Published:Updated:

"ஜிம்முக்கு அனுப்புங்க; தம்மு, தண்ணியை விட்ருவாங்க!"- மிஸ்டர் வேர்ல்டு போட்டிக்குத் தேர்வான மேஸ்திரி

Body Builder Shrinivasan
Body Builder Shrinivasan

"ஏ.சி ரூம்ல செய்யுறது வொர்க் அவுட்டே கிடையாது. நாலு பயிற்சி செஞ்சாலும், உடம்பு நல்லா வேர்த்துக் கொட்டணும். சொகுசா பண்ணுனா எப்படி ஃபிட்னெஸ் கிடைக்கும்?...."

வேகமாகச் சுழன்றுகொண்டிருக்கும் இன்டர்நெட் யுகத்தில், உடல்நலத்தைப் பாதுகாக்க தனியே நேரம் ஒதுக்க வேண்டி உள்ளது பலருக்கும். அந்தச் சூழலைப் பயன்படுத்திக்கொள்ள, நகரத்தின் மூலை முடுக்குகளில் எல்லாம் ஜிம்கள் திறக்கப்பட்டுள்ளன. `ஏ.சி ஜிம்... வருடத்துக்கு 9,999 மட்டுமே; ஆறு மாதங்களுக்கு 3,999 கட்டினால் போதும்' போன்ற விளம்பரங்கள் கண்களைச் சீண்டுகின்றன. இன்னொரு பக்கம், ``நம்ம ஜிம்ல மாசக் கட்டணம் 300 ரூபாய்தான்மா'' என்று சிரிக்கிறார், கொரட்டூரைச் சேர்ந்த ஶ்ரீனிவாசன். மேஸ்திரியான இவர், ஃபிட்னெஸ் மீது கொண்ட ஆர்வத்தால், தன் சுயமுயற்சியில் `மிஸ்டர் வேர்ல்டு' போட்டிவரை சென்றிருப்பவர். பூசப்படாத சுவர், செங்கல் ஜன்னல்கள் என்றிருக்கும் இவருடைய `ஏழை ஃப்ரெண்ட்லி' ஜிம், பல இளைஞர்களை விளையாட்டுக் கோட்டாவில் அரசு வேலைக்கு அனுப்பிவைத்திருக்கிறது.

Shrinivasan's Gym centre
Shrinivasan's Gym centre
Nanda Kumar

கொரட்டூர் ரயில் நிலையத்துக்குப் பக்கத்தில் இருக்கிறது அந்த மஞ்சள் நிறப் பழைய கட்டடம். `ஆர்.கே ஜிம்' என்ற பெயர்ப் பலகை தவிர்த்து, விளம்பர வாசகங்கள் எதுவும் இல்லை. கூடவே, பச்சை நிற கேட்டிலும் `ஆர்.கே ஃபிட்னெஸ் சென்டர்' என்று எழுதப்பட்டிருக்கிறது. அதைத் திறந்துகொண்டு உள்ளே சென்றால், ஒரு வின்டேஜ் ஜிம் நம் கண் முன்னே. ஆடம்பர ஃபிட்னெஸ் கருவிகள் எதுவுமின்றி, மிகச் சாதாரணமான, ஆனால் வலிமையான பயிற்சிகளை உடலிடமிருந்து வாங்கும் கருவிகள் இருக்கின்றன அந்த அறையில். கடந்த 30 வருடங்களாக இதே எளிமை - வலிமை கூட்டணியில் இயங்கிவரும் இந்த ஜிம், பல பாடி பில்டர்களை உருவாக்கி மேடை ஏற்றியுள்ளது.

"தம், தண்ணி, மருந்துனு சுத்திட்டிருந்த புள்ளைங்க எல்லாம் இன்னிக்கு ஸ்டேஜ் ஏறுதுங்க. இதோ... இந்தப் பையன் என்னிக்கு வொர்க் அவுட் செய்ய ஆரம்பிச்சானோ அன்னிக்கே கெட்ட பழக்கமெல்லாம் அவனை விட்டுப் போயிடுச்சும்மா'' - தன் ஸ்டூடன்ட் ஒருவரைக் காட்டி, தாய்மையின் நிறைவோடு சொல்கிறார், ஜிம் மாஸ்டர் ஶ்ரீனிவாசன்.

Shrinivasan's Gym centre
Shrinivasan's Gym centre
Nanda Kumar

சாதாரண குடும்பத்தில் பிறந்த ஶ்ரீனிவாசனுக்கு சிறு வயதிலிருந்தே பாடி பில்டிங்கில் ஆர்வம் அதிகம். கட்டட வேலைக்குச் செல்ல ஆரம்பித்த அவர், கிடைத்த நேரத்தை ஜிம்மில் செலவிட்டுள்ளார். ``நாம செய்யுற வேலையே உடற்பயிற்சிதான். கொரட்டூர்ல இருந்து மைலாப்பூர், வேளச்சேரினு, எந்த இடத்துல கட்டட வேலைன்னாலும் சைக்கிள் மிதிச்சிட்டுப் போய்டுவேன். இந்த ஜிம்மை, ஆரம்பத்துல `குட்டி'னு ஒரு மாஸ்டர் வெச்சிருந்தார். சாயங்காலம் இங்க வந்து வேடிக்கை பார்த்துட்டு இருப்பேன். ஒரு கட்டத்துல நானும் உடற்பயிற்சி பழக ஆரம்பிச்சு, இப்போ `மிஸ்டர் வேர்ல்டு'வரை வந்துட்டேன்'' என்கிறார் பெரிய சிரிப்புடன்.

இப்போது 54 வயதாகும் ஶ்ரீனிவாசன், கடந்த 20 ஆண்டுகளாக உள்ளூர், வெளியூர், மாவட்ட, மாநில, இந்திய அளவிலான பாடி பில்டிங் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். ஒவ்வொரு முறையும் டாப் ஐந்தில் தேர்வாக அவர் தவறியதில்லை. 60 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்று வரும் அவர், இதுவரை 20 முறை மிஸ்டர் தமிழ்நாடு தொடரில் பங்கேற்றுள்ளார். அதில் 8 முறை தங்கம் வென்று அசத்தியுள்ளார்.

Shrinivasan's Gym centre
Shrinivasan's Gym centre
Nanda Kumar

"முன்னமே சொன்ன மாதிரி, நாம செய்யுற வேலையே நமக்கு உடற்பயிற்சிதான். நாம சாப்புடற உணவே மருந்து. இருக்குறத வெச்சு ஆரோக்கியமா சாப்பிட்டு வந்தேன். கல்யாணத்துக்குப் பிறகு பாடி பில்டிங்கில தீவிரமா இறங்கிட்டேன். என் மனைவி எப்பவும் எனக்கு ஆதரவா இருக்காங்க. நேஷனல் லெவல்ல ஸ்டேஜ் ஏறியும், வயசு கடந்ததால அரசாங்க வேலை கிடைக்கல. இப்ப 54 வயசாகுது. இந்த வருஷம் உலக பாடி பில்டிங் சாம்பியன்ஷிப் போட்டிக்குத் தேர்வாகியிருக்கேன். இந்தப் போட்டியைப் பொறுத்தவரை, பெருசா ஸ்பான்சர் எல்லாம் கிடைக்க மாட்டாங்க. சொந்தச் செலவுல போனாதான் உண்டு. அதுக்கு நமக்கு எங்க வழி இருக்கு?

பையன் கல்யாணம், வேற செலவுகள்னு வரிசையா நிக்குது. அதனால இந்த வருஷம் என்னால போட்டியில கலந்துக்க முடியாது. இதேபோல, ஏற்கெனவே ஒரு முறை உலக பாடி பில்டிங் சாம்பியன்ஷிப் போட்டிக்குத் தேர்வாகியும் என்னால போக முடியலை. வருத்தமாத்தான் இருக்கு. இருந்தாலும், என்னோட மொத பையனும் இப்போ பாடி பில்டிங் செஞ்சுட்டிருக்கான். அவன் நிச்சயமா நிறைய ஸ்டேஜ் ஏறுவான், எனக்குக் கிடைக்காதது எல்லாம் அவனுக்குக் கிடைக்கும்னு நம்பிக்கை இருக்கு. அவன் மட்டுமல்ல, இங்க எங்க ஏரியா பசங்க நிறைய பேரு ஜிம்க்கு வர்றதுல ரொம்ப ஆர்வமா இருக்காங்க. அவங்களுக்கு சரியான தளம் அமைச்சுக் கொடுத்தா, நிச்சயமா கலக்குவாங்க'' என்றவருக்கு, நவீன ஜிம்கள் பற்றிப் பேச ஆரம்பித்ததும் வார்த்தைகள் வேகம் எடுக்கின்றன.

Shrinivasan's Gym centre
Shrinivasan's Gym centre
Nanda Kumar

"அட போங்கம்மா... ஏ.சி ரூம்ல செய்யுறது வொர்க் அவுட்டே கிடையாது. நாலு பயிற்சி செஞ்சாலும், உடம்பு நல்லா வேர்த்துக் கொட்டணும். சொகுசா பண்ணுனா எப்படி ஃபிட்னெஸ் கிடைக்கும்? எனக்கு இந்த ஏ.சி ஜிம், சொகுசு ஜிம் எல்லாம் பார்க்குறப்போ, `அடக் கொடுமையே'னுதான் தோணும். இதோ, எங்க ஜிம்மை பாருங்க. அங்க மேல, எங்க பசங்க வாங்கிட்டு வந்து அடுக்கியிருக்கிற பரிசுகள், மெடல்களை எல்லாம் பாருங்க! இங்கயிருந்து பல பேர் ஸ்டேஜ் ஏறியிருக்காங்க, விளையாட்டுக் கோட்டாவுல அரசாங்க வேலை வாங்கிட்டுப் போயிருக்காங்க. ஆனா, அதையெல்லாம் விட எனக்கு ரொம்ப சந்தோஷம் தர்ற விஷயம் ஒண்ணு இருக்கு.

இந்தக் காலத்துல, தம்மு, தண்ணினு புள்ளைங்க அடிமையாகிக் கிடக்குதுங்க. அவங்க எல்லாம் ஜிம்ல வொர்க்கவுட் செய்ய ஆரம்பிச்சாங்கன்னா, நிச்சயமா அவங்களோட கவனம் இதில் வந்து சேரும் என்பதோடு, அவங்களோட உடம்பு மேல அவங்களுக்கே ஆசை வந்துடும். அவங்க உடம்பைக் கெடுக்கிற எதையும் தொட மாட்டாங்க. அப்புடி, எங்க ஏரியா பசங்க நிறைய பேரு மனசையும் வாழ்க்கையையும், இந்த ஜிம் துடைச்சுப் போட்டு சுத்தமாக்கியிருக்கு. அதேபோல, தலையை மொபைல் மூஞ்சியிலேயே கவிழ்ந்துபோட்டுக்கிட்டுக் கிடக்குற உங்க வீட்டுச் செல்லங்களுக்கும் ஜிம்மை அறிமுகப்படுத்திவெச்சுப் பாருங்களேன்... அவங்க ஆரோக்கியத்துலயும் வாழ்க்கைமுறையில நல்ல மாற்றம் உண்டாகும்!" - கியாரன்டி கொடுத்துச் சொல்கிறார் ஶ்ரீனிவாசன்.

அடுத்த கட்டுரைக்கு