து சென்னைக்கு சைக்கிளில்தான் வந்தார்.


5
Vikram ( Instagram )

விக்ரம்

படத்துக்குப் படம் மட்டுமல்ல ஒரே திரைப்படத்துக்கே மெல்லிய உடல், சற்று பருமனான உடல் எனப் பல வெரைட்டிகளைக் காட்டி, `என்ன மனுஷன்யா!' என்று அனைவரின் மனதிலும் தோன்றும் அளவுக்கு இருப்பவர் விக்ரம் மட்டுமே. `ராவணன்' படத்தில் இருக்கும் கட்டுக்கோப்பான உடலமைப்பில் சிறிதளவுகூட அடுத்த வருடமே வெளியான `தெய்வத்திருமகள்' திரைப்படத்தில் இருக்காது. இதைத் தொடர்ந்து `ராஜபாட்டை', `தாண்டவம்', `டேவிட்' எனப் பல திரைப்படங்கள் வந்திருந்தாலும், அனைவரையும் வியக்கவைத்த படம் `ஐ'. ஆம், பாடிபில்டராக இருக்கும் லிங்கேசன், இறுதியில் சிறிதும் அடையாளம் தெரியாத நோயாளியாக வரும் கதாபாத்திரத்துக்காக 25 கிலோ குறைத்தார். இதற்காக உடலளவில் மட்டுமல்ல, மனதளவிலும் ஏராளமான போராட்டங்களை எதிர்கொண்டார். தன்னுடைய துறையில் சவால்களை விரும்பும் மனிதருக்கு இது பெரிதல்ல. ஆனால், இதுபோன்று உடலைக் குறைக்க விரும்பும் சாமானிய மக்களுக்கு நிச்சயம் மனவலிமை அதிகம் வேண்டும்.


6
Atharva Murali ( Instagram )

அதர்வா

`பாணா காத்தாடி' திரைப்படத்தில் காத்தாடி வைத்து விளையாடும் டீன் ஏஜ் பையன் கதாபாத்திரம், பரதேசியில் அதற்கு அப்படியே எதிரான கதாபாத்திரம். இப்படிப் பல வித்தியாசங்கள் தோற்றங்களில் காண்பித்தாலும், உடலளவில் `அந்தச் சின்ன பையனா இது' என்கிற ஷாக்கிங் தோற்றத்தைக் கொடுத்தது 2015-ம் ஆண்டு வெளிவந்த `ஈட்டி' திரைப்படம். இத்திரைப்படத்தில் அவர் நடித்த தடகள வீரர். கதாபாத்திரத்துக்காக `சிக்ஸ் பேக்' கொண்டு வந்தார். உண்மையான தடகள வீரர் தோற்றம் பெறுவதற்காகப் பல மாதங்கள் ரியல் வீரர்களுடன் உடற்பயிற்சியை மேற்கொண்டுள்ளார். இன்றுவரை அதே அளவிலான உடலமைப்பைத் தக்கவைத்துக்கொண்டிருக்கும் இவர், சரியான அளவு உணவு மற்றும் தினமும் வொர்க்-அவுட் செய்யத் தவறவே மாட்டாராம். ஃபிட்னஸ்ஸில் கன்சிஸ்டென்ஸி முக்கியம் என்று நினைப்பவர் இவர். ஆரோக்கியமற்ற அதே சமயத்தில் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் உணவுகளை நிச்சயம் தவிர்த்துவிடுவார்.


7
Soori ( Instagram )

சூரி

`ஹீரோக்கள் மட்டும்தான் உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்க வேண்டுமா? நாங்களும் வைப்போம்ல' என்று கதாநாயகர்களுக்கே டஃப் கொடுத்தவர் பரோட்டா சூரி. சூரியின் நெருங்கிய நண்பரான சிவகார்த்திகேயன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், `எட்டு மாத கடும் பயிற்சிக்குப் பிறகு சூரியின் சிக்ஸ் பேக்' என்ற கேப்ஷனோடு சூரியின் புகைப்படத்தையும் பதிவு செய்திருந்தார். இவரின் இந்த மாற்றத்தைக் கண்டு ரசிகர்கள் மட்டுமல்ல, பிரபலங்கள் பலரும் வியந்து பாராட்டினர். மேலும், உடற்பயிற்சி உடலுக்கு மிகவும் நல்லது. அனைவரும் உடற்பயிற்சி செய்யவேண்டும் என்று பொதுமக்களையும் வலியுறுத்தினார் சூரி. நகைச்சுவை நடிகர்களைக் கண்டு சிரிக்க மட்டுமே செய்த மக்கள் இவரின் மாற்றத்தைக் கண்டு பலரும் பாராட்டவும் செய்தனர்.


