Published:Updated:

வீட்டு சாப்பாடு

வீட்டு சாப்பாடு

பிரீமியம் ஸ்டோரி

"ச.தமிழ்ச்செல்வன்"
எழுத்தாளர்

வீட்டு சாப்பாடு

ரு சிறிய சுற்றுக்குப் பிறகு வீடு திரும்பினேன். கூழ் வடாம் போடும் திருவிழாக்கோலத்துடன் வீடு என்னை வரவேற்றது. கோடையில் கிடைக்கும் இலவச வெயிலை சும்மாவிடக் கூடாது என்று, நம் முன்னோர்கள் அதற்கெனப் பல வேலைகளை ஒதுக்கி வைத்திருப்பார்கள்.

விவசாயக் குடும்பமாக இருந்த எங்கள் பாட்டி வீட்டில், நெற்களஞ்சியத்தில் சேமித்திருக்கும் நெல், குலுக்கை எனப்படும் குதிரில் கொட்டியிருக்கும் கம்பு, துணி மூட்டைகளில் கட்டியிருக்கும் குதிரைவாலி, கேழ்வரகு, தினை போன்ற சிறு தானியங்கள் எல்லாம் வெளிச்சம் காண்பது கோடையில்தான். எல்லாவற்றையும் அடுத்த கோடை வரை காப்பாற்றும் ப்ரெசெர்வர் (Preserver) நம் மக்களுக்கு வெயில்தான்.

இப்படிக் காயப்போடப்படும் தானியங்களுக்கு, எம் போன்ற சிறுவர்கள்தான் காவல் பூதங்கள்.  வாசல் முழுக்க வண்ண வண்ண தானியங்களைப் பரத்தியிருக்கும் காட்சியில், சற்றே மெய்மறந்திருக்கும் சிறுவர்களிடம், “இன்னிக்கு எங்கிட்டும் விளையாடப் போகக் கூடாது. குடையைப் பிடிச்சிக்கிட்டு வெயில்ல உட்கார்ந்து, காக்கா, கோழி, ஆடு, மாடு எதுவும் கிட்டே வராமல் காவல் காக்கணும்” என்று, நம் கையில் ஒரு கம்பைக் கொடுத்துவிட்டு, பெரியவர்கள் அவரவர் வேலைகளைப் பார்க்கப் போய்விடுவார்கள். மாலை வரை நமக்குச் சிறைதான்.

வீட்டு சாப்பாடு

பண்டைய இந்திய வரலாறு என்கிற புகழ் பெற்ற நூலில் வரலாற்று அறிஞர் டி.டி.கோசாம்பி, உணவுவகைகளைப் பாதுகாக்கும் ஏற்பாடுகள் பற்றிய கண்டுபிடிப்புகள், மனிதகுல வரலாற்றில் ஏற்படுத்திய அடிப்படையான மாற்றங்களைப் பற்றி குறிப்பிடுவார். அதில், குறிப்பாக உப்பின் பயன்பாட்டை மனிதன் கண்டுபிடித்தது மிக முக்கியம். அதற்கு முன்னால், வேட்டையாடிக்கொண்டு வந்த விலங்குகளின் மாமிசத்தை, அன்றே தின்று தீர்க்க வேண்டிய தேவையும், கிடைத்ததை சமமாகப் பகிர்ந்துண்ணும் பண்பாடும் இருந்தது. உப்பின் வருகை, உப்புக்கண்டம் போட்டு, வெயிலில் உலர்த்தி, மாமிச வத்தலைத் தயாரித்து, நீண்ட நாள் வைத்திருக்க முடியும் சாத்தியத்தை உருவாக்கியது. அதுவே, பகிர்ந்து அளிக்கும் பண்பாட்டைக் காலப்போக்கில் காலி செய்தது. அதன் பிறகு, எண்ணெய் வந்தது. பாதுகாப்பு ஏற்பாடு இன்னும் பலப்பட்டது. பகிர்ந்து உண்ணும் பழக்கமும் மெள்ள மறையத் துவங்கியது.

நான் சமைக்க ஆரம்பித்து, சுமார் 45 ஆண்டுகள் அடுப்போடு சகவாசம் இருந்தாலும், கூழ் வத்தல் தயாரிக்கும் பக்கம் மட்டும் போவதே இல்லை. என் துணைவியார் அதில் மிகுந்த ஆர்வம் காட்டுபவர். முதல் நாள் மாலை புழுங்கல் அரிசியை ஊறவைத்து, கிரைண்டரில் போட்டு, இட்லிக்கு அரைக்கும் கெட்டியானப் பக்குவத்தில் வழித்து எடுத்து, அதில் தேவையான உப்பை அள்ளிப்போட்டு, கலக்காமல் அப்படியே மூடி வைத்துவிட வேண்டும். பிசைந்தால் புளித்துவிடும். அதிகாலையில் எழுந்து, சின்ன வெங்காயத்தைப் பொடிப்பொடியாக நறுக்கி, ஒரு பெரிய பாத்திரத்தில் நீரைக் கொதிக்கவைத்து, அதில் ஒரு சொம்பு கொதிநீரை எடுத்து, இந்த மாவில் ஊற்றிக் கரைக்க வேண்டும். கொதித்துக்கொண்டிருக்கும் நீரில் இந்தக் கரைத்த மாவை ஊற்றி, கிண்டிக்கொண்டே இருக்க வேண்டும். மாவு நன்கு கொதித்து வெந்ததும் இறக்கி, நறுக்கிய வெங்காயத்தையும், தேவையான அளவு சீரகம், பச்சை மிளகாயையையும் சேர்த்து, மிக்ஸியில் அரைத்து, அந்தக் கூழையும் இந்த மாவில் ஊற்றி, நன்றாகக் கிண்டிவிட வேண்டும்.

மொட்டை மாடியில் ஒரு நீளமான வேட்டியை அல்லது கலர் ஒட்டாத சேலையை விரித்து, அதில் சின்ன ஸ்பூனால், இந்த மாவை வரிசையாக ஊற்றிக்கொண்டே வர வேண்டும். இரண்டு நாட்கள் நல்ல வெயிலில் வத்தலைக் காயவைத்தால், மூன்றாவது நாள் சலசலவென உதிர்ந்து வரும் மணமான கூழ் வத்தல்.

வீட்டு சாப்பாடு

இதே பாணியில் நிறைய வெங்காயம், கொஞ்சம் அரிசி மாவு, உளுந்து, வெடித்த கடுகு எல்லாவற்றையும் சேர்த்துப் பிசைந்து, உருட்டி உருட்டி காயவைத்து எடுப்பது, வெங்காய வடாம். மிஞ்சிய பழைய சாதத்தை அரைத்து, இதேபோல சேர்மானங்களைச் சேர்த்து, வேட்டியில் காய வைப்பது சோத்து வடாம். காரம் வேண்டுவோர் மிளகாய்த் தூள் சேர்த்துக்கூட வத்தல் போடுவார்கள்.

இன்றைக்கும் எங்கள் கரிசல் வட்டாரத்தில், கோடையின் வெயிலுக்கு என்று ஒரு பெரிய நிகழ்ச்சிநிரலை பெண்கள் வைத்திருக்கிறார்கள். உப்புப்போட்ட மோரில், பச்சை மிளகாயை இரண்டு மூணு நாட்கள் ஊறவைத்து, அந்த மிளகாயை ஒரு சுளகில் (முறத்தில்) பரப்பி, ஓட்டுக்கு மேல் காயவைப்பார்கள். ஒரு வாரத்துக்குச் சீனியவரைக்காய், கத்தரிக்காய், சுண்டக்காய் எனப் பலவகையான காய்கறி வத்தலை எம் பெண்கள், வெயிலோடு கூட்டணிவைத்துத் தயாரிக்கிறார்கள்.

நகர்ப்புறங்களில் இன்று பரவலாக அறிமுகமாகிவரும் தெருவோரத் தள்ளுவண்டிகளில் விற்கப்படும் கம்பங்கூழ், கேழ்வரகுக்கூழுக்குத் தொட்டுக்கொள்ள, இதுபோன்ற வத்தல்கள், ஊறுகாய் எனப் பல வண்ணங்களில் வரிசையாக வைத்திருப்பார்கள். இவற்றில் எனக்கு மிகவும் பிடித்தது சீனியவரைக்காய் வத்தல்.

காற்றுப்புகாத டப்பாக்களில் இந்த வத்தல்களைப் போட்டுவைத்துக்கொண்டால், அடுத்த கோடை வரை இவை தாக்குப்பிடித்து நிற்கும். எண்ணெயில் பொரித்து எடுத்து, மதிய உணவுக்குத் தொட்டுக்கொள்ள இவற்றை வைத்துக்கொள்ளலாம். விவசாயக் குடும்பங்களில் பெரும்பாலான நாட்கள், தொட்டுக்கொள்ள காய் என்று ஏதும்வைக்க அவகாசம் இருக்காது. இதுபோன்ற வத்தல், ஊறுகாய் கை இருப்பிலிருந்து, தினசரி கொஞ்சம் எடுத்துக்கொள்வார்கள்.

வீட்டு சாப்பாடு

“காய் ஒண்ணும் இல்லியா?” என்று கேட்கும் பிள்ளைகளுக்கு, எங்கள் கிராமத்துத் தாய்மார்கள் எப்போதும் சொல்லும் பதில், “உப்பைக் கடிச்சி உரலை முழுங்கப் படிச்சிக்கிடணும்டா” என்பது.  என் அம்மாவும்கூட இந்தச் சொலவடையை சொன்னது உண்டு. எங்கள் தெருவில் அப்போது எல்லாம் பல வீடுகளில் கூழ்தான் உணவாக இருக்கும். தொட்டுக்கொள்ள,  பச்சை மிளகாயை நுனியில் கடித்து, அதை அப்படியே கல் உப்பில் முக்கிஎடுத்து, உப்பும் மிளகாயும் சேர்த்து, ஒரு கடி கடித்தால், ஏழெட்டு வாய் கூழ் உள்ளே போய்விடும். அந்தக் காரத்துக்கும் உப்புக்கும் உண்மையில் உரலைக்கூட முழுங்கிவிடலாம்தான்.தொடுகறி என்றும், தொட்டுக்கொள்ள என்றும், வெஞ்சனம் என்றும், காய் என்றும் ஊருக்கு ஒரு விதமாக அழைக்கப்படுகிறது இந்த சைடு டிஷ்.

அந்தக் காலத்தில், ஹோட்டல்களில் இட்லியோ, தோசையோ, சப்பாத்தியோ பரோட்டாவோ, எதுவானாலும் அதற்கான தொடுகறியையும், சட்னி சாம்பாரையும் இலவச இணைப்பாகத் தந்துவிடுவார்கள். இப்போது, ரொட்டி வாங்கினால் சைடு டிஷ் எனப்படுவதைத் தனியாக நாம் வாங்க வேண்டி இருக்கிறது. இன்னமும் சட்னி, சாம்பார் இலவசமாகக் கொடுத்துக் கொண்டிருக்கி றார்கள். எத்தனை நாளைக்கோ தெரியவில்லை. உலகம் அவ்வளவு வேகமாக மாறிக்கொண்டிருக்கிறது.

வாரத்தில் நாலு நாளாவது வெளியில் சுற்றும் என் போன்ற நபர்கள், இந்த ஹோட்டல்களில் சாப்பிட்டால் கட்டுப்படி ஆகாது. கம்பங்கூழ் விற்கும் தள்ளு வண்டிகளில், நான் தஞ்சம் புகுந்துவிடுவேன். ஒவ்வோர் ஊரிலும் இந்தக் கம்பங்கூழ் கடைகள் நிற்கும் இடம் எனக்கு அத்துப்படி. இந்த வண்டிகளிலும் கள்ள வண்டிகள் உண்டு. சரியாகத் தயாரிக்கப்படாத கூழ் குடித்து, வயிறு கலங்கிய நாட்களும் உண்டு. மண்பானையில் திருநீறு பூசி, இயற்கையானது போல ஒரு தோற்றத்தில் நம்மை மயக்கிவிடுவார்கள். ஆனால், பழக்கத்தில் நாம் கண்டுபிடித்துவிடலாம்.

கூழ் கடைகளுக்கு நான் போவது, விலைவாசிக்காக மட்டும் அல்ல. எனக்குப் பிடித்த சீனியவரைக்காய் வத்தல் அங்கேதான் வளமாக வாரி வழங்குகிறார்கள். புளிப்பு கலந்த வெங்காயக் கூட்டு ஒன்றும் அங்கு கிடைக்கும் ஒரு கூடுதல் அட்ராக்‌ஷன்.

சமைப்பேன்...

தே.தீட்ஷித்

படங்கள்: நா.வசந்தகுமார்

குடமிளகாய் சட்னி

வீட்டு சாப்பாடு


சேலத்தில் உள்ள என் தம்பி மணி வீட்டில் சாப்பிட்ட சட்னியை, இன்று என் வீட்டிலும் எல்லோருக்கும் வைத்துக்கொடுத்தேன். பெரிய சைசில் இருக்கும் ‘கேப்சிகம்’ எனப்படும் குடகு மிளகாய்தான் இப்படிக் குடமிளகாய் ஆனதாகக் கூறுவார்கள். இரண்டு குட மிளகாய், பூண்டு பல்லு மூன்று, தக்காளி மூன்று, சின்ன வெங்காயம் 10 என, எல்லாவற்றையும் சின்ன சின்னதாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, தோல் உள்ள உடைச்ச உளுத்தப்பருப்பை இரண்டு தேக்கரண்டி அளவு போட்டு, பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். நறுக்கிய வெங்காயம், குட மிளகாய், தக்காளி, பூண்டைப் போட்டு, அதனதன் தன்மைக்கேற்ப, பொன்னிறமாக வதக்கிஎடுக்கவும். வதக்கிய எல்லாவற்றையும் மிக்ஸியில் போட்டு, உப்பு சேர்த்து அரைத்துஎடுத்துத் தாளித்தால், கேப்சிகம் வாசனைகொண்ட ஒரு சட்னி தயார். இட்லிக்கு செம ஜோடி!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு