Published:Updated:

வீட்டு சாப்பாடு - 9

வீட்டு சாப்பாடு - 9

பிரீமியம் ஸ்டோரி

ச.தமிழ்ச்செல்வன்
எழுத்தாளர்

வீட்டு சாப்பாடு - 9

டந்த வாரம் முழுவதும், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடந்த ஒரு மாநாட்டில் இருந்தேன். ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற அந்த மாநாட்டின் உணவு ஏற்பாடுகள், மலைக்கவைத்தன. இந்தியா முழுவதும் இருந்து வந்திருந்த மாநாட்டுப் பிரதிகளுக்கு, ஆந்திராவின் விதவிதமான உணவு வகைகளை அறிமுகம் செய்யக் கிடைத்த வாய்ப்பாக ஆந்திர நண்பர்கள் இதைக் கருதியதுபோல் இருந்தது.

வீட்டு சாப்பாடு - 9

தினமும் விதவிதமான ஊறுகாய் மற்றும் துவையல் வகைகளை அவர்கள் பரிமாறிக்கொண்டே இருந்தார்கள். அவற்றில் என்னை மிகவும் கவர்ந்தது கோங்ரா ஊறுகாய். சுய உதவிக்குழுப் பெண்கள் நடத்திய, ஒரு கடைக்குப் போய் ஒரு பாட்டில் கோங்ரா வாங்கினேன். ‘ஆந்திரா கி மாதா’ என்று கோங்ரா ஊறுகாயைச் சொல்லுவோம் என்றார் அந்தக் கடைப் பெண்மணி. உடனே ‘மாதா ஊட்டாத சோற்றை மாங்காய் ஊட்டும்’ என்று, சிறு வயதில் என் அம்மா சொல்வது நினைவுக்கு வந்தது. ஒரு காலத்தில், இதுபோன்ற பெரிய உணவு ஏற்பாடுகள், மலைப்பான விஷயமாக இருந்தது. கேட்டரிங் எனப்படும் சமையல், உணவு பரிமாறல் துறை ஒன்று தனியாக வந்து, அதற்கான விஞ்ஞானப்பூர்வமான ஏற்பாடுகள் உருவான பிறகு, 50 ஆயிரம் பேருக்குச் சாப்பாடு போடுவதுகூட சாதாரண விஷயமாகிவிட்டது.

நான் சிறுவனாக இருந்தபோது, எங்கள் கிராமத்தில் நடந்த பல திருமணங்களில், பெரியவர்கள் வழக்கம்போல பந்தியில் உட்கார்ந்து, வரப்போகும் பதார்த்தங்களை எதிர்பார்த்திருக்கையில், எங்கள் பட்டாளம் சந்துக்குள்ளே காற்றுக்கு மறைவாகக் கல்லில் அடுப்புக்கூட்டிச் சமைக்கும் இடத்தில் போய் நிற்கும். பெரிய பெரிய மண்பானைகளில் சோறு, குழம்பு கொதிப்பதை அதிசயமாகப் பார்ப்போம்.  ஈயப் பாத்திரங்களில், சமையல்காரர்கள் தொந்தி வயிற்றோடு, வியர்வை வழிய நின்று சமைக்கும் காட்சி எல்லாம், எங்கள் ஊருக்கு ரொம்பப் பின்னாட்களில்தான் வந்துசேர்ந்தது. சமையல்காரர் என்று தனியாக யாரும் அப்போது கிடையாது. எங்கள் தெருவிலேயே இருக்கிற உழைப்பாளிகளில் ஒருவர், அந்தப் பொறுப்பை எடுத்துச் செய்வார்.

வீட்டு சாப்பாடு - 9

சில கூட்டுக் குடும்பங்களில் சிக்கிக்கொண்ட பெண்களின் வாழ்க்கை, முற்றிலுமாகப் புகைந்தேதான் போகும். பட்டாளத்துக்குப் புட்டு அவித்துப் போடுவதுபோல், அண்டா அண்டாவாகச் சமைத்துக் கொட்டிக்கொண்டே இருக்க நேரும். எங்கள் வீடும் அப்படிப்பட்ட வீடுதான். தினசரி, பத்துப் பன்னிரண்டு பேருக்குக் குறையாமல் சாப்பாடு. இன்று எல்லோரும் பிரிந்து, அவரவர் வாழ்க்கை என்று, வெவ்வேறு  ஊர்களில் போய் வாழ்கிறோம். பிள்ளைகளும், அவர்கள் வாழ்க்கையைத் தனியே துவங்கிவிட்டார்கள். நானும் என் துணைவியாரும் மட்டும்தான் வீட்டில். இரண்டு பேருக்கு ஒரு கிண்ணம் சாம்பார் போதுமானது. ஆனாலும், நான் சமைக்கும் நாட்களில், ஒரு சட்டி சாம்பார்தான் இன்னும் வைக்கிறேன். பத்து இருபது பேருக்குச் சமைத்த, அந்த வீட்டின் வாசமும் வீச்சும் இன்னும் என் கைவிட்டுப்போகவில்லை. சமைக்கத் துவங்கும்போது, ஒரு கிண்ணம் குழம்பு சிக்கனமாக வைக்கணும் என்றுதான், அடுப்படிக்குப் போவேன். ஆனால், முடிக்கும்போது ஒரு சட்டி நிறைந்துவிடும். இன்று வரை, கொஞ்சமாக வைக்க முடியவே இல்லை. இது உளவியல் பிரச்னையாகவும் இருக்கலாம்.

அப்போதெல்லாம், திருமணங்களில் ஒரு சோறு ஒரு சாம்பார்தான் பரிமாறுவார்கள். ரசத்தைப் பார்த்தாலே முகம் சுளிக்கும் உழைப்பாளிகள் இன்றும் எங்கள் ஊர்களில் உண்டு. காய்கறி என்று தனியாக ஏதும் பரிமாறும் வழக்கம் அப்போது இல்லை. சாம்பாரில் போடும் காயை, ஒரு கரண்டி அள்ளிவைப்பார்கள். வீடுகளிலும் அப்படித்தான். இதை ஒட்டி ஒரு சொலவடையே உண்டு. ‘தன்னாளைக் கண்டா, தணிஞ்சு வரும் அகப்பை... வேத்தாளைக் கண்டா, மிதந்து வரும் அகப்பை’. சட்டிக்குள்ளே ஆழமாகத் தணிஞ்சுபோகும் அகப்பைதான், நிறையக் காய்களை அள்ளி வரும். மிதந்து மேலாகப் பயணித்து வரும் அகப்பையில், காயே இருக்காது. பரிமாறுவதில் பாரபட்சம் இருந்தது கண்டு, பாதிக்கப்பட்ட ஒரு மனதிலிருந்து கொதித்து வந்த சொலவடையாக இதைப் பார்க்கிறேன்.

வீட்டு சாப்பாடு - 9

மன்னர் ஆட்சிக் காலத்தில் பட்டாளத்துக்குப் புட்டு அவித்துப்போட்டிருப்பார்கள் என நினைக்கிறேன். ஆகவேதான், மேற்சொன்ன சொலவடை வந்திருக்கும். உண்மையில், இன்று பட்டாளத்தில் கூடை கூடையாக ரொட்டிதான் தட்டிப்போடுகிறார்கள். நான் ராணுவத்தில் இருந்த நாட்களில், பெரிய மூங்கில் கூடைகளில் பெரிய சைஸ் தோசை மாதிரி, எண்ணெய் இல்லாத ரொட்டியைச் சுட்டுச்சுட்டுப் போட்டுவைப்பார்கள். நாலு பேர் சேர்ந்துதான் அந்தக் கூடையை நகர்த்த முடியும். முழு உளுந்தைவைத்து ஒரு குழம்பு தயாரித்திருப்பார்கள். இந்த ரொட்டியும் உளுந்தங்குழம்பும்தான் பட்டாளத்தின் அன்றாட உணவாக இருக்கும். நம் தமிழ்நாட்டில், உளுந்தை இட்லி தோசைக்குப் போடுவதோடு சரி. பெண் குழந்தைகள் பூப்படையும் சமயங்களில் உளுத்தங்களி கிண்டிப்போடுவார்கள். இடுப்புக்குப் பலம் என்று.

ராணுவப் பயிற்சிக்காலத் தின்போது, என் சக பயிற்சியாளனாக இருந்த ஒரு உ.பி பையன், “தமிழர்கள் எல்லாம் சோத்துமாடனுங்க” என்று சொல்லிவிட்டான். எனக்குத் தமிழன் என்கிற ஆவேசம் உடம்புக்குள் புகுந்துவிட்டது. அன்று மதியம் சவால்விட்டு, அந்தப் பெரிய சைஸ் ரொட்டிகள் 30 சாப்பிட்டேன். “மான்கயா குரு... மான்கயா குரு” என்று அவன் சரண்டர் ஆகி, சலாம் வைத்தான். கொஞ்சம் பொறு என்று சொல்லி, அதற்கு மேல் வழக்கமாகச் சாப்பிடும் சாதமும் வாங்கிச் சாப்பிட்டுவிட்டேன். அதோடு விட்டான் அவன்.

பெரிய கூட்டமாகச் சாப்பிடும் பந்திகளில் அல்லது ஹோட்டல்களில் சாப்பிடும்போது, சப்ளை விரும்பியவண்ணம் இல்லாவிட்டால், ஆவேசம் வந்த நாயைப்போல சப்ளையர்களைக் கடித்துக் குதறும் மனிதர்களைப் பார்த்திருக்கிறேன். பந்தியில் அமைதியாக உட்கார்ந்து, பொறுமையாக அன்பாகப் பேசியபடி, சாப்பிடமுடியாத மனிதர்களை நல்ல மனிதர்களாக என்னால் ஏற்க முடிவது இல்லை. ஒருத்தர் குணத்தைப் பந்தியில் பார்த்துவிடலாம் என்று எனக்கு அவ்வப்போது தோன்றும்.

வீட்டு சாப்பாடு - 9

நான் வைத்த குருமா!

ன்று எங்கள் வீட்டில் சப்பாத்தி. நான் வைத்த குருமா பற்றி சொல்கிறேன். ஒரு பெரிய உருளைக்கிழங்கை நான்காக வெட்டி, குக்கரில் வேகவைத்து, தோல் நீக்கி எடுத்துக்கொள்ளவும். ஒரு பெரிய வெங்காயத்தை சின்ன சின்ன கீற்றுகளாக நறுக்கிக்கொள்ளவும். நான்கு சின்ன தக்காளிப் பழங்களையும் நறுக்கி வைத்துக்கொள்ளவும். இஞ்சி, பூண்டு, சிறிய தேங்காய்த் துண்டு, ஒரு கரண்டி பொரிகடலை, சீரகம், மஞ்சள் தூள் சிறிது எல்லாம் சேர்த்து, மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும். அடுப்பில் வாணலியைச் சூடுபண்ணி, தேங்காய் எண்ணெயில் வெங்காயத்தை முதலில் பொன்னிறமாக வதக்கவும். அதில், அரைத்த இஞ்சி, பூண்டு மசாலாவையும் சேர்த்து, பொன்னிறமாகும் வரை வதக்கி, தக்காளியைச் சேர்த்து, சற்று நேரம் வதக்கி, தண்ணீர் சேர்க்கவும். தேவையான அளவு உப்பு சேர்த்து, கொதித்ததும் அவித்த உருளைக்கிழங்கை போட்டுப் பிசைந்துவிடவும். குருமா தயார்.

- சமைப்பேன்...

படங்கள்:  தே.தீட்ஷித்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு