Published:Updated:

வீட்டு சாப்பாடு : தோசை நினைவுகள் !

வீட்டு சாப்பாடு : தோசை நினைவுகள் !

பிரீமியம் ஸ்டோரி

எங்கள் மேட்டுப்பட்டி கிராமத்தில் தோசைக்குப் போடுவது என்பது விழாக்களோடு இணைந்த ஒன்றாகத்தான் இருந்தது. எங்கள் தெருவில் இருந்ததோ, இரண்டே இரண்டு ஆட்டுரல்கள். தீபாவளி, தைப்பொங்கலுக்கு எல்லா வீடுகளிலும் தோசைக்குப் போட்டுவிடுவார்கள். ஊறவைத்த அரிசியையும், உளுந்தையும் அரைப்பதற்கு, எங்கள்  தெரு பெண்கள், சட்டிகளோடு, ஆட்டுரல் இருக்கும் இரு வீட்டு வாசல்களில் காத்துக்கிடப்பார்கள்.

மாவு அரைக்கும் கடகடாச் சத்தம் இரவெல்லாம் கேட்டுக்கொண்டிருக்கும். அதிகாலையில் கோழி கூப்பிட, தோசைகளை சுட்டு நார்ப்பெட்டியில் அடுக்கிவைப்பார்கள். ஒவ்வொரு தோசையின் விட்டம் முக்கால் அடியும், கனம் இரண்டு விரல் அளவும் இருக்கும். அப்படி, தோசைகள் எடுக்க எடுக்க வந்துகொண்டே இருக்கும்.

‘தோசை சுட்டாச்சு’ என்கிற வார்த்தையைக் கேட்டதும், எங்களைப்போன்ற சிறார்களுக்கு, தூக்கமெல்லாம் ஓடிப்போகும். அப்படியே, ஆசை ஆசையாய்  ஏழெட்டு தோசைகளை வெளுத்துவிட்டு, மறுபடியும் தூங்கிவிடுவோம். பிறகு, தூங்கி எழுந்ததும் குளித்துவிட்டு, பெரியவர்களுடன் சேர்ந்து மறுபடியும் சாப்பிடுவோம். தோசைதான் எங்களுக்குத் திருவிழா. தவிர, எப்போதாவது வராத விருந்தாளி வந்தால், தோசைக்குப் போடுவார்கள். வருடத்தில் நாலு நாள் தோசை கிடைத்தாலே பெரிய விஷயம். அதனால், தோசை சுடும் நாளில் பள்ளிக்கூடம் இருந்தால் லீவு சொல்லிவிடுவோம்.

வீட்டு சாப்பாடு : தோசை நினைவுகள் !

டீச்சரும் “வீட்டிலே இன்னைக்கி தோசையாடா... சரி... சரி... நாளைக்கு வந்திருங்க” என்று உடனே சம்மதம் சொல்லிவிடுவார்கள். குழந்தைகளின் நியாயம்தான் பள்ளிக்கூடத்தின் நியாயமாகவும் இருந்த அற்புதமான காலம் அது. டவுசர் பைக்குள் ரெண்டு தோசையைத் திணித்துக்கொண்டுதான் விளையாடவே போவோம். தோசை என்பது சாதாரண உணவு இல்லை, திண்பண்டமே கிடைக்காத எங்கள் பால்ய காலத்தின் அபூர்வமான பண்டமாக இருந்தது.

நான் ஆறாவதோ ஏழாவதோ படித்துக்கொண்டிருந்தபோது, மழையே இல்லாமல் பஞ்சமாகிவிட்டது. அப்போது, காடுகளில் சாணைக் கிழங்கு என்கிற ஒன்றுதான் அந்த வெக்கையில் விளைந்துகிடக்கும். அந்தக் கிழங்குகளை தோண்டிக்கொண்டுவந்து, அரைத்து, தோசையாகச் சுட்டுச் சாப்பிட்டார்கள், எங்கள் கரிசல்காட்டு ஜனங்கள். அதைச் சாணைக் கிழங்குப் பஞ்சமென்றே மக்கள் அழைத்தார்கள். ரொம்பக் கசப்பான மூலிகைகளை மருந்தாகச் சாப்பிடச் சொல்லும் சித்த மருத்துவர்களேகூட, இதை தோசையாகச் சுட்டுச் சாப்பிடுங்கள் என்று கூறுவதைக் கேட்டிருக்கிறேன்.

