Published:Updated:

வீட்டு சாப்பாடு - பெருக்கிய மோர்

வீட்டு சாப்பாடு - பெருக்கிய மோர்

பிரீமியம் ஸ்டோரி

ச.தமிழ்ச்செல்வன் எழுத்தாளர்

வீட்டு சாப்பாடு - பெருக்கிய மோர்

நான் வாழ்ந்துகொண்டிருந்த கோவில்பட்டிக்குப் பக்கத்து ஊரான இடைச்செவலில்தான், நான் விரும்பி வாசித்த ‘கதவு’, ‘வேட்டி’ உள்ளிட்ட பல சிறுகதைகளை எழுதிய எழுத்தாளர் கி.ராஜநாராயணன் வாழ்ந்துகொண்டிருந்தார். அவரைச் சந்திக்க கோவில்பட்டி எழுத்தாளர்கள் தேவதச்சன், கௌரிஷங்கர் போன்றோர் அடிக்கடி சென்று வருவார்கள். இருவரும் கல்லூரியில் எனக்கு ஒரு வருடம் சீனியர்கள். கி.ரா-வைச் சந்தித்து வந்த அனுபவத்தை அவர்கள் டீக்கடை வாசலில் நின்று சிலாகித்துப் பேசிக்கொண்டிருப்பார்கள்.

சரி. நாமும் ஒருமுறை போய்ப் பார்த்துவிட்டுத்தான் வருவோமே என்று, தம்பி மாரீஸுடன் போனேன். அப்போதுதான் அவர் கரிசல் வட்டார வழக்குச் சொல்லகராதியைத் தொகுத்துக் கொண்டிருந்தார். அதற்கு, மாரீஸ் பெரிய உதவிகள் செய்துகொண்டிருந்தார். ஓவியர் கொண்டையராஜூவின் கொடிவழியில் வந்தவர். நல்ல வெயிலில் அவர் வீட்டுக்கு நாங்கள் போனதும், “முதல்ல உக்காருங்க. இந்த மோரைக் குடிங்க” என்று, உயரமான ஒரு தம்ளர் நிறைய மோர் கொடுத்தார். அந்த ருசியான மோரைப்பற்றிப் பேசுவதற்காகத்தான் இவ்வளவு பெரிய பீடிகை.

மிதமான பெருங்காய வாசத்துடன், மோரை அவர் எங்கள் முன்னாலேயே தயாரித்தார். தாத்தா பாட்டியுடன் இருந்த காலத்தில் அதிகாலையில் நாங்கள் கேட்கும் முதல் சத்தம், பாட்டி ஆதக்காள் மோர் சிலுப்பும் சத்தம்தான். ரவிக்கை போடாத, காதுகளில் பாம்படம் அணிந்த எங்கள் பாட்டி, குத்துக்காலிட்டு அமர்ந்து, பாம்படம் அசைய, அந்த சிம்னி விளக்கொளியில் மோர் சிலுப்பும் காட்சி ஒரு சித்திரமாக மனசில் தங்கியிருக்கிறது. கிராமத்து வாழ்க்கையில் ஒரு சோறு, ஒரு குழம்பு.  இதுதான் தினசரி மெனு. சாம்பார், ரசம், மோர் என்கிற ப்ரோட்டோக்கால் எல்லாம் அங்கு கிடையாது.

தயிரைக் கடைந்து அதில் மிதக்கும் வெண்ணெயைக் கையால் சேந்தி, பக்கத்தில் உள்ள கலயத் தண்ணீரில் போட்டுக்கொண்டே இருப்பாள் பாட்டி. பிறகு, அதை எடுத்து வெண்ணெய்க்கான சிறிய பாத்திரத்தில் சேமிப்பாள். மொத்தமாகச் சேர்ந்தவுடன் ஒருநாள் வெண்ணெயை உருக்குவாள். முருங்கைக் கீரையை அதில் போட்டு, கீரை முறுகி வரும் வாசத்தோடு உருக்கி முடிப்பாள். உருக்கிய நெய்யை வேறு ஒரு பாத்திரத்தில் ஊற்றி, அந்தச் சட்டியில்  சோற்றைப் போட்டு பிசைந்து உருட்டி, எனக்கும் கோணங்கிக்கும் கொடுப்பாள். அது ஒரு ருசி.

பருப்பு காலியானதும், அந்தப் பருப்பு சட்டியில் போட்டுப் பிசைந்த சோற்றுருண்டை, புளிக்குழம்புச் சட்டியில் போட்டுப் பிசைந்த உருண்டைகள் என சமையல் குறிப்புகளில் வராத, பல சட்டி உருண்டைகள் நம் வாழ்வின் பிரிக்க முடியாத பகுதிகள். அதில், குறிப்பாகப் பிசைந்து தரும் பாட்டி அல்லது அம்மாக்களின் கைவாசமும் சேர்ந்திருக்கும். இப்போதும்கூட, எங்கள் வீட்டில் கடைசிச் சொட்டுக் குழம்போடு, சாதம் போட்டுப் பிசையும்போது என் கையே, என் பாட்டியின் கையாக நீண்டு அசைவதை மனதால் பார்த்துக் கண்கள் கசிவது உண்டு.

