Published:Updated:

37 வயதில் சுகர்... 49 வயதில் மிஸ்டர் இந்தியா ரன்னர் அப்... பாலாவின் வாழ்க்கையை மாற்றிய மொமன்ட் எது?!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
மிஸ்டர் இந்தியா ரன்னர்-அப் பாலா
மிஸ்டர் இந்தியா ரன்னர்-அப் பாலா

''எனக்கு அப்போ 37 வயசு. கொஞ்சம் உடல்நலக் கோளாறுகள் இருந்தது. எனக்கு டயாபடீஸ் இருப்பது அப்போதான் தெரிஞ்சது. கொஞ்சமாவது உடற்பயிற்சி செய்யுங்க. அது ரொம்ப நல்லதுன்னு மருத்துவர் அட்வைஸ். கொஞ்சமா ஆரம்பிச்சது அப்படியே பேஷனா மாறிடுச்சு!''

முதல் இன்னிங்ஸில் எப்படியெல்லாம் விளையாடக்கூடாதோ, அப்படியெல்லாம் விளையாடி ஆல் அவுட் ஆனாலும், டெஸ்ட் கிரிக்கெட்டில் இரண்டாவது இன்னிங்ஸ் ஆட இன்னொரு வாய்ப்பு கிடைக்கும். முதல் இன்னிங்ஸில் செய்த தவற்றையெல்லாம் சரிசெய்து ஆட்டத்தில் வெற்றிபெறுவதற்கான இன்னொரு வாய்ப்பு அது.

இந்த இரண்டாவது இன்னிங்ஸ் கான்செப்ட் அப்படியே நம் வாழ்க்கைக்கும் வொர்க் அவுட் ஆகும். Life starts at 40 என்பார்கள். இந்த வயதில்தான் உடலிலும், மனதிலும் பிரச்னைகள் எட்டிப்பார்க்கும். அதையெல்லாம் சரிசெய்து இளமையை மீட்டெடுத்து மீண்டும் மாரத்தான் ஓடத் தயாராகுபவர்களே வெற்றியாளர்களாக மாறுகிறார்கள். அப்படி இரண்டாவது இன்னிங்ஸில் உடலையும், மனதையும் சரிசெய்து மாரத்தான் என்ன, மிஸ்டர் இந்தியாவே ஆவேன் என சாம்பியனாகியிருப்பவர்தான் பாலா.

சென்னையில் சாஃப்ட்வேர் நிறுவனம் ஒன்றில் வேலை செய்யும் இவர், சமீபத்தில் லூதியானாவில் நடைபெற்ற இந்தியன் பாடி பில்டர்ஸ் ஃபெடரேஷன் நடத்திய மிஸ்டர் இந்தியா போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றிருக்கிறார்.

37 வயதுக்குப் பிறகுதான் ஃபிட்னஸ் விஷயத்தில் பாலாவுக்கு ஆர்வம் வந்திருக்கிறது. அதனால் என்ன? நினைத்ததைச் செய்யவும், வாழ்க்கையை வெல்லவும் வயது எப்போதும் எதற்கும் தடையில்லை என அவர் நம்பினார். அவரின் நம்பிக்கை நிஜமாகியிருக்கிறது. ஊட்டச்சத்து உணவு, ஐடி வேலை, தினம் மூன்று வேலை உடற்பயிற்சி, குடும்பம் என எல்லாவற்றிலும் கூடுதல் கவனம் எடுத்து அனைத்தையும் பேலன்ஸ் செய்து பயணிக்கிறார் பாலா. வெற்றிக்கு வாழ்த்து சொல்லி அவரிடம் பேசினேன்.

பாடி பில்டர் பாலா
பாடி பில்டர் பாலா

எப்படி இருக்கிறது இந்த வெற்றி?

"என் 13 ஆண்டு கால தொடர் உழைப்பின் பலன் இது. நான் போட்டியிட்டது சீனியர்களுக்கான மாஸ்டர்ஸ் பிரிவில். என்னுடன் போட்டி போட்டவர்கள் எல்லோருமே மிகப்பெரிய லெஜெண்ட்ஸ், முன்னாள் சாம்பியன்ஸ். அவங்களை மாதிரி நூறு சாம்பியன்ஸுக்கு ட்ரெய்னிங் கொடுக்குற பயிற்சியாளர்கள் அவங்க. இப்படிப்பட்டவங்களோட போட்டிபோட்டு எல்லோரையும் தாண்டி நான் வெள்ளி பதக்கம் ஜெயிச்சதே எனக்கான பெரும் வெற்றிதான். பாடி பில்டிங் துறையின் ஜாம்பவான் பத்மஸ்ரீ பிரேம்சந்த் தெக்ரா கையில் பரிசு வாங்கியது மறக்கவே முடியாத தருணம். அதுவும் தமிழ்நாட்டிற்கு நாம ஒரு பதக்கம் வாங்கிட்டு வர்றோம் அப்படிங்குற ஃபீல் ரொம்ப ஸ்பெஷல். பஞ்சாப் மாநிலம் லூதியானாவில்தான் இந்த போட்டி நடந்தது. இந்தியா முழுக்க இருந்து பலர் கலந்துக்கிட்டாங்க. அதில் தமிழகத்திற்கு மொத்த மெடல் கணக்கில் இரண்டாவது இடம். நம்ம மாநிலத்தின் வெற்றியில் எனக்கும் பங்கு இருக்குங்குறதே பெருமைதான்.''

இந்த பயணம் எங்கே, எப்படித் தொடங்கியது?

"2007-ம் வருஷம். எனக்கு அப்போ 37 வயசு. கொஞ்சம் உடல்நல பிரச்னைகள் எட்டிப்பார்க்க ஆரம்பிச்சது. எனக்கு டயாபடீஸ் இருக்கிறது அப்போதான் தெரிஞ்சது. 'கொஞ்சமாவது உடற்பயிற்சி செய்யுங்க அது ரொம்ப நல்லது'ன்னு மருத்துவர் அட்வைஸ். அப்படி கொஞ்சமா தொடங்கிய ஃபிட்னஸ் வொர்க் அவுட் பேஷனா மாறிடுச்சு.

முதல்ல ரன்னிங், ஜிம்னு சாதாரணமான உடற்பயிற்சிகள் செஞ்சேன். கொஞ்சம் கொஞ்சமா என் உடல் என் கட்டுப்பாட்டுல வருதுனு உணர ஆரம்பிச்சேன். சுகர் உள்பட எல்லா பிரச்னையும் சரியாகி ஆரோக்கியமான வாழ்க்கை கிடைச்சது. சில மாதங்கள் கழிச்சு வெயிட் எல்லாம் தூக்க ஆரம்பிச்சதும் எனக்கே என்னைப் பிடிக்க ஆரம்பிச்சிடுச்சு. உள்ளுக்குள்ள செம சந்தோஷம். ஆரம்பத்துல ரொம்ப கஷ்டமா இருந்தது. ஆனா டயட், எக்ஸர்சைஸ்னு எல்லாம் செஞ்சு என் உடல் கட்டுக்கோப்பா மாறுறதைப் பார்த்ததும் அது எனக்கு நிறைய நம்பிக்கையையும் இன்னும் ஃபிட் ஆகணும்கிற லட்சியத்தையும் கொடுத்தது."

போட்டியில் பாலா
போட்டியில் பாலா

உங்களோட ஒருநாள் பிளான் சொல்லுங்க?!

''பாடி பில்டிங்ல பாதிதான் உடற்பயிற்சி. மீது நாம எடுத்துகிற உணவுலதான் இருக்கு. என்னுடைய உணவு விஷயத்துல நான் ரொம்பவே ஸ்ட்ரிக்ட். மனைவிக்கு சிரமம் இருக்கக்கூடாதுனு நான் ஒரு நியூட்ரிஷன் கம்பெனில இருந்துதான் சாப்பிடுறேன். சரியா மூணு வேலையும் உடலுக்கு எந்தெந்த ஊட்டச்சத்து தேவைனு தெரிஞ்சு அதற்கேற்ப தயாரிக்கப்பட்ட உணவுகளைதான் சாப்பிடுவேன். அதுல உப்பு இருக்காது, பெருசா சுவை இருக்காது. ஆனா சரியான ஊட்டச்சத்து இருக்கும். வயசு ஏற ஏற நம்ம உடற்கட்டு, தோல் தன்மை எல்லாம் மாறும். அதை இளமையிலே இருந்ததுபோல திரும்ப மீட்டெடுக்கலாம். அதுக்கு இப்படி உணவு, பயிற்சி எல்லாம் முக்கியம். உணவைத் தவிர்த்து, ஒரு நாளைக்கு மூணு வேளையும் பயிற்சியில் இருப்பேன். காலையும், மாலையும் ஒன்றரை மணி நேரம். மதியம் ஒரு மணி நேரம் ப்ராக்டிஸ். இப்படி எல்லாமே பாத்து பாத்து தான் செய்யுறேன்.''

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மதியமும் பயிற்சி என்றால் உங்கள் IT வேலை?!

குடும்பத்தினருடன் பாலா
குடும்பத்தினருடன் பாலா

"எல்லோரும் வொர்க் ஃப்ரம் ஹோம் பண்ற மாதிரி, நான் வொர்க் ஃப்ரம் ஜிம். கையோட லேப்டாப் எடுத்துட்டு வேளைக்கு கிளம்புற மாதிரி காலைல ஜிம்முக்கு போய்டுவேன். என்னோட ஜிம்ல எனக்கு நல்ல ஒத்துழைப்பு தராங்க. அங்க மேல ஒரு சின்ன ரூம் இருக்கும். அங்க உட்காந்து கால்ஸ் பேசுறது, மீட்டிங்ல கலந்துக்கிறதுனு வேலையை சரியா முடிச்சிடுவேன். என்கிட்ட ஒரு சின்ன டீம் வொர்க் பண்றாங்க. அவங்களுக்கும் எப்பவும் வேலைல சப்போர்ட் பண்றேன். வேலையில முழு ஈடுபாடு உண்டு. அதனாலதான் இந்த ஆண்டின் சிறந்த டீம் ஹெட் விருதையும் ஜெயிச்சிருக்கேன்."

40 ப்ளஸ் மனிதர்கள் அனைவருக்கும் இவரின் வெற்றி ஒரு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு