Published:Updated:

வீட்டு சாப்பாடு : இட்லியே ஏன் இளைத்துப்போனாய் ?

வீட்டு சாப்பாடு : இட்லியே ஏன் இளைத்துப்போனாய் ?

மூத்த எழுத்தாளரும் மார்க்சிய அறிஞருமான எஸ்.வி.ராஜதுரை அவர்களைச் சந்திக்க, அவர் வீட்டுக்குச் சென்றிருந்தேன். சற்று நேரம் பேசிவிட்டுத் திரும்பும் உத்தேசத்தோடு மாலையில் சென்றேன். சற்றுநேரம் என்பது சற்றே நீண்டு, முழு இரவு ஜெபமாகி, விடிந்தேவிட்டது. இலக்கிய உலகில் இதெல்லாம் சகஜம்தான். இரவு முழுக்கத் தூங்கவில்லை என்கிற ஞாபகமே இருவருக்கும் இல்லை. அப்போதுதான் துயில் நீங்கி எழுந்தது போல, புத்துணர்ச்சியுடன் அதிகாலையில் அவர் அடுப்பைப் பற்றவைத்து, துணைவியாரை எழுப்பாமல், முதலில் டீ போட்டார். அப்புறம் சட்னி அரைத்தார். அதற்குள் நானும் குளித்துத் தயாரானேன். குக்கரில் இட்லி ஊற்றிவைத்தார்.

குக்கரில்தான் நாங்களும் இட்லி அவித்துக்கொண்டிருந்தோம். ஆனாலும், எஸ்.வி.ஆர் அவித்த இட்லி போல, மென்மையான இட்லியை அதற்கு முன் சாப்பிட்டதே இல்லை. அதுவும் குக்கரில் அவித்து.
பழைய பாணியில் இட்லிக் கொப்பரையில் துணி விரித்து, பெரிய பெரிய இட்லிகளாக அவிப்பது எங்கள் கிராமத்துப் பழக்கம். அப்போதெல்லாம் ஹோட்டல்களிலும் இட்லிகள் பெரிசாகத்தான் இருக்கும். மக்கள் சாப்பிடுவதைப் பெரிதாக எண்ணாமல், லாபம் கருதி சின்ன சைஸ் இட்லிகளை, ஹோட்டல்கள் போட ஆரம்பித்தது சமீப காலமாகத்தான். ஹோட்டல்கள், சாதாரணமாக இட்லி போட்டு, பிறகு சின்ன சைஸில் போட்டு, இப்போது மீண்டும் பெரிய இட்லிகளாக ஒரு இட்லி 30 ரூபாய் என்று ஒரு சுற்று வந்துவிட்டார்கள்.

வீட்டு சாப்பாடு : இட்லியே ஏன் இளைத்துப்போனாய் ?

இந்த இடத்தில் அமரர் நிமாய் கோஷ் இயக்கத்தில் 1960-ல் வெளியான ‘பாதை தெரியுது பார்’ தமிழ்ப்படத்தில் இசை மேதை எம்.பி.சீனிவாசன் இசையில் வெளியான “இட்டிலியே நீ ஏன் இளைத்துப்போனாய்? காதலனைக் காணாத காதலி போலே...” என்கிற பாடல் நினைவுக்கு வருகிறது. 60-களிலேயே ஹோட்டல் இட்லிகள் இளைக்கத் தொடங்கிய ஒரு வரலாற்றுக் குறிப்பு, நமக்குக் கிடைக்கிறது.

கல்யாண வீடுகளில் போடப்படும் இட்லிகள், எப்போதும் எங்கள் கிராமத்து இட்லிகள் போல பெரிசாகவே இருக்கும்.பெரிய இட்லிகளை இலையில் உதிர்த்துப் போட்டு, மனம் குளிர சாம்பாரை அதில் பொழிந்து பிசைந்து அடிக்கணும். அதுதான் திவ்யம். ஆனால், இன்று கல்யாண வீடுகளிலும் நவீனம் நாகரிகம் என்ற பெயரில் ஒரு இட்லி, ஒரு ஊத்தப்பம், ஒரு பூரி, ஒரு வடை, ஒரு கரண்டி கேசரி, ஒரு கரண்டி பொங்கல் என்று கொடுமை செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.

ஆறு வருடங்கள் ராணுவத்தில் இமயமலையில் ரொட்டியும் உளுந்தம்பருப்பு தாலுமாகத் தின்று, செத்த நாக்கோடு நான் ஊர் திரும்பி, நேரே இட்லியில்தான் வந்து விழுந்தேன். சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வந்து இறங்கியதும், லக்கேஜை க்ளாக் ரூமில் போட்டுவிட்டு, திருவல்லிக்கேணி ரத்னா கஃபே சாம்பார் இட்லியின் முன், சாஷ்டாங்காமாக விழுந்தேன். அடடா... அண்டா அண்டாவாக சாம்பாரைத் தயாரித்து, பெரிய கப்களில் கொண்டு வந்து கொட்டிக்கொண்டே இருப்பார்கள். அப்படி ஒரு மனசு யாருக்கு வரும்? வாழ்நாளில் ஒரு முறையாவது ரத்னா கஃபே சாம்பார் இட்லியைச் சாப்பிடாத வாழ்க்கை பாழ்தான்.

வீட்டு சாப்பாடு : இட்லியே ஏன் இளைத்துப்போனாய் ?

திருநெல்வேலியில் இயக்கக் கூட்டங்கள் முடித்து, ராத்திரி 11 மணிக்கு அந்திக்கடை எனப்படும் ராத்திரிக் கடைகளில் சின்ன சின்ன இட்லிகளை, ரெண்டு வகைச் சட்னி, ஒரு சாம்பார், ஒரு ஆம்லெட்டுடன் சாப்பிட்டது நினைவுக்கு வருகிறது.  நான் 30-க்கும் குறையாத இட்லிகளை (நான் சொல்வது 35 வருடங்களுக்கு முன் என் பிராயத்தில்) கப் கப் என்று அடித்து முழுங்குவேன். இட்லிகளுக்குக் காசு கொடுக்கும் வள்ளலான என் தோழர் பால்வண்ணம், ``முப்பது இட்லி நீ எப்பப்பா  சாப்பிட்டே?”  என்று வியப்பார். ``நீங்க பேச்சு சுவாரஸ்யத்திலே இருந்த கேப்லதான்” என்று பதிலளிப்பேன்.

இட்லிக்கு ஆதரவாக தமிழகத்தின் பட்டி தொட்டியெங்கும் பேசிவரும் மருத்துவர், நண்பர் கு. சிவராமனை அந்த ஒரு காரணத்துக்காகவே எனக்குப் பிடிக்கும். அவரது இட்லிக் கன்னங்களையும்தான். ``வாயைத் தொறந்தாலே இட்லினுதான் ஆர்டர் பண்ணுவியா?’’ என்று கோபம் கொண்டு என் மகன் சித்தார்த் சிறுவயதில் ஹோட்டல்களில் என்னோடு நடத்திய தகராறுகள் ஏராளம். என் துணைவியாரும்தான். இட்லி மீது கொண்ட காதலால், அவர்கள் கோபத்தை சிறு  புன்னகையால்  கடப்பது உண்டு.

“பழந்தமிழர் உணவு வகைகளைக் கூர்ந்து கவனித்தால் ஓர் உண்மை புலப்படும். தமிழர் உணவு முறைகளில் வறுத்தும், சுட்டும், அவித்தும் செய்யப்படும் உணவுப் பண்டங்களே அதிகமாக இருந்தன” என்பார் தமிழறிஞர் முனைவர் தொ.பரமசிவன். விஜய நகரப் பேரரசின் காலத்தில்தான் நிலக்கடலை எண்ணெயும்  அதில் பொரித்தெடுக்கும் வடை, போண்டா, பஜ்ஜி, சேவு, மிக்சர் வகைகளும் தமிழகத்துக்கு அறிமுகமாகியிருக்க வேண்டும் என்பார் அவர். இட்டளி எனப்படும் (இட்டு அளிப்பதால் இட்டளி) இட்டிலி குறித்தும் (தோசை, அதிரசம் பற்றியும்) விஜயநகரப் பேரரசின் கல்வெட்டுகளில்தான் முதன் முதலாகக் குறிப்புகள் இடம் பெற்றுள்ளன என்பார்கள்.அதுபோலவே,  ஆவியில் வேகவைத்த இட்லியைத் தமிழன் கண்டதும் தாமதமாகத்தான். அரைத்தும் துவைத்தும் ஏற்கனவே ‘துவையல்’ கண்டிருந்த தமிழர்கள், இட்லி வந்ததும் அந்தத் துவையலை நீர்விட்டுக் கரைத்துச் சட்னியாக்கிவிட்டார்களாம்.

சமீபத்தில், கம்பம் நகரில் தோழர்கள் ஒரு இட்லிக் கடைக்கு அழைத்துச் சென்றார்கள். ஆறு வகைச் சட்னிக் கடை என்றே அந்தக் கடைக்குப் பேர் சொன்னார்கள். ஆறு வகையான சட்னிவைத்து அசத்துகிறார்கள். அப்புறம் வந்தது, சின்னச் சின்ன இட்லிகளை சாம்பார் குவளைகளில் மிதக்கவிடும் நெய் சாம்பார் இட்லி.அதற்கான இட்லித் தட்டு இரண்டு வாங்கி வந்தேன் வீட்டுக்கு. குட்டிக் குட்டி இட்லிகளைக் காட்டி ஏமாற்றி, இட்லி விரோதியான என் மகனையும்கூட, இட்லி சாப்பிட வைக்க முடிந்தது.

இட்லியோடு கறிக் குழம்பு, மீன்குழம்பு, கோழிக் குழம்பு குறிப்பாக, நாட்டுக் கோழிக் குழம்பு என்று பல இணைகள் உருவாக்கப்பட்டுவிட்டன.மதுரை மாநகர் மெஸ்களில் கறி தோசை மாதிரி, இட்லிக்குள் கறிவைத்தேன் காண்பீர் என பல புதிய வகைகளை அறிமுகம் செய்தபடி இருக்கிறார்கள்.ஆனால், அவர்களெல்லாம் ஈரோட்டை வெல்ல முடியாது.

ஈரோட்டில் ஒரு மெஸ்ஸில், இட்லியும் தொட்டுக்கொள்ளக் குடல் குழம்பும் என்று ஒரு காம்பினேஷன் வைத்திருக்கிறார்கள். காலை ஏழு மணிக்குள் போய்விட வேண்டும். கொஞ்சம் தாமதித்தாலும், குடல் காலியாகிவிடும். அப்படி ஒரு உலகத்தரமான ருசி. அப்படி ஒரு மிருதுவான குடல் குழம்புத் தயாரிப்பு. சர்க்கரை அளவு உடம்பில் கூடிய நிலையில், அலோபதி மருத்துவம் இட்லியைக் குறைக்கச் சொல்கிறது. இட்லியை  விடுவதா, அலோபதி மருத்துவத்தை விடுவதா? இருப்பதோ ஒரே மனம் என்று குழம்பிக்கிடக்கும் காலம் ஒன்றும் வந்ததே... நிற்க.

மீண்டும் எழுத்தாளர் எஸ்.வி.ராஜதுரை வீட்டுக்கு வருவோம். “அது எப்படி உங்கள் வீட்டு குக்கர் இட்லி மட்டும் இவ்வளவு மிருதுவாக இருக்கிறது?”

“குக்கரில் இட்லிமாவை விட்டு, அடுப்பில் வைத்துபின், விசிலை நம்பி அக்கடா என்று இருந்தால், இட்லி இறுகித்தான் போகும். துணி விரித்துச் செய்த இட்லிக்குத் தந்த அதே மரியாதையை, குக்கர் இட்லிக்
கும் செய்யணும். குறிப்பிட்ட நேரத்தில் `வெந்துச்சா வெந்துச்சா...’ என்று பார்த்து இறக்கிவிட வேண்டும். கூடுதல் நேரம் குக்கர் நெருப்பில் இருந்தால், இட்லி இறுகிவிடும். சரியான நேரத்தில் இறக்குவது
தான் வித்தையின் ரகசியம்”.

இட்லிக்கு மாவு அரைப்பதில்தான் (சரியான அளவு உளுந்து, சற்றே வெந்தயம் என்கிற கணக்கும் நொதித்தலுக்கு நாம் தரும் நேர அளவும்) இட்லியின் வெற்றி ரகசியம் இருப்பதாக நான் கொண்டிருந்த என் நம்பிக்கையில் மாற்றம் வந்தது அன்றுதான்.

- சமைப்போம்...
படம்: ந.வசந்தகுமார்

வீட்டு சாப்பாடு : இட்லியே ஏன் இளைத்துப்போனாய் ?