வீட்டு சாப்பாடு - பெருக்கிய மோர்

சரி. மீண்டும் நைனா கி.ராஜநாராயணன் வீட்டுக்கு வருவோம். குடிப்பதற்கான மோர் எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி அன்று ஒரு வகுப்பே நடத்திவிட்டார். பதார்த்த குண சிந்தாமணி என்கிற நம் பழந்தமிழ் நூலில் வரும் ஒரு வாசகத்தைச் சொன்னார். ‘உருக்கிய நெய்யும் பெருக்கிய மோரும்’ ஆரோக்கியமானது. பெருக்கிய மோர் என்பதில், வெண்ணெய் நீக்கப்பட்ட தயிரைக் கடைந்து, நீர் சேர்த்து நீர் மோராக்கி, அதில் இத்தணூண்டு பெருங்காயக்கட்டியைப் போட்டு, சற்று நேரம் அந்த வாசம் ஏறுவதற்காகக் காத்திருக்க வேண்டும். பிறகு, தம்ளரில் ஊற்றி, ருசிக்கேற்ப உப்பு சேர்த்து, இப்படிக் கலக்கணும் என்று ஒவ்வொரு தம்ளருக்குள்ளேயும் ஒரு பருத்தி மார் குச்சியைப் போட்டார். அந்தப் பருத்திக்குச்சியின் வாசனையும் சேர்ந்து அன்று குடித்த மோர் போல ஒரு மோரை மீண்டும் அருந்தும் வாய்ப்பு வாழ்வில் கிட்டவில்லை. நம்முடைய நகர்சார் வாழ்க்கையில், பருத்திக்குச்சிக்கு எங்கே போவது? ஸ்பூன் விட்டுக் கலக்கிக் குடிப்பதுதான் நமக்கு வாய்க்கிறது.

தமிழர்கள் அருந்தும் பானங்கள் குறித்து ஆய்வு நடத்திய அமெரிக்கப் பல்கலைக்கழக ஆய்வாளர் ஒருவர், தமிழர்கள் பாலைவிட மோரைத்தான் அதிகம் விரும்பி அருந்துவதாகக் கண்டறிந்துள்ளார். இரவு பாலில் உறை விடும்போது, ஒரு அரை ஸ்பூன் உறைமோர் விட்டால் போதும். விடுகிற உறை மோரின் புளிப்புத்தன்மை, அளவு  இதைப் பொறுத்தும் மறுநாள் தயிரின் தன்மை அமையும். பொதுவாக, தயிர் கோடைக் காலத்தில்  சீக்கிரமே புளித்துவிடும். குளிர் காலத்தில் அதிக நேரம் எடுக்கும். இதைக் கணக்கில்கொண்டு, நாம் உறை விடணும். நீர்மோரில் பெருங்காயம், கறிவேப்பிலை, மல்லி இலை, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், புதினா இலை என பல இயற்கையான அம்சங்களை நறுக்கிப் போட்டுக் குடிப்பது, இப்போதுப் பழக்கமாகியிருக்கிறது. மோர், சுடும் கோடையை எதிர்கொள்ளும் குளிர்ச்சி ஆயுதம்.

வீட்டு சாப்பாடு - பெருக்கிய மோர்

பல சித்த வைத்திய மருந்துகளை மோரில் கலந்து குடிப்பது நம் மரபு. எனக்கு ஒருமுறை கடுமையான மஞ்சள் காமாலை தாக்கியபோது, கீழாநெல்லி இலையை அரைத்துக் குடிக்கச் சொன்னார்கள். அப்படி ஒரு கசப்பு மருந்தை என் வாழ்நாளில் நான் குடித்தது இல்லை. அதை தாக்குப்பிடிக்க எனக்குக் கைகொடுத்தது மோர்தான். இப்போது, சூப்பர் மார்க்கெட்களில் கிடைக்கும் பாக்கெட் மோர், வாயில் வைக்கக்கூட முடியாத ருசியோடு இருக்கிறது. தயிர் கப்களின் கதையும் இதுதான். பால் வாங்கி இருமுறை காய்ச்சி, அதில் உறைமோர் விட்டுத் தயிராக்குவதற்கு ஈடாக இது எதுவும் வர முடியாது. தயிர் மீது எனக்கும் பாசம் இல்லை. ஆனால், நீர்மோர் நல்லதடி பாப்பா என்று சொல்லுவேன்.

- சமைப்பேன்

சமையல் குறிப்பு

வெண்டைக்காய் பொரியல் எனக்கு ரொம்ப காலம் ஒரு சவாலாகவே இருந்துவந்தது. வழவழப்பு இல்லாத பொரியல் என்பது கனவாகவும் ஏக்கமாகவும் இருந்தது.

வீட்டு சாப்பாடு - பெருக்கிய மோர்

வெண்டைக்காயைக் கழுவி, துணியால் துடைத்துச் சுத்தம் செய்து, வில்லைகளாக நறுக்கவும். சின்ன வெங்காயம், தேவையான அளவு பச்சை மிளகாயை நறுக்கிக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாயைப் போட்டு, பொன்னிறமாக வதக்கி, அதன் பின், நறுக்கிய வெண்டைக்காயைப் போட்டு, வழவழப்புப் போகும் வரை வதக்கவும்.  பிறகு, லேசாகத் தண்ணீர் தெளித்து, கடாயை மூடிவைத்து, சில நிமிடங்கள் கழித்து இறக்கினால், பொரியல் தயார். தண்ணீர் தெளிக்காமல் அப்படியே வதக்கி இறக்கும் பழக்கமும் நடப்பில் உள்ளது. பத்தமடைப்பாட்டி ஒருத்தி சொன்னது, வதக்கிய பின் ஒரு ஸ்பூன் தயிர் அல்லது மோர் விட்டு மூடி சில நிமிடங்கள் வேகவைத்தால், பொரியல் க்ரிஸ்ப்பியாக இருக்கும் என்பது. அது உண்மையிலேயே வெற்றி தரும் குறிப்பு என்பதை அனுபவத்தில் காண்கிறேன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு