Published:Updated:

வீட்டு சாப்பாடு - 11

சிறுதானிய புத்துயிர்ப்புக் காலம்

பிரீமியம் ஸ்டோரி

ச.தமிழ்ச்செல்வன்
எழுத்தாளர்

வீட்டு சாப்பாடு - 11

“சோத்துப்பானையைத் திறந்து, கட்டியாக இரண்டு கை கம்பஞ்சோற்றை எடுத்துத் தட்டில் வைத்தாள். பசு வெண்ணெய் போல் சோறு கையில் பிசுபிசுத்தது. ‘குப்’ என்று அடுப்பங்கரை முழுசும் கம்பஞ்சோற்று வாசம் நிறைந்தது. திடீரென்று கம்பஞ்சோறு மீது அளவு கடந்த பிரியமும் ஆசையும் வந்தது. வெறும் சோறாய் நாலு வாய் கட்டியாக விழுங்கினாள். தொண்டையில் நிற்காமல், அது வழுக்கிக்கொண்டு ஓடியது. ஊறுகாய் சட்டியிலிருந்து சாறாக கொஞ்சம் தட்டில் ஊற்றிக்கொண்டு, நயம் உளுந்தங்களியை நெய்யில் தொடுவது போல, ஊறுகாய் சாற்றைத் தொட்டுக்கொண்டு தட்டிலிருந்து சோற்றை விண்டு விண்டு விழுங்கினாள்.”

(ச.தமிழ்ச்செல்வனின் அசோக வனங்கள் என்னும் சிறுகதையிலிருந்து...)

வீட்டு சாப்பாடு - 11

எங்கள் கரிசல்காட்டுப் பண்பாட்டு வாழ்க்கையின் பிரிக்க முடியாத அம்சமாக, கம்பு சார்ந்த உணவு வகைகள் இருந்தன. கம்பஞ்சோறு, கம்பங்கஞ்சி, கம்பந்தோசை, கம்பு மாவுக் கொழுக்கட்டை, முளை கட்டிய கம்பரிசி என்று பல வகைகள் உண்டு. இன்று கம்பங்கூழ் என்று ஊரூராக வண்டியில் வைத்து விற்கிறார்களே, அதை நாங்கள் கம்பங்கஞ்சி என்றுதான் சொல்கிறோம். கேழ்வரகுக் கூழைத்தான் கேப்பைக்கூழ் என்று சொல்கிறோம். அது ஏன் கஞ்சி, இது ஏன் கூழ் என்பது, இன்று வரை எனக்குத் தெரியவில்லை.

“கட்டியாத் திங்கிறதைக் கரைச்சுக் குடிச்சாப் போச்சு...” என்பது ஒரு கரிசல்காட்டு சொலவடை. வறுமைச் சூழலில் பிறந்த சொலவடையாக இது இருக்க வேண்டும்.

நெல் அரிசிச் சோற்றை நெல்லுச்சோறு என்கிறோம். கிராமத்து வாழ்வில் திருவிழாக்களுக்கான உணவாகத்தான் இந்த நெல்லுச் சோறு இருந்தது. தீபாவளி, தைப்பொங்கல், காளியம்மன் கோயில் திருவிழா இதுபோன்ற தருணங்களில்தான் எங்கள் வீடுகளில் நெல்லுச் சோறாக்கி, பருப்புக் குழம்பு வைப்பார்கள். ஊரில் இரண்டு அல்லது மூன்று வீடுகளில்தான் தினசரி அரிசிச்சோறு ஆக்குவார்கள். அந்த வீடுகளின் வாசலில் இளம் தாய்மார்கள், தங்கள் குழந்தைகளுக்கு ஊட்டுவதற்காக சோறு கேட்டு, கையில் கிண்ணங்களுடன் நிற்பார்கள். இது அன்றாடக் காட்சியாக இருக்கும்.

இன்று, எங்கள் கிராமங்களில் அன்றாட உணவாக அரிசிச்சோறு வந்துவிட்டது. கிராமத்து வாழ்க்கையிலிருந்து சிறுதானியங்கள் விடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. பசுமைப்புரட்சியும், உரங்களும், பூச்சி மருந்துகளுமென மாறிவிட்ட நம் விவசாய வாழ்வின் இன்னொரு பரிணாமம் இது.

நடுத்தர வர்க்கம் இன்று சிறுதானியங்களைக் கையில் அள்ள ஆரம்பித்திருக்கிறது. ஆங்காங்கே சுற்றுச்சூழல் நண்பர்களின் முன் முயற்சியால் இயற்கை உணவுத்  திருவிழாக்கள் நடத்தப்படுவதால், திருவிழா மனநிலையிலேயே எப்போதும் இருக்க விழையும் நம் நடுத்தர வர்க்கம், அவற்றில் உற்சாகமாகப் பங்கேற்று, ஒரு புது ரூட்டில் போகத் துவங்கியிருக்கிறது. ஆகவே, சிறுதானியங்களுக்கு மீண்டும் ஒரு புத்துயிர்ப்பு ஏற்பட்டுள்ளது. நடுத்தர வர்க்கம்தானே இந்தியாவின் ருசிகளையும் வாழ்க்கைப்போக்கையும் தீர்மானிப்பதில் முக்கியப் பங்காற்றவல்லது.

சமீபத்தில், திருச்சியில் ஞாநி, தம்பி துளசிதாஸ் இவர்களுடன், துளசியின் வாழ்க்கைத்துணைவியான சுஜாவின் பிறந்த நாளைக் கொண்டாட ஆப்பிள் மில்லட் கடைக்குச் சாப்பிடப் போனோம். கடையை நடத்துபவரும் நண்பர்தான். டாக்டர் சிவராமனை முன்னிறுத்தி ஒரு பெரிய உணவுத் திருவிழாவையும் அவர் நடத்தியிருந்தார்.

வீட்டு சாப்பாடு - 11

நடுத்தர வர்க்கத்தின் ருசிகளைக் கணக்கில்கொண்டு, அவர் புதிய புதிய வசீகரமான பெயர்களில் சிறுதானிய உணவுவகைகளைத் தந்துகொண்டிருக்கிறார். சாமை தக்காளி புலாவ், சாமை பன்னீர் பெசரட், வரகு கல்தோசை, தினை ஃப்ரூட் கஸ்டர்டு, முள் முருங்கை பூரி என்று கிளப்புகிறார். நாங்கள் சோளத்தோசையும் இஞ்சித் துவையலும் சாப்பிட்டோம். அந்த இஞ்சித்துவையல் அப்படி ஓர் அபாரமான சுவை. இஞ்சி, பூண்டு, கருப்பட்டி, உப்பு அவ்வளவுதான். இந்த நான்கையும் வைத்து அரைத்த துவையல். கேட்டு கேட்டு வாங்கிச் சாப்பிட்டோம். ஸ்டார்ட்டர் எனப்படும் சூப் மற்றும் பப்படத்தில் துவங்கி, நடுத்தர வர்க்க ஹோட்டல் உணவுப் பண்பாட்டின் அத்தனை அம்சங்களுக்கும், சிறுதானிய மாற்றுகளை வைத்திருக்கிறார்கள்.

சிவகாசி போன்ற சிறு நகரங்களில் சின்னச்சின்ன சிறுதானியக் கடைகள் முளைத்துள்ளன. ஒருபக்கம் சுற்றுச்சூழல் நண்பர்கள் சிறுதானிய விழிப்புஉணர்வை ஏற்படுத்த ஏற்படுத்த, நடுத்தர வர்க்கம், அந்தப் பாதைக்கு வருகிறது. அதனால், அதை வணிகமாக்கும் முயற்சிகளும் கூடவே வருகின்றன. இனி, தமிழகம் முழுவதும் சிறுதானிய ஹோட்டல் வலைப்பின்னலை, ஏதேனும் சில கார்ப்பரேட் கம்பெனிகள் துவக்கும் நாள் தூரத்தில் இல்லை.

நானும் நடுத்தர வர்க்கத்தின் பகுதி என்கிறபடியால், அந்தக் கடையில் சாப்பிட்டுவிட்டு வரும்போதே, யாம் பெற்ற இன்பம் என் வீட்டாரும் பெறட்டும் என, சாமை, வரகு அரிசி பாக்கெட்களை வாங்கிவந்தேன். சாமை தோசைக்கு அரைத்தேன். சாமை அரிசி பாதி, நெல் அரிசி பாதி மற்றும் உளுந்து, வெந்தயம் போட்டு அரைத்தேன். மாவு தண்ணீர் அதிகமாகிவிட்டதால் தோசைக்கானப் பக்குவத்துக்கு அமையவில்லை. பிறகென்ன செய்ய, கொஞ்சம் அரிசி மாவைக் கரைத்துச் சேர்த்து, திருத்தப்பட்ட பதிப்பில் தோசை சுட்டுச் சாப்பிட்டோம். வாசமிகு தோசையாக வந்தது. மிளகாய் வத்தல் சட்னி வைத்துக்கொண்டோம். பொதுவாக, கம்பு தோசை, சோள தோசை, சாமை தோசை என, எல்லா வகையான சிறுதானிய தோசைகளுக்கும் கொஞ்சம் காரம் தூக்கலான சட்னி வைப்பது பொருத்தமாக இருக்கும். சூடு சுரணை மிக்க, காரசாரமான ஒரு வாழ்க்கையிலிருந்து வந்த உணவு வகையல்லவா?

தோசையிலேயே ரொம்ப வெள்ளையாக வருவது குதிரைவாலி தோசைதான். குதிரைவாலி அரிசியை அவித்து, புழுங்கல் அரிசி மாதிரி ஆக்கி, அப்படியே சாதமாக சமைக்கும் வழக்கம், எங்கள் வீடுகளில் இருந்தது. குதிரைவாலியை அவிக்காமல், பச்சைக் குதிரைவாலியை தோசைக்குப் போடலாம். பச்சைக் குதிரைவாலி சாதமும் ஆக்கலாம். குதிரைவாலி சோற்றுக்கு ரசம் அல்லது கருவாட்டுக் குழம்பு நல்ல ஜோடியாக அமையும். சோளச்சோறு அவ்வப்போது சமைப்பார்கள் அது நல்ல பருக்கைப் பருக்கையாக கேரளத்தின் சிவப்பரிசிச் சோறு மாதிரி, பெரிய பெரிய கவளமாக அள்ளிச் சாப்பிட நன்றாக இருக்கும். தினையைக் காய வைத்து, அதில் தினை மாவு செய்வது ஒன்றுதான் எங்கள் ஊர்ப் பெண்களுக்குத் தெரியும். இன்று தினையில்தான் எத்தனை வகை உணவு? தினைப் பாயாசம், தினை லட்டு, தினை தாளித்த இடியாப்பம், தினைப் பணியாரம், தினை அரிசி மலாய் கோப்தா, தினை அரிசி உப்புமா...

தேனும் தினைமாவும் தின்று வளர்ந்த நம் வேட்டைச் சமூகம், குறிஞ்சியிலிருந்த வாழ்க்கையைக் கற்பனை செய்து பார்க்கிறேன். எங்கிருந்து நாம் எங்கே  வந்து சேர்ந்துவிட்டோம்? கிராமத்து வாழ்வில் அன்றாட உணவாகக் கம்பும் கேழ்வரகும் இருக்கும். கோயில் திருவிழா சமயங்களில் தினை மாவு வந்துவிடும். பெண்கள் பூப்படையும் காலங்களில் உளுந்தங்களி, உளுந்தஞ்சோறு வந்துவிடும். சளிப்பிடித்தால் பால் கொழுக்கட்டை, வெந்தயக்களி வந்துவிடும். இந்தச் சிறுதானிய உணவுப்
பண்பாடு, இன்று எம் நடுத்தரவர்க்கப் பண்பாடாக மாறிக்கொண்டிருக்கிறது. நல்லது, இழந்தவற்றை மீட்டெடுப்போம்!

வீட்டு சாப்பாடு - 11

வரகு தோசை

இது, நான் சாப்பிட்ட சிறுதானிய உணவகத்தின் சமையல்காரரிடம் கேட்டுவந்த குறிப்பு. செய்துபார்த்தேன். நன்றாகவே இருந்தது.

வரகு அரிசி அரை டம்ளர், பச்சரிசி ஒரு டம்ளர், புழுங்கல் அரிசி ஒரு டம்ளர், உளுந்து முக்கால் டம்ளர், சிறிதளவு வெந்தயம். எல்லாவற்றையும் இரண்டு மணி நேரத்துக்குக் குறையாமல் ஊற வைத்து, கிரண்டரில் நைஸாக அரைத்துப் புளிக்கவைக்கவும்.  எட்டு மணி நேரம் கழித்து, மாவைக் கரைத்து தோசை சுடலாம். தோசையை, ஊத்தப்பம் மாதிரி சற்று தடிமனாகவிட வேண்டும். மூடியால் மூடிவைத்து, மறு பக்கம் புரட்டிப்போடாமல் சுட்டுச் சாப்பிடலாம். தோசைக் கல்லில் இருக்கும்போது, சுற்றிவர லேசாக எண்ணெய் விடலாம்.

சற்று காரமான சட்னி, தேங்காய் சின்ன வெங்காயச் சட்னி, அல்லது காரமான மிளகாய் சட்னி பொருத்தம். தோசைப்பொடி, எள்ளுப்பொடி வைத்தாலும் எடுக்கும்.

- சமைப்பேன்
படங்கள்:  தே.தீட்ஷித்

வீட்டு சாப்பாடு - 11

வளர்மதி, திருநெல்வேலி.

“எனக்கு வயது 33. குடும்பத்தலைவி. காலை எழுந்தவுடன் இமைகள் ஒட்டிக்கொள்கின்றன. கண்களைத் திறக்கவே முடியவில்லை. தண்ணீரால் கண்களை அலசிய பிறகே, கண்களைத் திறக்க முடிகிறது. இது, எதனால் ஏற்படுகிறது? இதற்குத் தீர்வு என்ன?”


டாக்டர் பிரதீபா சுரேந்தர், 
கண் மருத்துவர்.

வீட்டு சாப்பாடு - 11

“கண்களின் மேற்பரப்பில் உள்ள ஈரப்பசை குறைவதினால், இந்தப் பிரச்னை வருகிறது. வயதாகும் போது, இந்தப் பிரச்னை இயல்பாகவே வரும். சில சமயம், சுற்றுப்புறச் சூழலும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். இதை கண்கள் உலர்ந்துபோதல் (Dry eyes) என்று அழைப்பர்.  செயற்கைக் கண்ணீர் துளிகள் (Artificial Eye Drops) இதற்கு மிகச் சிறந்த தீர்வு. இரவு தூங்கும்போது இந்தச் செயற்கைக் கண்ணீர்த் துளிகள் இரண்டு மூன்று சொட்டுக்கள் கண்களில் விட்டால், காலையில் கண்களைத் திறப்பது சுலபமாக இருக்கும். அருகில் உள்ள கண் மருத்துவரை அணுகி, உங்கள் கண்களைப் பரிசோதனை செய்துகொள்வது நல்லது. அவர் பரிந்துரையின் அடிப்படையில் சொட்டு மருந்து, செயற்கைக் கண்ணீர்த் துளிகள் பயன்படுத்துவதன் மூலம் உங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பைச் சரிசெய்யலாம்.”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு