Published:Updated:

மோடி விராட் கோலியிடம் குறிப்பிட்ட `யோ-யோ டெஸ்ட்' என்பது என்ன... யாரெல்லாம் செய்யலாம்?

yo-yo test
yo-yo test

இந்த யோ-யோ டெஸ்ட்டை விளையாட்டு வீரர்கள் மட்டுமல்லாமல் தங்கள் ஃபிட்னஸ்ஸை சோதித்துப் பார்க்க விரும்பும் மற்றவர்களும் செய்துகொள்ளலாம்.

பிரதமர் மோடி சமீபத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியிடம் ஃபிட்னஸ் குறித்து வீடியோ காலில் உரையாடினார். `ஃபிட் இந்தியா' இயக்கம் தொடங்கப்பட்டு ஓராண்டு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, அதைக் கொண்டாடும் விதமாக இந்த உரையாடல் மேற்கொள்ளப்பட்டது.

virat kohli - modi
virat kohli - modi

இதில் கலந்துகொண்ட விராட், ``ஃபிட்னஸ்ஸில் கவனம் செலுத்தத் தொடங்கிய பிறகுதான் என் பேட்டிங்கில் முன்னேற்றம் ஏற்பட்டது. கிரிக்கெட்டுக்கான வலைப்பயிற்சியைவிட, உடற்பயிற்சிதான் முக்கியம். அதைத் தவறவிட்டால் போட்டியில் ஏமாற்றம்தான் கிடைக்கும். வெறும் திறமையை மட்டும் நம்பியிருக்கக் கூடாது. ஃபிட்னஸ்ஸுக்கும் அதிக முக்கியத்துவம் தர வேண்டும்" என்று கூறினார்.

அப்போது விராட்டிடம், ``யோ-யோ டெஸ்ட் என்றால் என்ன? நீங்கள் அதைச் செய்துள்ளீர்களா?" என்று பிரதமர் கேட்டதற்கு, ``கிரிக்கெட்டில் அணிகளைத் தேர்வு செய்யும்போது இந்த யோ- யோ டெஸ்ட் நடத்தப்படும். இது ஓட்டம் உள்ளிட்ட கடின பயிற்சிகளை உள்ளடக்கியது. நான் எப்போதும் இந்த டெஸ்ட்டில் முதல் ஆளாக வருவேன். இதில் தேறவில்லை என்றால் அணியில் இடம்பிடிக்க முடியாது" என்று கூறினார்.

பிரதமர் மோடி - விராட் கோலி இடையேயான உரையாடலில் குறிப்பிடப்படும் `யோ-யோ டெஸ்ட்' கிரிக்கெட், ஃபுட்பால் போன்ற விளையாட்டுகளில், ஆட்களுக்கான அணித்தேர்வில் மேற்கொள்ளப்படும் ஒரு முக்கிய பரிசோதனை. விளையாட்டு வீரரின் `ஃபிட்னஸ்' அளவை பரிசோதிக்க இந்த டெஸ்ட் செய்யப்படுகிறது.

யோ யோ டெஸ்ட் என்றால் என்ன, அது எவ்வாறு மேற்கொள்ளப்படுகிறது... ஃபிட்னஸ் பயிற்சியாளரான கோகுல் சீனிவாசனிடம் பேசினோம்.

கோகுல் சீனிவாசன்
கோகுல் சீனிவாசன்

``டென்மார்க்கைச் சேர்ந்த உடலியல் நிபுணர் ஒருவரால் அறிமுகப்படுத்தப்பட்டதுதான் இந்த யோ-யோ டெஸ்ட். ஆரம்பத்தில் இது கால்பந்து விளையாட்டு வீரர்களின் ஃபிட்னஸ் அளவை சோதிக்கவே மேற்கொள்ளப்பட்டு வந்தது. ஏனெனில், ஃபுட்பால், கிரிக்கெட் போன்ற எந்தவொரு விளையாட்டையும் திறம்பட விளையாடி வெற்றிபெற ஃபிட்னஸ் அவசியம். அதிலும் ஃபுட்பாலில் ஏறக்குறைய 90 நிமிடங்கள் இடைவெளியின்றி முழு ஆற்றலுடன் போட்டியில் ஈடுபட வேண்டியது வரும். அதற்கு ஈடுகொடுக்க ஃபுட்பால் அணியில் உள்ள வீரர்களுக்கு உடல்தகுதி முக்கியமானதாகக் கருதப்பட்டதால் அவர்களுக்குத்தான் ஆரம்பத்தில் யோ-யோ டெஸ்ட் மேற்கொள்ளப்பட்டு வந்தது.

அதன் பிறகு, நாளடைவில் கிரிக்கெட் போட்டிக்கும் இந்த டெஸ்ட் கொண்டுவரப்பட்டது. குறிப்பாக, கிரிக்கெட்டில் டி-20 போட்டிகள் வந்த பிறகே, யோ-யோ டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகமாக மேற்கொள்ளப்படுகிறது. இன்டர்நேஷனல் கிரிக்கெட் அணி தேர்வின்போது யோ-யோ டெஸ்ட் முக்கிய இடம் வகிக்கிறது. இந்த டெஸ்ட்டில் தேறினால் மட்டுமே அந்த வீரர் அணியில் சேர்த்துக்கொள்ளப்படுவார்.

football
football

யோ-யோ டெஸ்ட் எவ்வாறு மேற்கொள்ளப்படுகிறது?

யோ-யோ இன்டெர்மிட்டன்ட் ரெக்கவரி டெஸ்ட் (Yo-Yo Intermittent Recovery Test) என்பதே தற்போது கிரிக்கெட் அணித்தேர்வுகளில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது பல்வேறு கட்டங்களை உள்ளடக்கியது. 20 மீட்டர் நீளமுள்ள இடத்தைத் தேர்வுசெய்து, 20 மீட்டரின் தொடக்கத்தை ஆரம்ப புள்ளியாகவும், அதன் இறுதியை முடிவு புள்ளியாகவும் குறித்துக்கொள்வார்கள். யோ-யோ டெஸ்ட்டில் பங்குபெறும் வீரர் இந்த 20 மீட்டரின் ஆரம்ப மற்றும் முடிவு புள்ளிகளை ஓடிச்சென்று மாறி, மாறி தொட்டு வர வேண்டும். 40 விநாடிகளில் எத்தனை முறை அந்த இரண்டு புள்ளிகளையும் தொட்டு வர முடிகிறது என்பதைப் பொறுத்து அதில் கலந்துகொண்ட வீரருக்கு மதிப்பெண்கள் வழங்கப்படும். முதல் லெவலில் அந்த வீரர் 8 கிலோ மீட்டர் வேகத்தில் ஓட வேண்டியது இருக்கும். அடுத்த லெவலில் 11.5 கிலோமீட்டராக வேகம் அதிகரிக்கப்படும். இதுபோல் மொத்தம் 23 லெவல்கள் உள்ளன. ஒவ்வொரு லெவலுக்கும் வீரரின் ஓடும் வேகம் அதிகரிக்கப்படும். இந்த 23 கட்டங்கள் ஒவ்வொன்றும் 40 நிமிடங்கள் நடைபெறும். ஒவ்வொரு கட்டத்துக்கும் இடையே அந்த வீரருக்கு 10 விநாடிகள் ஓய்வு வழங்கப்படும்.

பரவும் கோவிட்-19 நோய்த்தொற்று... ஜிம்முக்கு செல்வோர் கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்!

இந்த டெஸ்ட்டில் கலந்துகொள்ளும் வீரர் இதில் பெறக்கூடிய மதிப்பெண்களின் அடிப்படையில், அவர் இதில் வெற்றி பெற்றாரா அல்லது தோல்வியுற்றாரா என்பது நிர்ணயிக்கப்படும். சிலர் 23 லெவல்களையும் தாண்டிவிடுவார்கள். சிலர் 15, 16 லெவல்களிலேயே தங்களால் முடியவில்லை என்று நிறுத்திக்கொள்வார்கள். அது ஒவ்வொருவரின் ஃபிட்னஸ்ஸை பொறுத்தது. கிரிக்கெட்டில் ஆண், பெண் இரண்டு அணியினருக்கும் இந்த டெஸ்ட் மேற்கொள்ளப்படுகிறது.

cricket team
cricket team

யோ-யோ டெஸ்ட்டில் கலந்துகொள்ளும் ஒரு வீரர் அதில் தேறாமல் போகும் பட்சத்தில் அவருக்கு மேலும் இரண்டு முறை வாய்ப்புகள் தரப்படும். அவற்றில் வெற்றிபெற்றுவிட்டால் அவர் அணியில் இடம்பிடித்துவிடலாம். அதிலும் வெற்றிபெறவில்லை என்றால் அவர் அணியில் சேர்த்துக்கொள்ளப்பட மாட்டார். யோ-யோ டெஸ்ட் எடுக்கப்படும் நான்கு நாள்களுக்கு முன்பிருந்தே அதற்காகத் தயாராக வேண்டும். மது அருந்தியிருக்கக் கூடாது. யோ-யோ டெஸ்ட் எடுக்கப்படும் நேரத்துக்கு முன் நான்கு மணி நேரம் வரை எதுவும் சாப்பிடக் கூடாது. நான்கு மணி நேரத்துக்கு முன்பே கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். உடல் நீர்ச்சத்தை இழக்காமல் (Dihydrate) இருக்க அதிகம் தண்ணீர் குடிக்க வேண்டும். யோ-யோ டெஸ்ட் டெஸ்ட்டுக்கு செல்வதற்கு முன்பு ரன்னிங், ஜாகிங் போன்ற எளிய உடற்பயிற்சிகளைச் செய்தாக வேண்டும்.

இந்த யோ-யோ டெஸ்ட்டை விளையாட்டு வீரர்கள் மட்டுமல்லாமல் தங்கள் ஃபிட்னஸ்ஸை சோதித்துப் பார்க்க விரும்பும் மற்றவர்களும் செய்துகொள்ளலாம். இந்தப் பரிசோதனையை எப்படிச் செய்ய வேண்டும் என்ற வழிகாட்டுதலை ஃபிட்னஸ் பயிற்சியாளரிடமோ, உடலியல் நிபுணரிடமோ பெற்றுக்கொள்ளலாம்" என்றார் கோகுல் சீனிவாசன்.

அடுத்த கட்டுரைக்கு