எதையும் தோசையாக்கிவிடலாம். அரிசியும் உளுந்தும், ஒரு பிடி வெந்தயமும் சேர்த்து ஊறவைத்து அரைத்துச் சுட்டால், அது மாவு தோசை. உளுந்தை மட்டும் அப்படியே வைத்துக்கொண்டு, அரிசிக்குப் பதிலாக கம்பு சேர்த்தால், அது கம்பு தோசை, கேழ்வரகு சேர்த்தால், அது ராகி தோசை. சுட்ட தோசைக்குள் உருளைக்கிழங்கு மசாலாவை மடித்தால், அது மசால் தோசை, காளான் மசாலாவை வைத்து மடித்தால், அது மஷ்ரூம் தோசை, அடுப்பில் தோசை இருக்கும்போதே, அதன் மீது தோசைப் பொடி தூவி, மடித்தால் பொடி தோசை. ஊற்றிய மாவின் மீது நறுக்கி வதக்கிய வெங்காயம் தூவி, வேகவைத்தால் ஆனியன் தோசை... அம்மாடி... தோசை... எத்தனை தோசையடி.

வீட்டு சாப்பாடு : தோசை நினைவுகள் !

இப்போது வகைவகையாய் சிறுதானிய தோசைகள் மீண்டும் உயிர்பெற்று, தமிழகம் எங்கும் சிலிர்த்து எழுகின்றன.

தோசையை ஒருவகையில் பிள்ளையாரோடு ஒப்பிடலாம். செம்புலப் பெயல் நீர் போல, பிள்ளையார், இருக்கும் இடத்துக்கு ஏற்ற நாமகரணம் பெற்றுவிடுவாரல்லவா. அதுபோலத்தான். ஆனால் அவர் சைவர்.  சைவத்தைவிடவும் வைணவத்தோடுதான் தோசைக்கு நெருக்கம் அதிகம். சின்ன வயதில் என் அப்பா அம்மா வில்லிபுத்தூரில் வாழ்ந்தார்கள். அப்பாவுக்கு அடிக்கடி மாறுதல் இருக்கும் உத்தியோகம் என்பதால், படிப்புக்காக நாங்கள் தாத்தா பாட்டியுடன் கிராமத்தில் இருந்தோம். கோடை விடுமுறைக்கு வில்லிபுத்தூர் போவோம். அங்கே, ஆண்டாள் கோயிலுக்குப் போவதுதான் பெரிய பொழுதுபோக்கே. ஆண்டாள் கோயிலுக்குள்ளே அவளுடைய அப்பா பெரியாழ்வார் சன்னிதியில் பிரசாதமாக தோசைதான் கொடுப்பார்கள். கனத்த பெரிய சைஸ் தோசையை இரண்டு கைகளிலுமாக ஒருவர் ஏந்தி வர, இன்னொருவர் பிச்சுப்பிச்சு கொடுத்துக் கொண்டேவருவார். அதுமாதிரி ருசியான தோசையை என் வாழ்நாளில் சாப்பிட்டது இல்லை.

ஆய்வறிஞர் ஆ.சிவசுப்பிரமணியனிடம் விசாரித்தபோது,  மேலும் சில தகவல்களைச் சொன்னார். தமிழ்நாட்டு வைணவர்கள் உணவுப்பண்டங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு பேர் வைத்திருப்பார்கள். பாயாசத்தைக் கண்ணமுது என்பார்கள். பழைய சோற்றை உய்யக்குண்டான் என்பார்கள். அதுபோல, தோசையை சக்கரத்தாழ்வார் என்பார்கள். பெருமாளின் கைச்சக்கரம்தான் தோசை வடிவில் வந்து சேர்ந்திருப்பதாகக் கருதுவார்கள். விஜயநகரப் பேரரசின் கல்வெட்டுகளில், அதிரசம், தோசை உள்ளிட்ட வைணவக் கோயில் பிரசாதங்கள் பற்றிய குறிப்புகள் இருப்பதாகக் கூறினார். ‘நோயர் விருப்பம்’ நூலை எழுதிய மனநல மருத்துவர், நண்பர் ஜி.ராமானுஜம், இப்போதும் வைணவக் குடும்பங்களில், விரதம் இருக்கும் நாட்களில், நாள் முழுக்க வெறும் தோசையை மட்டும் சாப்பிட்டு விரதம் இருக்கும் பழக்கம் இருப்பதாக, ஒரு செய்தியைப் பகிர்ந்துகொண்டார்.

வீட்டு சாப்பாடு : தோசை நினைவுகள் !

குழந்தைப் பருவத்தில் என் மகன் சித்தார்த் சரியாகச் சாப்பிட மாட்டான்.  நான் அடுப்பில் நிற்கும் நாட்களில், தோசை மாவைக் கொஞ்சம் கெட்டியாக வைத்துக்கொண்டு, இப்போ ‘ப’ தோசை என்று, ‘ப’ வடிவில் தோசை விட்டுத்தருவேன். எழுத்துத் தோசைகளை சுட்டு, அவனை வியப்பில் ஆழ்த்தி, சாப்பிடவைப்பேன். அதைச் சாப்பிட்டதும் ‘ற’ தோசை. ‘இ’  தோசை கொஞ்சம் கஷ்டம். ஆங்கில எழுத்துகள் தோசைக்கு வாகான எழுத்துகள்.
 

வீட்டு சாப்பாடு : தோசை நினைவுகள் !

ஒரு கட்டத்தில், மகத்தான இந்தத் தோசையின் மீது வெறுப்பும் வந்தது. அதற்குக் காரணம் ஒரு சிறுகதை. தமிழின் மிக நுட்பமான படைப்பாளியும் எங்கள் முன்னோடியுமான எழுத்தாளர் அம்பை, ‘வெளிப்பாடு’ என்றொரு கதை எழுதியிருப்பார். அதில் இந்தியப் பெண்களின் வாழ்க்கையை ஆவணப்படுத்தும் பெண் ஆய்வாளர் ஒருவர், திருநெல்வேலியில் தோசை சுட்டுக்கொண்டிருக்கும் வயதான பெண்மணியைச் சந்தித்துப் பேசிக்கொண்டிருப்பார்.

“நான் தோசை சுடட்டுமா?”

“அட... தோசை சுடத் தெரியுமா..?”

“ஏன்... தெரியாதுன்னு நெனச்சிங்களா? உங்கள மாதிரி அவ்வளவு அழகாக வராது. ஆனா சுடத் தெரியும்.”

“என்ன மாதிரின்னா... என் வயசு என்ன, உங்க வயசு என்ன? பத்து வயசு தொடங்கி சுடறேன். நாப்பது வருஷத்திலே ஒரு நாளைக்கு இருபது மேனிக்கு எவ்வளவு தோசை... அம்மம்மா...”
“ஒரு வருடத்துக்கு ஏழாயிரத்து முந்நூறு தோசை.  நாற்பது வருடங்களில் இரண்டு லட்சத்து தொண்ணூற்றி ரெண்டாயிரம் தோசை...”

என்று அந்தக் கதை போகும். இந்த வரிகள் காலம் காலமாக எங்களுக்குத் தோசை சுட்டுக்கொண்டிருக்கும், என் அம்மா, பாட்டி, அத்தை எல்லோருடைய கைகளையும் -தோசைக்கல்லின் மீது இயங்கும். அந்தப் பச்சை நரம்போடிய கைகள்-நினைவுபடுத்தி, எனக்குக் கண்ணீரை வரவழைத்தன. இதற்குப் பிறகு, நான் தோசை சாப்பிட நினைத்தால், ஒன்று நானே சுட்டுச் சாப்பிடுவேன். அல்லது தோசையே வேண்டாம் என்று மறுத்துவிட்டு, இட்லி அல்லது பழைய சோற்றைச் சாப்பிடப் போய்விடுவேன்.

சமைப்பேன்...
படங்கள்: எல்.ராஜேந்திரன், ந.வசந்தகுமார்

வீட்டு சாப்பாடு : தோசை நினைவுகள் !

கோதுமை தோசை

எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா வீட்டுக்கு ஒருமுறை போயிருந்தபோது, எதிர் வீட்டு நண்பர் சாப்பிட அழைத்தார். அன்று, கோதுமை தோசை. எங்கள் வீட்டுத் தோசையைவிட, அவர்கள் செய்த தோசை வாசனையோடு சுவையாக இருந்தது. செய்முறை கேட்டேன். “கோதுமை மாவு பாக்கெட் வாங்கி தோசை சுடாமல், அரிசிக்குப் பதிலாகக் கோதுமையை ஊறவைத்து, உளுந்து சேர்த்து அரைத்து, புளிக்கவைத்ததால், இந்த ருசியான தோசை கிடைத்தது” என்றார். கோதுமையைக் கடாயில் சிவக்க வறுத்து, முறத்தில் விரித்துத் தேய்த்துப் புடைத்து, லேசாகத் தோல் நீக்கி, அப்புறம் ஊறவைத்தால், அது வேறு ஒரு ருசி தரும். சும்மா, அப்படியே ஊறவைத்தாலும் பாதகம் இல்லை. சற்றே காரமான சட்னிவைத்துச் சாப்பிடுவது பொருத்தம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு