லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
Published:Updated:

கண்கள் முதல் கல்லீரல் வரை... உடலுறுப்புகளுக்கும் ஓய்வு அவசியமா?

மூளை
பிரீமியம் ஸ்டோரி
News
மூளை

கம்ப்யூட்டர், கேட்ஜெட்ஸ் இல்லாத நபர் களைப் பார்ப்பதே அரிது இன்று. குறைந்தது 8 மணி நேரம் வரை கம்ப்யூட்டரிலோ லேப் டாப்பிலோ பணியாற்ற வேண்டி உள்ளது

ஓய்வறியாமல் உழைப்பவர்கள் என்று சிலரைக் குறிப்பிடுவோம். உண்மையில் ஓய்வில்லாமல் ஒருவரால் தொடர்ந்து இயங்க முடியாது. உடலுக்கு 6 முதல் 8 மணி நேரம் ஓய்வு, உறக்கம் அவசியம். முக்கிய உடல் உறுப்புகளுக்கும் ஓய்வு தேவையா என்று துறைசார் மருத்துவர்கள் விளக்குகிறார்கள்.

கண்
கண்

கண்கள் - எஸ்.சௌந்தரி, கண் மருத்துவர்

கம்ப்யூட்டர், கேட்ஜெட்ஸ் இல்லாத நபர் களைப் பார்ப்பதே அரிது இன்று. குறைந்தது 8 மணி நேரம் வரை கம்ப்யூட்டரிலோ லேப் டாப்பிலோ பணியாற்ற வேண்டி உள்ளது. இதனால் கண்கள் வறண்டு போகும். இதைத் தவிர்க்க கண்களுக்கு சற்று ஓய்வு கொடுக்க வேண்டும். அதாவது 20-20-20 என்ற விதிமுறையைப் பின்பற்ற வேண்டும். 20 நிமிடங்களுக்கு ஒருமுறை கண்களைத் திரையிலிருந்து விலக்கி 20 மீட்டர் தூரத்தில் உள்ள காட்சிகளை 20 விநாடிகள் பார்த்துவிட்டு மீண்டும் பணியைத் தொடர வேண்டும். இதனால் கண்களுக்கு ஏற்படும் சிரமம் குறையும்.

காது
காது
 எஸ்.சௌந்தரி,  கே.என். சங்கர்,  திலிப் சந்த் ராஜா,  சுபா சுப்ரமணியன்
எஸ்.சௌந்தரி, கே.என். சங்கர், திலிப் சந்த் ராஜா, சுபா சுப்ரமணியன்

காது - கே.என்.சங்கர், காது மூக்கு தொண்டை மருத்துவர்

மணிக்கணக்கில் போன் பேசுவது, ஹெட்போன் மாட்டிக்கொண்டு வேலை பார்ப்பது, படம் பார்ப்பது போன்றவற்றைத் தவிர்த்து காதுகளுக்கு ஓய்வுகொடுக்க வேண்டும். போனில் 5-7 நிமிடங்கள் வரை பேசலாம். ஹெட்போன்களை 20 நிமிடங்கள் வரை பயன்படுத்தலாம். ஹெட்போன் அணிந்து வேலை பார்ப்பவர்கள் 20 நிமிடங்களுக்கு ஒருமுறை காதுகளுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு மீண்டும் பணியாற்றலாம். போன், ஹெட்போன் பயன்படுத்துவதை விட `லௌடு ஸ்பீக்கர்' பயன்படுத்தலாம். காதுகள் தொடர்ந்து அதிக சத்தத்துக்கு வெளிப்பட்டால் செவித்திறன் குறையும்.

தண்டுவடம்
தண்டுவடம்

தண்டுவடம் - திலிப் சந்த் ராஜா, தண்டுவட அறுவை சிகிச்சை மருத்துவர்

படுத்த நிலையில் 25%, நிற்கும்போது 100%, உட்காரும் நிலையில் 140%, முன்னோக்கி சாய்ந்த நிலையில் உட்காரும்போது 190% என நம் உடலின் ஒவ்வொரு நிலைக்கும் தகுந்தாற்போல் முதுகுத் தண்டவத் துக்கு அழுத்தம் ஏற்படும். சரியான நிலையில் உட்காராமல் தொடர்ந்து பணியாற்றும்போது கழுத்து மற்றும் முதுகுவலி ஏற்படும். தண்டுவடத்திலுள்ள டிஸ்க்கில் அழுத்தம் ஏற்படும். படுத்த நிலையில் இருக்கும்போதுதான் தண்டுவடத்துக்கு குறைவான அழுத்தம் ஏற்படும். சரியான நிலையில் சரியான நாற்காலியில் அமர்ந்து பணியாற்றுவது, உடற் பயிற்சி, ஊட்டச்சத்துள்ள உணவுகள், தசைகளில் ஏற்படும் சோர்வை நீக்குவதற்கான ஸ்ட்ரெச்சிங் உடற் பயிற்சி இவற்றைப் பின்பற்றி இரவு 6 முதல் 8 மணி நேரம் தூங்கினாலே தண்டுவடத்துக்கு போதுமான ஓய்வு கிடைத்துவிடும்.

மூளை
மூளை

மூளை - சுபா சுப்ரமணியன், நரம்பியல் மருத்துவர்

ஒரு விஷயத்தில், வேலையில் கவனம் செலுத்த முடியாத நிலை, அழுத்தமாக உணர்வது, சோர்வான மனநிலை இவையெல்லாம் மூளைக்கு ஓய்வு கொடுக்க வேண்டும் என்பதை மறை முகமாக உணர்த்தும் விஷயங்கள். அந்த நேரத்தில் சிறிய பிரேக் எடுத்து விட்டு ரிலாக்ஸ் செய்யலாம். தூக்கமும் மூளைக்கான ஒருவகை ஓய்வு. தூங்கும்போது ஆழ் மனதில் (Subconscious mind) பல்வேறு செயல்பாடுகள் நடைபெற்றுக்கொண்டேதான் இருக்கும். ஆனால், நமது மனது (Conscious mind) அதை உணராது. தூக்கத்தின் போது மூளை சற்று புத்துணர்வு அடையும்.

ஜீரண மண்டல
ஜீரண மண்டல
 கவிதா சம்பத்குமார்,  தேஜஸ்வி என்.மார்லா,  கோகுல்ராஜ் தனராஜன்,  பிரவீன்குமார்,  சுகி சுப்ரமணி
கவிதா சம்பத்குமார், தேஜஸ்வி என்.மார்லா, கோகுல்ராஜ் தனராஜன், பிரவீன்குமார், சுகி சுப்ரமணி

ஜீரண மண்டலம் - கவிதா சம்பத்குமார், இரைப்பை - குடல் சிகிச்சை மருத்துவர்

திரவ உணவுகள் உடலிலிருந்து 2 மணி நேரத்தில் வெளியேறி விடும். திட உணவுகள் வயிற்றிலிருந்து சிறுகுடலுக்குச் செல்வதற்கு 4 மணி நேரம் ஆகும். ஜீரண மண்டலத்திலிருந்து முழுவதுமாக வெளியேற 48 - 72 மணி நேரம் வரை ஆகலாம். இரவு நேர உறக்கத்தின்போது ஜீரண மண்டலம் சற்று ஓய்வாக இருந்து மெதுவாக தன் வேலையைச் செய்யும். இரவு உறக்கத்தின்போது வாய் முதல் ஆசனவாய் வரை ஒரு மின் அலை மெதுவாக நகர்ந்துகொண்டே இருக்கும். இது அந்தப் பாதையில் ஒட்டியிருக்கும் உணவுத் துணுக்குகளைத் தள்ளிக்கொண்டு வந்து பெருங்குடலில் சேர்த்து, காலையில் மலமாக வெளியேற்றும். சரியான உறக்கம் இல்லையென்றால் இந்தச் செயல்பாடு பாதிக்கப்பட்டு ஜீரண சக்தி குறையும். இதனால் நெஞ்சரிச்சல், புளித்த ஏப்பம், வயிற்றில் புண் எனப் பல பிரச்னைகள் உருவாகலாம். உறக்கமே ஓய்வுதான் என்றாலும் சாப்பிட்டவுடன் தூங்கினால் ஜீரண மண்டலத்தின் செயல்பாடு தாமதமாகும். சாப்பிட்டு 2 மணி நேரத்துக்குப் பிறகு தூங்கலாம்.

இதயம்
இதயம்

இதயம் - தேஜஸ்வி என்.மார்லா, இதயநோய் சிகிச்சை மருத்துவர்

ஆரோக்கியமான ஒருவருக்கு ஒரு நிமிடத்துக்கு 72 முதல் 80 முறை இதயம் துடிக்கும். தூங்கும்போது இதயத்துடிப்பு ஒரு நிமிடத்துக்கு 55-60 வரைதான் இருக்கும். நமது இதயத்தில் ஒரு நிமிடத்தில் சுமார் 250 மில்லி ரத்தம் சுத்திகரிக்கப்படும். அப்போது அதிலிருக்கும் நச்சுகள், கால்சியம் போன்றவை ரத்தக்குழாய்களில் படியும். இதயம் வேகமாகத் துடிக்கும்போது ரத்த ஓட்டமும் வேகமாக இருக்கும். இதனால் நச்சுகள் படியும் தன்மையும் அதிகரிக்கும். அதுதான் ஒருகட்டத்தில் இதய ரத்தக்குழாய் அடைப்பாக மாறுகிறது. இதயத்துடிப்பு குறைவாக இருந்தால் பயன்பாடும் குறைவாக இருக்கும். நாம் தூங்கும்போது இதயம் உள்ளிட்ட உடலுறுப்புகள் அனைத்தும் குறைவான அளவு வேலை பார்க்கும். அப்போது உடலிலுள்ள நச்சுகள் வெளியேறி உடல் சுத்தமாகும். முறையாகத் தூங்காவிட்டால் உடலிலுள்ள நச்சுகள் வெளியேறுவது தடைப்பட்டு வாழ்வியல் சார்ந்த நோய்களுக்கு வழிவகுக்கும்.

கை கால்கள்
கை கால்கள்

கை கால்கள் - கோகுல்ராஜ் தனராஜன், முடநீக்கியல் மருத்துவர்

எலும்பு, மூட்டு, தசை ஆகிய மூன்றும் இணைந் தவைதான் கைகளும் கால்களும். எலும்பு, மூட்டு, தசை என அனைத்தும் வேலை செய்துகொண்டே இருக்க வேண்டும். உடல் உழைப்பு, உடற்பயிற்சி மூலம் அவை வேலை செய்துகொண்டே இருந்தால் தான் ஆரோக்கியமாக இருக்கும். அதீத உடல் உழைப்பில் ஈடுபட்டால் மூட்டுகளில், எலும்புகளில் வலி ஏற்படும். விளையாட்டு வீரர்களுக்கு, திடீரென்று உடற்பயிற்சியில் ஈடுபடுபவர்களுக்கு இதுபோன்ற பிரச்னைகள் வரலாம்.

சிறுநீரகம்
சிறுநீரகம்

சிறுநீரகம் - பிரவீன்குமார், சிறுநீரக அறுவை சிகிச்சை மருத்துவர்

இதயத்தைப் போன்றே சிறுநீரகமும் 24 மணி நேரமும் ரத்தத்தை சுத்திகரித்து அதிலிருக்கும் கழிவுகளை வெளியேற்றும். ஒரு நிமிடத்துக்கு 125 மில்லி ரத்தம் சுத்திகரிக்கப்படும். சிறுநீரகத்தின் வேலைப்பளுவைக் குறைப்பதே அதற்கான ஓய்வு. ஒருநாளைக்கு 2 லிட்டருக்கும் குறைவாக தண்ணீர் குடிக்கக் கூடாது. அதிக உப்பு சேர்த்த உணவுகள், வலி நிவாரண மாத்திரைகள் அதிகம் எடுத்துக்கொள்வது போன்றவை சிறுநீரகத்தின் வேலைப்பளுவை அதிகரிக்கும். ஒருநாளைக்கு 3 கிராம் உப்பு மட்டும் சேர்த்தால் சிறுநீரகத்தின் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். இரவு உணவு, தண்ணீர் குடிப்பது ஆகியவற்றை 8.30 மணிக்குள் நிறுத்திக்கொண்டால் நல்லது.

கல்லீரல், கணையம்
கல்லீரல், கணையம்

கல்லீரல், கணையம் - சுகி சுப்ரமணி, கல்லீரல் நோய் மருத்துவர்

கல்லீரல், கணையம், பித்தக்குழாய் மூன்று ஒரே யூனிட்டாக வேலை செய்யும். ஒன்றை ஒன்று சார்ந்தே இயங்கும். ஓய்வு, புரத உற்பத்தி, ரத்தம் உறைவதற்கான காரணி களை உருவாக்குவது, நோய் எதிர்ப்பு சக்தி, செரிமானமாகும் உணவில் இருக்கும் நச்சுப்பொருள்களை வடிகட்டுவது, இன்சுலின் உள்ளிட்ட சில ஹார்மோன்களை உற்பத்தி செய்வது என 500-க்கும் அதிகமான வேலைகளைச் செய்கிறது கல்லீரல். உணவிலிருக்கும் கார்போ ஹைட்ரேட், புரதம் போன்றவற்றைப் பிரித்தெடுப்பதற்கு என்சைம்களை (pancreatic juice) உருவாக்கும் பணியைக் கணையம் செய்யும். கணையத்தின் வேலைப்பளுவைக் குறைப்பதுதான் அதற்கான ஓய்வு.

மது அருந்துதல், ஓவர் டோஸ் மருந்துகள், தேவையற்ற மருந்துகளை உட்கொள்ளுதல், உடலில் கொழுப்பு அதிகம் சேர்வது போன்ற செயல்பாடுகளால் வழக்கத்துக்கு அதிகமான நச்சுகளை வெளியேற்ற கல்லீரல் கூடுதலாக வேலை செய்யும். இதுபோன்ற செயல்களைத் தவிர்த்தாலே போதுமானது.

கண்கள் முதல் கல்லீரல் வரை... உடலுறுப்புகளுக்கும் ஓய்வு அவசியமா?

உடற்பயிற்சி, சரிவிகித உணவுகள், 6-8 மணி நேர தூக்கம், ஆரோக்கிய வாழ்க்கை முறை ஆகியவற்றைப் பின்பற்றினாலே உடலும், உடல் உறுப்புகளும் ஆரோக்கியமாக இருக்கும்.