8
Surya ( Instagram )

சூர்யா

சிக்ஸ்-பேக் என்றால் நிச்சயம் சூர்யாவை விட்டுவிட முடியாது. தமிழ்நாட்டு மக்களுக்கு ஃபிட்னஸ் என்றால் சூர்யாதான் முன்னோடி. 2005-ம் ஆண்டு வெளிவந்த `கஜினி' திரைப்படத்துக்காக உடலைக் கட்டுக்கோப்பாக மாற்றினாலும், `வாரணம் ஆயிரம்', `சிங்கம்', `அஞ்சான்', `7 ஆம் அறிவு' போன்ற திரைப்படங்கள் மூலம்தான் அனைவரையும் கவர்ந்தார். ஜாகிங், நீச்சல், யோகா, காய்கறிகள் மற்றும் தண்ணீர் போன்றவைதான் இவரின் ஃபிட்னஸ் சீக்ரெட். மேலும், தன்னுடைய அன்றாட டயட்டில் மைதா, ஃபிரைடு உணவுகள் போன்றவற்றை முற்றிலும் தவிர்த்துவிடுவார். என்னதான் சிக்ஸ் பேக் வைத்து மக்கள் மனதில் ஃபிட்னஸ்ஸுக்கான விதையை விதைத்திருந்தாலும், நினைத்த உடல்வாகை எளிதில் கொண்டுவரும் `கிராஷ் டயட்டிங் (crash dieting)' போன்ற கடுமையான டயட்டை தவிர்ப்பது சிறந்தது என்று மக்களை வலியுறுத்துகிறார்.


9
Prabhas

பிரபாஸ்

இந்த டிகேடின் `ஃபிட்னஸ் ஃப்ரீக்' லிஸ்ட்டில் நிச்சயம் முதலிடத்தில் இருப்பவர் பாகுபலிதான். சாரி, `பாகுபலி' கதாபாத்திரத்தில் நடித்த பிரபாஸ்தான். மிகக் குறுகிய நாள்களில் மக்களின் ஃபேவரைட் பட்டியலில் இணைந்தவர் பிரபாஸ். சாதாரண உடலமைப்பு, நல்ல உயரம், 82 கிலோ எடை என்று சாமான்ய மனிதன்போல் இருந்தவர், `பாகுபலி' படத்துக்காக அதிகப்படியான கொழுப்பு நிறைந்த உணவுகளை உட்கொண்டு 20 கிலோ எடை அதிகரிக்கச் செய்தார். மேலும், கடுமையான உடற்பயிற்சிகளையும் மேற்கொண்டார். அப்போது, உடற்பயிற்சி உபகரணங்கள் மீது அதிகப்படியான ஈர்ப்பு ஏற்பட்டு, தன்னுடைய வீட்டையே சிறிய ஜிம்மாக மாற்றினார். WWF நிகழ்ச்சியின் தீவிர ரசிகரான இவர், மல்யுத்த வீரர்களின் டயட் மற்றும் உடற்பயிற்சியைத்தான் பெரும்பாலும் பின்பற்றுவாராம். அதுமட்டுமன்றி நினைத்ததை எல்லாம் ஒருபோதும் உட்கொள்ளவே மாட்டார். ஸ்ட்ரிக்ட் மற்றும் கட்டுப்பாடான டயட்டை பின்பற்றுவார். மேலும், சமீபத்தில் வெளியான `சாஹோ' திரைப்படத்துக்காக 10 கிலோ எடை குறைத்திருக்கிறார்.


10
Rana with his trainer ( Instagram )

ராணா டகுபதி

மாவீரனான பாகுபலியை எதிர்கொள்ள அவனைவிட பலசாலியான வில்லன் இருந்தால்தானே சுவாரஸ்யம். அப்படிப்பட்ட கதாபாத்திரத்துக்கு ராணாவைத் தவிர வேறு ஆப்ஷனே இருந்திருக்க முடியாது. அதற்கு முதன்மை காரணம், ராணாவின் தோற்றம். பொதுவாகவே ஃபிட்னஸ் மீது எந்தக் கவலையுமில்லாமல் இருந்த ராணாவுக்கு, ஜிம் பக்கம் தலைகாட்டத் தூண்டியது அவரின் திரைப்படங்களே. அதிலும், `பாகுபலி' திரைப்படத்துக்காக ஐந்து ஆண்டுகள் உடற்பயிற்சி மேற்கொண்டுள்ளார். இத்திரைப்படத்தின் பல்வாள்தேவா கதாபாத்திரத்துக்காக 25 கிலோ எடையை அதிகரிக்கச் செய்துள்ளார். அதன் கடுமையான வொர்க்-அவுட் காணொளியை சமூக வலைதளங்களில் பதிவேற்றமும் செய்திருந்தார் ராணா.

``இந்த உடல் எடை அவ்வளவு எளிதில் கூடியதல்ல. ராணா போன்று உடல் எடை அதிகரிக்க வேண்டுமென்றால், பொறுமை அவசியம். இரண்டு மாதங்களில் உடலமைப்பு பெற்றுவிட முடியும் என்ற எண்ணத்தை முதலில் அனைவரும் மாற்ற வேண்டும். ஏனென்றால், ஜிம் போக வேண்டும் என்ற பழக்கம் வருவதற்கே சில மாதங்கள் தேவைப்படும்" என்று பேட்டி ஒன்றில் குறிப்பிட்டிருக்கிறார் ராணாவின் பெர்சனல் ட்ரெயினர் குணால்.

எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல், அஜித், விஜய் என ஒவ்வொருவரின் செயல்பாடுகள், ஸ்டைல் என அத்தனையையும் ரசித்து அவற்றைப் பின்பற்றியவர்கள், தற்போது ஃபிட்னஸ் விஷயங்களையும் கவனித்துப் பின்பற்றி வருகின்றனர்.