"64 வயசுல தொடங்கிய மாரத்தான்... இப்போ 72, இன்னும் ஓடிட்டு இருக்கேன்" - `அயர்ன்மேன்' ஜெயராம் ராமசாமி!

முதுமைங்கிறது உடம்புக்கு மட்டும்தான், மனசுக்கு இல்ல. நிறைய பயிற்சி எடுத்திருக்கேன். சிறப்பா பெர்ஃபார்ம் பண்ணுவேன்னு நம்பிக்கை இருக்கு. போட்டிகள்ல கலந்துக்கிறதவிட உடலை ஆரோக்கியமா வெச்சுக்கிறது ரொம்ப முக்கியம்.
மாரத்தான் போட்டிகளிலேயே கடுமையானதாகக் கருதப்படும் 'அயர்ன்மேன் 70.3' போட்டிக்குத் தேர்வாகியுள்ளார், சென்னையைச் சேர்ந்த 72 வயதாகும் ஜெயராம் ராமசாமி. இந்த டிரையத்லான் போட்டி, வரும் அக்டோபர் 20-ம் தேதி கோவாவில் நடைபெற இருக்கிறது.

`அயர்ன்மேன் போட்டி’ என்பது முதலில் நான்கு கிலோமீட்டருக்கு நீச்சல், அடுத்து 180 கிலோமீட்டருக்கு சைக்கிளிங், தொடர்ந்து 42 கிலோமீட்டருக்கு ஓட்டம் என மாரத்தான் வகைகளிலேயே கடுமையானது.
ஓய்வுபெற்ற இன்ஜீனியரான ஜெயராம் ராமசாமி, தனது இளைய மகளைப் பார்த்துதான் மாரத்தான் ஓட்டத்தில் ஆர்வம் வந்ததாகச் சொல்கிறார். "இந்த வயசுல மாரத்தானான்னு கேட்காத ஆளில்ல. ஆனாலும், 64 வயசுல ஓட ஆரம்பிச்சேன். இப்போ 72, இன்னும் ஓடிட்டு இருக்கேன்" என்பவர், உலகம் முழுக்க பல மாரத்தான் போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.

5 கிலோமீட்டர் நடைப்பயிற்சி, ஒரு கிலோமீட்டர் ஜாகிங் எனத் தினமும் காலை 5 மணிக்கெல்லாம் பயிற்சி ஆரம்பித்துவிடுகிறார் இந்த அயர்ன்மேன். "அயர்ன்மேன் போட்டிக்குத் தயாராவது சவாலான விஷயம். 2016-ம் ஆண்டு கலந்துகிட்ட டிரையத்லான் போட்டிக்குப் பிறகு இப்பதான் பங்கேற்கிறேன். இந்த மூன்று ஆண்டுகால இடைவெளியில, உடல்ரீதியாவும் மனரீதியாவும் நிறைய மாற்றங்கள்... முதுமைங்கிறது உடம்புக்கு மட்டும்தான், மனசுக்கு இல்ல. நிறைய பயிற்சி எடுத்திருக்கேன். சிறப்பா பெர்ஃபார்ம் பண்ணுவேன்னு நம்பிக்கை இருக்கு. போட்டிகள்ல கலந்துக்கிறதவிட, உடலை ஆரோக்கியமா வெச்சுக்கிறது ரொம்ப முக்கியம். சாக்குபோக்கு சொல்லி எஸ்கேப் ஆகாம, தினமும் உடற்பயிற்சி செய்வதை வழக்கமா வெச்சுக்கணும்" என்கிறார்.
அயர்ன்மேன் தாத்தா, போட்டியில் கலக்க வாழ்த்துகள்!