ஸ்பெஷல்
Published:Updated:

வீட்டு சாப்பாடு

ச.தமிழ்ச்செல்வன், எழுத்தாளர்

இதோ என் முன்னே நின்று எரிகின்ற இந்த அடுப்பின் நெருப்பு, நிறைய சமையலறை நினைவுகளை மனதில் கொண்டுவருகின்றது. பலநாள் என் சமையலில் காய்கள் தீய்ந்து போவதற்கு இப்படி நினைவுகளில் மூழ்கிப்போவதுதான் காரணம். 'சிம்ல வைங்கன்னு  எத்தனைவாட்டி சொல்றேன். அடுக்களையில் நின்னா, கவனம் அடுப்பிலதான் இருக்கணும்' என்று கோபிக்கிற துணைவியாருக்கு 'ஸாரி’ சொல்வேன். சமையலில் அவர்தான் என் பிரதான குரு.

வீட்டு சாப்பாடு

என் சிறு வயதில் மேட்டுப்பட்டி என்கிற கரிசல்காட்டுக் கிராமத்தில் பாட்டி வீட்டில்தான் வாழ்ந்தேன். அங்கே அடுக்களையில் மண் அடுப்பு தரையோடு தரையாகப் பதிக்கப்பட்டிருக்கும். அடுப்பின் முன்னால் ஒரு பலகையைப் போட்டு அதன் மீது அமர்ந்துதான், எங்கள் பாட்டி ஆதக்காள் சமைப்பார். விறகை உள்ளே தள்ளிக்கொண்டும், 'சிம்’ வேண்டுமானால் விறகை வெளியே இழுத்துவிட்டுக்கொண்டும் மணிக்கணக்காக அடுப்பின் முன்னால் அமர்ந்திருப்

பாள். ஊதுகுழலால் ப்பூ... ப்பூ... என்று ஊதிக்கொண்டு, பாட்டி அமர்ந்திருக்கும் அந்த சித்திரம் அழியாச்சித்திரமாக மனதில் கிடக்கிறது. கனத்த சரீரம் அவளுக்கு. ஜாக்கெட் போடும் பழக்கம் இல்லாத காலத்தைச் சேர்ந்தவள். நரைத்துக்கொண்டிருந்த வளமான தலைமுடியைக் கொண்டை போட்டிருப்பாள். நிதானமாக இருந்து சமைப்பாள்.

அவள் வைத்தது போல ஒரு நாளாவது வாழைக்காய்ப் பொரியல் வைத்துவிட  வேண்டும் என நானும் பலமுறை முயன்று தோற்றுப்போயிருக்கிறேன். ஈரப்பிசுபிசுப்பு கொஞ்சமும் இல்லாத, எண்ணெயின் பளபளப்பு சற்றும் தெரியாத, வாழைக்காய் பொரியல் அது. டி.வி சமையல்களில் 'க்ரிஸ்ப்பி’யாக என்று சொல்கிறார்களே, அதற்குச் சரியான உதாரணம் என் பாட்டியின் வாழைக்காய்ப் பொரியலும் அதைவிடப் பிரமாதமான வெண்டைக்காய்ப் பொரியலும்.

புதுமைப்பித்தனின் ஒரு கதை நினைவுக்கு வருகிறது. அடுப்போடு தொடர்புடைய கதை. காலையில் பிரம்மநாயகம் பிள்ளை கடைக்குக் கிளம்பும்போது, செல்லம்மாள் உடம்புக்கு முடியாமல் கிடப்பாள். உட்காரக்கூட முடியாமல் நடுங்கும் அவளுக்கு,   சில வைத்தியங்கள் செய்து அவளைப் படுக்கவைத்துவிட்டு வேலைக்குப் போவார். மாலையில் திரும்பி வந்து பார்த்தால், செல்லம்மாள் மயங்கிக்கிடப்பாள். கண்கள் செருகி இருக்க, நெஞ்சில் மட்டும் சிறிது துடிப்பு இருக்கும். சமையல் அறையில், உணவு எல்லாம் தயாரித்து வரிசையாக எடுத்து அடுக்கிவைக்கப்பட்டிருக்கும். அடுப்பில் வெந்நீர் கொதித்துக்கொண்டிருக்கும். கதையின் அடுத்த காட்சியில் செல்லம்மாள் இறந்துபோவாள். வாசிக்கும்

போதெல்லாம் கண்ணீர் வெடித்து வரும் இடம் இது.சமைக்கும்போதுதான் இம்புட்டும் நடக்கும். கண்களைத் துடைத்துக்கொண்டே, தாளிக்க வெங்காயம் நறுக்குவேன். பதினோராம் வகுப்புப் படிக்கையில், அம்மாவுக்கு முடியாமல் போனது. அப்போதுதான் நான் சமையலறைக்குள் கால் எடுத்துவைத்தேன். இன்று வரை 45 ஆண்டுகளாக சமையலறையை விட்டுப் பிரிய மனம் இல்லை. இடையில் மூன்று ஆண்டுகள் பட்டப்படிப்பின்போதும் ஐந்து ஆண்டுகள் ராணுவ வாழ்க்கையின் போதும் சமைக்கவில்லை. பெண்கள் மட்டுமே சமைத்து ஆண்கள்சாப்பிட மட்டுமே செய்யும் வாழ்க்கை ஆரோக்கியமற்றது. சமையலறை என்பது சமைப்பதற்கான இடம் மட்டுமல்லவே...!

அதலைக்காய் பொரியல்

வீட்டு சாப்பாடு

எங்கள் கரிசல்காட்டில் மட்டும் கி்டைப்பது அதலைக்காய். இந்த சீஸனில் அதலையும், பீர்க்கங்காயும், சுரைக்காயும்தான் அதிகம் விளையும்.  அதலைக்காய் பார்ப்பதற்கு பாகற்காய் போலவே இருக்கும். பாகற்காயைப் போலவே அதலையும் கசப்பு. இந்த மண்ணில் பிறந்தவர்கள் இதன் சுவைக்கு அடிமையாகி விடுவார்கள்.

கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் தாளித்துக்கொள்ளவும்.  அப்புறம் சின்ன வெங்காயத்தை அந்த எண்ணெயில் நன்றாக வறுத்து, பிறகு அதலைக்காயைப் போட்டு வதக்க வேண்டும். கம்புக் கஞ்சிக்கு தொட்டுக்கொள்ள அருமையான சைட் டிஷ் இது. அந்தந்த மண்ணில் விளையும் காய்கள் எல்லா ஊருக்கும் பயணித்த போதும், அதலைக்காய் மட்டும் எங்கள் மண்ணை விட்டு இன்னமும் தாண்டவில்லை!

சமைப்பேன்...

படம்: ந.வசந்தகுமார்