``என் ஆரோக்கியத்துக்கு அஸ்திவாரம் போட்ட ஆந்திரா!’’ - 95 வயதிலும் அசத்தும் டாக்டர் ஹெச்.வி. ஹண்டே

வீட்டுக்கு வந்தா, சூடா கஞ்சி காய்ச்சி வெச்சிருப்பாங்க. கைக்குத்தல் அரிசியில் செய்த கஞ்சி. அதை ஒரு கிண்ணத்தில் கொட்டி, அதுக்கு மேலே சூடா ஒரு ஸ்பூன் நெய்யை அம்மா ஊத்துவாங்க.
சென்னை, அமைந்தகரையில்தான் நிறுவியிருக்கும் `ஹண்டே மருத்துவமனை'க்கு தினமும் பணிக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டவர் டாக்டர் ஹண்டே. எம்.ஜி.ஆரின் அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர். இந்த 95 வயதிலும் நேரம் தவறாமையைக் கடைப்பிடிக்கும் ஹண்டே, தற்போதைய ஆற்றலுக்கான அஸ்திவாரத்தை இளமைக்கால நினைவுகளுடன் பகிர்கிறார்.
``நான், 1927-ம் வருஷம் நவம்பர் 11-ம் தேதி பிறந்தேன். என்கூட பிறந்தவங்க பத்துப் பேர். நான் மூணாவது. குழந்தைங்க எங்கேயிருக்காங்கன்னு வீட்டுல இருக்கறவங்க பெரிசா கவலைப்பட மாட்டாங்க. படிக்கிறப்ப எங்க வாத்தியார் காலையிலே ஏழரை மணிக்கெல்லாம் ஸ்கூலுக்கு வரச் சொல்லிடுவார். தெருவுல நடந்து போகிறபோது வழியில இருக்கும் வீட்டுப் பசங்களுக்கெல்லாம் குரல் கொடுத்துக்கிட்டே போவோம். அம்பது பேர் ஒண்ணா சேருவோம். ஸ்கூல் கிரவுண்டுல கொஞ்சம் நேரம் ஓடிட்டு பஸ்கி, தண்டால் எடுக்கச் சொல்வார். நான் நல்லா பஸ்கி எடுப்பேன். தண்டால் எடுக்கறதுல கொஞ்சம் வீக். அன்னிக்கு அப்படி எடுத்த பயிற்சிகள்தான் இன்னிக்கும் என் கால்கள் பலமிழக்காமல், யார் தயவும் இல்லாமல் நடக்க வைக்குது.

அடுத்து ஆசனங்கள்... பலவித ஆசனப் பயிற்சிகள். சிரசாசனம் செய்யுறதுக்கு முதல்ல கஷ்டப்பட்டேன். அதுக்கப்புறம் அதுவே தன்னால வந்துடுச்சு. அந்த சிரசாசனம் தந்த பலனாலதான் இன்னிக்கும் என் மூளை நல்லா வேலை செய்துன்னு நினைக்கிறேன். இதெல்லாம் முடிய ஒரு மணி நேரம் ஆயிடும். வீட்டுக்குக் கிளம்பறப்ப எட்டு, பத்துப் பேர் ஒண்ணா சேருவோம். அங்கிருந்து ஒரு மைல் தொலைவில இருக்கிற ஏரிக்குப் போய்... கரையில இருக்கிற மரங்களோட கிளையைப் பிடிச்சுட்டு தண்ணியில குதிச்சு விளையாடுவோம்... பசிக்கத் தொடங்கிடும்.
வீட்டுக்கு வந்தா, சூடா கஞ்சி காய்ச்சி வெச்சிருப்பாங்க. கைக்குத்தல் அரிசியில் செய்த கஞ்சி. அதை ஒரு கிண்ணத்தில் கொட்டி, அதுக்கு மேலே சூடா ஒரு ஸ்பூன் நெய்யை அம்மா ஊத்துவாங்க. பசி அடங்காது. இன்னொரு கிண்ணம் கஞ்சி தருவாங்க. அதுக்கு மேலே கொஞ்சூண்டு தயிர் போடுவாங்க. எப்போதாவதுதான் இட்லி, தோசை சுடுவாங்க.
11 மணிக்குதான் ஸ்கூல். நான் சொல்றதெல்லாம் 1936, 37-ல நடந்தது. வெள்ளைக்காரன் ஆட்சியில கண்டிப்போடு ஒழுக்கமும் இருக்கும். எல்லாரோடவும் பாசமா பழகுவோம். அன்பா பேசுவோம். என் அண்ணனோடு அன்சாரின்னு ஒருத்தன் படிச்சான். எங்கம்மா வைக்கிற சாம்பார் சாதம் அவனுக்கு ரொம்பப் பிடிக்கும். சாப்பிடற நேரத்துக்கு எங்க
ளோடவே வீட்டுக்கு வந்துடுவான். எங்களுக்குக் கொடுக்கற மாதிரியே சாதத்துல சாம்பாரை ஊத்தி நல்லா பிசைஞ்சு எங்கம்மா அவனுக்கும் கொடுப்பாங்க. ஒண்ணுக்கொண்ணா வாழ்ந்தோம்... ஒத்துமையா இருந்தோம்.

சத்தான உணவு, முறையான உடற்பயிற்சி, எளிமையான வாழ்க்கை முறை... இந்த மூணும்தான் நம்ம வாழ்க்கைத் தரத்தையும் வயசையும் அதிகப்படுத்துது. இதுக்கு அஸ்திவாரம் போட்டது ஆந்திராவிலுள்ள பெனுகொண்டா கிராமம். ஆறு வருஷங்கள் அங்கேதான் இருந்தோம்.
சட்டமன்ற உறுப்பினரானபோது சூழ்நிலைக்கேற்ப சில மாற்று ஏற்பாடுகளைச் செய்து, என் லைஃப் ஸ்டைலை மாத்திக்கிட்டேன். ஆனா, உடற்பயிற்சி, நடைப்பயிற்சி செய்யறதை மட்டும் மாத்திக்கலை. மினிஸ்டரா இருந்தப்ப குறிப்பிட்ட நேரத்துல, குறிப்பிட்ட இடத்துலதான் வாக்கிங் போவேன்னு தெரிஞ்சுகிட்டு நிறைய பேர் என்னோடு நடந்துகிட்டே அவங்களோட தேவைகளை நிறைவேத்திப்பாங்க.
இப்பவும் சாயந்தரம் 20 நிமிஷம் நடக்கறேன். ஆசனங்கள் செய்ய முடியலை. காலை நேரத்தில எளிய உடற்பயிற்சிகளை மட்டும் செய்றேன். அன்னிக்கும் சரி... இன்னிக்கும் சரி... காலையில டிபன் சாப்பிட்டா மதியம் வரை எதுவும் சாப்பிட மாட்டேன். மத்தியானம் அளவான சத்தான உணவு, சாயந்தரம் சர்க்கரை இல்லாமல் அரை கிளாஸ் பால். அது போதும் எனக்கு'' என்று சிரிக்கிறார் ஹண்டே.