ஹெல்த்
Published:Updated:

வீட்டு சாப்பாடு - 10

கடலிலிருந்து கொஞ்சம் மலையிலிருந்து கொஞ்சம்...

ச.தமிழ்ச்செல்வன்
எழுத்தாளர்

வீட்டு சாப்பாடு - 10

டந்த வாரம் முழுக்க, காடாசேரியாக அலைந்துகொண்டு இருந்தேன். காடாசேரியாக என்றால் என்னவென்று தெரியாது. இரண்டு நாட்கள் கடற்கரை ஓரம் வேளாங்கண்ணியில் இருந்தேன். அடுத்த ஒருநாள், எங்கள் கந்தகபூமியாம் சிவகாசியில் இருந்தேன். அதற்கு அடுத்த இரண்டு நாட்கள் கொடைக்கானல். மறுநாள் பட்டுக்கோட்டை. இந்த ஊர் சுற்றிப் புராணத்தின் பிரிக்க முடியாத அம்சம் சாப்பாடு அல்லவா?

வீட்டு சாப்பாடு - 10

வேளாங்கண்ணியில் உபசரித்த தோழர்கள், கடலில் இருந்து மீன் எடுத்து, விதவிதமாய் சமைத்துப்போட்டார்கள். ‘குழம்பு மீன் தவிர, மற்ற கவிச்சி அயிட்டங்களை எல்லாம் தவிர்க்க வேண்டும்’ எனும் மருத்துவர் உத்தரவை, மூளையில் சுமந்து அலையும் எனக்கு, வேளாங்கண்ணி சாப்பாடு பெரும் திருவிழாவாகிவிட்டது. சீலா மீனைப்போட்டு, ஒரு குழம்பு முதலில் வந்தது. நகர்ப்புறங்களில் மீனைக் கடலில் இருந்து எடுக்காமல் பிரிட்ஜிலிருந்து எடுத்துச் சமைப்பதால், நமக்கு உண்டாகும் முகச்சுளிப்பும் குமட்டலும் இல்லாத, அருமையான வாசனையுடன் அந்தக்குழம்பு ஆளைத்தூக்கியது. ஆகாவென்று மனம் குதூகலித்தது. அந்த சந்தோசத்தின் வெளிச்சம் மங்குவதற்கு முன்னால், வஞ்சிரம்  பொரியலாக வந்து ‘இலையில் விழுந்தது. பொரிச்ச மீன் சாப்பிடக்கூடாது’ எனும் டாக்டர் சீட்டைக் கசக்கித் தூர எறிந்துவிட்டு,  ‘ஒருநாள் சாப்பிட்டா ஒண்ணும் செய்யாது’ எனும், நம் முன்னோர் வாக்குப்படி “இன்னொரு பீஸ் போடுங்கண்ணே” என கேட்டுவாங்கி, ரெண்டு துண்டு வாயிலே போட்டு முடியவில்லை... அதற்குள் இறால்மீன் கூட்டு, ஒரு பெரிய கரண்டி நிறைய அள்ளி, என் இலையில் வைத்தார்கள். “ஏன் இப்படிப்போட்டுத் தாக்குறீங்க பாஸ்” என்று, பல் தெரியச் சிரித்தபடி வாய் சொன்னாலும், மனம் இன்னும் ஏதும் பாக்கி இருக்கா என்று பரிமாறும் வாளிகளைத் தேடியது. நிறைவாக, நெத்திலி மீன் ஃப்ரை வைத்து, ஜெய்ஹோ சொன்னார்கள். ‘இப்படி இலை நிறைய குவிச்சு வச்சா, நான் மீனைத் திங்கச்சொன்னேன்’ என என் நெஞ்சில் குடியிருக்கும் டாக்டர் கேட்டுக்கொண்டேதான் இருந்தார். காது கேளாததுபோல சாப்பிட்டு முடித்தேன்.

கீழக்கடைசியிலிருந்து உதைபட்ட பந்து, மேலைக்கடைசியில் கொடைக்கானலில் போய் விழுந்தது. கடந்த இரண்டு நாள் வேளாங்கண்ணியில் வெட்டின வெட்டுக்கு, உன்னை என்ன செய்கிறேன் பார் என்று என் மனச்சாட்சியின் கதாநாயகப் பக்கம் கோபத்துடன் சூளுரைத்தது. கொடைக்கானலில் இருக்கும் இரண்டு நாளும், உனக்குப் பச்சைக் காய்களும் பழங்களும்தான் என்று, கறாராக உத்தரவிட்டது. இரண்டு நாள் வில்லனுக்கு நல்ல பிள்ளையாக இருந்த நான், இப்போது கதாநாயகனிடம் பேரெடுக்க வேண்டியதாயிற்று.

வீட்டு சாப்பாடு - 10

நாக்கை அடக்கினேன். என் நாக்கை அடக்குவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல.சமைத்த உணவு எதையும் தொடமாட்டேன் என்பதில் அது உடன்பாட்டுக்கு வந்துவிட்டது. ஆனால், அளவு? கொடைக்கானலில் மலையிலிருந்து அப்போதான் பறித்து வந்த கேரட்டும் முள்ளங்கியும் கலர் கலரான முட்டைக்கோசும், பறித்த பச்சை இலைகளோடு அப்படியே கொட்டிக்கிடந்தது கடைவீதி எங்கும். அதிலே, இரண்டு போதும். இதிலே இரண்டே இரண்டு போதும் என்று, ஆரம்பித்த கதை எப்படி முடிந்தது என்பதைச் சொல்லி விளக்க வேண்டியது இல்லை. இரண்டே நாட்களில் என் உடம்பிலிருந்து வியர்த்தாலே பச்சைக் காய்கறி வாசனை வர ஆரம்பித்துவிட்டது. காய்கறிகள் போக, மலையில் விளைந்த கொடை ஆரஞ்சும் பலாவும் வாழையும் பக்கத்துணையாக, சைடு டிஷ் ஆகி நின்றன.

அங்கு இருந்து உருண்டு, வரும் வழியில் திருச்சி சங்கீதாவில் ஃபில்டர் காப்பி குடித்து, ராத்திரி பட்டுக்கோட்டை நாராயண மெஸ்ஸில் வந்து விழுந்தேன். இனிப்புப் பணியாரம், காரப்பணியாரம், தேங்காய்ப் பாலுடன் ஆப்பம் என, கடல் போலவும் இல்லாமல் மலை போலவும் இல்லாமல் ஒரு மந்தமான சமவெளிச் சாப்பாட்டில் வந்து நின்றேன்.இப்படி முடிந்தது சென்ற வார சாப்பாட்டுப் புராணம்.

அளவுதான் இதில் பிரச்னையாக இருந்ததே ஒழிய, இதுபோன்ற  கலவை, அன்றாடச் சாப்பாட்டில் இருப்பது நல்லதுதானே. எனக்கு ஜப்பானின் புகழ் பெற்ற மூத்த தொலைக்
காட்சிக் கலைஞர் டெட்சுகோ குரோயாநாகி எழுதிய புத்தகம் நினைவுக்கு வருகிறது.  ‘டோட்டோ சான்: ஜன்னலில் ஒரு சிறுமி’  எனும் அப்புத்தகம், உலகிலேயே மிக அதிகமாக விற்பனையான புத்தகங்களில் ஒன்று. நேஷனல் புக் ட்ரஸ்ட் அதைத் தமிழில் வெளியிட்டுள்ளது. குழந்தைகளை மையப்படுத்தி ஜப்பானில் இயங்கிய குரோயாநாகி படித்த அந்த  டோமாயி பள்ளி, இன்றைக்கும் உலகத்துக்கு ஒரு கனவுப்பள்ளிதான். இரண்டாம் உலகப்போரில் அமெரிக்க அணுகுண்டு வீச்சில் அந்தப் பள்ளி தரைமட்டமானது.அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் எப்போதும் குழந்தைகள் மதிய உணவுக்கு அமரும்போது அவரும்கூட வந்து அமர்ந்துகொள்வாராம். சாப்பாட்டில் குழந்தைகளுக்கு ஆர்வம் உண்டாகும்படி ஏதாவது பேசிக்கொண்டே சாப்பிடுவாராம். “இப்போ மலையிலில் இருந்து கொஞ்சம்’’ என்று காய்களையும் பழங்களையும் சாப்பிட வைப்பாராம். அப்புறம் “இப்போ கடலிலிருந்து கொஞ்சம்” என்று கடல் உணவு வகைகளைச் சாப்பிட வைப்பாரம். தன் வாழ்நாள் முழுவதும் ஒவ்வொரு வேளை உணவு மேஜையின் முன்னால் உட்காரும்போதெல்லாம் தன் ஆசிரியரின் குரல் “மலையிலிருந்து கொஞ்சம்... கடலிலிருந்து கொஞ்சம்...” எனக் கேட்டுக்கொண்டே இருந்ததாகவும் தன் உணவுப் பண்பாட்டையே அக்குரல் தீர்மானித்ததாகவும் குரோயாநாகி எழுதிச் செல்வார்.

வீட்டு சாப்பாடு - 10

ஜங்க் ஃபுட் எனப்படும் சுகக் கேடான உணவுப் பண்பாட்டுக்கு மாற்றாக, நம் குழந்தைகளிடம் நம் தமிழ் மண்ணின் பலவித உணவு வகைகளை அறிமுகம் செய்ய வேண்டும். அவர்களுக்குத் தேவை, வெரைட்டி. கடலிலிருந்து கொஞ்சம், மலையிலிருந்து கொஞ்சம், காட்டிலிருந்து கொஞ்சம், மரத்திலிருந்து கொஞ்சம், நாட்டுக் கோழியிலிருந்து கொஞ்சம் என்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகை உணவை அறிமுகம் செய்யலாம். கொஞ்சம் பெரிய குழந்தைகளாகிவிட்டால், குறிஞ்சியிலிருந்து கொஞ்சம், நெய்தலிலிருந்து கொஞ்சம், முல்லையிலிருந்து கொஞ்சம், மருதத்திலிருந்து கொஞ்சம் என அறிமுகப்படுத்தலாம். மருதத்தில் விளையும் அரிசியை மட்டுமே இப்போது நாம் சோறாகவும் இட்டிலியாகவும் தோசையாகவும் விதவிதமான வெரைட்டி ரைஸ்களாகவும் அடித்து முழுங்கிக்கொண்டு இருக்கிறோம்.

இன்று எல்லாவகை உணவும் எல்லா ஊரிலும் கிடைக்கும் ஏற்பாடு வந்துவிட்ட பின், இது எல்லாம் நடைமுறைச் சாத்தியமான ஆலோசனைகளே. முன்பெல்லாம் மணப்பாறை முறுக்கென்றால், அது மணப்பாறையில்தான் கிடைக்கும். திண்டுக்கல் பிரியாணி சாப்பிட திண்டுக்கல்லுக்கே நேரில் போக வேண்டும். இன்று அப்படியா? எல்லாமும் எல்லா ஊரிலும் கிடைக்கின்றன. நேற்று மாலை நெல்லையில் கிண்டிய அல்வா, இன்று காலையில் சென்னையில் கிடைக்கிறது.

ஒரு மெக்டொனால்டுக்காரன் உலகம் முழுக்க சாப்பாடு விற்க முடிகிறது. கெண்ட்டகி சிக்கனை தெருத்தெருவுக்குக் கொண்டுபோய் பொரிக்க முடிகிறது எனில், நம் மண்ணின் உணவு வகைகளை நம் குழந்தைகளிடம் கொண்டு சேர்ப்பது பெரிய காரியமே இல்லை. இதை ஒரு இனவாத உணர்வாகப் (உணவாக...) பார்க்காமல், குழந்தைகளுக்கு எல்லாவிதமான சத்தும் சேரும் வகை காண வேண்டும். மாவுச்சத்து மட்டுமே நம் உணவில் அதிகமாக நீடிக்கிறது. கடலும் மலையும் சேரும்போது சரிவிகித சத்துணவாக அது மாறிவிடும்.

வீட்டு சாப்பாடு - 10

மாநிலத்து மக்கள் என்ன சாப்பிடணும் என்ன சாப்பிடக் கூடாது என உத்தரவு போடும் நம்முடைய அரசுகள், மேற்சொன்னதைக் கவனத்தில்கொண்டால், நன்மை உண்டாகும். அம்மா உணவகத்திலும் மருதம் மட்டுமே கோலோச்சும் நிலையை மாற்றி, கடலையும் மலையையும் உள்ளே அனுமதிக்கலாம்.

- சமைப்பேன்

சமையல் குறிப்பு: பொரித்த மீன்

ணல்மகுடி நாடகக்குழுவை நடத்திவரும் நாடகக்காரரான என் கடைசி தம்பி முருகபூபதியும் அவனுடைய துணைவி மலைச்செல்வியும் சேர்ந்து மீன் வகைகள் சமைக்கும் காட்சி அற்புதமானது. அவர்களிடம் கற்றுக்கொண்ட பாணியில்தான், நான் இப்போது மீன் பொரிக்கிறேன்.

வீட்டு சாப்பாடு - 10

எந்த மீனையும் பொரிக்கலாம், குழம்புவைக்கலாம் என்றாலும், குழம்புக்காகவே பிறந்த மீன் வகைகளும், பொரிப்பதற்கான மீன்வகைகளும் உண்டு. நன்கு விசாரித்து பொரிக்கிற மீனை வாங்கி, அங்கேயே தோல், செதிள் எல்லாம் நீக்கிச் சுத்தம்செய்து, முடிந்தால் பொரிக்கத் தோதான வட்ட வட்டத் துண்டுகளாக நறுக்கியே வாங்கிவர வேண்டும். முதலில், மீனை நன்றாகக் கழுவி எடுத்து, அகலமான தட்டில் பரத்தி, அதன் மீது, எலுமிச்சைப் பழச் சாற்றைப் பிழிந்துவிட வேண்டும். மீண்டும், ஒருமுறை கழுவிஎடுத்து, அதே தட்டில் வைக்க வேண்டும். ஒரு அகலமான கிண்ணத்தில், உப்புத் தூள், மிளகாய்ப் பொடி, ஒரு துளி மஞ்சள் தூள் போட்டு, நீர் சேர்த்து, கெட்டியானக் கரைசலாக எடுத்துகொள்ள வேண்டும். கழுவிய மீன் துண்டங்களை, இந்தக்கரைசலில் புரட்டி எடுத்து, மீண்டும் அதே தட்டில் வரிசையாக அடுக்க வேண்டும். அப்படியே அந்தத்தட்டைத் தூக்கி, வெயிலில் வைக்க வேண்டும். காலை பத்து மணிக்கு வெயிலில் வைத்தால், மதியம் ஒரு மணிக்கு எடுத்துப் பொரிக்கலாம். இடையில், அந்த மீன் துண்டுகளைத் தோசையைப் புரட்டிப் போடுவது போல, ஈரமான பக்கத்திலும் வெயில் படும்படி புரட்டிப் போட வேண்டும். காக்கா தூக்காமல் காவலும் செய்ய வேண்டும். மிதமான சூட்டில், வாணலியில் பொறுமையாகப் போட்டுப் போட்டு எடுத்தால் பொரித்த மீன் தயார்.