Published:Updated:

வீட்டு சாப்பாடு

ச.தமிழ்ச்செல்வன், எழுத்தாளர்

பிரீமியம் ஸ்டோரி

அடுப்பை முன்வைத்து...

அப்போது எங்கள் வீட்டில் விறகு அடுப்பு வைத்து சமைத்துக்கொண்டிருந்தோம். சமையல் பற்றிப் பேசுபவர்கள், சமையல் பற்றிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் எல்லாவற்றிலும் சமைக்கும் விஷயங்களை யாரும் பேசுவதே இல்லை.

வீட்டு சாப்பாடு

நாட்டில் அனைவருமே படக்கென்று லைட்டரால் கேஸ் அடுப்பைப் பற்றவைத்து, ’இப்போ இதிலே கொஞ்சம் தனியா இலையைக் கிள்ளிப்போடுங்க’ என்று சமைத்துக்கொண்டிருப்பது போன்ற பாவனையில் கதைத்துக் கொண்டே இருக்கிறார்கள்.

சமையலில் முதல் பிரச்னை அடுப்பும் எரிபொருளும்தான். கட்டுப்படுத்தப்பட்ட நெருப்புதானே  வீட்டுச் சமையலில் முதல் படி. ஆதி மனிதன், சிக்கிமுக்கிக் கற்களைத் தட்டி நெருப்பையா கண்டுபிடித்தான்? அது ஏற்கனவே இருந்துகொண்டுதான் இருந்தது. கட்டுக்குள் நிற்கும்  நெருப்பைத்தான் மனிதன் கண்டுபிடித்தான்.

நினைத்த இடத்தில் நெருப்பு!

தேவைக்கேற்ப வெப்பத்தைக் கூட்டவும் குறைக்கவும், கேஸ் அடுப்பில் ரெகுலேட்டர் எனப்படும் 'சீர்படுத்தி’ இருப்பதால் 'சிம்’ எனப்படும்  குறைப்பும் பிரைட் எனப்படும் அதிகப்படுத்தலும் எல்லாம் இன்று  நம் விரல் அசைவுக்குள் வந்து விட்டது.

ஆனால்,  நாங்கள் விறகு அடுப்பில் சமைத்த ஆதி நாட்களில் அந்த நெருப்பு உண்டாக்கின நினைவலைகள், உணர்வலைகள் பற்றித் தனி ஒரு புத்தகமே எழுதலாம். அடுப்படிக்குள் நுழையும்போதெல்லாம்,  ஆதி மனிதர்கள் அன்று திறந்த வெளியில், நெருப்பைக் காப்பாற்றி, எப்படித்தான் சமைத்தார்களோ என்கிற வியப்பு ஏற்படும். விவசாயத்தையும் நெசவையும் கண்டுபிடித்தது பெண்கள் என்பதெல்லாம் மானுடவியல் மற்றும் தொல்லியல் ஆய்வாளர்களால் ஏற்கனவே நிறுவப்பட்டுள்ளது. ஆகவே, உருப்படியான காரியம் எதுவானாலும் அது பெண்களால் நடந்துள்ள வரலாற்றுப்பின்னணியில், கட்டுப்பட்ட நெருப்பைக் காத்தவர்களும் பெண்களாகத்தான் இருப்பார்கள். நம் கிராமங்களில் இன்றும் அது பொம்பளைங்க சமாச்சாரமாகத்தான் இருக்கிறது.

வீட்டு சாப்பாடு

யாராவது ஒருத்தர் வீட்டில் கங்கு இருக்கும். அதை ஒரு கரண்டியில் பக்கத்து வீட்டுப்பெண்கள் வாங்கிக்கொண்டு போய் தம் வீட்டு அடுப்பில் போட்டு ஊதிப் பெருக்குவார்கள். அந்தக்கரண்டிக்கு 'கங்குக்கரண்டி’ என்றே பெயர்.  ஒன்றரை லட்சம் ஆண்டுகளுக்கு முன்னால், நம்முடைய ஹோமோசேப்பியன்ஸ் எனப்படும் இந்த மனித வர்க்கம் ஆப்பிரிக்காவிலிருந்து புறப்பட்டு இடம்பெயர்ந்து இடம்பெயர்ந்து உலகம் முழுவதும் பரவியது என்கிறார்கள். நகரும்போதெல்லாம் ஒரு கங்கினை அணையாமல் பாதுகாத்துக் கூடவே எடுத்துச் சென்ற ஒவ்வொரு இனக்குழுவின் தாய்மார்களை அடிக்கடி அடுப்பைப் பற்ற வைக்கும்போதும் நினைத்துக்கொள்வேன்.

இப்படி மனிதகுல வரலாற்றை நினைவுபடுத்தும் இடமாக எனக்குச் சமையலறை மாறிவிடும். ஒரு விறகை எடுத்தால் ஜவ்வாது வாசனை, இன்னொரு விறகை எடுத்துவைத்தால் மல்லிகைப்பூ வாசனை என்கிற திருவிளையாடல் திரைப்பட வசனமும் ஞாபகத்துக்கு வரும். எரிந்துகொண்டிருக்கும் நாலு விறகில் இரண்டை  வெளியே இழுத்துவிட்டால் அதுதான் இன்றைய 'சிம்’.  நீல நிறப் பிழம்பு (ப்ளூ ஃப்ளேம்) இருந்தால் நாம் சமைக்கும் பாத்திரங்களில் கரி பிடிக்காது. ஆனால் விறகு அடுப்பு, உமி அடுப்பு, மண்ணெண்ணெய் அடுப்பு போன்றவற்றில் எல்லாம் கரி பிடிக்குமே.

அதற்காகத்தான் நாங்கள், பாத்திரத்தின் அடிப்பகுதியில் மண்ணைக் குழைத்துப் பூசிவிடுவோம். அப்படி மண்ணைக் குழைத்து நான் பூசுகிறபோது, ஆதி மனிதர்கள் முதலில் தோல் பாத்திரங்களில் இப்படி மண் பூசி அதை அடுப்பிலேற்றிச் சமைத்தார்களாமே என்பது நினைவுக்கு வரும். அதிலிருந்துதான் மண் பானை என்கிற கருத்தே மனிதருக்கு வந்ததாம். மண் பூசிய பாத்திரங்களைக் கழுவி எடுப்பது எளிது.

விறகு அடுப்பில் இன்னொரு சிரமம் நெருப்பை சீராகத் தக்கவைப்பது. பக்கத்தில் நின்று கவனித்துக்கொண்டே இருக்க வேண்டும். அணைந்துவிட்டால் ஊதுகுழல் வைத்து 'ப்பூ ப்பூ’ என்று ஊதி நெருப்பைக் காக்க வேண்டும். கையில் கரியாகும். கவனிக்காமல்விட்டால் மூஞ்சி முகறையெல்லாம் கரியாகிவிடும்.

இந்த இடத்தில் வண்ணதாசனின் கதை ஒன்று ஞாபகத்துக்கு வருகிறது. மனைவி வேலையெல்லாம் முடித்து குளித்து வேறு புடவை உடுத்தி பளிச்செனத் தன்னை மாற்றிக்கொண்டு நிற்கும்போது சாயங்காலம் ஆகியிருக்கும். உள்ளே நுழையும் கணவன் 'பளிச்’ன்னு எங்கே கிளம்பியாச்சு’ என்று கேட்பான். 'எங்கே போக அடுப்புக்குள்ளேதான் போகணும் ' என்பாள் மனைவி. சமையலறையிலேயே வாழும் இந்த வாழ்க்கை பற்றிய பெண்ணின் ஒரு வரி விமர்சனமாக இந்த வார்த்தைகள் அழுத்தமாக மனதைச் சுடுகிறது.

நான் சிறுவனாக இருக்கையில் அடுப்புகள் தரையில் பதிக்கப்பட்டிருக்கும். ஒரு பெரிய அடுப்பும் பக்கத்தில் ஒரு சிறிய அடுப்பும் இருக்கும். பருத்திமார், விறகு, வேலிக்கருவை முள், பனை ஓலை, காகிதம், கம்மந்தட்டை, சோளத்தட்டை  எனப்பல பொருட்கள் எரிபொருளாகப் பயன்படும். விறகு எனப்படும் மரக்கட்டைகள்தான் நின்று எரியக்கூடியவை.

தரையில் பதித்த அடுப்புக்கு முன்னால் பலகை போட்டு உட்கார்ந்து, சில சமயம் பாட்டி சொன்னதற்காக விறகைத் தள்ளிக்கொண்டு உட்கார்ந்திருப்பேன்.  . விறகின் ஒரு புள்ளியிலிருந்து திடீரெனெ விஸ்ஸென்ற ஒலியுடன் வித்தியாசமான வண்ணத்தில் ஒரு பிழம்பு  ஒரு நிமிடம் வந்துகொண்டிருக்கும். முதல் தடவை அதைப் பார்த்து பயந்துவிட்டேன். ஏதோ ஒரு தீப்பாம்பு  புறப்பட்டு வருவதுபோல. அரை மணி நேரம் அடுப்பின் முன் உட்கார்ந்த நமக்கே அடுப்பு குறித்த பயங்களும் கனவுகளும் இருக்குமென்றால்,ஆண்டாண்டு காலமாக அடுப்பு முன் அமர்ந்திருக்கும் நம் பெண்கள் மனசைப் பூராவும் எழுத முடிந்தால் என்னென்ன கனாக்களும் கதைகளும் பொங்கி வரும் என்று எழுத வந்த பின் நாட்களில் நினைப்பேன்.

பல்லாரி வெங்காயச் சட்னி

மூவலூர் ராமாமிர்தம் அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய எழுத்தாளர் ஜீவசுந்தரி வீட்டுக்குப் போயிருந்தபோது, அவரிடம் கற்றுக்கொண்ட ஒரு சட்னி:

வீட்டு சாப்பாடு

இரண்டு பேருக்கான அளவு இது.

தேவை: ஒரு பல்லாரி வெங்காயம், பெரிய தக்காளி ஒன்று, மிளகாய் வத்தல்  6 அல்லது 7 (காரத் தேவைக்கேற்ப), உடைத்த தோல் நீக்காத உளுத்தம்பருப்பு ஒண்ணரை பெரிய ஸ்பூன், மல்லிச்செடி நாலு தழை, கறிவேப்பிலை மூணு இணுக்கு, பூண்டு 3 பல் (விருப்பமில்லாதவர்கள் விட்டுவிடலாம்), உப்பு  தேவையான அளவு.

எப்படி செய்யணும்: மேற்கண்ட பொருட்கள் ஒவ்வொன்றாக அதனதன் தன்மைக்கேற்ப,  கடாயில் லேசாக எண்ணெய் விட்டு தனித்தனியே வதக்கி எடுத்துக்கொள்ளவும். உளுத்தம்பருப்பு, மிளகாய் வற்றலை பொன்னிறமாக வறுக்கவும். கடைசியாக தக்காளியை வதக்கவும். நீர் சேர்க்காமல் உப்பு மட்டும் சேர்த்து மேற்படி வதக்கின எல்லாவற்றையும் மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்து கடுகு உளுந்து போட்டு தாளித்து இறக்கினால், சுவையான சட்னி தயார்.

என்ன பெயர் வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம். பல்லாரி வெங்காயச் சட்னி என்பது எங்கள் குடும்பத்தில் இட்ட பெயர்.

சமைப்பேன்...

படம்: ந.வசந்தகுமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு